பாவநிவிர்த்தி மற்றும் கிருபாதாரபலி என்றால் என்ன?
05-09-2024உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024கிறிஸ்தவ வாழ்வில் ஜெபத்திற்கான இடம்
கிறிஸ்தவ வாழ்க்கையின் நோக்கம் என்ன? கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதினால் பிறக்கும் தெய்வபக்தியே. கிறிஸ்தவ அனுபவத்தின் ஐசுவரியங்களை கீழ்ப்படிதல் திறந்துவிடுகிறது. ஜெபமே கீழ்ப்படிதலை தூண்டி, வளர்த்து, கீழ்ப்படிதலை நாடுவதற்கான இருதயத்தை சரியான மனதின் நிலையில் வைக்கிறது.
நிச்சயமாக அறிவும் இன்றியமையாததுதான், ஏனென்றால் அறிவு இல்லாமல் தேவன் எதை எதிர்பார்க்கிறார் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. எனினும், நாம் ஜெபத்தில் தேவனோடு ஐக்கியப்படாதவரை அறிவும் சத்தியமும் பலனற்றதாகவே இருக்கும். பரிசுத்த ஆவியானவர் தம்மால் அருளப்பட்ட வேதத்தின் மூலமாய் நமக்கு கற்பித்து நாம் புரிந்துகொள்ளும்படி செய்கிறார். வேதத்தை அவர் நமக்கு போதித்து அதன் அடிப்படையில் ஜெபத்தில் பிதாவோடு பேசுவதற்கு நமக்கு உதவிச்செய்கிறார்.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் ஜெபம் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. முதலாவதாக, ஜெபம் என்பது இரட்சிப்பிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. சில நபர்கள் கேட்க திறனற்ற காது கேளாத நபர்களாக இருந்தாலும் அவர்களால் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளமுடியும். சில நபர்கள் பார்க்கமுடியாத கண்பார்வையற்ற நபர்களாக இருந்தாலும் அவர்களாலும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக தேவன் அருளும் இரட்சிப்பின் சுவிசேஷச்செய்தியின் அறிவை எப்படியாவது பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் , ஒரு பாவியான மனிதன் இரட்சிப்பிற்காக தாழ்மையோடு தேவனிடம் ஜெபிக்க வேண்டும். துன்மார்க்கரின் ஜெபங்களில், அவனது இரட்சிப்பிற்கான ஜெபத்தை மட்டுமே தான் கேட்பேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார்.
பரலோகத்தில் இருப்பவர்களுக்கு பொதுவானது என்ன? ஒரு சில காரியங்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் மரணத்தை பற்றிய விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். தேவனை ஆராதிக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் இரட்சிப்பிற்காக ஜெபித்திருக்கிறார்கள். ஜெபம் இல்லாமல் இருப்பது, பிதாவையும், கிறிஸ்துவையும், பரிசுத்த ஆவியானவரையும், பரலோக ராஜ்யத்தின் நம்பிக்கையும் இல்லாமல் இருப்பதற்கு சமம்.
இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவன் என்பதற்கான உறுதியான அடையாளங்களில் ஒன்றுதான் ஜெபவாழ்க்கை. ஒருவன் கிறிஸ்தவனாக இல்லாமலேயே ஜெபிக்க முடியும், ஆனால் ஜெபிக்காமல் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது.
ரோமர் 8:15 நமக்கு கூறுகிறது, நம்மை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றின புத்திரசுவிகாரம், நமது வாயினால் பிதாவை “அப்பா! பிதாவே.” என்று கூப்பிடச்செய்கிறது. நமது ஜீவனுக்கு சுவாசம் எப்படியோ அப்படியே ஒரு கிறிஸ்தவனுக்கு ஜெபமும் இருக்கிறது. இருப்பினும், ஜெபத்தைப்போல வேறெந்த கிறிஸ்தவனின் கடமையும் நிராகரிக்கப்படுவதில்லை.
