இயேசு கிறிஸ்து: மெய்யான தேவ ஆட்டுக்குட்டி
04-09-2024கிறிஸ்தவ வாழ்வில் ஜெபத்திற்கான இடம்
07-09-2024பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி என்றால் என்ன?
கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை குறித்து நாம் பேசுகையில், இரண்டு சிறப்பான வார்த்தைகள் அடிக்கடி வருவதை நம்மால் காணமுடியும். அவைகள் : பாவநிவிர்த்தி (Expiation) மற்றும் கிருபாதாரபலி (Propitiation).
இதன் கிரேக்க இணை வார்த்தையாக இதில் எந்த ஒன்றைப் பயன்படுத்தவேண்டும் என்ற அனைத்து வகையான வாதங்களையும் இந்த வார்த்தைகள் எழுப்புகிறது. வேதாகமத்தின் சில மொழிபெயர்ப்புகள் ஓர் இடத்தில் ஒன்றை பயன்படுத்தி மற்றொரு இடத்தில் வேறொன்றை பயன்படுத்துகிறது. பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி ஆகிய இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கப்படுத்துமாறு அநேகமுறை என்னிடம் கேட்க்கப்படுள்ளது. இந்த வார்த்தைகள் வேதத்தில் இருப்பினும், என்ன பிரச்சனை என்றால் , நாம் இவைகளை நமது அன்றாட பேச்சு வழக்கில் பயன்படுத்தாமல் இருப்பதுதான். ஆகவே இவைகள் வேதத்தில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை துல்லியமாக நமக்கு தெரியவில்லை. இந்த வார்த்தைகளுக்கான மேற்கோள் குறிப்புகள் நம்மிடம் குறைவாகவே உள்ளது.
பாவநிவிர்த்தி(Expiation) மற்றும் கிருபாதாரபலி(Propitiation)
இந்த வார்த்தைகளின் விளக்கம் என்ன என்பதை கவனிப்போம். ஆங்கிலத்தில் ‘ex’ என்றால் வெளியே அல்லது நீக்குதல் என்று அர்த்தம். Expiation என்ற வார்த்தை ஏதோ ஒன்றை நீக்குதல் அல்லது எடுத்துப்போடுதல் என்பதை குறிக்கிறது. வேதத்தில் நாம் பார்க்கும்பொழுது, இந்த வார்த்தையின் அர்த்தம், ஒரு பலியின் மூலமாய் அல்லது விலைக்கிரயத்தின் மூலமாய் ஒருவருடைய பாவத்தை அல்லது குற்றத்தை நீக்குதல் என்று பொருள்படுகிறது. Propitiation என்ற வார்த்தை பாவத்தை நீக்கப்படுவதினால் ஏற்படும் விளைவை குறிக்கிறது. நம்மோடு பகைமையில் உள்ள தேவன் தனது கிருபையினால் தம்மோடு ஒப்புரவாக்குவதை இந்த வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. இந்த கிருபாதாரபலியின் (Propitiation) அல்லது கோபநிவிர்த்தியின் மூலமாக நாம் தேவனோடு உள்ள ஐக்கியத்தில் இணைக்கப்பட்டு அவருக்கு பிரியமானவர்களாக மாறுகிறோம்.
கோபமுற்ற தேவன் சமாதானப்படுத்தப்படுவதையே கிருபாதாரபலி (Propitiation) என்ற வார்த்தை அர்த்தப்படுத்துகிறது. சமாதானப்படுத்துதல் அல்லது சாந்தப்படுத்துதல் என்ற வார்த்தை இராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அரசியல் அல்லது போர்களில் இந்த சமாதானப்படுத்துதலின் தத்துவம் என்னவென்றால் “கட்டுப்படுத்தமுடியாத அல்லது மிகவும் உக்கிரமுள்ள பல நாடுகளை வென்ற ஒரு நபர் தனது கரத்தில் பட்டயத்தோடு உங்கள் முன் நின்றால், அவரது படையின் கோபத்தோடு துணிகரமாய் போரிடுவதை பார்க்கிலும், உங்களது நாட்டின் பெரும் எல்லையை அவருக்கு கொடுத்துவிடுவீர்கள். அவர் உங்கள் எல்லைக்குள் வந்து உங்களை வெட்டிப்போடாதபடிக்கு அவரை திருப்திப்படுத்தும் ஏதோ ஒன்றை அளிப்பதின் மூலம் அவருடைய கோபத்தை தணிக்க முயற்ச்சிப்பீர்கள். இது தேவபக்தியற்ற சமாதானப்படுத்துதலின் வெளிப்பாடு. ஆனால், நீங்கள் கோபமுள்ளவராக இருக்கையில் ஒருவேளை உங்கள் கோபத்தை நான் திருப்திப்படுத்தி உங்களை சாந்தப்படுத்தவேனென்றால் , நான் உங்களது தயவை அடைவேன். பிரச்சனை தீர்ந்தது.
