
முதல் சர்ச்சை: அகஸ்டின் VS. பெலாஜியஸ்
21-05-2026இரட்சிப்பியலுக்கான இன்றைய சவால்கள்
டார்ட் கவுன்சில், ஆர்மீனிய தவறானக் கோட்பாடுகள் பற்றிய குழப்பங்களுக்கு டச்சு சீர்திருத்த சபைகளுக்குள்ளாக ஒரு முடிவைக் கொண்டுவந்திருந்தாலும், ஆர்மீனியசம் என்பது முற்றிலும் அழிக்கப்படவில்லை. வேதப்பூர்வமான இரட்சிப்பின் கோட்பாடுகளுக்கு சவால்களை எழுப்புவதையும் நிறுத்தவில்லை. இன்று வரையும் இது இவ்வாறே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும் ஆர்மீனியசம் மட்டுமே இன்றைய சவால் அல்ல. கிறிஸ்தவ இரட்சிப்புக் கோட்பாட்டிற்கு உள்ள மேலும் ஐந்து சமகால சவால்களைப் பற்றிச் சுருக்கமாக இந்த பதிவில் பார்ப்போம்.
1.நீதிமானாக்கப்படுதல் உபதேசத்தில் திருத்தம்
இரட்சிப்பியல் கோட்பாட்டிற்கு உள்ள மிக முக்கியமான சவால், நீதிமானாக்கப்படுதல் உபதேசத்தில் திருத்தம்தான். உதாரணமாக, முதலாம் நூற்றாண்டின் யூத மதத்தைப் பற்றி தங்கள் திருத்தப்பட்ட புரிதலின் அடிப்படையில், பவுலின் உபதேசங்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தின் ஆதரவாளர்கள், பவுலின் இரட்சிப்புயியல் கோட்பாட்டைப் பற்றி ஓர் புதிய புரிதலை அடைந்துள்ளனர். உதாரணமாக, நீதிமானாக்கப்படுதல் என்பது ஒரு நபர் ஏற்கனவே தேவனுடைய மக்களில் ஒருவராக இருக்கிறார் என்று தேவன் பிரகடனப்படுத்துகிறார் என்று N. T. Wright கூறுகிறார். அதாவது, நீதகமானாக்குதலின் நிகழ்கால மற்றும் எதிர்கால செயல் ஆகிய இரண்டுமே உள்ளன. நமது எதிர்கால நீதிமானாக்கப்படுதல் உடன்படிக்கை மீதான நமது உண்மை நிலையில் வேரூன்றியுள்ளது.
கூட்டாட்சிப் பார்வையின் ஆதரவாளர்கள், நீதிமானாக்கப்படுதல் கோட்பாட்டில் தாங்கள் செய்த திருத்தங்களின் மூலம் கிறிஸ்தவ இரட்சிப்புக் கோட்பாட்டிற்கு சவால் விடுத்துள்ளனர். அவர்களுடைய போதனைகளில் பெரும்பாலானவை, வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் செமினரியில் இறையியல் பேராசிரியராக இருந்த நார்மன் ஷெப்பர்டிடம் இருந்து வந்தவை. அவர் விசுவாசத்தை நமது கிரியையின் உண்மையுள்ள தன்மை என வரையறுத்து, அதன் மூலம் நமது கிரியைகளின் ஒரு பகுதியை நீதிமானாக்கப்படுதலுக்கான அடிப்படைகளில் இணைத்தார். கூட்டாட்சிப் பார்வையின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், அவர்களது வழிகளில், ஷெப்பர்டின் கோட்பாட்டின் கூறுகளையும் புதிய கண்ணோட்டத்தின் கூறுகளையும் இணைத்து, அதன் விளைவாக, வேதாகம நற்செய்தியைச் சிதைத்துள்ளனர். நல்லவேளையாக, அனைத்து முக்கிய சீர்திருத்தத் திருச்சபைகளும் இந்தப் பொய்க் கோட்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளன.