தவறான நோக்கத்தோடு தனிப்பட்ட ஜெபத்தில் ஜெபிப்பது மிகவும் கடினமானது. ஒருவேளை ஒருவன் மற்ற கள்ள தீர்க்கதரிசிகளை போல தவறான நோக்கத்தோடு பிரசங்கிக்கலாம், ஒருவன் தவறான நோக்கத்தோடு கிறிஸ்தவ காரியங்களில் ஈடுபடலாம். கிறிஸ்துவ சமுதாயத்திற்கு வெளியே அநேக காரியங்கள் தவறான நோக்கத்தோடு செய்யப்படலாம். ஆனால் யாரேனும் ஒருவர் தவறான நோக்கத்தோடு தேவனோடு ஐக்கியம் கொள்ளலாம் என்பது கூடாதகாரியம். மத்தேயு 7 ல் நமக்கு சொல்வதுபோல் “கடைசி நாளில்” அநேகர் நியாயத்தீர்ப்பில் நின்று கிறிஸ்துவிடம் தாங்கள் செய்த பெரிய, உன்னதமான கிரியைகளை சொல்வார்கள். ஆனால் கிறிஸ்துவினுடைய பதிலோ “நான் உங்களை அறியவில்லை” என்பதாகவே இருக்கும்.
எனவே நாம் ஜெபிப்பதற்கு அழைக்கப்பட்டும், கட்டளையிடப்பட்டும் இருக்கிறோம். ஜெபம் நமது உரிமையாகவும் கடமையாகவும் இருக்கிறது. எந்த கடமையும் கடினமான உழைப்பாக மாறமுடியும். அவ்விதமாகவே மற்ற கிறிஸ்தவனின் வளர்ச்சியின சாதனங்களை போலவே ஜெபத்திற்கும் அதிக உழைப்பு தேவைப்படுகிறது. சொல்லப்போனால், ஜெபம் நமது சுபாவத்திற்கு மாறானது. நாம் தேவனோடு ஐக்கியம் கொள்வதற்கு படைக்கப்படிருந்தாலும், நமது வீழ்ச்சியின் பாதிப்பு, ஜெபம் போன்ற மற்ற முக்கிய காரியங்களுக்கு நம்மில் அநேகரை சோம்பேறிகளாகவும், அந்நியர்களாகவும் வைத்திருக்கிறது. தேவனோடு உறவாடுவதற்கான நமது விருப்பங்களை மறுபிறப்பு உண்டாக்குகிறது, ஆனால் பாவம் ஆவியானவரை தடைசெய்கிறது.
கிறிஸ்து அதிகாலையிலும், பகல் முழுவதும் சிலநேரங்களில் இராமுழுவதும் ஜெபித்தார்.
நமது வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் காட்டிலும் , தேவன் நமது இருதயங்களை அறிந்து, பேசப்படாத விண்ணப்பங்களையும் அவர் கேட்கிறார் என்கிற உண்மையின் மூலம் நாம் ஆறுதல் அடையமுடியும். எப்பொழுதெல்லாம் நம்மால் நமது ஆத்துமாவின் ஆழமான உணர்வுகளையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்தமுடியவில்லையோ அல்லது நாம் எதற்காக, எப்படி ஜெபிக்கவேண்டும் என்ற தெளிவு நம்மிடம் இல்லையோ அப்பொழுதெல்லாம் பரிசுத்த ஆவியானவரே நமக்காக வேண்டுதல் செய்கிறார்.
ரோமர் 8:26-27 கூறுகிறது, “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.”
சில சூழ்நிலையில் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் அல்லது எதற்காக ஜெபிக்கவேண்டும் என்பதை நாம் அறியாத பொழுது பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். நாம் தவறாக ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவர் அந்த ஜெபத்தை பிதாவிடம் கொண்டு செல்வதற்கு முன் நமது ஜெபத்தில் உள்ள பிழைகளை சரிசெய்கிறார் என்று நம்புவதற்கான காரணம் என்னவெனில், வசனம் 27 சொல்கிறது, “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின் படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” என்பதே.