கிறிஸ்துவின் பலியினால் நாம் மறைக்கப்படவில்லையென்றால் நமக்கு எதிராக பற்றியெறியப்போகும் தேவ கோபத்தை நிவிர்த்தியாக்கியதே, கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மேன்மையான வெற்றியாகும்.
பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி ஆகிய வார்த்தைகளுக்கு, ஒரே கிரேக்க வார்த்தை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் ஓர் சிறிய வேறுபாடு உள்ளது. பாவநிவிர்த்தி, தேவன் நம்மிடம் தனது நிலைப்பாட்டை மாற்றச்செய்கிறது. இதையே கிறிஸ்து சிலுவையில் செய்தார், கிறிஸ்து செய்த பாவநிவிர்த்தியின் விளைவுதான் கிருபாதாரபலி அல்லது கோபநிவிர்த்தி. தேவனின் கோபம் தணிந்தது. கிறிஸ்து செலுத்திய விலைக்கிரயத்துக்கும் அந்த விலைக்கிரயத்தை ஏற்றுக்கொண்ட பிதாவுக்கும் இடையே இந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் அடங்கியுள்ளது.
கிறிஸ்துவின் பணி அது சாந்தப்படுத்துத்தலின் பணி
பாவநிவிர்த்தியும், கிருபாதாரபலி/ கோபநிவிர்த்தியும் இணைந்து தேவனை சாந்தப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறது. தேவனின் கோபத்தை சாந்தப்படுத்துவதற்கு கிறிஸ்து தனது பணியை சிலுவையிலே செய்து முடித்தார். தேவனின் கோபத்தை தணித்தல் என்ற இந்த சத்தியம் நவீன இறையியலாளர்களின் கோபத்தை தணிக்கவில்லை. உண்மையில், இந்த சத்தியத்தை குறித்து அவர்கள் அதிகமாக கோபமடைகிறார்கள். தேவனை சமாதானப்படுத்தவோ அல்லது சாந்தப்படுத்தவோ நாம் ஏதாவது செய்திருக்கவேண்டும் என்பது தேவனின் கண்ணியத்தை கீழ்படுத்தும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். தேவனின் கோபத்தை நாம் எவ்வாறு புரிந்திருக்கிறோம் என்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் தேவ கோபத்தை தணித்தல் என்ற சத்தியம் இறையியலுக்கு வெளியே இல்லை மாறாக இவை இரட்சிப்பின் சாராம்சத்தை குறித்து தான் பேசுகிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
இரட்சிப்பு என்றால் என்ன?
