வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?
07-11-2024இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் என்றால் என்ன?
14-11-2024ஆதியிலே…
பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனம் அனைத்திற்கும் அஸ்திபாரமான உறுதி மொழியை முன்வைக்கிறது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி 1:1). வேதத்தின் இந்த முதல் வாக்கியத்தில் மூன்று அடிப்படையான காரியங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: 1) ஆதி ஒன்று இருந்தது; 2) தேவன் ஒருவர் இருக்கிறார்; 3) சிருஷ்டிப்பு இருக்கிறது. முதல் காரியத்தின் அஸ்திபாரம் உண்மையாக இருக்கமுடியுமென்றால் மற்ற இரண்டும் முதல் காரியத்தின் அடிப்படையில் அவற்றை பின்தொடரும் உண்மையாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இந்த உலகத்திற்கு உண்மையில் ஒரு ஆரம்பம் இருந்திருக்கும் என்றால் அந்த தொடக்கத்திற்கு ஏதாவது அல்லது யாரோ ஒருவர் காரணராக இருந்திருக்க வேண்டும் மற்றும் ஒரு ஆரம்பம் இருக்குமென்றால் நிச்சயம் சிருஷ்டிப்பும் அங்கு இருக்க வேண்டும்.
பெரும்பாலும் உலக அளவில் இல்லாவிட்டாலும் மதச்சார்பின்மையை (Secularism) ஏற்றுக் கொள்பவர்கள் இப்பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக பெருவெடிப்பு கோட்பாட்டின் ஆதரவாளர்கள் 15 முதல் 18 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பிரபஞ்சம் ஒரு மாபெரும் வெடிப்பின் விளைவாக உருவானது என்று கூறுகிறார்கள். இருப்பினும், இப்பிரபஞ்சம் பெரும்வெடிப்பிலிருந்து தோன்றினதென்றால் அது எதிலிருந்து வெடித்தது? ஒன்றுமில்லாமையிலிருந்து வெடித்ததா? இது ஓர் அபத்தமான நம்பிக்கை. பெரும்பாலான மதசார்பின்மைவாதிகள், பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்பதை நம்பினபோதிலும் படைப்புகளையும் கடவுளின் இருத்தலையும் நிராகரிப்பது முரண்பாடாக உள்ளது.
கிட்டத்தட்ட அனைவருமே பிரபஞ்சம் என்று ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்த உலகம் அல்லது அதில் உள்ள பொருட்கள், நமது சுய உணர்வு இவை அனைத்தும் ஒரு மாயைத்தவிர வேறில்லை என ஒரு சிலர் வாதிடலாம், இருப்பினும் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட எதுவும் உண்மையற்றது என்று நம்பும் மறுப்பாளர்கள் சிலர், பிரபஞ்சத்தின் படைப்பு என்ற ஒன்று இல்லை என்று வாதிடுகின்றனர். ஒன்றும் இல்லை என்ற வாதத்தை முன்வைக்க ஒருவர் இருக்க வேண்டும். ஏதோ ஒன்று இருக்கிறது மற்றும் ஒரு பிரபஞ்சம் உள்ளது என்ற உண்மையை கருத்தில் கொண்டு, “ ஏன் ஒன்றும் இல்லாததற்கு பதிலாக ஏதோ ஒன்று இருக்கிறது?” என்ற கேள்வியை தத்துவவாதிகளும் மற்றும் இறையலாளர்களும் வரலாற்று ரீதியாக கேட்டிருக்கின்றனர். இதுவே அனைத்து தத்துவ கேள்விகளிலும் பழமையானது. நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் யதார்த்தத்தை விளக்குவதற்கு மூன்று அடிப்படை சாத்தியக்கூறுகள் மட்டுமே உள்ளன என்பதை அதற்கு பதிலளிக்க முயன்றவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
முதல் சாத்தியக்கூறு என்னவென்றால், இப்பிரபஞ்சம் தானாக இருக்கிறதும் நித்தியமுமானது. இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் உண்டு என்றும் அது நித்தியமானது அல்ல என்றும் பெரும்பாலான மதச்சார்பின்மை வாதிகள் நம்புவதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இரண்டாவது சாத்தியக் கூறு என்னவென்றால் இப்பிரபஞ்சம் தானாகவே எப்பொழுதும் இருக்கிறது, ஆனால் அது நித்தியமானதல்ல. இந்தக் கூற்றை கடந்த நாட்களிலும் இன்றும் வாழும் அநேகர் கூறியிருக்கின்றனர். இந்த இரண்டு சாத்தியக் கூற்றுகளுக்கும் பொதுவானது கருத்து என்னவென்றால்: ஏதோ ஒன்று தானாக இருப்பதை குறித்தும் அதன் நித்தியத்தை குறித்தும் இருவரும் வாதாடுகின்றனர்.