2. கடவுளைப் பற்றிய உபதேசத்தில் திருத்தம்
இரட்சிப்பியல் மீதான கடவுளைப் பற்றிய திருத்தப்பட்ட கோட்பாடுகளின் விளைவுகள், நீதிமானாக்கப்படுதல் பற்றிய திருத்தப்பட்ட கோட்பாடுகளின் விளைவுகளைப் போல உடனடியாகத் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவையும் அதே அளவு முக்கியமானவை. ஒவ்வொரு வேதாகமக் கோட்பாடும் கடவுளைப் பற்றிய கோட்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதால், கடவுளைப் பற்றிய கோட்பாடு மாற்றப்படும்போது, மற்ற எல்லாக் கோட்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய திருத்தங்கள் இப்போது இறையியல் தாராளவாதிகளிடையே மட்டும் நிகழ்வதில்லை. தங்களை சுவிசேஷகர்கள் மற்றும் சீர்திருத்த இறையியலாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் கடவுளைப் பற்றிய கோட்பாட்டைத் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர், இப்போது கடவுளைக் கால ஓட்டத்தில் பங்கேற்பவராக, நிகழ்வுகள் வெளிப்படும்போது மட்டும் அவற்றுக்கு எதிர்வினையாற்றித் தன்னைத் தகவமைத்துக் கொள்பவராக ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு தமது சித்தம், உணர்ச்சிகள் மற்றும் நோக்கங்களை மாற்றிக்கொள்பவராக விவரிக்கின்றனர். இந்தக் கண்ணோட்டத்தின்படி, கடவுள் நமது புரிதலுக்காகப் பதிலளிப்பவராக மட்டும் சித்தரிக்கப்படவில்லை, மாறாக, உண்மையில் அவர் மாறுதலுக்குட்பட்டவர் ஆவார்.
சுருக்கமாகச் சொன்னால், கடவுள் தம் படைப்புகளைப் போலவே மாறக்கூடியவர். இத்தகைய திருத்தம் கிறிஸ்தவ இரட்சிப்புக் கோட்பாட்டிற்கு உருவாக்கும் சவால் மிகவும் ஆபத்தானது. கடவுளின் சித்தம் மாறக்கூடியது என்றால், நமது இரட்சிப்பைக் குறித்த அவருடைய சித்தமும் மாறக்கூடியதாகவே இருக்கும். நமது விசுவாசத்தை நிலைநிறுத்துவதற்கு இனி உண்மையாகவே நிலையான தளம் எதுவும் அங்கு இல்லாமல் போகும். கிறிஸ்துவை நம்பும் அனைவரையும் இரட்சிப்பதாகக் கடவுள் வாக்குறுதி அளித்துள்ளார், ஆனால் கடவுள் தம் மனதை மாற்றிக்கொண்டால், இந்த வாக்குறுதியைக் குறித்து அவர் தம் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்? நம் மீதான அவருடைய அன்பு மாறாது என்று நமக்கு எப்படித் தெரியும்?
3. கிறிஸ்துவைப் பற்றிய உபதேசத்தில் மாறுதல்
கடவுளைப் பற்றிய திருத்தப்பட்ட கோட்பாடுகளைப் போலவே, கிறிஸ்துவைப் பற்றிய திருத்தப்பட்ட கோட்பாடுகளும் கிறிஸ்தவ இரட்சிப்புக் கோட்பாட்டிற்கு ஒரு கடுமையான சவாலாக அமைகின்றன. இத்தகைய திருத்தங்களின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும், ஏனெனில் நற்செய்தியானது கிறிஸ்துவின் ஆளுமையையும் அவருடைய கிரியைகளையும் மையமாகக் கொண்டுள்ளது ( 1 கொரிந்தியர் 15:3-8 ). கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய நமது புரிதலை நாம் மாற்றினால், அவர் மீட்பில் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றிய நமது புரிதலும் தவிர்க்க முடியாமல் மாறும்.
