What Is Saving Faith?
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?
14-11-2024
The Courage to Be Reformed
சீர்திருத்த சத்தியத்தில் தைரியம்கொள்
21-11-2024
What Is Saving Faith?
இரட்சிப்புக்கேற்ற  விசுவாசம் என்றால் என்ன?
14-11-2024
The Courage to Be Reformed
சீர்திருத்த சத்தியத்தில் தைரியம்கொள்
21-11-2024

என் ஆடுகளை போஷிப்பாயாக

Feed My Sheep

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீஷர்களுக்கு மூன்றாவது முறையாக தரிசனமாகி, “வாருங்கள் போஜனம் பண்ணுங்கள் என்றார்.” (யோவான் 21:12). உயிர்த்தெழுதலின் மகிமையோடு இருக்கும் இயேசு கிறிஸ்து தனது சிநேகிதர்களுக்கு இறங்கி போஜனம் பண்ண அழைக்கும் இந்த பின்னணியில், இயேசு பேதுருவோடு நிகழ்த்தும் தனது கடைசி உரையாடல் அமைந்திருக்கிறது.

“சீமோனே நீ என்னை நேசிக்கிறாயா?” இன்று இயேசு மூன்று முறை கேட்கிறார். இந்தப் பகுதியின் விளக்கமானது எவ்வாறு சீமோன் பேதுரு கிறிஸ்துவை அறிந்ததையும் அவரை நேசிப்பதையும் மூன்று முறை மறுதலித்தாரோ அதேபோல இயேசுவும் “சீமோனே நீ என்னை நேசிக்கிறாயா?” என்ற மூன்று முறை விசாரணையை பேதுருவிடம் நடத்துகிறார். ஆனால் இந்த கேள்விகளுக்கு மற்றொரு சாத்தியமான விளக்கம் உள்ளது. குறிப்பாக நாம் இங்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஓர் கொள்கையைப் பார்க்கிறோம்.

கிறிஸ்து தனது ஆழமான போதனைகளுக்குள் செல்லும் முன் அந்த போதனையின் கருத்தை வலியுறுத்துவதற்கு “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்” என்ற வார்த்தையை அவர் முன்னுரைக்கிறார். வேதாகமத்தில் அநேக இடங்களில் இந்த வார்த்தையை நாம் பார்க்கிறோம். இதன் மூலம் அந்தச் செய்தியின் உண்மைத்தன்மை மீண்டும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தப்படுகிறது. (கலா: 1:8-9) ல் அப்போஸ்தலனாகிய பவுல் “முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன்.” என்கிறார். (ஏசாயா 6:3) ல் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் சேராபீன்கள் ஒருவரையொருவர் நோக்கி “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்றது. தேவகோபம் வெளிப்படுகையில் “ஐயோ, ஐயோ, ஐயோ,” என்ற கூக்குரலை நாம் (வெளி 8:13) ல் வாசிக்கிறோம்.

இதற்கான விளக்கம் எதுவாக இருப்பினும், அது பேதுருவின் மறுதலிப்போடு இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது திரும்பத் திரும்ப அழுத்தமாக வலியுறுத்தும் உண்மையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், இது ஒவ்வொரு விசுவாசியும், போதகரும் கவனிக்க வேண்டிய வேதப்பகுதி.

வேதத்தில் தேவனுடைய பிள்ளைகளுக்கான நேசத்துக்குரிய பொதுவான உருவகங்களில் ஒன்றுதான் “ஆடுகள்”. நமது சிந்தனை உடனடியாக சங்கீதம் 23 க்கு செல்லும். தாவீது தான் ஒரு மேய்ப்பனாக, மேய்ப்பனின் அனைத்து குணாதிசயங்களையும் தேவனுக்கு ஏறெடுத்து தேவனை மேய்ப்பனாக காண்பிக்கிறார். “ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.” (வச 1). இந்த உருவகம் புதிய ஏற்பாட்டிலும் அநேக இடங்களில் காணப்படுகிறது, யோவான் பத்தாம் அதிகாரத்தில் இயேசு தன்னை நல்ல மேய்ப்பனாக காண்பிக்கிறார்.

தேவனையும், மேசியாவையும் மேய்ப்பனாக காண்பிப்பது எந்த அளவுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கிறது! ஆடுகள் தன் மேய்ப்பனை எந்த அளவுக்கு சார்ந்து வாழும் என்பதை பாலஸ்தீன நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால், தேவனுடைய மக்களை ஆடுகளுக்கு ஒப்பிடுவது எனக்கு சற்று நெருடலை அளிக்கிறது. உங்களுக்கு ஆடுகளைப் பற்றி ஏதாவது தெரியும் என்றால் இந்த உருவகம் பாராட்டுக்குரிய உருவகம் அல்ல.

மிச்சிகனில் (Michigan) ஒருமுறை கோல்ஃப் விளையாடியது எனக்கு நினைவுக்கு வருகிறது. நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த அந்த கோல்ஃப் மைதானத்தில் எங்கிருந்தோ ஒரு சில ஆடுகள் மேய்ப்பனில்லாமல் அங்கு வந்தன. அப்பொழுது என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை, அவைகளை விரட்டவும் எங்களால் கூடாமற்போயிற்று. அவைகளை வழிநடத்த மேய்ப்பன் யாரும் இல்லாத காரணத்தினால், அந்த ஆடுகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் திரிந்துக்கொண்டும் இருந்தன.