மூன்றாவது சாத்தியக்கூறு என்னவென்றால், இந்த பிரபஞ்சம் தன்னைத்தானே உருவாக்கிற்று. இந்தக் கருத்தை நம்புகிறவர்கள் இந்த பிரபஞ்சம் திடீரென மற்றும் வியத்தகுமுறையில் அதன் சொந்த சக்தியால் உருவானது என்கிறார்கள். இருப்பினும் இதை ஆதரிப்பவர்கள், பிரபஞ்சத்தின் சுய உருவாக்கம்(Self-Creation) என்கிற மொழியை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் இந்த கருத்து ஒரு தர்க்க ரீதியான அபத்தம் என்பதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள். எந்த ஒன்றும் தன்னைத்தான் உருவாக்கிக் கொள்வதற்கு அதுவே அதன் சொந்த சிருஷ்டிகராக இருக்க வேண்டும். அதாவது ஒரு பொருள் தன்னைத்தான் உண்டாக்கிக் கொள்ளும் என்றால் அது உருவாவதற்கு முன்னே அந்தப் பொருள் இருந்திருக்க வேண்டும். அப்படியானால், ஒன்று ஒரே நேரத்தில் இவை இரண்டும் இருந்திருக்கும் அல்லது ஒரே நேரத்தில் இவை இரண்டும் இல்லாமலேயும் இருக்கவேண்டும். எனவே இது மிக அடிப்படையான முரண்பாடில்லாத விதி (The Law of Noncontradiction) என்கிற சட்டத்தை மீறுகிறது. எனவே தானாக உருவாகுதல் என்ற கருத்து வெளிப்படையாக அபத்தமானதும் முரண்பாடானதும் பகுத்தறிவற்றதுமாய் இருக்கிறது. இவ்விதமான பார்வையை கொண்டிருப்பது தவறான இறையியலையும், தத்துவத்தையும் அறிவியலையும் கொண்டிருப்பதாகும். ஏனெனில், தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய இரண்டும் பகுத்தறிவின் இரும்புக்கவச சட்டங்களின் மீது தங்கியுள்ளது.
வெளிப்புற பிரபஞ்சத்தின் இருத்தலை விளக்கப்படுத்த “கடவுளைப்பற்றிய அனுமானம்” (God Hypothesis) அவசியமற்ற வழியாக இருக்கிறது என்பதுதான் பதினெட்டாம் நூற்றாண்டின் தத்துவங்களில் மிக முக்கியமான அம்சமாகும். அதுவரை திருச்சபை இந்த தத்துவம் சார்ந்த உண்மையில் வாழ்ந்து வந்தது. இடைக்காலம் முழுவதும் தத்துவவாதிகளால் படைப்பிற்கு காரணமான ஆதி நித்தியத்தை விளக்கமுடியவில்லை, ஆனால் அறிவியல் வளரும் காலங்களில், இப்பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணரான உன்னதமான, சுய இருத்தலும் தன்னிறைவும் கொண்ட படைப்பிற்கு முதல் காரணரான நித்தியமான கடவுளுக்கு பதிலாக வேறொரு மாற்று விளக்கத்தையும் அறிவியலால் தரமுடியும் என்று நம்பினர்.
