
16 ம் நூற்றாண்டில் சீர்திருத்த இரட்சிப்பியல்
02-06-2026ஆரோகண சங்கீதங்களை வாசிப்பது எப்படி?
ஆரோகண சங்கீதங்கள் (The Psalms of Ascents) என்பது சங்கீத புத்தகத்தின் ஐந்தாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள பதினைந்து சங்கீதங்களின் (120-134) தொகுப்பாகும். ஆரோகணம் அல்லது “மேலே ஏறிச் செல்லுதல்” என்பதைக் குறிக்கும் இந்தச் சங்கீதத் தொகுப்பானது, இஸ்ரவேல் புருஷர்களும் ஸ்திரீகளும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை, பெந்தெகொஸ்தே மற்றும் கூடாரப் பண்டிகை ஆகிய மூன்று வருடாந்திர யாத்திரைப் பண்டிகைகளுக்காக எருசலேமுக்குப் பயணம் செய்யும்போது பாடுவதற்கு மிகவும் விரும்பிய ஒரு பாடல்கள் பட்டியலாக இவை இருந்தது (யாத்திராகமம் 23:14-17; உபாகமம் 16:16 காண்க).
விசுவாசத்தில் நமக்கு முன்னோடிகளாய் இருந்தவர்களைப் போலவே, நாமும் ஒரு யாத்திரையில் இருக்கிறோம். நம்முடைய பயணம் இந்த வீழ்ச்சியடைந்த உலகத்தின் வழியாய் புதிய பரம எருசலேமை நோக்கிச் செல்கிறது. கடினமானதும் பெரும்பாலும் ஆபத்தானதுமான இந்தப் பாதையில், இந்தச் சங்கீதங்கள் நமக்கு ஞானமுள்ள வழிகாட்டுதலையும், ஆவிக்குரிய வளமான ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன.
இந்தச் சங்கீதங்கள் நம்முடைய உலகயாத்திரையில் நமக்கு உதவும்படி நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்றால், நாம் அவற்றை எவ்வாறு வாசிக்க வேண்டும்? நாம் இந்த சங்கீதங்களிலிருந்து ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற ஐந்து வழிகாட்டுதல்கள் நமக்கு உதவக்கூடும்.
1. ஒவ்வொரு சங்கீதத்தையும் பலமுறை வாசித்து, அதன் அடிப்படை அமைப்பை (Structure) கோடிட்டுக் காட்டுங்கள்.
இந்தச் சங்கீதங்கள் எபிரெய கவிதைகளாக எழுதப்பட்டிருப்பதால், இவ்வகையான இலக்கியங்களை விளக்குவதற்கான கொள்கைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இணைக் கோட்டு அமைப்பு (parallel line structure) மற்றும் ஒரு சங்கீதத்தின் வரிகளுக்கு இடையே உள்ள பல்வேறு தொடர்புகள் போன்ற அம்சங்கள், ஒவ்வொரு சங்கீதத்தின் அடிப்படைப் பொருளையும் புரிந்துகொள்ள உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தரும். இக்கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய, மேத்யூ எச். பேட்டன் (Matthew H. Patton) எழுதிய “எபிரெய கவிதைகளை வாசிப்பது எப்படி” (How to Read Hebrew Poetry) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
2. இந்தச் சங்கீதங்களில் தோன்றும் உருவகங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் ஓர் உருவகத்திற்குப் பொருள் கூறும்போது, மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். முதலாவதாக, இதில் விவாதிக்கப்படும் தலைப்பு என்ன? இரண்டாவதாக, இந்தத் தலைப்பை விவரிக்க சங்கீதக்காரன் பயன்படுத்தும் உருவகம் என்ன? மூன்றாவதாக, அந்தத் தலைப்புக்கும் உருவகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைப் புள்ளி என்ன?
தேவனுடைய மக்களின் ஒருமுகப்பாட்டை மையக் கருத்தாகக் கொண்ட சங்கீதம் 133-ல் இரண்டு வேலைப்பாடான உருவகங்கள் தோன்றுகின்றன. முதல் உருவகம் ‘எண்ணெய்’ ஆகும்:
“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும் எவ்வளவு இன்பமுமானது!
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிந்து, அவனுடைய அங்கிகளின் அங்கிவசியிலே தொங்குகிற நறுமணத் தைலத்திற்கும்…” (சங். 133:1-2)
இங்கு ஒற்றுமை என்பது தலைப்பாகவும், எண்ணெய் என்பது உருவகமாகவும் இருந்தால், அவற்றுக்கு இடையேயான ஒற்றுமைப் புள்ளி என்ன? தாவீது குறிப்பிடும் எண்ணெய் பரிசுத்த அபிஷேக தைலமாகும் (யாத்திராகமம் 30:22-38). அது மிகுந்த நறுமணமிக்கதாகவும், இனிமையான வாசனையை வீசக்கூடியதாகவும் இருந்தது. தேவனுடைய மக்களுக்கு இடையே உள்ள ஒருமைப்பாடு ஒரு நறுமணமுள்ள, இன்பமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
இரண்டாவது உருவகம் ‘பனி’ ஆகும்:
“…சீயோன் பர்வதங்கள்மேல் பெய்யும் எர்மோனின் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஜீவனுள்ள ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார்.” (சங். 133:3)
பனியானது புற்களைக் குளிர்பண்ணி புதுப்பிப்பது போல, விசுவாசிகள் தேவனுடைய கிரியைகளுக்காக ஒரே இருதயமும் ஒரே மனமும் உள்ளவர்களாய் இருக்கும்போது, தங்களுடைய ஆவியில் ஒரு புத்துணர்ச்சியான புதுப்பித்தலை அநுபவிக்கிறார்கள்.