மிகவும் அடிப்படையான ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: இரட்சிப்பு என்றால் என்ன? இதை விரைவாக விளக்கப்படுத்துவது உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். காரணம் இரட்சிப்பு என்ற வார்த்தையானது வேதத்தில் சுமார் 70 வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட தோல்வியிலிருந்து ஒருவன் மீட்கப்பட்டான் என்றால் அவன் இரட்சிப்பை அனுபவிக்கிறான் என்று அர்த்தம். உயிருக்கு ஆபத்தான வியாதியிலிருந்து ஒருவன் பிழைத்தான் என்றால் அந்த மனிதனும் இரட்சிப்பை அனுபவிக்கிறான் என்று அர்த்தம். ஒருவனுடைய விளைச்சல் அழிந்து போகும் நிலையிலிருந்து மீண்டு நன்றாக வளருமென்றால் , அவைகள் காப்பாற்றப்பட்டது என்று அர்த்தம். இவைகளே வேதத்தின் வார்த்தைகளாக இருக்கிறது. நாம் அன்றாட பயன்படுத்தும் வார்த்தைகளையே இவைகளும் அர்த்தப்படுத்துகிறது. நாம் பணத்தை மீட்டெடுக்கிறோம். குத்துச்சண்டை வீரர் அங்குள்ள மணி அடித்ததினால் காப்பாற்றப்பட்டார் அதாவது அவர் நாக்அவுட் மூலம் தோல்வியடைவதிலிருந்து காப்பாற்றப்பட்டார். குத்துச்சண்டை வீரர் தோல்வியிலிருந்து இரட்சிக்கப்பட்டார் என்பதற்காக அவர் நித்திய ஜீவனுக்கு செல்வார் என்று அர்த்தமல்ல. சுருக்கமாக சொல்லப்போனால், தற்காலிக ஆபத்திலிருந்து காப்பற்றப்படுகிற அனுபவத்தையே இரட்சிப்பு என்ற வார்த்தைக்கான விளக்கமாக கருதமுடியும்.
ஆனால் வேதப்பூர்வமாக இரட்சிப்பை குறித்து நாம் சிந்திக்கும் பொழுது, எதிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டோம் என்பதை சொல்வதில் கவனமாக இருக்கவேண்டும். 1தெசலோனிக்கேயர் 1:10 ம் வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார், “இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு…”. பிரதானமாக, தேவ கோபத்திலிருந்து நம்மை காப்பாற்றவே கிறிஸ்து மரித்தார். தேவகோபம் என்கிற சத்தியத்தை தவிர்த்துவிட்டு நாம் நசரேயனாகிய இயேசுவின் போதனைகளையும், பிரசங்கங்களையும் எளிதாக புரிந்துகொள்ளமுடியாது. முழு உலகமும் ஒருநாள் தேவனின் நியாயத்தீர்ப்புக்கு கீழாக வரும் என்பதை கிறிஸ்து தொடர்ச்சியாக மக்களை எச்சரித்துக்கொண்டேயிருந்தார். நியாயத்தீர்ப்பைக்குறித்த அவரது ஒரு சில எச்சரிப்புகளை இங்கு பார்க்கலாம்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.”
மத்தேயு 5:22. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு 12:36. “யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.”
மத்தேயு 12:41.
கிறிஸ்துவின் இறையியல் நெருக்கடியான இறையியலாக இருந்தது. நெருக்கடி என்ற வார்த்தைக்கான கிரேக்க பதம் “நியாயத்தீர்ப்பு.” இயேசு பிரசங்கித்த நெருக்கடியானது, வரவிருக்கும் நியாயத்தீர்ப்பையும், அந்நாளில் தேவன் தனது கோபத்தை இரட்சிக்கப்படாத, தேவபக்தியற்ற, மனந்திரும்பாத அனைவர் மீதும் ஊற்றப்போகிறார் என்பதாகவே இருந்தது. கிறிஸ்துவின் பரிகாரபலியினால் மறைக்கப்படுவதே ஊற்றப்படபோகும் தேவ கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரே நம்பிக்கையாகும்.
ஆகவே, கிறிஸ்துவின் பலியினால் நாம் மறைக்கப்படவில்லையென்றால், நமக்கு எதிராக பற்றியெறியப்போகும் தேவ கோபத்தை நிவிர்த்தியாக்கியதே கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மேன்மையான வெற்றியாகும். எனவே, கிறிஸ்து தேவ கோபத்தை நிவிர்த்தியாக்கினார் அல்லது தணித்தார் என்ற சத்தியத்திற்கு எதிராக யாரேனும் ஒருவர் வாதிடுகிறார் என்றால் மிகவும் கவனமாக இருங்கள் காரணம் அங்கு சுவிசேஷம் தாக்கப்படுகிறது என்று அர்த்தம். கிறிஸ்துவின் மரணத்தினால் காப்பாற்றப்பட்ட மக்களாக எந்த மனிதனும் அடையக்கூடிய மிகப்பெரிய ஆபத்திலிருந்து நாம் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் இரட்சிப்பின் சாராம்சமாகும்.