தன்னிச்சையான உருவாக்கம் என்கிற கோட்பாடானது ஒரு அணுவிலிருந்து உலகம் சுயமாக தன்னில் தானே தோன்றியது என்பதை கூறுகிறது (Spontaneous theory). இதற்கும் தானாக உருவாகுதலின் சுய முரண்பாட்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. இருப்பினும் விஞ்ஞான உலகில் தன்னிச்சையான உருவாக்கம் என்பது அபத்தமானதாக குறைக்கப்பட்ட போதும் அதற்கு பதிலாக மாற்று தத்துவங்கள் எழும்பின. நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ஒருவரின் கட்டுரை, தன்னிச்சையான உருவாக்கம் என்பது ஒரு அடிப்படை தத்துவரீதியாக அது முடியாத காரியம் என்பதை ஒப்புக்கொண்டாலும் படிப்படியாக தன்னிச்சையான உருவாக்கத்தில் அப்படியில்லை என்பதை கூறுகிறது. போதுமான காலமும் திறனும் இருந்தால் ஒன்றுமில்லாதது எப்படியாவது ஒன்றை உருவாக்குவதற்கான சக்தியை உருவாக்க முடியும் என்ற கோட்பாட்டை அவர் நிறுவினார்.
தன்னிச்சையான உருவாக்கத்திற்கு பதிலாக பொதுவாக பயன்படுத்தப்படும் சொல் தற்செயலான படைப்பு. இங்கு தவறான புரிதலுள்ள தெளிவான விடையளிக்காத மற்றொரு தர்க்க ரீதியான தவறான நம்பிக்கை ஏற்படுகிறது. சில சமயங்களில் மிக நுட்பமாக ஒரு வாதத்தில் உள்ள முக்கிய வார்த்தைகள் மற்றும் அவற்றின் அர்த்தத்தை மாற்றும்போது சமநிலையின் தவறு அங்கு ஏற்படுகிறது. “ஒருவேளை வாய்ப்பு இருக்கலாம்” என்ற பதத்தினால் இது ஏற்படலாம். “ஒருவேளை இருக்கலாம்” என்ற சொல் கணித வரைமுறைகளை விவரிக்க பயன்படுத்தினால், அறிவியல் ஆய்வுகளிலும் இந்த வார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு மூடப்பட்ட அறையில் ஐம்பாதியிரம் ஈக்கள் இருந்தால் அந்த அறையின் குறிப்பிட்ட சதுர அங்குலத்தில் எவ்வளவு எண்ணிக்கையிலான ஈக்கள் இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகளை கொடுக்கப்பட்ட நேரத்தில் கூற இந்த புள்ளிவிவரங்களின் கணக்கீடு பயன்படுத்தப்படுகிறது. எனவே அறிவியல் ரீதியாக காரியங்களை கணிக்கும் முயற்சியில், சாத்திய கூறுகளின் சிக்கலான சமன்பாடுகளை உருவாக்குவது ஒரு முக்கியமான மற்றும் சட்டபூர்வமான பணியாகும்.
இருப்பினும் ஒரு கணிதத்தின் சாத்திய கூற்றை விவரிக்க “ஒருவேளை இருக்கலாம்” என்ற சொல்லை பயன்படுத்துவது ஒருபுறம் என்றால் இதே வார்த்தையை உண்மையான படைப்பாற்றல் கொண்ட ஒன்றைக் குறிக்க பயன்படுத்துவது மற்றொரு காரியம். சாத்தியக்கூறு என்ற வார்த்தை இந்த உலகில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கான சக்தியை தன்னில் கொண்டுள்ள ஒரு பொருளாக இருக்க வேண்டும். ஆனால் சாத்திய கூறு என்பது ஒரு பொருள் அல்ல. சாத்தியக்கூறு அல்லது வாய்ப்பு என்பது கணிதத்தின் வரைமுறைகளை விவரிக்கும் ஒரு அறிவு சார் கருத்து, அவ்வளவுதான். இது ஓர் பொருளாக இல்லாததினால் இதற்கு சக்தியும் இல்லை. எனவே சாத்தியக்கூறு தன்னுடைய சக்தியினால் இப்பிரபஞ்சத்தை உருவாக்கினதால்தான் இந்த உலகம் உருவானது என்று கூறுவது , நம்மை மீண்டும் தானாக உருவாகுதல் என்னும் கோட்பாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. ஏனெனில், வாய்ப்பு அல்லது சாத்தியக்கூறு என்பது தன்னில் ஒன்றுமில்லாதது.
