Is the Church Full of Hypocrites

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

07-05-2026
Salvation in Scripture

வேதத்தில்  இரட்சிப்பு

14-05-2026
Is the Church Full of Hypocrites

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

07-05-2026
Salvation in Scripture

வேதத்தில்  இரட்சிப்பு

14-05-2026

பெண் போதகர்கள் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

What Does the Bible Say About Women Pastors?

பெண்கள் போதகர்களாகவோ அல்லது மூப்பர்களாகவோ பணியாற்றலாமா என்ற கேள்வி அநேக கிறிஸ்தவர்களுக்கு கடினமான ஒன்றாகும். இந்த விவகாரம் தங்கள் சபைகளில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்துவதை விசுவாசிகள் கண்டிருக்கிறார்கள். இத்தகைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தைக் கையாளும்போது, வேதாகமத்தை நாட வேண்டியது அவசியம். சர்ச்சைக்குரிய இந்தத் தலைப்பில் தேவனுடைய வார்த்தை என்ன வெளிச்சத்தை வீசுகிறது?

1 தீமோத்தேயு 2:8–15- ல் , திருச்சபை தேவனுக்குப் பிரியமான வழியில் தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தேவையான தெளிவான வழிகாட்டுதலை அப்போஸ்தலனாகிய பவுல் வழங்குகிறார். இந்தக் நிருபத்தில், பவுல் தனது ஊழியத்தில் இளம் உடன் ஊழியரான தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார். தீமோத்தேயு ஒரு கடினமான காலகட்டத்தில் எபேசு சபையில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். அவர் தவறான போதனைகள் ( 1 தீமோ. 1:3–11; 6:2–10 ) மற்றும் ஆராதனையில் குழப்பம் ( 1 தீமோ. 2:1–15 ) போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். மேலும், சபையின் போதகர்கள், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் தகுதிகள் மற்றும் பணிகள் குறித்தும் சபைக்குத் தெளிவான வழிகாட்டுதல் தேவைப்பட்டது ( 1 தீமோ. 3:1–5:25 ).

கிறிஸ்தவ ஆராதனையில் ஜெபத்தின் செயல்பாடு குறித்து தீமோத்தேயுவுக்கு அறிவுரைகளை வழங்கிய பிறகு ( 1 தீமோ. 2:1-7 ), பவுல், ஆண்கள் மற்றும் பெண்கள் தேவனுடைய பொது ஆராதனையில் பங்கேற்கும்போது அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆலோசனைகளை வழங்குகிறார் ( 1 தீமோ. 2:8-15 ). இந்த வசனங்களில், ஒவ்வொரு பாலினத்தையும் குறிப்பாக அவர்களைப் பாதிக்கும் பாவங்களையும் அவர் குறிப்பிடுகிறார். ஆண்கள் “கோபமோ சண்டையோ இல்லாமல்” ஜெபிக்க வேண்டும் ( 1 தீமோ. 2:8 ). பெண்கள் வீணான அலங்காரத்தைக் காட்டிலும் தேவபக்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ( 1 தீமோ. 2:9-10 ). 

சபை ஆராதனையில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். “ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.” (1தீமோ 2:11) என்ற பெண்களுக்கான தேவனின் அழைப்பை கூறுகிறார். சபை ஆராதனையில் பெண்கள் பங்குபெறுவதையும், தேவனுடைய வார்த்தை வாசிக்கப்படுகையிலும் போதிக்கப்படுகையிலும் ஆண்களோடு அவர்களும் கற்றுக்கொள்வதற்கான அவர்களின் உரிமையை அப்போஸ்தலனாகிய பவுல் அங்கீகரிக்கிறார். இந்த காரியத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றும் பெண்கள், கிறிஸ்தவ ஆண்களுக்கு சமமானவர்கள் ஆவர். 

பின்னர் பவுல், பெண்கள் “உபதேசிக்கவோ அல்லது ஒரு ஆணின் மீது அதிகாரம் செலுத்தவோ” கூடாது என்று தடை விதிக்கிறார் ( 1 தீமோ. 2:12 ). மாறாக, அவர்கள் “அமைதியாக இருக்க வேண்டும்.” பெண்கள், தேவன் தங்களை அழைத்த காரியங்களில் அதாவது, அமைதியாகக் கற்றுக்கொள்பவர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 12-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது.

