கிறிஸ்தவ வாழ்வில் ஜெபத்திற்கான இடம்
07-09-2024
உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024
கிறிஸ்தவ வாழ்வில் ஜெபத்திற்கான இடம்
07-09-2024
உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?
12-09-2024

உண்மையான மனந்திரும்புதல் எப்படி இருக்க வேண்டும்?

xr:d:DAFXk0WDSFg:25,j:45162075609,t:23011320

சங்கீதம் 51- தாவீது தான் செய்த பாவத்தினிமித்தம் நாத்தான் தீர்க்கதரிசியால் கடிந்து கொள்ளப்பட்ட போது எழுதப்பட்ட துக்கம் நிறைந்த சங்கீதம் தான் சங்கீதம் 51. இதில் நாத்தான், தாவீதீனிடத்தில் உரியாவை பட்டயத்தால் மடிவித்து அவனுடைய மனைவியை நீ உனக்கு சொந்தமாக எடுத்துக் கொண்டபடியால் துணிகரமாக தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தீர் என்று எச்சரிக்கிறார்

இதில் தாவீது தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, மிகுந்த மன  வேதனையோடு பேசுகிறதை பார்க்கலாம் அதே சமயத்தில் மனந்திரும்புதல் பரிசுத்தாவியாகிய கடவுளால் மட்டுமே ஒரு மனிதனுடைய இருதயத்தில் நிகழ்கிறது என்பதையும் நாம் நன்கு அறிய வேண்டும். இங்கே தாவீது பரிசுத்த ஆவியானவருடைய செயல்பாட்டினால்  மனந்திரும்புகிறதை நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல அவர் இந்த ஜெபத்தையும் பரிசுத்த ஆவியானவருடைய தூண்டுதலுக்கு உட்பட்டு எழுதினார் என்றும் அறிய வேண்டும். இந்த சங்கீதம் 51 மூலமாக  பரிசுத்த ஆவியாகிய கடவுள் எப்படி மனந்திரும்புதலை  நம்முடைய இருதயத்தில் நிகழ்த்துகிறார் என்கிற படிப்பினையும் அடங்கியுள்ளது. இதை மனதில் வைத்து இந்த பகுதியை நாம் சிந்திப்போம்.

இந்த 51 சங்கீதத்தினுடைய முதல் வசனம் இவ்விதமாக ஆரம்பிக்கிறது “தேவனே உமது கிருபையின் படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும்.” மனம் திரும்புதலுக்கான அடிப்படை காரியத்தை இங்கே நாம் பார்க்கிறோம். ஒரு மனிதன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து,  மனந்திரும்பும் பொழுது அவன் தேவனுடைய கிருபைக்கு தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கிறான். உண்மையான மனந்திரும்புதலின் முதல் கனி என்னவென்றால், தேவனுடைய கிருபை தனக்கு எவ்வளவாய் தேவை என்பதை உணருவதாகும். தாவீது இங்கே தேவனுடைய நீதியை கேட்கவில்லை. ஏனென்றால்  தேவன் தன்னுடைய நீதியை கொண்டு அவனிடத்தில் செயல்பட்டால் அவன் முற்றிலும் அழிக்கப்படுவான் என்பதுஅவனுக்கு நன்றாக தெரியும். அதனாலே  இங்கே தாவீது முதலாவதாக தேவனுடைய கிருபைக்காக  கெஞ்சி மன்றாடுவதை பார்க்கிறோம்.

இவ்விதமாக தாவீது தன்னுடைய மீறுதல்களை தேவன் எடுத்துப் போட வேண்டும் என்று கெஞ்சும் போது, தேவனிடத்தில் தன்னுடைய ஆத்துமாவில் இருக்கும் பாவ அழுக்கை நீக்கும்படியாகவும், தன்னுடைய அநீதியை மூடும்படியாகவும், மட்டுமல்லாது,  அவனுடைய வாழ்க்கையில் நிரந்தர பங்கு வகிக்கும் பாவத்திலிருந்து அவனை கழுவும்படியாகவும் இங்கே மன்றாடுகிறான். இதினாலேயே இரண்டாம் வசனத்தில்  “என் அக்கிரமம் நீங்க என்னை கழுவி என் பாவமற என்னை சுத்திகரியும்” என்று சொல்லுகிறான்,

இங்கே மன்னிக்கப்படுதல் மற்றும் சுத்திகரிக்கப்படுதல் இரண்டும் ஒன்றாக தெரிந்தாலும் அவைகள் வெவ்வேறானவைகளே. புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாக எழுதுகிறார் – “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. நாம் ஆத்துமாவில் மனந்திரும்பும்போது தேவனுடைய சமூகத்தில் சென்று நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பை கேட்பது மட்டுமல்லாமல் அந்த பாவத்தை திரும்பவும் செய்யாதபடிக்கு தேவனுடைய பெலனையும் கேட்க வேண்டும். தாவீது இந்த சங்கீதத்தில் ஜெபித்தது போல, நாமும் தீமை  செய்வதற்கு எளிதில் விரைந்தோடுவதிலிருந்து  விடும்படுபடி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