நாம் இந்த கருத்தை முற்றிலும் அகற்றமுடியுமென்றால் , இரண்டு சாத்திய கூறுகளில் ஒன்று மட்டுமே நமக்கு மிஞ்சியிருக்கும்: ஒன்று பிரபஞ்சம் தானாகவும் நித்தியமானதாகவும் உள்ளது அல்லது பொருள்சார்ந்த இவ்வுலகம் தானாகவும் நித்தியமானதாகவும் உள்ளது. நான் மேலே குறிப்பிட்டது போல் அந்த இரண்டு சாத்தியக்கூறுகளும், இப்பொழுது ஏதாவது இருக்கிறது என்றால் அது ஏற்கனவே எங்கேயாவது தன்னில்தானே உருவாகியிருக்கவேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறது. அப்படி இல்லாவிட்டால் தற்போது எதுவும் இருக்க முடியாது. அறிவியலின் ஒரு முழுமையான விதி என்னவென்றால், “ஒன்றும் இல்லாமையிலிருந்து எதுவும் வராது” என்பதுதான் (ex nihilo nihil fit). நம்மிடம் எதுவுமே இல்லையென்றால் அதுவே நம்மிடம் எப்போதும் இருக்கும், ஏனென்றால் ஒன்றுமில்லாமை என்பது ஒருபோதும் எதையும் உருவாக்க முடியாது. ஒன்றுமே இல்லாத காலம் என்று எப்போதாவது இருந்திருந்தால், இன்று இந்த நேரத்தில் ஒன்றுமே இருக்காது என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அப்படியானால், படைப்பிற்கு முன் ஏதோ ஒன்று சுயமாக இருந்திருக்க வேண்டும். ஒன்றை உருவாக்குவதற்கு ஏதோவொன்று தன்னில்தானே வல்லமையை கொண்டிருக்கவேண்டும்.
இந்த இரண்டுவிதமான கோணங்களும் பலவித சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கூறியபடி பிரபஞ்சம் ஆதியிலே நித்தியமாக இல்லை என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே பிரபஞ்சத்தைப் பற்றிய முதலாவது பார்வை சாத்தியமில்லை. அதுபோலவே, பொருள் சார்ந்த இவ்வுலகில் நாம் பார்க்கும் அனைத்தும் நிச்சயமின்மையும், மாறுதலையும் கொண்டிருப்பதால், இந்த உலகம் தானாகவும், எப்போழுதும் ஆதியிலே இருக்கிறது என்ற கூற்றை தத்துவவாதிகள் நிராகரிக்கின்றனர். காரணம், என்றென்றும் இருக்கின்ற தானாக இருக்கிற எதுவும் நிச்சயம் எந்த மாறுதலையும் அடையாது. எனவே இப்பிரபஞ்ச உருவாக்கத்தில் எங்கேயோ இதன் மையத்தில் உலகத்தை தோற்றுவிக்கும் ஆற்றலுள்ள ஏதோ ஒரு வல்லமை நித்தியமானாதாக இருந்திருக்கிறது. எனவே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அதற்கு காரணரான அந்த வல்லமைக்கு கடன்பட்டுள்ளது. ஆனால் இதையே பொருள் சார்ந்த உலகத்தை நம்புபவர்கள் சொல்வதென்னவென்றால், “ உலகத்தின் தோற்றத்திற்கு காரணமான அந்த ஆற்றல் பிரபஞ்சத்திற்கு வெளியே இல்லாமல் பிரபஞ்சத்தின் மையத்திலே இருப்பதால், உலகத்தின் படைப்பை விளக்கப்படுத்த நமக்கு புத்திக்கெட்டாத அந்த கடவுள் (transcendent God) தேவையில்லை.” என்கின்றனர்.
