ஆதியிலே…
12-11-2024
Feed My Sheep
என் ஆடுகளை போஷிப்பாயாக
19-11-2024
ஆதியிலே…
12-11-2024
Feed My Sheep
என் ஆடுகளை போஷிப்பாயாக
19-11-2024

இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?

What Is Saving Faith?

கிறிஸ்தவத்தின் மையமாக இருப்பது விசுவாசமே. புதிய ஏற்பாடானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக தொடர்ச்சியான அழைப்பை கொடுக்கிறது. நாம் எதை ஆணித்தரமாக விசுவாசிக்க வேண்டும் என்பது நம்முடைய கிறிஸ்துவ கடமைகளில் ஒரு முக்கியமான அங்கமாகவும், பகுதியாகவும் இருக்கிறது. சீர்திருத்தவாதத்தின் காலத்தில், இரட்சிப்புக்கேற்ற விசுவாசத்தின் தன்மை மற்றும் அதின் செயல்பாடுகள் என்ன என்பது பெரிய விவாதத்துக்குள்ளானது.

இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் என்றால் என்ன? விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்ற கொள்கையானது அனேகரை ஆன்ட்டி நாமினிச(antinomianism) கொள்கையான” – நியாயப்பிரமாண சட்டமில்லாமல் நாம் வாழலாம்” என்ற கோட்பாட்டோடு ஒத்திருப்பதை போல எண்ணுகிறார்கள். ஆனால் யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் இவ்விதமாக எழுதுகிறார், “என் சகோதரரே ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் அவனுக்கு பிரயோஜனம் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும்” (யாக் 2:14,17). மார்ட்டின் லூத்தர் நீதிமானாக்கப்படும் விசுவாசம் எப்படிப்பட்டது என்று சொல்லும்போது அது மெய்பற்றுள்ளதாகவும், உயிருள்ள விசுவாசமாகவும், மட்டுமல்லாது தவிர்க்க முடியாத வகையில், நிச்சயமாக, உடனடியாக நீதிமானுக்கேற்ற கனிகளை கொடுக்கக் கூடியதாய் இருக்கும் என்று கூறுகிறார். ஒருவன் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறான் ஆனால் அந்த விசுவாசம் தனித்திருப்பதில்லை. நீதிமானுக்கேற்ற கனியை கொடுக்காத ஒரு விசுவாசம், உண்மையான விசுவாசம் அல்ல.

ரோமன் கத்தோலிக்க சபையானது விசுவாசம் மற்றும் கிரியைகள் இரண்டையும் இணைக்கும்போது அவன் நீதிமானாக்கப்படுகிறான் என்று சொல்லுகிறது. (antinomianism) ஆன்ட்டி நாமியணிசத்தை பின்பற்றுகிறவர்கள், விசுவாசத்திலிருந்து கிரியைகளை கழிப்பதன் மூலமாக நீதிமானாக்கப்படுகிறார்கள் என்று சொல்லுகிறது. சீர்திருத்தவாதிகளின் பார்வையில், விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம் ஆனால் நீதிமானாக்கப்பட்டத்தின் விளைவாக உண்மையான விசுவாசத்தின் கிரியைகளும் சேர்ந்திருக்கிறது என்று சொல்லுகிறது. இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், ‘உண்மையான விசுவாசத்தின் முக்கியமான கனியானது விசுவாச கிரியைகளே’ என்று சொல்லலாம். தேவனது பார்வையில் நம்முடைய கிரியைகளை வைத்து அவர் நம்மை நீதிமான்களென்று அறிக்கையிடுவதில்லை. தேவன் நம்மை நீதிமான்களென்று அறிக்கை செய்வதற்கு நமது கிரியைகளின் ஒருபகுதி கூட அவருக்கு ஆதாரமாயிருப்பதில்லை.

இரட்சிக்கும் விசுவாசத்தின் அடிப்படையான தன்மைகள் என்னென்ன? சீர்திருத்தவாதிகள் வேதாகம ரீதியிலான விசுவாசமானது 3 முக்கியமான பகுதிகளை கொண்டிருக்கிறது என்று வலியுறுத்துகிறார்கள். அவையாவன; ‘notitia’,’ assensus’ மற்றும் ‘fiducia’.

‘notitia’ என்பது விசுவாசம் எதை நம்புகிறது என்பதைப் பற்றினதாகும். கிறிஸ்துவை பற்றினதான சிலவற்றை அடிப்படையாக நாம் விசுவாசிக்க வேண்டும். அதில் அவர் தேவனுடைய குமாரனென்றும்,அவர் நம்முடைய இரட்சகர் என்றும், அவரே நம்முடைய பரிகாரபலியாக பாவத்திற்காக ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்றும் இதுபோன்ற கிறிஸ்துவை பற்றிய பல சத்தியங்களையும் வேத அடிப்படையில் நாம் விசுவாசிப்பதாகும்.

