Feed My Sheep
என் ஆடுகளை போஷிப்பாயாக
19-11-2024
what is the gosple
சுவிசேஷம் என்றால் என்ன?
26-11-2024
Feed My Sheep
என் ஆடுகளை போஷிப்பாயாக
19-11-2024
what is the gosple
சுவிசேஷம் என்றால் என்ன?
26-11-2024

சீர்திருத்த சத்தியத்தில் தைரியம்கொள்

The Courage to Be Reformed

சீர்திருத்த இறையியலை குறித்து நாம் சிந்திக்கும் பொழுது அது இரட்சிப்பை குறித்ததான நம்முடைய புரிதலை மட்டும் மாற்றிப் போடாமல் நம் வாழ்க்கையினுடைய எல்லாவற்றையும் மாற்றத்திற்குள்ளாக்குகிறது. இதினாலேயே சீர்திருத்த இறையியல் கோட்பாடுகளை குறித்ததான அடிப்படை சத்தியங்களை போராட்டத்தோடு கற்று, அதை புரிந்து கொள்ளும் போது தாங்கள் இரண்டாவது முறையாக மறுபடியும் மனமாற்றம் அடைவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், அநேகர் என்னிடத்தில், தாங்கள் இந்த சத்தியத்தை அறிந்தபோதுதான் முதல் முறையாக மறுபடியும் பிறக்கிறோம் என்றே சொல்லுகிறார்கள். அவர்கள் சீர்திருத்த இறையியலை குறித்து ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தாங்கள் எப்படி பாவத்தில் மரித்து, அடிப்படையிலேயே கேட்டுக்கேதுவானவர்களாய் இருக்கிறோம் என்பதை முற்றிலுமாக உணர்ந்து, அவர்களுடைய கண்கள் திறக்கப்படுவதையும், தேவன் தம்முடைய ஜனங்களை நிபந்தனையின்றி, முன்குறித்தலின்படி எப்படி தெரிந்து கொள்கிறார், மற்றவர்களை எப்படி ஆக்கினைக்குள்ளாக்குகிறார் என்பதையும், கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கான மீட்பை எவ்விதமாக சம்பாதித்தார் என்பதையும், பரிசுத்த ஆவியானவருடைய திட்ப உறுதியான கிருபையையும், தேவனுடைய பாதுகாக்கும் கிருபையினால் விசுவாசிகள் விடாமுயற்சியோடு செயல்படுவதையும், தேவன் அவருடைய மகிமைக்காக வரலாறு தோறும் தம்முடைய மீட்பின் உடன்படிக்கையின் வழியாக செயல்படும் விதத்தையும் ஆராய்ந்து பார்ப்பதாலேயே பெரிய மாற்றத்தை சந்திக்கிறார்கள்.

ஜனங்கள், தேவனை தாங்கள் தெரிந்து கொள்ளவில்லை, மாறாக தேவனே தங்களை தெரிந்து கொண்டார் என்ற அடிப்படை சத்தியத்தையும், தேவன் தங்கள் மீது காண்பிக்கும் அளவில்லாத கிருபையையும் உணரும்போது, அவர்கள் முற்றிலுமாக தங்களை தாழ்மையோடு தேவனுக்கு அர்ப்பணிக்கிறார்கள். இதனாலேயே நாம் நம்முடைய நிர்பந்தமான நிலைமையை உணர்ந்து தேவனுடைய அளவில்லாத கிருபையை குறித்து பாடி, ஆனந்த மகிழ்ச்சி அடைகிறோம். சீர்திருத்த இறையிலானது இவ்விதமான ஆழமான மாற்றத்தையே நமக்குள் நடப்பிக்கிறது. நம்முடைய உள்ளான மனிதனிலிருந்து ஆரம்பித்து புறம்பான மனிதனையும் மாற்றுகிறது. அதினாலேயே அவர்கள் தேவனுடைய அன்பையும், அவருடைய கிருபையையும், அவருடைய ஆளுமையையும், திரித்துவத்தையும், அவரை குறித்ததான எல்லாவற்றையும் உணர்ந்து அவரை துதிக்கிறவர்களாக இருக்கிறார்கள். ஓய்வு நாளில் மட்டுமல்ல தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவர்கள் தேவனை துதித்து ஆராதிக்கிறார்கள். சீர்திருத்த இறையியலானது, நாம் சீர்திருத்த இறையியலை அது எங்கும் பரம்பி பிரபலாமாக இருக்கும்போது நாம் அதை அணிந்து கொள்ளும் ஒரு அடையாள அட்டை கிடையாது. மாறாக இந்த சீர்திருத்த இறையியலை அடிப்படையாகக் கொண்டே நாம் வாழ்கிறோம், சுவாசிக்கிறோம், இதையே அறிக்கை செய்கிறோம், அது தாக்கப்படும் பொழுது அதற்காக போராடுகிறவர்களாகவும் இருக்கிறோம்.

