What Is the Covenant of Works?

கிரியைகளின் உடன்படிக்கை என்றால் என்ன?

09-06-2026
What Is the Covenant of Works?

கிரியைகளின் உடன்படிக்கை என்றால் என்ன?

09-06-2026

மகா பரிசுத்த ஆசரிப்பு கூடாரம்

The Holy of Holies

“அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ணுவதற்கு…” (யாத். 25:8). இஸ்ரவேலரின் ஆசரிப்புக் கூடாரம் (Tabernacle) ஒரு ஆச்சரியமான கட்டடக்கலைப் படைப்பாகும். தேவனுடைய மகத்தான, எல்லையற்ற பிரசன்னத்தை ஒரு காட்சி வடிவத்தில் வெளிப்படுத்துவதே அதன் முழு நோக்கமாய் இருந்தது. அது கட்டப்படும் வரை, தேவனுடைய பிரசன்னம் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டது. ஆதாம் மற்றும் ஏவாளுக்கு, “தோட்டத்திலே உலாவிக்கொண்டிருக்கிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டபோது” (ஆதி. 3:8) அவர் தம்மை வெளிப்படுத்தினார். ஆபிரகாமுக்கு, புகைகிற சூளையும் எரிகிற அக்கினியுமாய் அவர் தம்மை வெளிப்படுத்தினார் (ஆதி. 15:17). யாக்கோபுக்கு, அவன் போராடக்கூடிய ஒரு மனுஷனாக அவர் தம்மை வெளிப்படுத்தினார் (ஆதி. 32:22-32). மோசேக்கு, வெந்துபோகாத முட்செடியிலிருந்து எரியும் அக்கினியாய் அவர் தம்மை வெளிப்படுத்தினார் (யாத். 3:2). மேலும் இஸ்ரவேலர் அனைவருக்கும், அவர்கள் வனாந்தரப் பயணத்தின்போது பகலில் மேகஸ்தம்பமாகவும் இரவில் அக்கினிஸ்தம்பமாகவும் (13:21-22), மற்றும் காரிருள், மின்னல், இடிமுழக்கம் மற்றும் எக்காள சத்தமாகவும் (யாத். 19:9, 16) அவர் தம்மை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், ஆசரிப்புக் கூடாரத்தின் மூலம் ஒரு புதிய காரியம் நிகழ்ந்தது. தேவனுடைய பிரசன்னம் இனி வந்து போகும் ஒரு விருந்தினரைப்போல இராமல், அவர்களைப் போலவே ஒரு கூடாரத்தில், அவர்கள் நடுவிலே வாசம் செய்யும் ஒரு குடிகளைப்போல இருந்தது. அப்படியானால், ஆசரிப்புக் கூடாரம் அவருடைய ராஜாங்க வீடாக இருந்தது; அதில் திரையிலுள்ள ஒரு வாசலும், அதை மூடியிருந்த தொங்குதிரைகளும், அப்பம் வைக்கப்பட்ட ஒரு மேஜையும், வெளிச்சம் தரும் குத்துவிளக்கும், அவருடைய ராஜரீக பாதபடியாக உடன்படிக்கைப் பெட்டியும் முழுமையாக அமைந்திருந்தன.

இந்த புதுமையின் ஒரு அம்சம் என்னவென்றால், இப்போது தங்களது முற்பிதாக்கள் அனுபவிக்க முடியாத ஒரு வழியில் உடன்படிக்கையின் ஜனங்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை அவர்கள் நடுவிலே, அனுபவிக்க முடிந்தது. இது இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கும் மிகவும் ஆவிக்குரிய போதகமாக இருக்கிறது, ஏனெனில் அந்த ஆசரிப்புக் கூடாரம் தேவன் நம்மிடையே மாம்சத்தில் வாசம் செய்ததன் ஒரு நிழலாட்டமாய் (Type) இருந்தது:

“வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் – “(வாசம் பண்ணினார்” என்ற வார்த்தையை “ஆசரிப்புக் கூடாரமாய் இருந்தார் என்றும் மொழிபெயர்க்கலாம்); பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையைக் கண்டோம்.” (யோவான் 1:14)