இந்த இடத்தில் தான் மொழிப் பிழை ஏற்படுகிறது. தேவன் எல்லாவற்றையும் கடந்து நிற்கிறார் (transcendent God) என்பதை வேதம் பேசுகையில், அது தேவன் இருக்கும் இருப்பிடத்தை பற்றி பேசவில்லை. தேவன் மேலேயோ அல்லது வெளியையோ எங்கேயோ வாழ்கிறார் என்று சொல்லவில்லை. தேவன் தாம் படைத்த அனைத்திற்கும் மேலானவர் என்று சொல்கையில் அவர் தன் இருத்தலிலேயே மேலானவராக இருக்கிறார் என்று அர்த்தம். தன் இருத்தலிலேயே அவர் உயர்ந்தவர். தனக்குள்ளயே ஆற்றலைக் கொண்டு தன்னில் தானே சுயமாக இருக்கும் எதுவும், உண்டாக்கப்பட்டு மற்றும் சார்ந்திருக்கும் எதிலும் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கப்படவேண்டும். எனவே, பிரபஞ்சத்தின் மையத்தில் தன்னில் தானே சுயமாக ஏதாவது இருக்கும் என்றால் அது தன் இயல்பிலேயே எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது. தேவன் எங்கு வாழ்கிறார் என்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் அவரின் தன்மை, குணாதிசயங்கள், நித்திய இருத்தல், உலகில் அனைத்தும் அவரைச் சார்ந்திருக்கும் அவரின் வல்லமையைப் பற்றியே நாம் அக்கறைக்கொள்ளவேண்டும்.
படைப்பை குறித்த கிறிஸ்தவனின் வேதபூர்வமான பார்வை என்பது, தேவன் ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைத்தார் (ex nihilo) என்பதாகும். “ஒன்றுமில்லாமல் இருந்து எதுவும் உருவாகாது” (ex nihilo nihil fit) என்ற அறிவியல் விதிக்கு இது முரண்படுவது போல் தோன்றும். இருப்பினும் எப்பொழுது ஒரு கிறிஸ்தவ இறையிலாளர் தேவன் ஒன்றுமில்லாமையில் இருந்து உலகத்தை படைத்தார் என்று சொல்கிறாரோ, இதன் அர்த்தம் ஆதியிலே ஒன்றுமே இல்லை, அந்த ஒன்றுமில்லாததில் இருந்து ஏதோ வந்தது என்று அர்த்தம் அல்ல. “ஆதியிலே தேவன்…” என்பதே கிறிஸ்தவனின் பார்வை. தேவன் என்பவர் ஏதோ ஒரு ஒன்றுமில்லாமை அல்ல. ஏதோ ஒருவராகவே அவர் இருக்கிறார். தேவன் தன்னில் தானே நித்தியமானவராக இருப்பவர். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைப்பதற்கு அவருக்கு மட்டுமே வல்லமை உள்ளது. பல உலகங்களையும் தேவனால் உருவாக்க முடியும். இதுவே வல்லமையான படைப்புகளின் சரியான விளக்கம். இந்த வல்லமை கடவுளுக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே இருக்கும் சில பொருட்களிலிருந்து அதை மறு வடிவமைப்பு செய்வது மட்டுமல்ல, ஒன்றுமில்லாமையிலிருந்தும் அப்பொருளை உருவாக்கும் வல்லமையும் அவருக்கு மட்டுமே உள்ளது.
ஒரு கலைஞன் பளிங்குகளின் ஒரு சதுர பகுதி எடுத்து அதை ஒரு அழகான சிலையாக உருவாக்க முடியும் அல்லது ஒரு சாதாரண துணியில் பல வித்தியாசமான வண்ணம் நிறைந்த சாயங்களினால் அதை அழகாக மாற்றவும் முடியும். ஆனால் தேவன் இந்த உலகத்தை இவ்வாறு படைக்கவில்லை. தேவன் இந்த உலகத்தை தனது வார்த்தையினால் கொண்டு வந்தார். ஏதோ ஒன்றிலிருந்து அவர் மறுவடிவமைப்பு செய்யவில்லை, முழுமையாக ஒன்றுமில்லாமையிலிருந்தே படைத்தார். அவர் எவ்வாறு படைத்தார் என்பதை வேதம் நமக்கு தெளிவாக விளக்கப்படுத்துகிறது. அதில் நாம் தேவனின் கட்டளையினால் படைக்கப்பட்ட இந்த படைப்பில், அவரது வல்லமையையும் வார்த்தையின் அதிகாரத்தையும் நாம் பார்க்கிறோம். “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று தேவன் சொன்னார் வெளிச்சம் உண்டானது. இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் உண்டாக்கின இந்த தேவனுடைய கட்டளையை ஒருவராலும் தடுக்க முடியாது.
இந்த பதிவு ஆர். சி. ஸ்ப்ரௌலின் Everyone’s A Theologian என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.