கிறிஸ்துவியலின் மிக முக்கியமான சமகாலத் திருத்தங்களில் ஒன்று, பொதுவாக “குமாரனின் நித்திய கீழ்ப்படிதல்” என்று குறிப்பிடப்படும் கோட்பாட்டில் காணப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, குமாரன் நித்தியமாகப் பிதாவின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்; அவர் தமது மாம்சத்தில் மட்டுமல்ல, தமது நித்திய தெய்வீக இயல்பிலும் அவருக்குக் கீழ்ப்படிகிறார். இந்தப் போதனையானது, கிறிஸ்துவைப் பற்றிய முறைப்படுத்தப்பட்ட இறையியல் கோட்பாட்டிற்கும், திரித்துவத்தைப் பற்றிய வேதக் கோட்பாட்டிற்கும் ஒரு நேரடிச் சவாலாக அமைகிறது. இதன் ஆதரவாளர்கள் நிசேயன் விசுவாச அறிக்கை மற்றும் அதேனேசியஸ் போன்ற ஆளுமைகளுடன் தொடர்ச்சி இருப்பதாகக் கூறினாலும், நான்காம் நூற்றாண்டின் திரித்துவ விவாதங்களை உற்று நோக்கினால், இத்தகைய கருத்துக்கள் நிசேயன் திரித்துவவாதிகளின் எழுத்துக்களில் காணப்படவில்லை என்பதும், மாறாக, அந்த விசுவாச அறிக்கையையும் அது வரையறுத்த மரபுவழி நிலைப்பாட்டையும் எதிர்த்த குழுக்களான ஏரியன்கள் மற்றும் செமி-ஏரியன்களின் வாதங்களிலேயே காணப்படுகின்றன என்பதும் தெரியவரும்.
4. மதப் பன்மைவாதம்
மதப் பன்மைத்துவம் (Religious pluralism) என்பதை விவரிப்பு முறை (descriptive way) அல்லது பரிந்துரைப்பு முறை (prescriptive way) ஆகிய இரண்டு வழிகளில் புரிந்து கொள்ளலாம். விவரிப்பு முறையில் கடவுள் மற்றும் இரட்சிப்புப் பற்றிய முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட பல்வேறு மதங்கள் உலகில் இருப்பது உண்மைதான் என்பதை இது குறிக்கிறது. பரிந்துரைப்பு முறையில், சிலர் இந்த விவரிப்பு முறையிலிருந்து பரிந்துரைப்பு முறைக்கு நகர்ந்து, அனைத்து மதங்களும் மற்றும் அனைத்து மதக் கொள்கைகளும் சமமான அளவில் செல்லுபடியாகக்கூடியவை என்றும் வாதிடுகின்றனர்.
இந்த பரிந்துரைப்புப் பார்வை, கிறிஸ்தவ இரட்சிப்பியல் கோட்பாட்டிற்கு (Christian soteriology) ஒரு சவாலாக அமைகிறது. ஏனெனில், இயேசு கிறிஸ்து ஒருவரே இரட்சிப்பிற்கான ஒரே வழி என்கிற கிறிஸ்தவத்தின் தனித்துவமான உரிமைக்கோரலுக்கு இது முற்றிலும் நேர்மாறாக உள்ளது.
வீழ்ச்சியிலிருந்து அநேக பொய்யான மதங்கள் இருந்து வருகின்றன. கிறிஸ்தவம் இவ்வித பொய்யான மதங்களை கிறிஸ்துவின் தனித்துவமான உபதேசத்தைக் கொண்டு எதிர்க்கின்றன. கிறிஸ்தவர்கள், இந்த அனைத்து பொய்யான மதங்களும் தேவனை நோக்கிச் செல்லும் வெவ்வேறு வழிகள் என்று சொல்வதின் மூலம் அவர்கள் ஆண்டவராகிய இயேசுவுக்கு துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும்.
உலகளாவிய கோட்பாடு, கடைசி நாட்களில் அனைத்து மனிதர்களும் (சில தூதர்கள் உட்பட) இரட்சிக்கப்படுவார்கள் என்கிறது. திருச்சபை வரலாறு முழுவதும் சர்வ உலகத்தின் இரட்சிப்புக் கோட்பாடு பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளது, மேலும் சமீபத்தில் அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்துள்ளது. இது பாரம்பரிய கிறிஸ்தவ இரட்சிப்புக் கோட்பாட்டிற்கு முன்வைக்கும் சவால் வெளிப்படையானது, ஏனெனில் இறுதியில் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால், நற்செய்தியைப் பிரகடனம் செய்வதற்கு மிகக் குறைவான ஊக்கமே இருக்கும். நரகத்தின் உண்மை மற்றும் இரட்சிப்பின் வழியாக கிறிஸ்துவின் உன்னத தன்மை ஆகியவற்றைப் பற்றி வேதத்தில் மிக அதிகமாக இருப்பதால், முழு மனுக்குலமும் இரட்சிக்கப்படும் என்கிறக் கோட்பாட்டின் செய்தி முழுவதும் பொய்யானதாகும். அது வெறும் வீண் கற்பனையே.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


