The Development of Roman Catholic Sacerdotal Soteriology

ரோமன் கத்தோலிக்க குருத்துவ இரட்சிப்பியல் கோட்பாட்டின் வளர்ச்சி

28-05-2026
The Development of Roman Catholic Sacerdotal Soteriology

ரோமன் கத்தோலிக்க குருத்துவ இரட்சிப்பியல் கோட்பாட்டின் வளர்ச்சி

28-05-2026

16 ம் நூற்றாண்டில் சீர்திருத்த இரட்சிப்பியல்

Reforming Soteriology in the Sixteenth Century

பதினாறாம் நூற்றாண்டில் இரட்சிப்பைப் பற்றிய இறையியல் மீண்டும் கண்டறிந்த நிகழ்ச்சியானது ஒரு நேரத்தில் ஏற்படவில்லை. முதலில் ஆரம்பகால சீர்திருத்தவாதிகள் ‘நீதிமானாக்கப்படுதல்’ என்ற வார்த்தையின் வேதாகமப் பொருளை மீண்டும் கண்டறிந்தனர். இதன் பொருள் நீதிமானாக மாற்றப்படுவதல்ல மாறாக நீதிமான் என்று பிரகடனப்படுத்துதல் என்பதை அறிந்தனர். நீதிமானக்கப்படுவதற்கு திருமுழுக்கு காரணமல்ல, விசுவாசம் மட்டுமே என்பதை உணர்ந்தனர். சீர்திருத்தவாதிகள் முதலில் கண்டறிந்த உண்மை என்னவென்றால் மனிதனின் மாபெரும் பிரச்சனைக்கான தீர்வை பற்றி, பிற்கால இடைப்பட்ட திருச்சபை தவறான புரிதலைக் கொண்டிருந்தது என்பதை அறிந்தனர்.

நாளடைவில், அவர்கள் வேதாகமத்தை ஆராய்ந்து, அதன் போதனையை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, மனிதனின் பிரச்சனையைப் பற்றிய தவறான புரிதல் ரோமுக்கு இருந்ததால், தீர்வைப் பற்றியும் தவறான புரிதல் ரோமுக்கு இருந்தது என்பதை அவர்களால் கண்டறிய முடிந்தது. ரோமின் இரட்சிப்புக் கோட்பாடு (தீர்வு) ஆதாமின் பாவத்தின் விளைவை (பிரச்சனை) தவறாக புரிந்துக் கொண்டதால் அவ்வாறு பெருகியிருந்தது. முந்தைய கட்டுரையில் நாம் கவனித்தபடி, ஆதாம் வீழ்ச்சியடைந்தபோது, நீதிமானாக்கும்/பரிசுத்தப்படுத்தும் கிருபை எனும் கூடுதல் வரத்தை இழந்ததாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை போதித்தது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, ஆதாமும் அவனது சந்ததியினரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு மீண்டும் உயர்த்தப்படுவதற்கு அந்தக் கிருபையை மீண்டும் பெற வேண்டியிருந்தது. அவர்களின் பார்வையில், இது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அருட்சாதனங்கள் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

சீர்திருத்தவாதிகள் வேத்தை ஆராயும் பொழுது, பாவ வீழ்ச்சியைப் பற்றிய ரோம கத்தோலிக்கரின் உபதேசம் வேத வசனங்களுக்கு அநீதி செய்வதை கண்டுபிடித்தனர். வீழ்ச்சியின்போது, மனிதன் தனது இயல்புக்குச் சிறிதோ அல்லது முற்றிலுமோ எவ்விதத் தீங்கும் ஏற்படாத வகையில், வெறும் ஒரு ‘கூடுதல் கிருபையை’ (superadded grace) மட்டுமே இழக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். மாறாக, வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை இவ்வாறு கூறுகிறது, வீழ்ச்சியில்,

மனிதன் அவர்களின் உண்மையான நீதியிலிருந்தும் மற்றும் தேவனோடு உள்ள ஐக்கியத்திலிருந்தும் விழுந்து, பாவத்தில் மரித்தவர்களாகவும், ஆத்துமாவிலும் சரீரத்திலும் அனைத்து பகுதிகள் மற்றும் அவயவங்களிலும் முழுவதுமாக கறைப்படுத்தப்பட்டார்கள். (WCF 6.2).

இந்த நிலைக்கான இறையியல் வார்த்தை மனிதனின் “முழுமையான வீழ்ச்சி” என்று உருவானது. 