3. இந்தச் சங்கீதங்களை இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடாக வாசியுங்கள்.
முதல் இரண்டு வழிகாட்டுதல்களும் ஒவ்வொரு சங்கீதத்தின் இலக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்படி நம்மிடம் கோருகின்றன. மூன்றாவது வழிகாட்டுதல் நம் கவனத்தை இலக்கியத்திலிருந்து இறையியல் (theological) ரீதியாகத் திருப்புகிறது. இயேசு, “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியது” என்று கூறினார் (லூக்கா 24:44). சங்கீதங்கள் கிறிஸ்துவைப் பற்றியவை. வாசகர்களுக்கு பொதுவாக முதலாம் சங்கீதத்தில் இக்கருத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதில்லை, ஏனெனில் இயேசுவே வேதவசனத்தின் பாக்கியவான் (Blessed Man). சங்கீதம் 22-ல், அவர் கைவிடப்பட்டவர். அவர் சங்கீதம் 23-ல் அவர் நல்ல மேய்ப்பர்.
ஆனால் ஆரோகண சங்கீதங்களில் இயேசுவை நாம் எங்கே காண்கிறோம்? எருசலேமுக்குப் போகும் வழியில் ஒரு விசுவாசமுள்ள யாத்திரிகராக இந்தச் சங்கீதங்களைப் பாடிக்கொண்டு செல்லும் தேவ குமாரனாக நாம் அவரைக் காண்கிறோம். பன்னிரண்டு வயதில், அவர் பஸ்கா பண்டிகைக்காக முதன்முதலில் எருசலேமுக்குச் சென்றது முதற்கொண்டு (லூக்கா 2:41-51), இரட்சகர் தவறாமல் யாத்திரிகப் பண்டிகைகளைக் கைக்கொண்டு வந்தார் (யோவான் 2:13; 6:4; 7:1-24; 13:1 காண்க). அவர் சிலுவையில் அறையப்படும் காலம் நெருங்கியபோது, கர்த்தர் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குப் போகத் தம்முடைய முகத்தைத் திருப்பினார் (லூக்கா 9:51). தம்முடைய விசுவாசம் பாடுகளுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும் என்று அவர் அறிந்திருந்தபோதிலும், அவர் ஒரு உறுதியான யாத்திரிகராக இருந்தார் (லூக்கா 9:21-22). நீங்கள் இந்தச் சங்கீதங்களை வாசிக்கும்போது, இயேசு இவற்றை எப்படிப் பாடியிருப்பார் அல்லது இப்பாடல்கள் உங்களை இயேசுவைப் பற்றி எப்படிப் பாடத் தூண்டுகின்றன என்று உங்களையே கேளுங்கள்.
4. ஒரு சங்கீதத்தின் பின்னணியை (Context) அறிந்த பிறகு, அதைப் நடைமுறை வாழ்க்கையோடு பிரயோகிப்பதில் (Application) கவனம் செலுத்துங்கள்.
நான்காவது வழிகாட்டுதல் இலக்கிய மற்றும் இறையியல் தளத்திலிருந்து நகர்ந்து, தனிப்பட்ட பயன்பாடு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. பரிசுத்த நகரத்திற்குச் செல்லும் ஒரு இஸ்ரவேலனின் காலணிகளில் உங்களை இருத்தி, உங்களிடமே இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
புதிய எருசலேமுக்குப் பயணம் செய்யும் ஒரு விசுவாசமுள்ள யாத்திரிகராக நான் இருப்பதன் அர்த்தம் என்ன?
நான் சந்திக்கும் தடைகளை நான் எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் (சங். 121:1 காண்க)?
ஆராதனையின் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியான கொண்டாட்டமும் என் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்?
5. இந்தச் சங்கீதங்களில் காணப்படும் தேவனுடைய மக்களின் கூட்டு ஐக்கியத்தை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இஸ்ரவேலர்கள் பண்டிகைகளுக்காக எருசலேமுக்குப் பயணம் செய்தபோது, அவர்கள் குழுக்களாகச் சென்றனர். மரியாளும் யோசேப்பும் பஸ்கா பண்டிகை முடிந்து நாசரேத்துக்குத் திரும்பும்போது இயேசுவைக் காணாமல் போனதை அறிந்த முதல்நாளில் கவலைப்படவில்லை, ஏனெனில் அவர் வடக்கு நோக்கித் திரண்டு செல்லும் கூட்டத்தில் மற்றவர்களுடன் இருப்பார் என்று அவர்கள் நினைத்தார்கள் (லூக்கா 2:43-44). நம்மில் ஒவ்வொருவரும் யாத்திரிகர்களாக இருந்தாலும், இந்தப் பயணத்தில் நாம் தனியாகப் பயணம் செய்யவில்லை. எனவே, நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும் (சங். 122:1), நம்மோடு பயணம் செய்யும் அனைவரின் நலனிலும் நாம் அக்கறை கொள்ள வேண்டும் (சங். 122:8), நாம் அனைவரும் இன்னல்களை எதிர்கொள்கிறோம் என்பதை உணர வேண்டும் (சங். 123:2-4), மற்றும் ஐக்கியத்தின் மகிழ்ச்சியை ருசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் (சங். 133).
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