assensus என்பது நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தை உண்மையென்று உறுதியாக ஒப்புக் கொள்வதாகும். ஒரு நபர் கிறிஸ்தவ விசுவாசத்தை பற்றி அறிந்திருந்தபோதிலும் அது உண்மையல்ல என்றும் நினைக்கலாம். ஒருவேளை விசுவாசத்தை பற்றின சந்தேகங்கள் இருக்கலாம் அல்லது அந்த விசுவாசத்தோடு கூட இரண்டு விதமான நம்பிக்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால் நாம் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருப்போமானால் விசுவாசத்தை குறித்ததான அறிவுபூர்வமான நம்பிக்கையும் அதோடு கூட அதை மிக பற்றுதலோடு உண்மையென்று விடாப்பிடியாக நம்புவதாகும். யாதொருவன் உண்மையாக இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன்பாக, கிறிஸ்துவே இரட்சகர் என்பதை அவர் சொல்லிய வண்ணமாகவே உறுதியாக விசுவாசிக்க வேண்டும். உண்மையான விசுவாசமானது நம்புகிற (notitia) காரியங்களை உண்மையென்று உறுதியாய் பிடித்து (assensus) நிற்பதாகும்.

fiducia என்பது விசுவாசத்தை பற்றினதான காரியத்தில் உண்மையான நம்பிக்கையையும், உறுதியையும், அதை மட்டுமே கொண்டிருப்பதாகும். கிறிஸ்தவ விசுவாசத்தை பற்றி அறிந்து அதை விசுவாசிப்பது மட்டும் போதாது. பிசாசுகளும் கூட தேவன் ஒருவர் உண்டு என்பதை அறிந்து அவரை விசுவாசிக்கின்றன (யாக் 2:19). ஒரு மனிதன் கிறிஸ்து மட்டுமே தன்னை இரட்சிக்க முடியும் என்று தனிப்பட்ட விதத்தில் நம்புவதே திட்ப உறுதியான விசுவாசமாகும். ஒரு பக்கம் விசுவாசத்தை குறித்ததான அறிவுபூர்வமான விளக்கத்தை நாம் அளித்தாலும் மற்றொரு பக்கம் நம்முடைய சுய நம்பிக்கைகளையும் அதிலே வைத்திருக்க முடியும்.

உதாரணமாக விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்று நம்புவதாக நாம் ஒத்துக் கொண்டாலும் மற்றொரு பக்கம் பரலோகத்திற்கு செல்வதற்கு நம்முடைய சுயகிரியைகளும், கடின உழைப்பும் அவசியம் என்பதை போலவும் நாம் நம்பிக்கை கொண்டிருக்கலாம். கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் மட்டுமே ஒருவன் நீதிமானாக்கப்படுகிறான் என்கிற இறையியல் சத்தியத்தை மூளைஅறிவில் நாம் ஏற்றுக் கொள்வது எளிது, ஆனால் நாம் இரட்சிக்கப்படுவதற்கு கிறிஸ்து மட்டுமே காரணர் என்பதை நம்முடைய ரத்த ஓட்டத்தில் செலுத்துவது மிகவும் கடினமானது.

fiducia வில் உறுதியான நம்பிக்கையும் அதோடு கூட உள்ளன்பு என்ற மற்றொரு அடிப்படையான காரியத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரால் மறுபடியும் பிறக்காத ஒரு மனிதன் கிறிஸ்துவினிடத்தில் ஒருபோதும் வருவதில்லை ஏனெனில் அவனுக்கு கிறிஸ்து அவசியமில்லை. அவனுடைய இருதயத்திலும், சிந்தையிலும் அடிப்படையிலே தேவ காரியங்களுக்கு அவன் விரோதியாயிருக்கிறான். ஒருவன் நீண்ட நாட்களாக கிறிஸ்துவுக்கு பகையாளியாக இருப்பானானால், அவர் மீது அவனுக்கு எந்த விதமான ஈர்ப்பும் இருக்க வாய்ப்பில்லை. இதை நிரூபிக்க பொருத்தமான நபர் சாத்தான் தான். சாத்தான் சத்தியத்தை அறிந்திருந்தாலும் அந்த சத்தியத்தை அவன் வெறுக்கிறவனாய் இருக்கிறான். தேவன் மீது அவனுக்கு எந்தவிதமான அன்பும் இல்லாததினால், அவரை ஆராதிக்க அவன் விருப்பமற்றவனாய் இருக்கிறான். நாமும் சுபாவப்படி அப்படியே இருக்கிறோம்.

நாம் நம்முடைய பாவத்திலே மரித்திருக்கிறோம். இப்பிரபஞ்சத்தினுடைய வல்லமைகளாலும், நமது மாம்ச இச்சையிலும் மூழ்கி அதன்படி நடக்கிறவர்களாய் இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மை சந்தித்து மாற்றாவிட்டால், நாம் கடின இருதயத்தோடேயே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம். ஒரு புதுப்பிக்கப்படாத இருதயமானது கிறிஸ்துவின் மீது எந்தவிதமான அன்பையும் கொண்டிருப்பதில்லை. அங்கே ஜீவனுமில்லை, அன்புமில்லை. நாம் கிறிஸ்துவின் அன்பை ருசித்துப் பார்க்கும்படியாகவும் அவரை உயர்த்தும் படியாகவும் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம்முடைய இருதயத்தின் செயல்களை மாற்றுகிறவராய் இருக்கிறார். நம்மில் எவரும் கிறிஸ்துவை பூரணமாக அன்பு கூற முடியாது. ஆதலால் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய கல்லான இருதயத்தை உடைத்து அதை சதையான இருதயமாக மாற்றாவிட்டால் நாம் கிறிஸ்துவை ஒருபோதும் அன்புகூற முடியாது.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.