Blessed Are the Pure in Heart, for They Shall See God
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
04-11-2024
Are There Degrees of Sin?
பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?
06-11-2024
Blessed Are the Pure in Heart, for They Shall See God
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
04-11-2024
Are There Degrees of Sin?
பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?
06-11-2024

TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்

கால்வினிசத்தின் ஐந்து முக்கிய கோட்பாடுகளில், கிறிஸ்துவின் குறிப்பிட்டவர்களுக்கான பதிலால் மரணம் (limited atonement) என்ற கோட்பாடு திருச்சபை வரலாறு முழுவதும் அதிகமாக எதிர்க்கப்பட்ட ஒன்றாகும். மட்டுமல்ல தொடர்ந்து அதிகமான குழப்பத்தையும் பயத்தையும் தோற்றுவிக்ககூடிய ஒன்றாகவும் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இறையியல் கோட்பாடானது பிரதானமாக தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை தேவன் உலகத்திலே அனுப்பி சிலுவையிலே மரிக்க செய்ததினுடைய நோக்கத்தையும், திட்டத்தையும், அதனுடைய வழிமுறையையும் பற்றி ஆராய்வதாகும். உலகத்திலுள்ள எல்லாரும் இரட்சிக்கப்படும்படியாக பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை உலகத்திலே அனுப்பி சிலுவையிலே மரிக்கும்படி செய்தாரா அல்லவென்றால் அவருடைய மரணம் எவருக்குமே பலன் அளிக்காத பிரயோஜனப்படாத ஒன்றா?. தேவன் பாவிகள் இரட்சிக்கப்படுவதற்காக எதேச்சையாக தம்முடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தாரா? அல்லது தேவன் நித்தியத்திலிருந்தே இரட்சிப்பை குறித்ததான திட்டமுடையவராய், அதனடிப்படையில் தம்முடைய கிருபையின் ஐஸ்வரியத்தினாலும், அவருடைய நித்தியமான முன்குறித்தலின் அடிப்படையிலும், இந்த பரிகாரபலியை தன்னுடைய ஜனங்களின் இரட்சிப்புக்காக அவர் உருவாக்கினாரா? இந்த பதிலால் மரணம் வடிவமைக்கப்பட்ட போதே குறுகிய எல்லைக்குட்பட்டு இருந்ததா?

இங்கே கிறிஸ்துவின் குறிப்பிட்டவர்களுக்கான பரிகார பலி (limited Atonement) என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை, ஏனெனில் அநேகருக்கு அது இடறலாக இருக்கிறது. அதற்கு பதிலாக திட்ப உறுதியான மீட்பு (definite redemption) அல்லது வரையறுக்கப்பட்டவர்களுக்கான பரிகார பலி (definite Atonement) என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் இந்த வார்த்தையே பிதாவாகிய தேவன், மீட்பினுடைய திட்டத்தை விசேஷமாக உருவாக்கி, தெரிந்து கொள்ளபட்டவர்களுக்கு அந்த இரட்சிப்பை கொடுக்கும்படியாகவும், மேலும் தம்முடைய ஆடுகளுக்காக மரித்து தேவன் தனக்குத் தந்தவர்களுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை இயேசு கிறிஸ்து ஒப்புக்கொடுத்தார் என்ற சத்தியத்தை விளக்குவதற்கும் பொருத்தமாயிருக்கிறது.

இந்த வரையறுக்கப்பட்டவர்களுக்கான பரிகார பலி (definite Atonement)
என்ற சத்தியத்தை நிராகரிப்பது போல் 2 பேதுரு 3:8-9 வசனம் உள்ளதாக நாம் கேட்டிருப்போம்.