உண்மையில், பரிசுத்தமாகுதலுக்கான இரகசியம் ஏதேனும் இருக்குமென்றால், ஜெபமே அந்த இரகசியம். திருச்சபை வரலாற்றில் காணப்பட்ட பரிசுத்தவான்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்தால், அவர்கள் ஜெபத்தின் மாமனிதர்களாக இருந்ததை பார்க்கமுடியும். ஒருமுறை ஜான் வெஸ்லி இவ்வாறு குறிப்பிட்டார், “குறைந்தபட்சம் ஒரு நாளில் நான்கு மணிநேரம் ஜெபத்தில் செலவிடாத ஊழியக்காரர்களை பற்றி நான் அதிகம் நினைத்துப் பார்த்ததில்லை.” லூத்தர், வேலைப்பளு அதிகம் உள்ள நாளில் ஒருமணிநேரமும் மற்ற நாட்களில் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜெபித்தார்.
ஜெபத்தை நிராகரிப்பது, கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சியின்மைக்கு முக்கிய காரணமாகும். லூக்கா 22:39-62 ல் உள்ள பேதுருவின் மாதிரியை பாருங்கள். இயேசு தனது வழக்கத்தின்படியே ஜெபிப்பதற்கு ஒலிவமலைக்கு சென்று அவர் தமது சீஷர்களை பார்த்து “ நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்” என்ற சொன்னார். ஆனால் சீஷர்களோ ஜெபிப்பதற்கு பதிலாக தூங்கினார்கள். பேதுரு செய்த அடுத்த காரியம் ரோம அரசாங்கத்தின் காவலாளர்களை பட்டயத்தினால் மேற்கொள்ள முயற்ச்சித்தான். பின்பு அவன் கிறிஸ்துவை மறுதலித்தான். பேதுரு, ஜெபிக்காததின் விளைவாக சோதனையில் விழ நேர்ந்தது. பேதுருவின் வாழ்க்கையில் எதுவோ அதுவே நமது வாழ்க்கையிலும். நாம் சமுதாயத்தில் வெளிப்படையாய் விழுவதற்கு முன்னே தனிப்பட்ட வாழ்க்கையில் விழுந்துவிடுகிறோம்.
ஜெபிப்பதற்கான சரியான அல்லது தவறான நேரம் என்பது உண்டா? ஏசாயா 50:4 சொல்கிறது, அனுதினமும் காலை நேரமே தேவன் மீதான புதிய நம்பிக்கையோடு ஜெபிப்பதற்கு தேவன் நமக்கு விருப்பத்தை கொடுக்கிற நேரம். ஆனால், நாளின் எல்லா நேரங்களையும் ஜெபவேளையாக கூறும் மற்ற வேதப்பகுதிகளும் உள்ளன. ஒரு நாளின் ஒரு வேளையைக்காட்டிலும் மற்றொரு வேளை சிறப்பானதாக ஏற்ப்படுத்தப்படவில்லை. கிறிஸ்து காலையிலும், பகல் முழுதும், சிலநேரங்களில் இராமுழுவதும் ஜெபித்தார். கிறிஸ்து ஜெபத்திற்கென்று ஒரு நேரத்தை அவர் ஒதுக்கினார் என்பதை வேதம் நமக்கு கூறுகிறது. இருப்பினும், பிதாவோடு கிறிஸ்துவுக்கு இருந்த உறவை சிந்திக்கையில், அவர்களுக்கிடையே உள்ள ஐக்கியம் ஒருபோதும் தடைபடவில்லை என்பதை அறிவோம்.
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று 1 தெசலோனிக்கேயர் 5:17 நமக்கு கட்டளையிடுகிறது. நாம் நமது பிதாவோடு எப்பொழுதும் தொடர்ச்சியான உறவில் இருக்கவேண்டும் என்பதையே இவ்வசனம் கூறுகிறது.