இங்கு குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான காரியம் என்னவென்றால், பிரச்சனையைப் பற்றி ஒருவர் எப்படி விசுவாசிக்கிறார் என்பதுதான் இரட்சிப்பின் தீர்வைப் பற்றி அவர் என்ன நம்புகிறார் என்பதை தீர்மானிக்கிறது. பெலேஜியஸின் இரட்சிப்புக் கோட்பாடு, அப்பிரச்சினை குறித்த அவரது புரிதலின் காரணமாகவே அவ்வாறு அமைந்துள்ளது. இரட்சிப்பைப் பற்றிய ரோம கத்தோலிக்கரின் புரிதலும் இதனடிப்படையிலேயே உள்ளது. மரித்த மனிதனின் இரட்சிப்பிற்கும், காயமடைந்தவரின் இரட்சிப்புக்கும் இடையில் மாபெரும் வித்தியாசம் அமைந்துள்ளது.

சீர்திருத்த சபைகள், தேவன் மனிதனோடு ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மனிதனின் பிரச்சனைக்கான தீர்வு உள்ளது என்பதை விளக்கப்படுத்துகிறது. இரட்சிப்பைப் பற்றிய வேத கோட்பாடுகளை தெளிவாக வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை நமக்கு அளிக்கிறது. பின்வருபவை பெரும்பாலும் இந்த விசுவாச அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்‌. வாசகர்கள், வேத ஆதாரங்களைக் கொண்டுள்ள ஒரு பிரதியை கொள்ளவும் அதை கவனமாக ஆராயவும் இங்கு உற்சாகப்படுத்தப்படுகிறீர்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை விளக்குவது போல, வீழ்ச்சிக்கு முன்பு, தேவன் ஆதாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்; “அதனால் ஆதாமுக்கு ஜீவன் வாக்களிக்கப்பட்டது; மேலும், பரிபூரணமான மற்றும் தனிப்பட்ட கீழ்ப்படிதலின் நிபந்தனையின் பேரில், அவன் மூலமாக அவனுடைய சந்ததிக்கும் ஜீவன் வாக்களிக்கப்பட்டது” (WCF 7.2). குறிப்பிடத்தக்க வகையில், ரோமின் போதனைக்கு மாறாக, வீழ்ச்சிக்கு முன்பே ஆதாமுக்கு சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வல்லமையும் திறனும் இருந்தது (WCF 4.2; 19.1). மேலும், ஆதி நீதி என்பது தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருந்ததால், அது அவனுடைய இயல்பின் ஒரு பகுதியாக இருந்தது (WCF 4.2; 6.2). ரோமன் கத்தோலிக்க திருச்சபை போதித்தது போல, அது அவனுடைய இயல்புடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட ஒரு வரம் அல்ல.

வீழ்ச்சியடைந்த மனிதன் வெறுமனே காயப்பட்டவனாகவோ அல்லது நோயுற்றவனாகவோ இல்லாமல், பாவம் மற்றும் மரணத்தின் நிலையில் இருப்பதால் விலைக்கிரயமாக வாங்கப்பட்ட மீட்பை தானாகவே பெற்றுக் கொள்ள அவனால் எதுவும் செய்ய இயலாது.

மனிதனின் வீழ்ச்சியின் காரணமாக, அவனால் இனி சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை, அதனால் முதல் உடன்படிக்கையின் நிபந்தனைகளையும் நிறைவேற்ற முடிவதில்லை. எனவே, தேவன்,

பொதுவாக கிருபையின் உடன்படிக்கை என்று அழைக்கப்படும் இரண்டாவது உடன்படிக்கையை ஏற்படுத்த அவர் பிரியப்பட்டார்; அதில் அவர் பாவிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜீவனையும் இரட்சிப்பையும் இலவசமாக அளிக்கிறார்; அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக அவரில் விசுவாசம் வைக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறார், மேலும் நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்கள் விசுவாசிக்க மனமுள்ளவர்களாகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆவதற்காக, தமது பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கிறார். (WCF 7.3)

ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரே மத்தியஸ்தராக இருப்பதற்காக நித்திய காலத்திலிருந்தே நியமிக்கப்பட்டார் (WCF 8.1). தேவன், தமது இலவச கிருபையினாலும் அன்பினாலும் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொண்ட தம்முடைய மக்களை இரட்சிப்பதற்காக அவர் நியமிக்கப்பட்டார்; அந்த மக்கள், “உலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பே, தமது நித்தியமும் மாறாததுமான நோக்கத்தின்படியும், தமது இரகசிய ஆலோசனையின்படியும், தமது சித்தத்தின் நல்விருப்பத்தின்படியும்” (WCF 3.5) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவர்.

