TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்
05-11-2024
What Is Biblical Stewardship?
வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?
07-11-2024
TULIP – சீர்திருத்த இறையியல்: குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் பதிலாள் மரணம்
05-11-2024
What Is Biblical Stewardship?
வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?
07-11-2024

பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?

Are There Degrees of Sin?

பாவத்திற்கு அளவுகோல் இருக்கிறது என்பதை வரலாற்று ரீதியாக ரோமன் கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்துக்களும் அறிந்திருக்கின்றனர். ரோமன் கத்தோலிக்கர்கள் மரணத்துக்கேதுவான மற்றும் மன்னிக்கத்தக்க பாவங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்தி காண்பிக்கின்றனர். அந்த வேறுபாட்டின் அம்சம் என்னவென்றால், மரணத்துக்குரிய சில பாவங்கள் மிகவும் மோசமானது, கொடூரமானது, தீவிரமானது. காரணம், இவைகள் விசுவாசிக்குள் இருக்கும் நீதிமானாக்குதலின் கிருபையை சாகடிக்கிறது. ஒவ்வொரு பாவமும் அந்த அளவிற்கு அழிவை ஏற்படுத்தாது. மன்னிக்கத்தக்க சில பாவங்களும் உள்ளன. இவற்றின் விளைவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இவைகள் அந்தளவுக்கு கடுமையான பாவம் அல்ல, நீதிமானாக்குதலை இழக்கச் செய்யும் மரணத்துக்கேதுவான பாவத்தைப் போல இவைகள் இருக்காது என்பதுதான் பாவத்தைப் பற்றிய இவர்களின் இறையியல்.

ரோமன் கத்தோலிக்கர்களின் மரணத்துக்கேதுவான மற்றும் மன்னிக்கத்தக்க பாவங்களின் இவ்வித கண்ணோட்டத்தை சீர்திருத்த புரட்டஸ்தாந்துக்கள் நிராகரிப்பதினால் சுவிசேஷக புரட்டஸ்தாந்துக்களும் இவ்வித கண்ணோட்டத்தை நிராகரித்திருக்கிறார்கள். இதன் விளைவாக, பாவங்களுக்கிடையே இவ்வித வேறுபாடுகள் இல்லை என்ற முடிவிற்கு சுவிசேஷ புரட்டஸ்தாந்துக்கள் வந்துள்ளனர்.

சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளுக்கே நாம் திரும்பவேண்டும். ரோமன் கத்தோலிக்கர்களின் பாவத்தைப் பற்றிய இவ்வித கண்ணோட்டத்திற்கும், அவர்களின் கொள்கைகளுக்கும் எதிரான வெளிப்படையான விமர்சகராக ஜான் கால்வின் இருந்தார். எல்லா பாவங்களும் மரணத்துக்கேதுவானது என்று கால்வின் கூறினார். “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.”
(யாக்கோபு 2:10) என்பதை யாக்கோபு நிருபம் நமக்கு நினைப்பூட்டுகிறது. சிறிய பாவம் கூட தேவனுக்கு விரோதமான துரோகமாகும். இந்த அளவிற்கு நமது பாவச்செயல்களின் தாக்கத்தை உணர தவறினாலும், இதுவே உண்மையாகும்.