இங்கு பவுல் இரண்டு காரியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று உபதேசித்தல். இங்கு இந்த நிருபத்தின் பிண்ணனி மிக முக்கியமானது. அதாவது பவுல் சபைக்குள்ளும் அனைத்து விதமான போதகம் பண்ணுவதிலிருந்து பெண்களை விலக்கி வைக்கவில்லை. மாறாக சபைக் கூடும்போது பொதுவான ஆராதனையில் தேவனுடைய வார்த்தையை பிரசங்கிக்கவோ போதிக்கவோ கூடாது என்பதையே கூறுகிறார். இந்த பணியானது சபையின் போதகர்களுக்கும் மூப்பர்களுக்குமே உரியது (1 தீமோ 3:2; 4:11-16). இரண்டாவது, ஆணின் மீது அதிகாரம் செலுத்துவது. பின்வரும் அதிகாரத்தில், பவுல் ஆவிக்குரிய அதிகாரத்தை சபையின் மூப்பர்களிடம் கொடுக்கிறார்; இவர்கள் தங்கள் சொந்தக் குடும்பங்களைத் நன்றாய் நிர்வகிப்பவர்கள் என்று தங்களை நிரூபித்த தகுதிவாய்ந்த ஆண்கள் ( 1 தீமோ. 3:5 காண்க ). 12-ஆம் வசனத்தில் உள்ள பவுலின் தடையை நாம் இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: சபையில் ஒரு மூப்பரின் பணியை வகிக்கவோ அல்லது அதன் பணிகளைச் செய்யவோ பெண்களுக்கு அனுமதி இல்லை. 

அறிவிலும் ஒழுக்கத்திலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தரம் குறைந்தவர்கள் என்று எண்ணப்பட்ட காலக்கட்டத்தில், பெண்கள் ஆண்களைக் காட்டிலும் கிறிஸ்துவின் பாடசாலையில் கற்றுக்கொள்வதற்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை பவுல் தீமோத்தேயுவிடம் கூறுகிறார்.

வசனங்கள் 13–14 ல், பவுல் 11–12 ல் உள்ள தனது போதனைக்கான காரணங்களை வழங்குகிறார். தேவன் ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கிய வரிசையை பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டுகிறார்: “ஏனெனில், ஆதாம் முதலில் உருவாக்கப்பட்டான், பிறகு ஏவாள்” ( 1 தீமோ. 2:13 ). பின்னர், நமது முதல் பெற்றோர் பாவத்தில் வீழ்ந்த விதத்தை பவுல் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டுகிறார்: “ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஆனால் ஸ்திரீ வஞ்சிக்கப்பட்டு மீறுகிறாளாயிற்று” ( 1 தீமோ. 2:14 ). வீழ்ச்சிக்கான பொறுப்பிலிருந்து பவுல் ஆதாமை விடுவிக்கவில்லை. மாறாக, ஆதாமின் பாவம் தேவனுடைய வார்த்தையின் தெளிவான வெளிச்சத்திற்கு விரோதமாக இருந்தது ( ஆதி. 2:15-ஐக் காண்க ). ஏவாள் எளிதில் ஏமாறக்கூடியவள் என்றும் பவுல் இங்கே கூறவில்லை. சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட பிறகு ஏவாள் தடைசெய்யப்பட்ட கனியைச் சாப்பிட்டாள் என்ற வேதாகமத்தின் போதனையை அவர் இங்குக் குறிப்பிடுகிறார்.

1 தீமோத்தேயு 2:13-14- ல் உள்ள பவுலின் வார்த்தைகள், வசனங்கள் 11-12-ல் உள்ள அவருடைய கட்டளைகளை எவ்வாறு ஆதரிக்கின்றன? அவை குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் அவ்வாறு செய்கின்றன. முதலாவதாக, வசனம் 12-ல் விவரிக்கப்பட்டுள்ள போதிப்பதற்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது, தேவன் மனிதர்களை உருவாக்கிய விதத்தில் ( 1 தீமோ. 2:13 ) வேரூன்றியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், அது படைப்பில் வேரூன்றியுள்ளது. பவுலின் இந்தத் தடையானது எபேசுவின் சூழ்நிலைக்கு மட்டுமே உரியதல்ல; அது முதல் நூற்றாண்டுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டதும் அல்ல. நிச்சயமாக, இதை முதல் நூற்றாண்டு யூத மனிதனின் குறுகிய கண்ணோட்டத்திற்குக் காரணமாக நாம் கூற முடியாது. இந்தத் தடையானது, படைப்பில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவன் ஏற்படுத்திய ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது.