பதினாறாம் நூற்றாண்டு புரட்டஸ்தந்து சீர்திருத்தவாதிகளாயிருக்கட்டும் அல்லது அவர்களுக்கு முன்னோடின 15 ஆம் நூற்றாண்டு மற்றும் அவர்களுக்குப் பின் வந்த 17ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளாயிருக்கட்டும், அவர்கள் எல்லாரும் சீர்திருத்த இறையியல் என்பது பிரபலமாக எல்லார் மத்தியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்த காரணத்தினால் அதற்காக போராடவோ அல்லது அதை குறித்து போதிக்கவோ செய்யவில்லை. மாறாக அது வேதத்தின் அடிப்படையில் இருந்ததினால் அதற்காக தாங்கள் சாவதற்கு மட்டுமல்ல அதற்கென்று தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கவும், மட்டுமல்லாது அதற்காக பாடுகளை அனுபவிக்கவும், அந்த கோட்பாடுகளுக்காக தாங்கள் அறிவீனர்களாக என்னப்பட்டாலும் அதை பாக்கியமென்றும் கருதினார்கள்.

இதை குறித்ததான சரியான சிந்தனை நமக்கு அவசியமாய் இருக்கிறது. ஏனென்றால் சீர்திருத்தவாதிகள் தங்களுடைய சுய ஞானம் மற்றும் சுய நம்பிக்கையின் மீது வைராக்கியம் உள்ளவர்களாய், தங்களை சார்ந்த உறுதியின் அடிப்படையில் இராமல், தாங்கள் விசுவாசித்த சுவிசேஷத்தின் அடிப்படையில் தாழ்மையை தரித்து கொண்டவர்களாய் அதற்கு பொறுப்புள்ளவர்களாக காணப்பட்டார்கள். மேலும் அவர்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் பூரணமாக வாசம் செய்து, தமது வல்லமையை அளித்ததினால் அவர்கள் மிகவும் தைரியம் உள்ளவர்களாய் இருண்ட காலங்களில் தேவனுடைய வெளிச்சத்தின் சத்தியத்தை அறிவிக்கிறதற்கு தங்களை பக்குவப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் பிரசங்கித்த சத்தியமானது புதிதான ஒன்றல்ல, அது மிகவும் பழமையானது தான். அது கிறிஸ்துவின் இரத்த சாட்சிகள், சபைபிதாக்கள், அப்போஸ்தலர்கள், விசுவாச தகப்பன்மார்கள் போன்றவர்களால் விசுவாசிக்கப்பட்ட சத்தியமாகும். அதுவே பரிசுத்த தேவன் பரிசுத்த வேதாகமத்தில் வெளிபடுத்தின சத்தியமாக இருக்கிறது.