கர்த்தருடைய பிரசன்னத்தை அவருடைய சொந்த நிபந்தனைகளின்படி மட்டுமே அவருடைய ஜனங்கள் அனுபவிக்க முடிந்தது. அவர் அந்த நிபந்தனைகளை மோசேக்கு வெளிப்படுத்தி: “நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய சகல பணிமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்யக்கடவீர்கள்” (யாத். 25:9) என்றார். இந்த ஆசரிப்புக் கூடாரம் பற்றிய விபரங்கள் (அதிகாரங்கள் 25-30) இதை நம் மனதில் பதிய வைக்கின்றன. தேவன் தம்மை நமக்கு, அதாவது தம்முடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்துகிறார்; அவருடைய வார்த்தையின் மூலம் நாம் அவரிடம் சேர்ந்து, அவரை அறிந்துகொள்ள முடிகிறது. அவருடைய வார்த்தையின் ஊழியக்காரர்கள் மூலம் நமக்குக் கற்பிக்கப்பட கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் நாம் கைக்கொள்ளும்போது, அவர் “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்முடனே இருக்கிறார்” (மத். 28:19-20) என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.

கர்த்தருடைய பிரசன்னம், அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்களின் மூலமாக வடிவமைக்கப்பட்டு, மத்தியஸ்தம் செய்யப்பட்டு அனுபவிக்கப்பட்டது. கர்த்தருடைய பிரசன்னத்தின் ஊழியக்காரர்களாகிய அவர்களை இஸ்ரவேலர்கள் தங்களின் அனைத்து புலன்களாலும் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. அவர்களுடைய வஸ்திரங்களும் கர்த்தருடைய ஜனங்களுக்கு கர்த்தருடைய மகிமையையும் அழகையும் வெளிப்படுத்துவதற்காகவே அமைந்திருந்தன (யாத். 28:2). மேலும் அவர்கள் ஜனங்களின் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்காக, நிவிர்த்திக்காகவும் (Propitiation) பாவப்பரிகாரத்திற்காகவும் (Expiation), மற்றும் தங்கள் தேவனுடைய கிருபையுள்ள கிரியைகளுக்காக நன்றியறிதலோடும் பலிகளைச் செலுத்தினார்கள் (லேவி. 1-7). உண்மையில், பலி செலுத்தும் முறையின் வியக்கத்தக்க காரியங்களில் ஒன்று, அதில் ஜனங்கள் எவ்வளவு தூரம் பங்கெடுத்தார்கள் என்பதாகும். ஜனங்கள் பலியிடுவதற்காகத் தங்கள் சொந்த மிருகங்களைக் கொண்டுவந்து, அந்த மிருகங்களின் தலைகளின்மேல் தங்கள் கைகளை வைத்து, தங்கள் சொந்த பாவங்களை அறிக்கை செய்தார்கள். மேலும், சமாதானபலி என்று அழைக்கப்படும் பலியில், கர்த்தர் பலிபீடத்தின் மேல் தமக்குரிய பங்கை “புசித்தது” மற்றும் ஆசாரியர்கள் தங்கள் பங்கைப் பெற்றது மட்டுமல்லாமல், ஜனங்களும் அதில் ஒரு பங்கிட்டுப் புசித்தார்கள் (லேவி. 7:11-18).

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தை தந்ததன் நோக்கம், அவருடைய வார்த்தை, ஆசாரியர்கள் மற்றும் பலிகளில் உள்ள கிருபையின் அடையாளங்கள் மற்றும் அங்கு ஏறெடுக்கப்படும் ஜெபங்களின் மூலமாக, அவர் கிருபையோடும் இரக்கத்தோடும் அவர்கள் நடுவில் வாசம் செய்வதற்கே ஆகும். ஆச்சரியமாக, அவர் இன்றும் நம் மத்தியில் அவ்வன்ணமாகவே வாசம் செய்கிறார் (எபே. 2:18-22).

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டேனியல் ஆர். ஹைட்

டேனியல் ஆர். ஹைட்

ஆசிரியர்: Dr. Daniel R. Hyde - டாக்டர் டேனியல் ஆர். ஹைட் கலிபோர்னியாவின் கார்ல்ஸ்பாட் நகரில் உள்ள ஓஷன்சைட் யுனைடெட் சீர்திருத்த திருச்சபையின் (Oceanside United Reformed Church) போதகராக இருக்கிறார். இவர் காட் இன் அவர் மிட்ஸ்ட் (God in Our Midst) மற்றும் வெல்கம் டு எ ரிஃபார்ம்டு சர்ச் (Welcome to a Reformed Church) உட்பட பல புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.