இரண்டாவதாக, 12-ஆம் வசனத்தில் பவுல் விதித்த தடைக்கு, 14-ஆம் வசனத்தில் ஒரு எச்சரிக்கை பிண்ணனி உள்ளது. ஏவாள் “தேவனைப் போல இருக்க” முயன்று, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாதபோது, பேரழிவு ஏற்பட்டது ( ஆதி. 3:5 ). நமது நல்வாழ்வுக்காக தேவன் ஏற்படுத்தியிருக்கும் ஆரோக்கியமான ஒழுங்கிலிருந்து விலகிச் செல்வதால் ஒருபோதும் எந்த நன்மையும் ஏற்படுவதில்லை. அந்தக் காரணத்திற்காக, தேவன் தங்களுக்குத் தடைசெய்ததை பெண்கள் நாடக்கூடாது என்று பவுல் தொடர்கிறார். தேவன் தங்களைச் செய்ய அழைத்த காரியத்தில் அவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். தேவன் பெரும்பாலான பெண்களை (ஆனால் எல்லாப் பெண்களையும் அல்ல) திருமணத்திற்கும் பிள்ளைப்பேற்றிற்கும் அழைக்கிறார் ( 1 தீமோ. 2:15 ). ஒரு விசுவாசியான பெண் இந்த அழைப்பை “விசுவாசத்தோடும், அன்போடும், பரிசுத்தத்தோடும், சுயக்கட்டுப்பாட்டோடும்” ஏற்றுக்கொள்ளும்போது, கிறிஸ்துவில் தேவன் அவளுக்கு இலவசமாகக் கொடுத்த இரட்சிப்பின் உறுதியை அவள் கண்டடையக்கூடும்.

இன்றைய திருச்சபையில் பவுலின் வார்த்தைகள் நமக்குத் தேவை. அவை, தம்முடைய திருச்சபையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவன் வகுத்துள்ள ஒழுங்கையும் முன்மாதிரியையும் நமக்குக் காட்டுகின்றன. அந்த ஒழுங்கிலிருந்து விலகிச் செல்வதால் ஏற்படும் ஆபத்தை அவை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், அவை திருச்சபைக்கு எதிர்மறையானவற்றை மட்டும் முன்வைக்கவில்லை. பெண்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தேவன் அழைத்திருக்கிறார் என்பதற்கான ஒரு வெற்றிகரமான தரிசனத்தை அவை முன்வைக்கின்றன. பெண்களை ஆண்களை விட அறிவுத்திறனிலும் ஒழுக்கத்திலும் தாழ்ந்தவர்கள் என்று அடிக்கடி இழிவுபடுத்திய ஒரு காலத்தில், ஆண்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் பெண்களுக்கும் கிறிஸ்துவின் பாடசாலையில் கற்பவர்களாக இருப்பதற்கு உரிமை உண்டு என்று பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார் ( 1 தீமோ. 2:11 ). அவர்கள் வாரந்தோறும் ஆராதனைக்காகத் திருச்சபையுடன் கூடும்போது மட்டுமல்ல ( 1 தீமோ. 2:9 ), தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்கும் அன்றாடப் பணிகளிலும்கூட ( 1 தீமோ. 2:15 ) தேவபக்தியால் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் அமைதியான மற்றும் சாதாரணமான காட்சிகளில்தான் தேவன் தம்முடைய கிருபையின் அசாதாரண நோக்கங்களை நிறைவேற்றப் பிரியப்படுகிறார். அது எல்லா காலங்களிலும் உள்ள தேவனுடைய மக்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியாகும்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கய் பிரெண்டிஸ் வாட்டர்ஸ்

கய் பிரெண்டிஸ் வாட்டர்ஸ்

டாக்டர் கை பிரென்டிஸ் வாட்டர்ஸ், மிசிசிப்பியின் ஜாக்சனில் உள்ள சீர்திருத்த இறையியல் செமினரியில் புதிய ஏற்பாட்டின் ஜேம்ஸ் எம். பெயர்ட் ஜூனியர் பேராசிரியராகவும், அமெரிக்காவின் பிரஸ்பைடிரியன் திருச்சபையில் போதக மூப்பராகவும் இருக்கிறார். Facing the last enemy என்ற பாட தொடரின் லிகனியர் ஆசிரியராகவும், How Jesus Runs the Church மற்றும் The Life and theology of paul போன்ற புத்தகங்களின் ஆசிரியருமாவார்.