சீர்திருத்தவாதிகள் தங்களுடைய இறையியலை தாங்களே உருவாக்கவில்லை. மாறாக வேதாகம இறையியலே அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்தது. வேதத்தினுடைய இறையியலே அவர்களை சீர்திருத்தவாதிகளாக மாற்றிற்று. தாங்கள் சீர்திருத்தவாதிகளாக வேண்டுமென்று அவர்கள் தீர்மானிக்கவில்லை மாறாக அவர்கள் வேதத்திற்கும் தேவனுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களை சீர்திருத்தவாதிகளாக்கிற்று. கிருபையின் போதனைகளும் மற்றும் சீர்திருத்தத்தின் 5 கல்வினிச கோட்பாடுகளும் சீர்திருத்தவாதிகளால் உண்டாக்கபட்ட ஒன்றல்ல. மாறாக கிறிஸ்துவின் திருச்சபையானது வரும் காலங்களில் எதை தாங்கள் விசுவாசிக்கிறோம் என்பதை அறிக்கையிட்டு, அதை பாதுகாத்து, அதற்காக போராடுவதற்கான அடிப்படை காரியங்களை செய்வதற்கு அவர்கள் வழிவகுத்தனர். இன்றைக்கும் கூட அநேகர் தாங்கள் சீர்திருத்த இறையியலை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் வெறுமனே கிருபையின் போதனைகளையும் மற்றும் சீர்திருத்தத்தின் ஐந்து கோட்பாடுகளையும் மட்டும் பின்பற்றுவதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். மற்றொருபுறம் சிலர் இவைகளையும் தாண்டி சீர்திருத்த இறையியலை பின்பற்றுகிறோம் என்று அறிக்கையிட்டாலும் அவர்கள் தாங்கள் சீர்திருத்தவாதிகள் என்பதை மற்றவர்கள் அறியக் கூடாதபடிக்கு மறைவாக வாழ்கிறவர்களாயும் இருக்கிறார்கள்.
இவ்விதமான ‘மறைமுக கால்வினிஸ்டுகள்’ ‘closed Calvinists’ பதினாறாம் மற்றும் 17ஆம் நூற்றாண்டு வரலாற்று பூர்வமான சீர்திருத்தத்தின் கோட்பாடுகளை அறிக்கை செய்யாமல், தங்களது திருச்சபைகளில் சீர்திருத்த இறையியலை செயல்படுத்துவதற்கும் எவ்வித வேலையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.

சீர்திருத்த இறையியலின் ஆழமான சத்தியங்களை சமயம் வாய்த்தாலும், சமயம் வாய்க்காவிட்டாலும் அதிக ஜாக்கிரதையோடு, வெறுமனே ஜனங்களுடைய முகத்திற்கு எதிராக நின்று செயல்படாமல், அவர்களோடு கூட சேர்ந்து பயணித்து அவர்களுடைய தோளின் மீது தங்களுடைய கரங்களைப் போட்டு சத்தியத்தை பிரசங்கிக்கிற மனிதர்களே இன்றைக்கு அதிகமாக தேவைப்படுகிறார்கள்.

வரலாற்று சீர்திருத்த அறிக்கையை பின்பற்றி சீர்திருத்த இறையலோடு கூட இணைந்திருக்கிறேன் என்று சொல்லியும், என்னால் எதுவும் செய்ய முடியாது, ஆனால் நான் ஒரு சீர்திருத்தவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வீர்களானால், ‘ரகசிய கால்வினிஸ்டாக’ உங்களை எண்ணி நீங்கள் தொடர்ந்து சீர்திருத்த சத்தியத்தில் பயணிக்க முடியாது என்பதே உண்மை. எவரும் அறியாதபடிக்கு நீங்கள் ஒரு சீர்திருத்தவாதியாக தொடர்ந்து வாழ்வது என்பது கூடாத காரியம். நீங்கள் தவிர்க்க முடியாத வகையில் அது வெளிப்பட்டே தீர வேண்டும். வெறுமனே சீர்திருத்த சத்தியத்தை விசுவாசித்து அதோடு கூட இணைந்திருப்பது மட்டும் போதாது, அதை அறிக்கையிட்டு, அச்சத்தியங்களை பிரசங்கித்து, அதை பாதுகாக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். அடிப்படையாக சீர்திருத்த இறையியலானது, முழு உலகத்திற்கும் அறிக்கையிடப்பட வேண்டிய இறையியலாகும்.

