Sloth and Diligence

சோம்பல் மற்றும் உழைப்பு

05-05-2026
What Does the Bible Say About Women Pastors?

பெண் போதகர்கள் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

12-05-2026
Sloth and Diligence

சோம்பல் மற்றும் உழைப்பு

05-05-2026
What Does the Bible Say About Women Pastors?

பெண் போதகர்கள் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

12-05-2026

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறதா?

Is the Church Full of Hypocrites

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, எனது நெருங்கிய நண்பரும் சக ஊழியருமான ஆர்ச்சி பாரிஷ் (Archie Parrish), ஒரு வேண்டுகோளுடன் என்னிடம் வந்தார். அவர் அப்போது ஃபோர்ட் லாடர்டேலில் (Fort Lauderdale) ‘சுவிசேஷ அதிகரிப்பு’ (Evangelism Explosion – EE) என்ற திட்டத்தை வழிநடத்தி வந்தார். சுவிசேஷக் குழுவினர் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான சந்திப்புகளில், மக்கள்  சுவிசேஷத்தை

குறித்து எழுப்பிய பதில்களை அவர்கள் ஒரு பதிவாக வைத்திருந்தனர். கிறிஸ்தவ விசுவாசம் குறித்து மக்கள் எழுப்பிய பொதுவான கேள்விகளையும் அதினால் உண்டாகும் எதிர்ப்புகளையும் அவர்கள் வகைப்படுத்தி, அடிக்கடி கேட்கப்படும் பத்து முக்கிய கேள்விகளாகத் தொகுத்தனர். சுவிசேஷகர்கள் தங்கள் ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, அந்த எதிர்ப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஒரு புத்தகத்தை எழுதும்படி டாக்டர் பாரிஷ் என்னிடம் கேட்டார். அந்த முயற்சியின் விளைவாகத்தான் என்னுடைய “Objections Answered” (தற்போது Reason to Believe என்று அழைக்கப்படுகிறது) புத்தகம் உருவானது. மக்கள் எழுப்பிய அந்த பத்து முக்கிய எதிர்ப்புகளில் ஒன்று, “சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறது” என்பதாகும். அந்த நேரத்தில், டாக்டர் டி. ஜேம்ஸ் கென்னடி இந்த எதிர்ப்பிற்குப் பதிலளிக்கையில், “சரி, இன்னும் அப்படிப்பட்ட ஒருவருக்கு அங்கே எப்போதும் இடமுண்டு” என்று கூறினார். மக்கள் ஒருவேளை ஒரு “பூரணமான” சபையைக் கண்டால், அதில் அவர்கள் சேர்ந்துவிடக் கூடாது என்று அவர் எச்சரித்தார்; ஏனெனில் அவர்கள் அதில் சேர்ந்தால், அந்தச் சபையின் பூரண நிலை குலைந்துவிடும்.

‘ஹிப்போக்ரைட்’ (Hypocrite – மாய்மாலம்) என்ற சொல் கிரேக்க நாடக உலகிலிருந்து வந்தது. நடிகர்கள் சில கதாபாத்திரங்களைச் சித்தரிக்கப் பயன்படுத்திய முகமூடிகளைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இன்று கூட, நாடகத்துறை என்பது நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரு முகமூடிகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்தில், சில நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பார்கள், அவர்கள் தங்கள் முகத்திற்கு முன்னால் ஒரு முகமூடியைப் பிடிப்பதன் மூலம் அந்த கதாபாத்திரத்தைக் குறிப்பிடுவார்கள். இதுதான் மாய்மாலத்தனத்தின் (Hypocrisy) கருத்தியல் பிறப்பிடம்.

ஆனால், சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே தவறானது. இந்த வாழ்க்கையில் எந்தக் கிறிஸ்தவனும் முழுமையான ‘பரிசுத்தமாக்கப்படுதலை’ (Sanctification) அடைவதில்லை என்றாலும், நாம் அனைவரும் இன்னும் பாவத்தோடு போராடுகிறோம் என்பது நம்மை ‘மாய்மாலக்காரர்’ என்ற தீர்ப்புக்கு உள்ளாக்காது. ஒரு மாய்மாலக்காரர் என்பவர், தான் செய்யமாட்டேன் என்று உரிமை கோரும் காரியங்களைச் செய்பவர் ஆவார். கிறிஸ்தவ திருச்சபைக்கு வெளியே இருக்கும் புறஜாதி பார்வையாளர்கள், கிறிஸ்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் பாவம் செய்வதைக் கவனிக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வில் பாவத்தைக் காண்பதால், “எனவே இவர்கள் வேஷதாரிகள்” என்ற தீர்ப்பிற்கு அவர்கள் அவசரமாக வருகிறார்கள். ஒரு நபர் தான் பாவமில்லாதவர் என்று கூறிவிட்டு, பின்பு பாவம் செய்தால், நிச்சயமாக அவர் ஒரு மாய்மாலக்காரர் ஆனால் ஒரு கிறிஸ்தவன் தான் ஒரு பாவி என்பதை வெளிப்படுத்துவது மட்டும் அவனை மாய்மாலக்காரன் என்று குற்றப்படுத்தாது.

