
வேதாகமத்தை நினைவு கூர்ந்து அதை நடைமுறைப்படுத்துவதின் அவசியம்
24-06-2025
வேத வியாக்கியானம் என்றால் என்ன?
01-07-2025வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?

மைல்ஸ் வேன் பெல்ட்
உடன்படிக்கையின் வரலாற்றுகளாகிய தேவனின் அனைத்து படைப்புகள், பாவத்தில் மனிதனின் வீழ்ச்சி, கிருபையின் உடன்படிக்கை மற்றும் அதனுடைய அநேக நிர்வாகங்கள் மூலமாக அருளப்படும் தேவனின் மீட்பு மற்றும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையில் மகிமையில் அனைத்தினுடைய முழுமையாக்குதல் போன்ற காரியங்களை வேதாகமம் பதிவு செய்திருக்கிறது. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளை பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிற தேவனே ஆதியும் அந்தமுமாக இருந்து, அனைத்து வரலாற்றையும் நடத்துகிற ஆண்டவராகயிருக்கிறார் (ஏசாயா 46;10, 44:6, 48:12). தேவனுடைய வார்த்தையாகிய வேதம், சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேல் மூன்று வெவ்வேறு மொழிகளில் சொல்லப்பட்ட ஓர் பழமையான வரலாற்றுக்கதையாகும். இதனுடைய இலக்கிய பகுதிகள் நமது காலத்தைப் போல் அல்லாது, தற்காலத்தில் அதில் உள்ள காரியங்களை துல்லியமாகப் புரிந்துக்கொள்வதற்கு சற்று கடினமாக உள்ளது. எனவே வேதத்தின் வரலாற்று கதைநடைகளை புரிந்துக்கொண்டு அதை பிரயோஜனப்படுத்திக்கொள்ள உதவும் மூன்று முக்கிய காரியங்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1.வேதாகமத்தின் ஒருங்கிணைந்த வரலாற்று நடைகள் எப்போதும் காலவரிசைப்படி அமைக்கப்படவில்லை என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
இவற்றை பண்டைய இலக்கிய நுட்பத்தில் காணலாம், இதன்மூலம் ஆசிரியர் ஓர் கூற்றை பதிவுசெய்துவிட்டு, பின்னர் வட்டமிடுவதைப்போல, அந்த நிகழ்வைப் பற்றிய முக்கிய காரியங்களை அல்லது அவைகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் கவனம் செலுத்துவதற்கு மீண்டும் அந்த விளக்கத்திற்கு திரும்புகிறார். வேதத்தில் சிலநேரங்களில், பதிவுசெய்யப்பட்டிருக்கிற கால வரிசையமைப்பை விட இறையியல் மேலோங்கி நிற்கிறது. உதாரணமாக, ஆதியாகமம் 2 வது அதிகாரம் வச. 1-3 வரை படைப்பில் ஏழாவது நாளைப்பற்றிப் பேசுகிறது, அதேசமயத்தில் மீதி உள்ள வசனங்களில் வச.4-25 மீண்டும் ஆறாவது நாளின் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசுகிறது. ஆதியாகமம் 10 வது அதிகாரத்தில் நோவாவின் சந்ததியினரின் பெயர் பட்டியலையும் அவர்களது “தேசங்கள், ஜாதிகள், வம்சங்கள், பாஷைகள்.” பற்றி பேசுகிறது. ஆனால் அடுத்த அதிகாரத்தில் பாபேல் கோபுரத்தின் நிகழ்ச்சிகளில், ஒரே ஒரு பாஷை, சந்ததி, நிலம், ஜாதியைப் பற்றிதான் வாசிக்கிறோம். இதேபோல்தான் 1 சாமுவேல் 16 மற்றும் 17 வது அதிகாரம். 16 வது அதிகாரத்தின் இறுதியில் சவுல் தாவீதை நேசித்தான் என்றும் சவுலுக்கு ஆயுதத்தாரியானான் என்றும் படிக்கிறோம், ஆனால் அடுத்த அதிகாரத்தில் சவுலுக்கு தாவீது யாரென்றே தெரியவில்லை என்றும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை என்றும் வாசிக்கிறோம்.
2. கூடுமானவரை, வசனம் தன்னைத்தானே விளக்கிக்கொள்ளட்டும்.
வேதத்தின் கதைநடை என்பது, அதில் பதிசெய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் அந்த நிகழ்வுகளில் தோன்றும் நபர்களின் உரையாடல்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. சிலநேரங்களில், அதிலுள்ள நீளமான உரையாடல்கள், ஏன் இது இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதையும், அதன் முக்கியவத்துவத்தைப் பற்றியும் புரிந்துக் கொள்வதற்கு உதவிச்செய்கிறது.