சீர்திருத்த இறையியலானது எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ள இறையியலாகவும் இருக்கிறது. ஏனென்றால் நாம் எதை அறிந்திருக்கிறோம் என்பதை மட்டும் அல்லாமல் நாம் அதை எப்படி அறிந்திருக்க வேண்டும், எந்த வழிமுறையில் அறிந்திருக்க வேண்டும் போன்ற அடிப்படையான காரியங்களையும் அது மாற்றுகிறதாயிருக்கிறது. தேவனை குறித்ததான நம்முடைய புரிதலை மட்டும் அது மாற்றாமல், நம்மை குறித்ததான நம்முடைய புரிதலையும் அது மாற்றுகிறது. உண்மையாகவே அது இரட்சிப்பை குறித்ததான நம்முடைய பார்வையை மட்டும் மாற்றாமல் நாம் எப்படி ஆராதிக்க வேண்டும், நாம் எப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும், எப்படி நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும், சபை ஐக்கியத்தில் எவ்விதமாக காணப்பட வேண்டும், நாம் எப்படி ஜெபிக்க வேண்டும், நாம் எப்படி வேதத்தை வாசிக்க வேண்டும் போன்ற எல்லாவற்றையும் குறித்ததான நம்முடைய புரிதலையும் அது மாற்றி அமைக்கிறது. வேதத்தை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தே, நாம் எப்படி இருக்கிறோம் வாழ்கிறோம், அசைகிறோம் இவைகள் எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன.

சீர்திருத்த இறையியலானது நாம் மறைத்து வைக்கக்கூடிய ஒரு இறையியல் சத்தியம் அல்ல. அல்லது நம்முடைய உதடுகளால் மட்டும் அதை பின்பற்றி வாழ்வதல்ல. அநேக கள்ளபோதனையாளர்களும் கூட சீர்திருத்த இறையியலை இவ்விதமான நம்பிக்கை கொண்டவர்களாக வரலாறு தோறும் காணப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சீர்திருத்த அறிக்கையை பின்பற்றுகிறவர்களாக தங்களை கூறினாலும், அதை அறிக்கையிட மறுக்கிறவர்களாக இருக்கிறார்கள். சிலர் தங்களை சீர்திருத்தத்திற்குட்பட்டவர்கள் என்று அறிக்கையிடுகிறார்கள் ஏனென்றால் அவர்களுடைய இறையியல் வேத கோட்பாடுகளுக்கு எந்த விதமான கேடு வராதபடிக்கும், அவர்கள் போதகராக இருப்பதினாலும், தங்களுடைய போதக பணியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அவ்விதமாக அறிக்கையிடுகிறார்கள். இத்தகைய, சீர்திருத்தவாதிகளை போல எண்ணப்படுகிறவர்கள் தங்களது சபைகளில் தாராளவாத இறையியல் பிரிவை (theological Liberals) சேர்ந்தவர்களும் காணப்படும்போது உண்மையில், அநேகருக்கு சீர்திருத்த சத்தியம் ஒரு தடை கல்லாயும், இடறலாகவும் இருக்கிறபடியால் அவர்கள் சீர்திருத்தத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். வரலாற்றை நாம் திருப்பி பார்க்கும்பொழுது தேவனுடைய வார்த்தையை பிழையில்லாமல் பிரசங்கிப்பது, தேவனுடைய வார்த்தையின் அடிப்படையிலான ஜெபம், ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து போன்ற சமய சடங்குகளை சரியான விதத்தில் பயன்படுத்துதல், சபை ஒழுங்கு நடவடிக்கையை உறுதியாக கடைப்பிடித்தல் போன்ற மேற்கொண்ட அடையாளங்களை மேலோட்டமாக கொண்ட சபைகள் உண்மையான சீர்திருத்த சபைகளாக கருதப்படுவதில்லை. இன்றைக்கும் கூட அநேக போதகர்களும் முறையாக வேதபயிற்சி பெறாத சாதாரண மக்களும், தங்களை பாரம்பரியமாக சீர்திருத்தத்தை பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லி, தாங்களும் புரட்டஸ்தந்து சபை பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கையிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சீர்திருத்தத்தினுடைய அடிப்படை நங்கூரத்தை பல வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டு அதின் விசுவாசத்தை அறிக்கை செய்ய முடியாதவர்களாயும் இருக்கிறார்கள்.