கர்த்தராகிய இயேசு, தமது பரிபூரண கீழ்ப்படிதலினாலும், நித்திய ஆவியானவர் மூலமாக ஒரே முறை தேவனுக்கு ஒப்புக்கொடுத்த தம்மையே பலியிடுதலினாலும், தமது பிதாவின் நீதியை முழுமையாக நிறைவேற்றினார்; மேலும், பிதா தமக்குக் கொடுத்த யாவருக்கும் சமாதானத்தை மட்டுமல்ல, பரலோக ராஜ்யத்தில் ஒரு நித்திய சுதந்தரத்தையும் பெற்றுத் தந்தார். (WCF 8.5)

விலைகொடுத்து வாங்கப்பட்ட மீட்பு, வரலாறு முழுவதும் தெரிந்துக்கொள்ளப்பட்ட அனைவருக்கும் கிறிஸ்துவால் வழங்கப்படுகிறது (WCF 8.8).

வீழ்ச்சியடைந்த மனிதன் வெறுமனே காயப்பட்டவனாகவோ அல்லது நோயுற்றவனாகவோ இல்லாமல், பாவம் மற்றும் மரண நிலையில் இருப்பதால் , அவனால் தானாகவே விலைகொடுத்து வாங்கப்பட்ட மீட்பைப் பெற்றுக்கொள்ள எதுவும் செய்ய இயலாது. ஆகையால், கிறிஸ்து லாசருவைக் கல்லறையிலிருந்து அழைத்தது போலவே, தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை மரணத்திலிருந்து வல்லமையால் அழைக்கிறார். அவர் அவர்களை மறுபிறப்பு அடையச்செய்து, அவர்களுக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுத்து, அவர்களை இயேசு கிறிஸ்துவிடம் ஈர்க்கிறார் (WCF 10.1). தேவன் யாரை அழைக்கிறாரோ, அவர்களை அவர் இலவசமாக நீதிமான்களாக்குகிறார். அவர்கள் தங்கள் சொந்தக் கிரியைகளின் அடிப்படையில் அல்ல, மாறாக விசுவாசத்தால் மட்டுமே பெறப்பட்ட கிறிஸ்துவின் அருளப்பட்ட நீதியின் அடிப்படையில் நீதிமான்களாக்கப்படுகிறார்கள் அல்லது நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறார்கள் (WCF 11.1; 14.2). வல்லமையான அழைப்பினால் அழைக்கப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்:

பாவ சரீரம் முழுவதின் ஆளுகை அழிக்கப்படுகிறது, அதன் பல்வேறு இச்சைகள் மேலும் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு அடக்கப்படுகின்றன; மேலும், இரட்சிப்பின் சகல கிருபைகளிலும் அவை மேலும் மேலும் உயிரூட்டப்பட்டு, மெய்யான பரிசுத்தத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பலப்படுத்தப்படுகின்றன; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரைக் காணமாட்டான். (WCF 13.1).

ரோமன் கத்தோலிக்க திருச்சபையைப் போலல்லாமல், சீர்திருத்தத் திருச்சபைகள் பின்வருமாறு போதித்தன:

தம்முடைய பிரியமானவரில் தேவன் ஏற்றுக்கொண்டு, மெய்யாகவே அழைத்து, தம்முடைய ஆவியினால் பரிசுத்தப்படுத்தியவர்கள், கிருபையின் நிலையிலிருந்து முழுமையாகவோ அல்லது இறுதியாகவோ விலகிப் போகமாட்டார்கள்; ஆனால், நிச்சயமாக இறுதிவரை அதில் நிலைத்திருந்து, நித்தியமாக இரட்சிக்கப்படுவார்கள். (WCF 17.1)

நாம் அடுத்த கட்டுரையில், நெதர்லாந்தில் ஒரு சில சீர்திருத்த இறையியலாளர்கள், சீர்திருத்த விசுவாச அறிக்கையிலிருந்து விலகி மீண்டும் ரோம கத்தோலிக்கரின் கோட்பாட்டிற்கு திரும்பிய வழியை பார்ப்போம். டார்ட் கவுன்சிலில்  (synod of Dort) சீர்திருத்த சபைகளின் பதிலையும் காண்போம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன் Dr. கெய்த் மேத்திசன் சேன் போர்ட் ல் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பேராசிரியராக உள்ளார். The Lord's Supper உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசிரியருமாவார்.