உதாரணமாக, 1 இராஜாக்கள் 17 ம் அதிகாரமானது, ஆகாப் ராஜாவிடம் மூன்று வருட பஞ்சத்தை அறிவிக்கிற எலியா தீர்க்கதரிசையைப் பற்றி நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பின்பு அவன் ஆற்றங்கரையில் தங்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காகத்தால் போஷிக்கப்படுகிறான். பின்பு, அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை விட்டு செல்ல தேவனால் கட்டளைப்பெற்று சாரிபாத் விதைவையின் வீட்டில் அவளுடைய குமாரனோடு தஙகியிருப்பதற்கு செல்கிறான். அந்த மகன் இறக்கிறான், எலியா அவனை உயிரோடு எழுப்புகிறார். இதற்கான விதவையின் பதில்தான் இந்த முழு நிகழ்ச்சிக்குமான திறவுகோல்: “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும் இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.” (1 இராஜா 17:24). இதே நுட்பம் தான் அடுத்த அதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாகாலின் தீர்க்கதரிசிகளை எலியா மேற்கொண்டப்பிறகு இதைப்பார்த்த மக்கள் “கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம்” என்றார்கள் (1 இராஜா 18:39). அந்நாளில், கர்த்தரே மெய்யான தேவன் என்றும் அவரது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் உண்மையுள்ளது என்றும் வார்த்தைகளிலும், செயல்களிலும் வேதம் சாட்சியளிக்கிறது.
3. எதிர்பாராததைக் கவனித்திருங்கள்.
சிலநேரங்களில், எதிர்காலத்தையும் அதன் முழுமைகளையும் எதிர்நோக்கியும் அல்லது நிழலாட்டமாக காண்பிப்பதற்கும் சில காரியங்கள் புதுமையானதாகவும், அங்கு சொல்லப்பட்ட நிகழ்ச்சிக்கு தொடர்பில்லாததுபோல தோன்றும். ஆதிகால வரலாற்று கதை நடைகள் இவற்றை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் நமக்கு ஒரு சத்தியத்தைக் கற்பிக்கிறது. உதாரணமாக, யாத்திராகமம் 2 வது அதிகாரத்தில் மோசேயின் பிறப்பிற்கு பின்பு, எபிரெயனைக் கொன்ற ஒரு எகிப்தியனை மோசே கொன்று புதைத்தான் என்று கூறுகிறது. பிறகு அவனது சொந்த ஜனங்களே அவன்மீது குற்றஞ்சுமத்தினதால் அங்கிருந்து ஓடி வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் மோசே தங்கினான் என்பதை வசனங்கள் கூறுகிறது (வச. 11-15). இந்த நீண்ட நிகழ்ச்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்வது என்ன? “உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துப் பிடிக்கும்.” என்பதா? (எண் 32:23). அல்லது கொலையாளியான மோசேயைப் போல் ஒருவனை தேவன் பயன்படுத்தினால் உங்களையும் தேவன் நிச்சயமாக பயன்படுத்துவார் என்பதா? இரண்டுமே உண்மைதான், ஆனால் இவைகள் அந்த நிகழ்ச்சிகளின் கருப்பொருள் சார்ந்த சத்தியம் அல்ல. மோசேயின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வரக்கூடிய காரியங்களாகிய எதிர்காலத்தைப் பற்றிதான ஒரு நிழலாட்டம். மோசே தேவனுடைய ஓர் கருவியாக ஆயிரமாயிரமான எதிப்தியர்களைக் கொல்வதின் மூலம் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். பின்பு, நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் எபிரெயர்களோடு வழிநடந்து, திரிந்து மோசேக்கு விரோதமாக ஜனங்கள் முறுமுறுத்து, கலகம் செய்வார்கள்.
முடிவுரை
வேதாகமத்தில் காணப்படும் பண்டைய வரலாற்றின் கதைநடைகள் கலை வடிவமாகவும், நுட்பமாகவும் அமைந்துள்ளது. இவற்றைப் படிக்கும்பொழுது கவனமாக படித்து, அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து எது சேர்க்கப்பட்டுள்ளது, எது பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இறுதியாக, மிக முக்கியமாக, வேதாகமத்தின் அனைத்து தனிப்பட்ட வரலாற்று நிகழ்வுகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து, மிகவும் மகத்துவமான நிகழ்ச்சியாகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றியும் அவரது பணிகளிலும் எவ்வாறு முடிவடைகிறது என்பதை புரிந்துக்கொள்ள அதிகமாக உழைக்க வேண்டும் (யோவான் 5:39, 45-47, லூக்கா 24:44).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.