இதற்கு முரண்பாடாக சீர்திருத்த சத்தியத்தை தைரியமாக பிரசங்க பீடத்திலே அறிக்கையிட்டு, பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்பு கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக வெட்கப்படாதவர்களாய், அதற்காக போராடுகிறார்களாய், உதட்டளவோடு நின்றுவிடாமல் தங்களுடைய முழு பலத்தோடும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிற தேவ மனிதர்களே இன்றைக்கு திருச்சபைகளுக்கு தேவைப்படுகிறார்கள். பலவித போதனைகளால் குழப்பமடையாமல், சத்தியத்தை தைரியமாக அறிவித்து, அதோடு கூட கிருபையும், இரக்க குணமும் நிறைந்த பிரசங்கிகளே இன்று தேவைப்படுகிறார்கள். கலங்கமில்லாத, சுத்தமான சீர்திருத்த இறையியல் கொள்கைகளை சமயம் வாய்த்தாலும், சமயம் வாய்க்காவிட்டாலும் பிரசங்கிக்கவும், மக்களுடைய முகத்திற்கு எதிராக நின்று செயல்படாமல் அவர்களோடு கூட இணைந்து பயணிக்கிற பிரசங்கிகளே இன்று தேவைப்படுகிறார்கள். சீர்திருத்த இறையியல் சத்தியங்களை துல்லியமாக நேசிக்கிற பிரசங்கிகளே தேவை, ஏனென்றால் அவர்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரிலும் அவருடைய மாறாத, ஜீவனுள்ள, அதிகாரமுள்ள வார்த்தையிலும் அன்பு கூறுகிறவர்களாக இருக்கிறார்கள். சீர்திருத்த இறையியலை தைரியத்தோடு பிரசங்கிக்கிற பிரசிங்கிமார்கள் இருந்தால் மட்டுமே சபைகளில் சீர்திருத்த இறையியல் கொள்கைகளையும் அதினால் வாழ்க்கையில் ஏற்படும் முழு தாக்கத்தையும் பெற்ற ஜனங்களை நாம் சபையிலே காண முடியும். இதன் அடிப்படையிலேயே நாம் தேவனை நம்முடைய முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் சிந்தையோடும் பலத்தோடும் அன்பு கூறவும் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிக்கதக்கதான கிருபைகளை அதினாலேயே பெற்றுக் கொள்கிறோம். இவ்விதமான இறையியல் சத்தியமே பதினாராம் நூற்றாண்டு திருச்சபைகளை சீர்திருத்தத்துக்குள்ளாக்கிற்று. அதே இறையியல் சத்தியமே 21 ஆம் ஆண்டில் வாழும் நமது திருச்சபைகளுக்கும் சீர்திருத்தத்தையும், உயிர் மீட்சியையும் உண்டு பண்ணுகிற வல்லமையுள்ளதாக இருக்கிறது. இன்றைய காலங்களில் மக்களின் சமுதாய சூழ்நிலைக் கேற்றவாறு பலவித தாராளவாத இறையியல் கொள்கைகள் திருச்சபைகளில் நிறைந்து காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள வேதபூர்வமான, வரலாறு பாரம்பரியமிக்க, சீர்திருத்த விசுவாச கொள்கைகளை வைராக்கியத்தோடு அறிக்கை செய்து, பெருமையினால் அல்ல, தாழ்மையோடு, மனதுருக்கதோடு, அழிந்து கொண்டிருக்கிற ஜனங்களுக்கு மகிமையான வேத சுவிசேஷத்தை பிரசங்கித்து, எல்லா மகிமையையும் திரித்துவ தேவனுக்கே செலுத்துவதற்கு, வேதம்போதிக்கும் சீர்திருத்த சத்தியத்தை தைரியமாக அறிக்கை செய்வோம்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பர்க் பார்சன்ஸ்
பர்க் பார்சன்ஸ்
டாக்டர். பர்க் பார்சன்ஸ் சான்ஃபோர்டில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் சேப்பலின் மூத்த போதகர், ஃப்ளா., லிகோனியர் மினிஸ்ட்ரீஸின் தலைமை ஆசிரியர், டேப்லெட் டாக் இதழின் ஆசிரியர் மற்றும் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் ஆசிரியர். அவர் ஏன் நமக்கு நம்பிக்கைகள் இருக்கிறது? என்ற புத்தகத்தின் ஆசிரியர், கடவுள் மற்றும் ஜான் கால்வின்: எ ஹார்ட் ஃபார் டிவோஷன், டோக்ட்ரின் மற்றும் டாக்ஸாலஜி ஆகியவற்றின் ஆசிரியர் மற்றும் ஜான் கால்வின் எழுதிய கிறிஸ்டியன் லைஃப் பற்றிய ஒரு சிறிய புத்தகத்தின் இணை மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்.