பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி என்றால் என்ன?
05-09-2024இயேசு கிறிஸ்து: மெய்யான தேவ ஆட்டுக்குட்டி
தேவ ஆட்டுக்குட்டி என்கிற வார்த்தையின் விளக்கம் மீட்பின் சரித்திரம் முழுவதுமாக கடற்கரை மணலைப்போல பறந்து காணப்படுகிறது. இதை நாம் நன்றாய் அறிந்து கொள்ள, ஆதியாகமம் 22 ஆம் அதிகாரத்தில், தேவன் ஆபிரகாமை அழைத்து, அவனிடத்தில், நீ மோரியா என்னும் மலைக்கு போய் அங்கே உன் குமாரனாகிய ஈசாக்கை தகனபலியாக பலியிடு என்று சொல்லுகிற பகுதியை சிந்திப்பதின் மூலமாக அறிந்து கொள்ளலாம். இங்கே ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவர் சொல்லிய வண்ணமாகவே செய்து, பலிபீடத்தை உண்டாக்கி, ஈசாக்கை பலிபீடத்தின் மேல் கட்டி, கத்தியை எடுத்து அவனை வெட்டும்படிக்கு தன் கையை நீட்டினான். அந்த கடைசி தருணத்தில் தேவன் ஆபிரகாமை தடுத்து, அவனை நோக்கி, “ஆபிரகாமே பிள்ளையாண்டான் மேல் உன் கையை போடாதே அவனுக்கு ஒன்றும் செய்யாதே, உன் ஏகசுதனும், ஒரே நேசத்துக்குரிய குமாரன் என்றும் பாராமல் அவனை எனக்காக ஒப்புக்கொடுத்ததினால் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்று சொன்னார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது அவனுக்கு பின்னாக புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவை கண்டான். இங்கே ஆபிரகாமுடைய குமாரனுக்கு பதிலாக பலிசெலுத்தும்படி தேவன் ஒரு ஆட்டை கொடுக்கிறார். ஈசாக்குக்கு பதிலாக அந்த ஆட்டை ஆபிரகாம் பரிகாரபலியாக செலுத்தினான் என்று தெளிவாக ஆதியாகமம் 22 ஆம் அதிகாரம் எந்த இடத்திலும் நேரடியாக கூறவில்லை. இருந்த போதிலும் இது ஒரு பதிலாள் மரணமாக, பலியாக இயேசு கிறிஸ்துவினுடைய பரிகாரபலியை அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. தேவன் நம்முடைய பாவத்திற்கான தேவகோபத்தை நம் மீது ஊற்றுவதற்கு பதிலாக தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீது ஊற்றினதினால், இயேசு கிறிஸ்து நம்முடைய பதிலாளாக இருக்கிறார். தேவன் தாமாகவே முன்வந்து ஒரு ஆட்டை பதிலாக கொடுத்து, அவரே அதை அங்கீகரிக்கிறவராகவும் இருக்கிறார்.
“நம்முடைய பாவங்களுக்காக நம்மீது செலுத்தப்பட வேண்டிய தேவ கோபத்தை தேவன் குமாரனாகிய இயேசுவின் மீது காண்பித்தார்”.
இதைப் போலவே பஸ்கா பண்டிகையிலும் தேவ ஆட்டுக்குட்டி என்கிற பதம் முன்னடையாளமாக காண்பிக்கப்பட்டுள்ளது. தேவன் எகிப்தியர்களுடைய எல்லா தலைச்சன் பிள்ளைகளையும், பார்வோனுடைய குமாரன் முதலாய் சங்கரிக்கப்படும்படியாக, தன்னுடைய கடைசி வாதையை எகிப்தியர்கள் மேல் செலுத்துவதற்கு முன்பாக தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, நீங்கள் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு, அதை அடித்து, அதனுடைய இரத்தத்தை உங்களுடைய வாசல்களின் நிலை கால்களில் தெளிக்ககடவீர்கள் என்று அறிவுறுத்துகிறார். எந்த வாசல்களின் நிலைகால்களில் ரத்தம் பூசப்பட்டிருக்கிறதோ அதை நான் சங்கரிக்காமல் கடந்துபோவேன் என்றும் தேவன் வாக்கு பண்ணினார்( யாத்.12:3-13). இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய கோபத்தினால் அழிக்கப்படாதபடிக்கு எந்த ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களை காப்பாற்றினதோ, அதேபோல் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் நம்முடைய பாவங்களுக்கான தேவ கோபத்திலிருந்து நம்மை மீட்கிறதாய் இருக்கிறது.
ஆதியாகமம் 22 , யாத்திராகமம் 12 ஆகிய இந்தப் பகுதிகளிலும், முழு பழைய ஏற்பாட்டிலும் தேவ ஆட்டுக்குட்டியை பற்றின ஒப்புமைகள் சொல்லப்பட்டுள்ளன. எனவே புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய யோவான் பயன்படுத்தின தேவ ஆட்டுக்குட்டி என்கிற வார்த்தையை அவன் சொந்தமாக உருவாக்கியது போல எண்ணுவது முட்டாள்தனமானது. பழைய ஏற்பாட்டை கற்றறிந்த யோவான்ஸ்நானகனுடைய வார்த்தைகள் மூலமாகவும் இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே யூதர்கள் அறிந்திருந்த வேத வசனத்தின் மூலமாகவும் இது மெய்ப்படுகிறது.