நேர்மறையான வழியில் இல்லாத தனது மக்களைப் பற்றி விவரிப்பதற்கு தேவன் மேற்ச் சொன்ன வழி தப்பித் திரிகிற ஆடுகளோடு ஒப்பிட்டு பேசுகிறார். தேவனுடைய காரியங்களை பொறுத்தவரை, பெரும்பாலும் நாம் கூட்டமாக வாழ்கிற மந்தையாகவே இருக்கிறோம். இவையனைத்தும் இயேசுவோடு பேதுருவின் இறுதி சந்திப்பின் ஓர் பின்னணியாகும்.

தனது ஆடுகளை மேய்ப்பதின் மூலம் பேதுரு எந்தளவுக்கு கிறிஸ்துவை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்த இயேசு பேதுருவை அழைக்கிறார். இந்த பகுதியின் மூலமாய் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் காரியம், தேவனுடைய மக்கள் கிறிஸ்துவின் மந்தைக்கு உட்பட்டவர்கள். இயேசு சொன்னார், “என் ஆடுகளை மேய்ப்பாயாக” (யோவான் 21:17). அவர்கள் தேவனுடைய ஆட்டுக்குட்டிகள். எப்பொழுது ஒருவர் திருச்சபையின் போதகராக நியமிக்கப்படுகிறாரோ, அங்கு அந்த போதகர் கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் விலைக்கிரயமாய் சம்பாதிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகளை பராமரிக்கின்ற பொறுப்பைப் பெற்றுக்கொள்கிறார். தேவன் தனது மக்களை ஒரு போதகரின் பராமரிப்பில் ஒப்படைக்கும் இந்த பெரிய புனிதமான பொறுப்பைப் போல் வேறெதுவும் இல்லை.

கிறிஸ்துவின் மந்தையை மேய்ப்பது என்றால் என்ன? அவைகளை பராமரிப்பது என்றால் என்ன? உணவு. நிச்சயமாக, நமது சரீர வளர்ச்சிக்கு அவசியமான முதன்மையான பொருள். கிறிஸ்து தம் சீஷனிடம் சொல்வது இந்த அடிப்படையில்தான்: “என் ஆடுகளை மேய்ப்பதற்கு நான் உன்னை ஏற்படுத்துகிறேன். நீ அவர்களை போஷிக்கவேண்டும்.”

கிறிஸ்துவின் ஆடுகளை போஷிக்க இந்த அழைப்பு மேன்மையான பொறுப்புடன் வருகிறது. சத்தியத்தினால் தேவனுடைய மக்களை போதகர்கள் போஷிக்க வேண்டும். பிரசங்கங்களை ஆயத்தப்படுத்துதலில் செலவிடும் நேரத்தில் அவர்கள் முற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். வேதாகமத்தை பற்றிய அவர்களின் புரிதல் துல்லியமாக இருப்பதையும், மற்றவைகள் மூலமாய் கடவுளுடைய வார்த்தையை திரித்து, வளைத்து, பொய்யாகவோ அல்லது அதைவிட மோசமாக்கவோ இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் கெட்டுப் போன உணவு மக்களுக்கு விஷமாகிறது. தேவனுடைய மக்களை வளரச் செய்கிற ஒரே ஒரு உணவு தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களின் உணவுதான்.

ஒரு மேய்ப்பன் எதற்காக அழைக்கப்படவில்லை என்பதற்கான ஒரு சில காரியங்களும் உண்டு என்பதையும் இது நேரடியாக கூறுகிறது.

பொழுதுபோக்குவதற்காக ஒரு மேய்ப்பன் அழைக்கப்படவில்லை. அவர்களின் ஆடுகள் அழிந்து போகாமல் இருப்பதை உறுதிச் செய்யவே மேய்ப்பர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு போதகரையும் இரவில் தூங்கவிடாமல் செய்ய இது போதுமானது. கிறிஸ்துவை அறியாத மக்களும் சபைக்குள் இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை பிரசங்கத்தின் மிக முக்கியமான நோக்கம் தேவனுடைய மக்களை சத்தியத்தில் வளர்ப்பது என்று நான் நம்புகிறேன். அதே சமயம், போதகர்கள் அவர்களின் சபைகள் மீட்கப்பட்ட மக்களினால் மட்டுமே நிரம்பியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் கடமையில் முற்றிலும் தவறிவிடுவார்கள். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சபைகளில் மறுபிறப்படையாத, தேவனுடைய வார்த்தையை கேட்டிராத மக்களும் இருப்பார்கள். போதகர் அவர்களை நேசிப்பாரென்றால், தேவனின் வார்த்தையின் முழு ஆலோசனையினால் அவர்களையும் போஷிக்கவேண்டும்.

சபையில் உலக ஞானத்தின் மனித உளவியலை அளிப்பதற்காக மேய்ப்பன் அழைக்கப்படவில்லை. சீயோனின் குமாரத்தியின் காயங்களை குணப்படுத்த சுய உதவி என்பது சிறிதளவுதான் பயன்படுகிறது. ஆனால் வானத்தின் கீழே தேவனுடைய மக்களை போஷித்து வளர்ப்பதற்கான ஒரே ஒரு வழிமுறை தேவனுடைய வார்த்தை மட்டுமே. தேவனுடைய மக்கள் வளரவேண்டுமென்றால், தேவனுடைய வார்த்தையே அவர்களுக்கு தேவையான மிகவும் அவசியமான உணவு.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.