Why Reformed Soteriology Matters

சீர்திருத்த இரட்சிப்பியல் ஏன் அவசியம்?

19-05-2026
Why Reformed Soteriology Matters

சீர்திருத்த இரட்சிப்பியல் ஏன் அவசியம்?

19-05-2026

முதல் சர்ச்சை: அகஸ்டின்  VS. பெலாஜியஸ்

The First Controversy: Augustine vs. Pelagius

பெலாஜியன் சர்ச்சை (The Pelagian Controversy) ஆதி திருச்சபையில் இரட்சிப்பின் கோட்பாடு தொடர்பாக எழுந்த மிக முக்கியமான சர்ச்சை ஆகும். ஐந்தாம் நூற்றாண்டின் இந்த விவாதத்தின் முடிவு, பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தத்தின் (Reformation) இரட்சிப்பியல் விவாதங்கள் உட்பட, இந்தத் தலைப்பில் அதற்குப் பின் வந்த ஒவ்வொரு விவாதத்தையும் வடிவமைத்தது. பெலாஜியன் சர்ச்சையின் ஒரு பக்கத்தில் பெலாஜியஸ் (Pelagius), செலஸ்டியஸ் (Caelestius), மற்றும் எக்லேனமின் ஜூலியன் (Julian of Eclanum) போன்ற நபர்களை நாம் காண்கிறோம். அதற்கு எதிர் தரப்பில் அகஸ்டின் (Augustine) மற்றும் ஜெரோம் (Jerome) போன்ற திருச்சபை தலைவர்களைக் காண்கிறோம். இந்த விவாதத்தின் பிந்தைய கட்டத்தில், ஜான் காசியன் (John Cassian) என்பவர் எடுத்த ஒரு நிலைப்பாடு, அதன் பிறகு ‘செமி-பெலாஜியனிசம்’ (semi-Pelagianism – பகுதி பெலாஜியவாதம்) என்று அறியப்பட்டது. ஆனால் நம்முடைய நோக்கத்திற்காக, அதின் முக்கிய நபர்களின் மிக முக்கியமான போதனைகளில் நாம் கவனம் செலுத்துவோம்.

பெலாஜியஸ் யார்?

 பெலாஜியஸ் ஒரு பிரிட்டிஷ் துறவி ஆவார், மேலும் பெலாஜியன் சர்ச்சையின் பின்னணியைப் புரிந்துகொள்வதற்குத் துறவறம் (monasticism) பற்றி சிலவற்றைத் நாம் தெரிந்துகொள்வது அவசியமாகும். மூன்றாம் நூற்றாண்டில், ஒரு கிறிஸ்தவ உலகத்துறவு இயக்கம் (ascetic movement) தொடங்கியது, அது துறவறத்தின் வளர்ச்சியாக வெளிப்பட்டது. துறவிகள், தனித்தனியாகவோ அல்லது சமூகங்களாகவோ, தங்களின் இரட்சிப்பை அடைவதற்கு உதவும் நோக்கத்தில் கடுமையான உலகத்துறவு வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டனர். உலகத்துறவு என்பது, துறவி தேவனுடன் ஐக்கியத்தை அடையும் பொருட்டு, உடலின் இச்சைகளின் மீது சுயக்கட்டுப்பாட்டைப் பெற உதவும் அனைத்து வகையான நடைமுறைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

அகஸ்டின் துறவற நடைமுறைகளை முற்றிலும் நிராகரிக்கவில்லை, ஆனால் அவரது புகழ்பெற்ற ‘அறிக்கைகள்’ (Confessions) புத்தகத்தின் 10-வது பாகத்தில், அவர் புகழ்பெற்ற ஒரு ஜெபத்தை எழுதினார்: “நீர் கட்டளையிடுவதைத் தாரும், உமக்குச் சித்தமானதைக் கட்டளையிடும்.” இது தேவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான திறனை அகஸ்டினுக்கு வழங்குமாறு தேவனிடம் கேட்கப்பட்ட ஒரு ஜெப கோரிக்கையாக இருந்தது. இத்தகைய ஜெபம் சோம்பேறித் துறவிகளுக்கு தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமைக்கு ஒரு சாக்குப்போக்கை வழங்குவதன் மூலம் – “இது தேவனுடைய குற்றம். எனக்குக் கீழ்ப்படிவதற்கான கிருபையை அவர் தரவில்லை” கடுமையான சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒட்டுமொத்த துறவற வாழ்க்கை முறையையே சீர்குலைக்கிறது என்று பெலாஜியஸ் நம்பினார். எனவே, பெலாஜியஸ் அகஸ்டினுடைய கருத்தை நிராகரித்தார்.