தலைகீழான தர்க்கம் (Inverted logic) இப்படிச் செல்கிறது: “எல்லா மாய்மாலக்காரர்களும் பாவிகள். ஜான் ஒரு பாவி; எனவே ஜான் ஒரு மாய்மாலன்.” தர்க்க விதிகளை அறிந்த எவருக்கும் இந்த வாதம் செல்லுபடியாகாது என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டை “சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறது” என்பதிலிருந்து “சபை பாவிகளால் நிறைந்திருக்கிறது” என்று மாற்றினால், நாம் உடனே அந்தக்குற்றத்தை ஒப்புக்கொள்வோம். திருச்சபை உறுப்பினர் ஆவதற்கு ‘தான் ஒரு பாவி’ என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் ஒரே நிறுவனம் சபை மட்டும்தான் என்று நான் அறிவேன். திருச்சபை பாவிகளால் நிறைந்திருக்கிறது, ஏனெனில் சபை என்பது தங்கள் பாவங்களை அறிக்கையிடும் பாவிகள், தங்கள் பாவங்களிலிருந்து மீட்பைக் கண்டடைய வரும் இடமாகும். எனவே இந்த அர்த்தத்தில், சபை பாவிகளால் நிறைந்திருப்பதால் மட்டும், சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கிறது என்ற முடிவுக்கு வருவது நியாயமற்றது. மீண்டும் சொல்கிறேன், எல்லா மாய்மாலத்தனமும் பாவம்தான், ஆனால் எல்லாப் பாவமும் மாய்மாலம் என்ற பாவமல்ல.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மாய்மாலத்தனம் என்ற சிக்கலைப் பார்க்கும்போது, தங்களை மிகவும் நீதிமான்கள் என்று கூறிக்கொண்டவர்களின் வாழ்க்கையில் அது மிகத் தெளிவாகத் தெரிந்தது. பரிசேயர்கள் என்பவர்கள், தங்களைச் சாதாரண மக்களின் பாவத்தன்மையிலிருந்து பிரித்துக்கொண்டவர்களாகக் கருதினர். அவர்கள் அர்ப்பணிப்புள்ள தெய்வீக வாழ்வையும் தேவனுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதையும் நாடி நன்றாகவே தொடங்கினார்கள். இருப்பினும், அவர்களின் வாழ்க்கை நடத்தை அவர்களின் நோக்கங்களை எட்டத் தவறியபோது, அவர்கள் நடிக்கத் தொடங்கினர். தாங்கள் உண்மையில் இருப்பதை விட அதிக நீதிமான்கள் என்று பாசாங்கு செய்தனர். அவர்கள் நீதியுள்ளவர்கள் போன்ற ஒரு புறத்தோற்றத்தைக் கொடுத்தனர், அது அவர்களின் வாழ்க்கையில் இருந்த ஆழமான ஊழலை மறைக்கவே உதவியது.

திருச்சபை மாய்மாலக்காரர்களால் நிறைந்திருக்கவில்லை என்றாலும், மாய்மாலத்தனம் என்பது புதிய ஏற்பாட்டுப் பரிசேயர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட பாவமல்ல என்பதை மறுக்க முடியாது. இது கிறிஸ்தவர்கள் போராட வேண்டிய ஒரு பாவமாகும். திருச்சபைக்கு ஆவிக்குரிய மற்றும் நீதியுள்ள நடத்தையின் மிக உயர்ந்த பரிசுத்தத்தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த இலக்குகளை அடையத் தவறும்போது நாம் அடிக்கடி சங்கடப்படுகிறோம், மேலும் நாம் உண்மையில் அடைந்திருப்பதை விட உயர்ந்த நீதியின் நிலையை எட்டிவிட்டதாகப் பாசாங்கு செய்ய முனைகிறோம். அப்படிச் செய்யும்போது, நாம் வேஷதாரியின் முகமூடியை அணிந்து, அந்தப் பாவத்திற்காக தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு உள்ளாகிறோம். இத்தகைய பாசாங்கில் நாம் சிக்கியிருப்பதை உணரும்போது, நம் மனதில் ஓர் எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டும்; நாம் மீண்டும் சிலுவையிடமும் கிறிஸ்துவிடமும் ஓடிச் சென்று, நமது உண்மையான நீதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவிடம் நாம் காண்பது நமது முகத்தை மறைக்கும் முகமூடியை அல்ல, மாறாக அவருடைய பரிசுத்த நீதியாகிய முழுமையான ஆடைகளைத்தான். உண்மையில், விசுவாசத்தின் மூலம் பெறப்பட்ட கிறிஸ்துவின் நீதியின் கீழ் மட்டுமே, நம் எவராலும் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்கும் நம்பிக்கையைப் பெற முடியும். விசுவாசத்தில் கிறிஸ்துவின் ஆடைகளை அணிவது என்பது மாய்மாலத்தனம் அல்ல. அது ஒரு மீட்பின் செயல்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்

ஆர். சி. ஸ்ப்ரௌல்

Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.