நான் பாவஞ்செய்யும்பொழுதெல்லாம் தேவனின் சித்தத்தை நிராகரித்து எனது சித்தத்தை நான் தெரிந்துக்கொள்கிறேன். இதன்மூலம் நான் தேவனை விட புத்திசாலி, ஞானவான், நீதியுள்ளவன், வல்லமையுள்ளவன் என்று கூறுகிறேன். நாம் செய்த சிறிய பாவங்களுக்காக தேவன் தனது நீதியுள்ள நியாயத்தீர்ப்பின் மூலம் நம் ஒவ்வொருவரையும் அழிப்பதற்கு அனைத்துப் பாவங்களும் மரணத்துக்கேதுவானது என்பதை கால்வின் கூறினார். உண்மையில், மனிதன் படைக்கப்பட்டு அவன் பாவம் செய்தபிறகு அதற்கான தண்டனை அன்றே கொடுக்கப்பட்டது: “ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”
(ஆதியாகமம் 2:17). இருப்பினும் தேவன் தனது நீதியின்படியே எப்போதும் நம்முடன் அணுகுவதில்லை. அவர் தனது கிருபையை நமக்கு கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். அவர் நாம் வாழ நம்மை அனுமதிக்கிறார், நமக்கு மீட்பை அருள இரக்கங்கொள்கிறார். நம்மை நித்திய மரணத்துக்கு தகுதிபடுத்த நமது அனைத்து பாவங்களும் மரணத்துக்கேதுவானதாக இருப்பினும், நம்மில் உள்ள இரட்சிக்கும் கிருபையை அழிக்கும் அளவுக்கு எந்த பாவமும் மரணத்துக்கேதுவானது அல்ல என கால்வின் கூறினார். ஆம் நாம் மனந்திரும்பவேண்டும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் அருளிய நீதிமானாக்குதலின் கிருபையை நமது பாவங்கள் ஒருபோதும் அழிக்காது. கால்வினும் மற்ற சீர்திருத்தவாதிகளும் சிறிய பாவங்களுக்கும் மிக கொடூரமான மரணத்துக்கேதுவான பாவங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளதாக ஆணித்தரமாக கூறினர்.

நாம் ஒருவருக்கொருவர் மன்னித்து கரிசனையோடு உதவுவதற்கு இந்த பாவங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறு சிறு பாவங்களில் வாழப்பழகிய மக்களின் அற்ப பாவங்கள் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையில் காயங்களை ஏற்படுத்துகிறது. புறங்கூறுதலும் தூஷணமும் தூண்டப்பட்டு பற்றவைக்கும்பொழுது அங்கு மிகப்பெரிய அழிவு துவங்குகிறது. பாவ போராட்டத்தில் போராடி தோல்விக்காண்கிற சக கிறிஸ்தவர்களிடம் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் இருப்பதற்கு நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதற்காக நாம் எந்த பாவத்தையும் கண்டுக்கொள்ளாமல் விலகிச்செல்லவேண்டும் என்று அர்த்தமல்ல, புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்குள் அனுமதிக்கப்படாத மோசமான சில பாவங்களையும் வேதம் பட்டியிலிட்டிருக்கிறது. விபச்சாரம் மிகவும் தீவிரமான பாவம். வேசித்தனம் சபையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. மதுபான வெறி, கொலை, காமவிகாரம் ஆகியவைகள் தொடர்ச்சியாக கடுமையாக கண்டிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த பாவங்கள் மிகவும் கொடூரமானதாகவும் இவைகள் வெளிப்படுகையில் இவர்கள் மீது சபையின் ஒழுங்கு நடவடிக்கையையும் வேதம் நமக்கு காட்டுகிறது.

கிறிஸ்துவின் நீதியின் அடிப்படையில் மட்டுமே பரலோகத்திற்குள் நுழைய முடியும் என்று தேவன் நமக்கு கூறுகிறார். ஆனாலும், பரலோகத்திற்குள் சென்றவுடன் நமது கிரியைகளுக்கான வெகுமதிகள் அங்கு வழங்கப்படும்.

நாம் வேதத்தின் எச்சரிப்புகளை கவனிக்கும்போது பாவத்திற்கான வெவ்வேறு அளவீடுகள் இருப்பதை நாம் அறிகிறோம். பரலோகத்தில் இருக்கும் பரிசுத்தவான்களுக்கு வழங்கப்படும் வெகுமதிகளை குறித்து வேதத்தில் சுமார் 22 முறை உள்ளது. பரலோகத்தில் வெவ்வேறு நிலைகளும், வெகுமதிகளும், பொறுப்புகளும் உள்ளன. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தண்டனையோடு இன்னும் அதிகமாக குவித்துக்கொள்ளபடிக்கு வேதம் நம்மை எச்சரிக்கிறது. இயேசு பிலாத்துவிடம் இவ்வாறு கூறுகிறார்: “ இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். “
(யோவான் 19:11)
இயேசு கிறிஸ்து பாவங்களை அளவிட்டு மதிப்பீடு செய்கிறார். பெரிய குற்றங்களுக்கும் பெரிய கடமைகளுக்கும் ஏற்றவாறு பெரிய நியாயத்தீர்ப்பு வருகிறது. இந்த மையக்கருத்தே புதிய ஏற்பாடு முழுவதும் ஊடுருவியுள்ளது.