ஆதிப் பாவத்தைப் பெலாஜியஸ் நிராகரித்தல்

 சர்ச்சையின் மூலத்தைப் புரிந்துகொள்ள, பெலாஜியஸின் (மற்றும் செலஸ்டியஸின்) சில அடிப்படைப் போதனைகளைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். முதலாவதாகவும் மிக முக்கியமாகவும், பெலாஜியஸ் ‘ஆதிப் பாவம்’ (original sin) என்ற எந்தவொரு கருத்தையும் நிராகரித்தார். அவர் நீண்ட காலமாக மானிச்சேயர்களுடன் (Manichaeans) விவாதித்து வந்தார்; அவர்கள் மனிதர்கள் அழிகின்ற உடல்களைக் கொண்டிருப்பதால் இயற்கையிலேயே தீயவர்கள் என்று வாதிட்டனர். அதற்குப் பதிலாக, மனிதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதால் இயற்கையிலேயே நல்லவர்கள் என்று பெலாஜியஸ் வாதிட்டார்.

மனிதர்கள் நல்லவர்களாகவே சிருஷ்டிக்கப்பட்டார்கள், ஆனால் ஆதாமின் வீழ்ச்சியின் விளைவாக அவர்கள் ஊழல் நிறைந்தவர்களாக மாறினார்கள் என்று அகஸ்டின் போன்ற போதகர்கள் கூறுவதை பெலாஜியஸ் கேட்டபோது, அது மானிச்சேயிசத்தைப் போலவே இருப்பதாக அவர் நினைத்தார். அதற்குப் பதிலாக, ஆதாமின் பாவம் ஆதாமை மட்டுமே பாதித்தது என்று பெலாஜியஸ் கூறினார். நாம் ஆதாமைப் பின்பற்றுவதன் (imitating) மூலமே பாவம் செய்கிறோம் என்றும், நம்முடைய சுபாவம் கெட்டுப்போனதால் அல்ல என்றும் அவர் வாதிட்டார். மாறாக, ஆதாமின் பிள்ளைகளாக, பிள்ளைகள் இயற்கையாகவே தங்கள் பெற்றோரின் பழக்கவழக்கங்களையும் பேச்சு முறைகளையும் கற்றுக்கொள்வதைப் போல, நாமும் பின்பற்றுதல் மூலம் பாவம் செய்யும் பழக்கத்தைக் கற்றுக்கொள்கிறோம். காலப்போக்கில், பாவம் செய்யும் பழக்கம், ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு நடை போல, நமக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

கிருபையைப் பற்றிய பெலாஜியஸின் தனித்துவமான பார்வை 

இரட்சிப்பில் தேவனுடைய கிருபைக்குத் தனது பார்வையில் இடமில்லை என்பதை பெலாஜியஸ் மறுப்பார், ஆனால் கிருபையைப் பற்றிய அவருடைய பார்வையைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம்; ஏனெனில் அது ரோமன் கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டன்ட் கிருபையின் கோட்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