இதற்கு மாறாக யோவான் சுவிசேஷம் ஒன்றாம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு, தேவ ஆட்டுக்குட்டி, தேவகுமாரன், மேசியா, மனுஷகுமாரன் என்று பல பெயர்களால் அழைக்கிறார். யோவான் ஸ்நானகனுக்கோ, அந்திரேயாவுக்கோ, நாத்தான்வேல் அல்லது மற்ற பல சீஷர்களுக்கோ இதேபோன்று பரந்த சிந்தனை இருந்ததாக நான் நம்பவில்லை. யோவான்ஸ்நானகன் இயேசுவை கண்டு, “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைக்கிறார். பிற்பாடு யோவான்ஸ்நானகன் சிறையில் இருக்கும்பொழுது தம்முடைய சீஷர்களை இயேசுவினிடத்தில் அனுப்பி “வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வர காத்திருக்க வேண்டுமா” (லூக்கா.7:20) என்று கேட்க சொல்லுகிறார். இந்தக் கேள்வி, கிறிஸ்துவை குறித்து, யோவான்ஸ்நானகன் கொடுத்த சாட்சிக்கு முரணாக, அவருடைய முழுமையாக அடையாளங்களை இன்னும் அவன் அறியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது. மற்றவர்களைப் போலவே யோவான்ஸ்நானகனும் தேவ ஆட்டுக்குட்டியானவர் ரோம அடிமைத்தனத்திலிருந்து தங்களை மீட்பார் என்று எதிர்பார்த்திருந்தான். ஆனால் இயேசு கிறிஸ்து வெறுமனே பிரசங்கிப்பதை மட்டும் பார்த்து அவன் இங்கே குழப்பம் அடைகிறான்.
தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய ஜனங்களுடைய பாவங்களினிமித்தம் வருகிற தண்டனையிலிருந்து, அவர்களை மீட்டுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்து யோவானுடைய சீஷர்களை பார்த்து, “நீங்கள் போய் கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள் குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள்,செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது, என்று சொல்லுகிறார் (லூக்கா.7:22). இயேசு கிறிஸ்து தன்னுடைய மேசியா அடையாளங்களின் மூலம் யோவான்ஸ்நானகனுடைய சந்தேகத்தை தீர்க்கிகிறார்.
மேசியாவுக்குரிய அடையாளங்களாக ஏசாயா 61 ஆம் அதிகாரம் 1,2 வசனங்களில்
“கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; சிறுமைபட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார், இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு காயம் கட்டுதலையும், சிறை பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்கு கட்டவில்த்தலையும் கூறவும் கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும் பிரசித்தபடுத்தவும்”
என்றுசொல்லப்பட்டதையும் இயேசு இங்கே மேற்கோள் காட்டுகிறார்.
இயேசு இங்கே “யோவான்ஸ்நானகனே, நீ உண்மையாக உன்னுடைய வேதத்தை படித்திருந்தால் அனுப்பப்பட்டவர் நான் தானா என்கிற கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய். இன்னொருவர் வர நீ காத்திருக்க வேண்டியதில்லை. ஆரம்பத்திலே நீ அவரை அறிந்துகொண்டாய், நானே தேவ ஆட்டுக்குட்டியாயிருக்கிறேன்” என்று சொல்லுவதைப் போல் இருக்கிறது.
பேதுருவும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சிசரியா, பிலிப்பு என்னும் திசைகளில் வந்தபோது இதேவிதமான சந்தேகத்திற்கு உள்ளானார். இயேசுகிறிஸ்து தன்னுடைய சீஷர்களை நோக்கி; “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்” என்று கேட்டபோது பேதுரு “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பதில் அளித்தார் (மத்தேயு 16:16). ஆண்டவராகிய இயேசுவும் பேதுரு தன்னை சரியானவிதத்தில் அறிக்கையிட்டபடியால் அவனை பாக்கியவான் என்று பாராட்டுகிறார். ஆனால் அதற்குப் பிற்பாடு இயேசு தான் கட்டுண்டவராய் எருசலேமுக்கு கொண்டு போகப்பட்டு, பாடுகளையும் மரணத்தையும் சுதந்தரிக்கப் போவதை தெரிவித்தபோது பேதுரு உடனே குழப்பமடைந்தவராய் “ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே” (16:22) என்று அவரை கடிந்து கொள்ளுகிறதை பார்க்கிறோம். ஒரு நிமிடத்தில் இயேசுவை மேசியா என்று அறிக்கையிட்டு அடுத்த நொடி தான் இயேசுவை மேசியாவாக சரியான விதத்தில் அறியவில்லை என்பது போல் நடந்து கொள்ளுகிறார்.
ஆம், உண்மையாகவே சில நேரங்களில் நமக்கும் இதேபோன்ற குழப்பங்கள் ஏற்படலாம். எல்லாவற்றையும் நாம் முழுமையாக ஆராய்ந்து இயேசுவினுடைய சிலுவையையும், உயிர்த்தெழுதலையும், பரமேறுதலையும், அவருடைய ஆவியானவர் பெந்தகோஸ்தே நாளில் ஊற்றப்படுவதையும், மனதில் வைத்து தேவன் தம்முடைய தூதனைக்கொண்டு சொல்லிய வார்த்தையின்படியே “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியின்” மூலமாக நாம் எல்லாவித ஆழமான, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.