பாவம் மற்றும் வெகுமதிக்கான அளவீடு தேவனின் நீதியின் அடிப்படியில் அமைந்திருக்கிறது. நான் மற்றொரு நபரை விட இரண்டு மடங்கு அதிகமாக பாவம் செய்தால் அந்த குற்றத்திற்கேற்ப தண்டனையை நீதி எதிர்பார்க்கிறது. அதேபோல் மற்ற நபர்களை விட இரண்டு மடங்கு அதிக நற்கிரியைகளை செய்தால் அதற்கேற்ப வெகுமதிகளையும் நீதி அளிக்கிறது. கிறிஸ்துவின் நீதியின் அடிப்படையில் மட்டுமே பரலோகத்திற்குள் நுழைய முடியும் என்று தேவன் நமக்கு கூறுகிறார். ஆனாலும், பரலோகத்திற்குள் சென்றவுடன் நமது கிரியைகளுக்கான வெகுமதிகள் அங்கு வழங்கப்படும். நற்கிரியைகளில் பெருகினவர்களுக்கு வெகுமதியும் பெருகும். நற்செயல்களில் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருப்பவர்களுக்கு பரலோகத்தில் குறைந்த வெகுமதியே கிடைக்கும். இதேபோல் தேவனோடு அதிகளவில் எதிரிகளாக இருப்பவர்கள் நரகத்தில் கடுமையான வேதனைகளை அனுபவிப்பார்கள். குறைந்த பகைமையோடு இருப்பவர்கள் தேவனுடைய கரத்தினால் குறைந்தளவில் தண்டனைகளை அனுபவிப்பார்கள். தேவன் பூரண நீதியுள்ளவர். அவர் நியாயந்தீர்க்கும்போது அனைத்து சூழ்நிலையின் பாவங்களுக்கும் நியாயம் செய்வார். “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
(மத்தேயு 12:36) என்று இயேசு கூறுகிறார்.

இந்த உண்மையை அதிமாக வலியுறுத்துவது ஏன் அவசியம்? அநேக முறை இச்சையோடு போராடும் ஆண்களோடு நான் பேசியிருக்கிறேன். அவர்கள் தங்களிடமோ அல்லது என்னிடமோ இவ்வாறு கூறுவார்கள்: “நான் ஏற்கனவே இச்சையின் மூலம் குற்றவுணர்வோடு இருப்பதினால் விபச்சாரத்தையே நான் செய்துவிடலாம். நான் தேவனுக்கு முன்பாக எவ்வித மோசமான நிலையிலும் நிற்க முடியாததினால் இச்சையின் விளைவாகிய விபச்சாரத்தை நான் செய்துவிடுகிறேன்.” நான் எப்பொழுதும் அவர்களுக்கு அளிக்கும் பதில்: “ ஆம் நீங்தள் தேவனின் பார்வையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளீர்கள்.” இச்சையை விட விபச்சாரத்திற்கான தண்டனை மிகவும் கடுமையானது. தேவன் அந்தந்த பாவங்களுக்கேற்ப நீதியை வழங்குவார். ஒருநபர் தான் தவறான நடத்தையில் சிக்கிக் கொண்டேன் என்பதற்காக “ நான் ஏற்கனவே இதன்மூலம் குற்றவுணர்ச்சியோடு உள்ளேன். எனவே நான் இதை முழுமையான பாவமாக செய்து விடுகிறேன்” என்று சொல்வது முட்டாள்தனமானது. அவ்வாறு நாம் சிந்திப்பதற்கு தேவன் தடை விதித்திருக்கிறார். இருப்பினும் நாம் துணிந்து செய்வோமென்றால் நிச்சயமாக தேவனின் நீதியுள்ள நியாயத்தீர்ப்பை நாம் சந்திப்போம். கிறிஸ்தவ மனசாட்சியையும் கிறிஸ்தவ குணாதிசயங்களையும் ஊன்ற கட்டுவதற்கு இதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.