முதலாவதாக, பெலாஜியஸின் கூற்றுப்படி, வேதவாக்கியங்களில் தேவன் தந்துள்ள வெளிப்பாடு ஒரு கிருபையான கொடையாகும். அவர் நமக்குத் தனது நியாயப்பிரமாணத்தைத் தர வேண்டிய அவசியமில்லை. இரண்டாவதாக, இயேசுவின் கொடை கிருபையானது. நாம் பின்பற்றுவதற்கு இப்போது ஒரு புதிய ஆதாம் இருக்கிறார். நாம் இயேசுவைப் பின்பற்றினால், படிப்படியாகக் கீழ்ப்படிதலின் புதிய பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறோம்; மேலும் கிறிஸ்து பாவம் இல்லாதவராக இருந்ததால், நாமும் சரியானதைத் தேர்ந்தெடுத்தால், பாவம் இல்லாத நிலையை அடைய முடியும். மூன்றாவதாக, மற்றும் மிக முக்கியமாக, நமது மனித சுபாவமே ஒரு கிருபையான கொடையாகும். நாம் சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. நன்மை அல்லது தீமை இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் திறன் நமது சுபாவத்தின் ஒரு பகுதியாகும். அந்தத் திறன் நாம் சம்பாதிக்காத அல்லது தகுதி பெறாத தேவனுடைய கொடையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆதாமிற்குப் பதிலாக இயேசுவைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திர விருப்பத்தை (free will) தேவன் நமக்குக் கிருபையாக வழங்கியுள்ளார். எனவே, பெலாஜியஸ் கூட இரட்சிப்பு கிருபையினால் உண்டாகிறது என்று நம்புவதாகக் கூறுவார்.

அகஸ்டினின் பதில்

 மனிதகுலத்தின் பிரச்சினையின் தன்மையைப் பெலாஜியஸ் முற்றிலும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்றும், அதன் விளைவாக, அவர் அதற்கான தீர்வையும் முற்றிலும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்றும் அகஸ்டின் பதிலளித்தார். ஆதிப் பாவத்தையும், ஆதாமின் வீழ்ச்சியால் விளைந்த மனித சுபாவத்தின் சீர்கேட்டையும் நிராகரிப்பதன் மூலம், பெலாஜியஸ் கிருபையே இல்லாத ஒரு கிருபையின் கோட்பாட்டை உருவாக்கினார் என்று அகஸ்டின் வலியுறுத்தினார். ஆதாமின் வீழ்ச்சிக்கு முன்பும் பின்பும் இருந்த மனிதகுலத்திற்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது என்று அகஸ்டின் உறுதியாகக் கூறினார். ஆதாமின் சீர்கெட்ட சுபாவம் அவனுடைய சந்ததியினர் அனைவருக்கும் கடத்தப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். அகஸ்டினுக்கு, கிருபை என்பது அதற்குத் தகுதியற்ற பாவிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு கொடையாகும்.

ரோமன் கத்தோலிக்க மதத்தை இன்று வரையறுக்கும் இரட்சிப்பியலின் இடைக்கால திருச்சபை-குருத்துவ முறைமையின் (medieval ecclesio-sacerdotal system) வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வழிகளில் அகஸ்டினும் கிருபையின் கோட்பாட்டை உருவாக்கத் தொடங்கினார் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆனால் இங்கு நம்முடைய நோக்கத்திற்கு, பெலாஜியன் சர்ச்சையின் முக்கிய அம்சம் ஆதிப் பாவக் கோட்பாட்டின் வேத உண்மையின் மீதான வலியுறுத்தலாகும். இது ஆரஞ்சு கவுன்சிலின் (Council of Orange – 529) விதிகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரச்சினை துல்லியமாகக் கண்டறியப்படாவிட்டால், அதற்கான தீர்வை (இரட்சிப்பின் கோட்பாட்டை) சரியாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பே இல்லை.

நமது அடுத்த கட்டுரையில், ஆதிப் பாவக் கோட்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், மனிதனுடைய பிரச்சினையின் மற்றொரு அம்சத்தைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக, ரோமன் கத்தோலிக்கம்  எவ்வாறு ஒரு சிதைந்த இரட்சிப்பியலை உருவாக்கியது என்பதைப் பார்ப்போம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன் Dr. கெய்த் மேத்திசன் சேன் போர்ட் ல் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பேராசிரியராக உள்ளார். The Lord's Supper உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசிரியருமாவார்.