வசனம் பின்வருமாறு; “பிரியமானவர்களே கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும் ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாயிராமல் ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமை உள்ளவராயிருக்கிறார்”. இந்தப் பகுதியில் ”எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று” என்ற வார்த்தைக்கு முன்னுதாரணமாக ‘ஒருவரும்கெட்டுப் போகாமல்’ என்ற வார்த்தையானது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் பேதுரு தெளிவாக நம்மில் ஒருவரும் கெட்டுப்போக தேவன் விரும்பவில்லை என்றும் நாம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும் தேவன் விரும்புவதாக கூறுகிறார். இங்கே எல்லா மனக்குலத்தையும் தேவன் இரட்சிக்க விரும்புகிறார் என்று கண்மூடித்தனமாக பேதுரு அறிவுறுத்தவில்லை மாறாக பேதுரு, எந்த விசுவாச ஜனங்களுக்கு இதை எழுதினாரோ அவர்களையும் சேர்த்து ‘நம்மில்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இப்படியாக தேவன் கிறிஸ்துவை பரிகாரபலியாக சிலுவையிலே மரிக்கச் செய்து அதன் பின்பு கிறிஸ்து தனக்கு தேவை என்று உணர்கிற மனிதன் கிறிஸ்துவை விசுவாசிப்பான் என்று தேவன் திட்டம் பண்ணியதாக வேதத்தில் நாம் எங்கும் பார்ப்பதில்லை. வேதத்தின் அடிப்படையில் மீட்பில் தேவனை நாம் பார்க்கும் விதம் வித்தியாசமானது. தேவன் குறிப்பிட்ட பாவிகளுக்கான மீட்பை நித்தியத்திலே திட்டம் பண்ணி, அதனுடைய நோக்கமும் அமைப்பும் பூரணமாக வடிவமைத்தும்,பூரணமாக நிறைவேற்றியும், அவர் தம்முடைய சித்தத்தின்படி, தம்முடைய குறிப்பிட்ட ஜனங்களை கிறிஸ்துவானவர் செய்து முடித்த பரிகாரபலியின் மூலமாக இரட்சிக்கவும் செய்கிறார் என்பதே வேத அடிப்படையில் நம்முடைய விசுவாசமாகும்.

கிறிஸ்து குறிப்பிட்டவர்களுக்காக மரித்தார் என்று நாம் கூறும்போது கிறிஸ்துவானவருடைய பரிகாரபலியின் தகுதியையும் மதிப்பையும் நாம் இங்கே குறைக்கவில்லை. கிறிஸ்துவினுடைய பதிலால் மரணம் எல்லா உலக மனிதர்களுக்கும் போதுமானது என்று எல்லாரும் பொதுவாக சொல்வதுண்டு. அவர் செய்து முடித்த, மதிப்புமிக்க இந்த பணியானது எல்லா மக்களுடைய பாவங்களையும் மூடுவதற்கு போதுமானதாக இருக்கிறது மட்டுமல்லாமல் அவரை விசுவாசிக்கிறவன் யாராக இருந்தாலும் கிறிஸ்துவினுடைய பரிகாரபலியினுடைய முழு பலாபலன்களையும் பெற்றுக் கொள்வான் என்பதும் வேத அடிப்படையில் உறுதியானதே. கிறிஸ்துவின் சுவிசேஷம் உலகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் பிரசிங்கிக்கப்பட வேண்டும் என்பதினுடைய முக்கியத்துவத்தையும் நாம் மறுப்பதற்கில்லை. இந்த கூற்றும் எதிர்மறையாக இருப்பதைப் போல் நமக்கு காணப்படலாம். அதாவது ஒரு பக்கம் உலகத்தில் உள்ள எல்லாருக்கும் சுவிசேஷ அழைப்பை பிரசங்கத்தின் மூலம் நாம் கொடுக்க வேண்டும் மற்றொரு பக்கம் உலகத்தில் உள்ள எல்லாருக்கும் சுவிசேஷ அழைப்பை நாம் கொடுக்க வேண்டுமென்று கூறும்போது அதில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நாம் அதை கொடுப்பதில்லை. அந்த சுவிசேஷ அழைப்பானது அதை கேட்கிற ஒவ்வொரு பாவியினிடத்திலும் மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் எதிர்பார்க்கிறது.

முடிவாக, கிறிஸ்துவினுடைய பரிகாரபலியினால் வரும் முழு பலாபலன்களும் தங்களுடைய பாவத்தை விட்டு மனந்திரும்பி, அதின் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை முழு இருதயத்தோடும் விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பது வேதம்போதிக்கும் நிதர்சனமான சத்தியம்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.