
தேவ கோபம் என்றால் என்ன?
07-04-2026கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்விற்கான தீர்வு
நாம் வாழும் இன்றைய உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு செய்வதினால் ஏற்படும் குற்ற உணர்வினால் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த குற்ற உணர்வு கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்கள், அதை ஊக்குவித்த ஆண்கள் மற்றும் அதைச் செய்த மருத்துவர்கள் என அனைவரையும் வேட்டையாடுகிறது. ஒரு பெண் மருத்துவர் “தி நியூயார்க் டைம்ஸ்” என்ற இதழில் பேசும்போது, தான் கருக்கலைப்பு செய்வதற்கு முன்பு தன்னை உணர்ச்சிப்பூர்வமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது என்றும், பலமுறை தூக்கமில்லாத இரவுகளைக் கழித்ததாகவும் தெரிவித்தார்: “ஒரு மகப்பேறு மருத்துவருக்கு இது மிகவும் கடினமான காரியம்,” என்று அவர் கூறினார். “இதனால் ஏற்படும் உணர்ச்சிகள் மிகவும் வலிமையானவை. அதனால் மருத்துவர்கள் கருக்கலைப்பை குறித்து ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வதில்லை.” மேற்சொன்ன இந்த மருத்துவர், ஒருமுறை கருக்கலைப்பு செய்து முடித்த பிறகு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தரையில் விழுந்து கதறியதாக கூறுகிறார்.
மனித வாழ்வில் குற்ற உணர்வு என்பது ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சியாகும், இது மனிதர்களுக்குக் கடுமையான உளவியல் ரீதியான சக்தி இழந்த நிலைமையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு வல்லமையுள்ளது. ஒருமுறை, ஒரு மனநல மருத்துவர் என்னிடம் வந்து, அவரது மருத்துவக் குழுவில் சேரக்கூடிய ஒரு வாய்ப்பை எனக்களித்தார். தனது நோயாளிகளில் பெரும் பகுதியினர் கடுமையான குற்ற உணர்வு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவதாக அவர் என்னிடத்தில் விளக்கினார். “இந்த மக்களுக்கு ஒரு மருத்துவர் தேவையில்லை, அவர்களுக்கு ஒரு மன்னிப்பை வழங்கக்கூடிய ஆசாரியன் தேவை,” என்று அவர் கூறினார். “தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்று அவர்களிடம் சொல்வதற்கு ஒரு நபர் அவசியம் தேவை என்றார்.
அந்த மனநல மருத்துவருக்குக் கிறிஸ்தவத்தின் மேல் எந்தப் பற்றும் கிடையாது; அவர் தனது நோயாளிகளின் மனநலம் குறித்து மட்டுமே அக்கறை கொண்டிருந்தார். தீர்க்கப்பட முடியாத குற்ற உணர்வின் அழிக்கும் சக்தியை அவர் புரிந்து வைத்திருந்தார். மேலும் குற்றத்தை மறுப்பதோ அல்லது அதற்கு நியாயம் செய்வதோ (Rationalization) உண்மையான குற்ற உணர்வைக் கையாள்வதற்கான சரியான வழிகள் அல்ல என்பதை அவர் ஒத்துக்கொண்டார். உண்மையான குற்ற உணர்விற்கு ஒரே ஒரு பயனுள்ள மருந்து என்னவென்றால், அப்படிப்பட்ட குற்ற உணர்விற்கான ‘உண்மையான மன்னிப்பை’ கண்டடைவது மட்டுமே. நம் கைகளில் உள்ள கரையை மறைக்க முயற்சிப்பது என்பது அந்தக் கரையை முற்றிலுமாக நீக்குவதற்கு ஈடாகாது.
தேவனுடைய மன்னிப்பை அனுபவித்தல்
மன்னிப்பின் ஆழமான விடுதலையை அனுபவிக்க, ஒருவர் தாழ்மையான இருதயத்தோடும், நருங்குண்ட ஆவியோடும் தேவனிடம் சென்று தனது பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். ‘நருங்குண்ட நிலை’ என்பது தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதற்காக உண்டாகும் உண்மையான மற்றும் தெய்வபக்திக்கேற்ற துக்கத்தை உள்ளடக்கியதாக்கும். இது ‘தண்டனைக்கு பயப்படுவதினால் உண்டாகும் வருத்தத்திலிருந்து’ மாறுபட்டது; அந்த தண்டனைக்கு அஞ்சுவதினால் வரும் வருத்தம் போலியான மனந்திரும்புதலாகும். தன் தாயின் கையில் உள்ள பிரம்பைக் கண்டவுடன், பிஸ்கட் பாட்டிலில் கையை வைத்ததற்காகப் மாட்டிக்கொண்டு வருத்தப்படும் ஒரு குழந்தையிடம் இவ்விதமான வருத்தத்தைக் காணலாம். உண்மையான மனந்திரும்புதல் குற்ற உணர்ச்சியின் மெய்யான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறது மற்றும் நியாயப்படுத்தவும் விரும்பாது. யார் ஒருவர் உண்மையான தாழ்மையோடும், வருத்தத்தோடும், அந்தப் பாவத்தை இனிமேல் செய்ய மாட்டேன் என்ற உறுதியான தீர்மானத்தோடும் தேவனை அணுகுகிறாரோ, அப்படிப்பட்ட நபர் நிச்சயமாக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நான் செய்ததை இனிமேல் மாற்ற முடியாது என்றாலும், அதற்கான மன்னிப்பை என்னால் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிப்பு என்பது தேவனுடைய கிருபையின் அதிசயங்களில் ஒன்றாகும். அதன் குணப்படுத்தும் ஆற்றல் மகத்தானது. ஒரு பெண் கருக்கலைப்பில் ஈடுபட்டிருந்தால், அவள் தன் வாழ்நாள் முழுவதும் தனது மார்பில் ‘A’ (Abortion-ஐக் குறிக்கும் சிவப்பு அடையாளம்) என்ற அடையாளத்தைச் சுமந்துகொண்டு திரிய வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதில்லை. அவள் தனது பாவத்திற்காக மனந்திரும்பி, கழுவப்பட்டு மன்னிப்படைவதற்காக அவரிடம் வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவன் நம்மை மன்னிக்கும்போது, நாம் மன்னிக்கப்படுகிறோம். தேவன் நம்மைச் சுத்திகரிக்கும்போது, நாம் சுத்தமாகிறோம். இவ்விதமான காரியங்களினால் தேவன் உண்மையாகவே களிகூர்ந்து மகிழ முடியும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