தாவீது தொடர்ச்சியாக 3 வது வசனத்தில் “என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன் என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது” என்று சொல்லுகிறான். அவன் இங்கே தன்னுடைய குற்ற உணர்ச்சியை வெறுமனே, மேலோட்டமாக வெளிப்படுத்தாமல் ஆழ்ந்த  துக்கத்துடனே “என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லுகிறான். தன் பாவத்தை இங்கே குறைத்து மதிப்பிடவோ அல்லது நியாயப்படுத்தவோ அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் நாம் நம்முடைய வாழ்கையில் இதற்கு முரண்பாடாக,  எப்பொழுதும் மிகுந்த ஞானமுள்ளவர்களை போல நம்முடைய பாவ செயல்களுக்கு  வெகு சீக்கிரத்தில் சாக்குப் போக்குகளை சொல்லி, பல காரணங்களை அடுக்குகிறவர்களாக இருக்கிறோம். ஆனால் இந்த பகுதியில், தேவ ஆவியின் வல்லமையினால், தாவீது தேவனுக்கு முன்பாக உண்மையாக  தன்னுடைய பாவத்தை ஒத்துக் கொள்ளுகிறதை பார்க்கிறோம். அவன் தன்னுடைய பாவம் எப்பொழுதும் தன்னுடனே இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்டான். ஏனெனில் அவனால் அதிலிருந்து வெளிவர முடியாதபடியினால் அவன் ஆழ்ந்த துக்கமடைகிறான்.

அடுத்ததாக, 4 வது வசனத்தில் தாவீது “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன்” என்று கதறுகிறான். ஒருவகையில் தாவீது இங்கு பாவத்தை மிகைப்படுத்துவது போல் தெரியலாம். அவன் மிகவும் கொடூரமான  பாவத்தை உரியாவுக்கு விரோதமாகவும், அவனுடைய குடும்பம், நண்பர்கள், அவனுடைய மனைவி பத்சேபாள் மற்றும் முழு தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் இந்த பாவத்தை செய்தான். ஆனால் தாவீது இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பாவம் முதலாவது தேவனுக்கு விரோதமாக செய்யப்பட்டது என்பதை நன்கு அறிந்திருந்தான், ஏனென்றால் தேவன் ஒருவரே  இந்த முழு உலகத்திலும் பூரண பரிசுத்தராக இருக்கிறார். தேவன் ஒருவரே வானத்தில் உள்ளவைகளையும்,  பூமியில்  உள்ளவைகளையும் நியாயந்தீர்க்கிறவராய் இருக்கிறபடியால், எல்லா பாவங்களும் அவருடைய கட்டளைகளை மீறி, அவருடைய பரிசுத்தத்திற்கு விரோதமாகவே செய்யப்படுகிறது. தாவீது இதை நன்கு அறிந்திருந்தபடியினால்  இவ்விதமாக பாவத்தை அறிக்கை செய்ய முடிந்தது. தாவீது தான் மனிதர்களுக்கு விரோதமாக பாவம் செய்தேன் என்று கூறி அவன் தன்னுடைய பாவத்தை மட்டுப்படுத்தவில்லை, மாறாக இது முழுக்க பரிசுத்த தேவனுக்கு விரோதமாகவே செய்யப்பட்டது  என்பதை நன்கு அறிந்திருந்தான்.

 நான்காம் வசனத்தின் பின்பகுதியில் தாவீது, “நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும் நீர் நியாயந்தீர்க்கும் போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும்” என்று கூறுகிறதை பார்க்கிறோம். இந்த வார்த்தையை கூர்ந்து கவனிக்க அநேகர் தவறிவிடுகிறார்கள். ஆழமான, உண்மையான மனந்திரும்புதலுக்கான அடையாளமாக வேத வசனங்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கிறது. தாவீது இங்கே, “தேவனே என்னை நியாயம் தீர்ப்பதற்கு உமக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்றும் உம்முடைய கோபத்துக்கும் தண்டனைக்கும் தவிர வேறு எதற்கும்  நான் தகுதியானவன் அல்ல” என்று தெரிவிக்கிறான். தாவீது இங்கே தேவன் குற்றமற்றவர்  என்றும் தன்னை நியாயந்தீர்ப்பதற்கு அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதையும் அறிக்கையிடுகிறான். பாவத்தில் தேவனோடு எந்தவித பேரம் பேசுவதற்கோ, சமரசம் செய்வதற்கோ ஒரு இடமும் இல்லை.

5,6 வது வசனங்களில்  தாவீது “இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன் என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறீர் அந்தகரணத்தின் ஞானத்தை எனக்கு தெரியப்படுத்துவீர்” என்று கூறுகிறார். பாவத்தை குறித்த உண்மையை மாத்திரம் தேவன் நம்மிடத்தில் இருந்து எதிர்பார்க்காமல் அது நம்முடைய இருதயத்தில் எவ்வளவு ஆழமாக படிந்துள்ளது என்றறிய தேவன் விரும்புகிறார். தாவீது தான் தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிய தவறியதையும், அதை கைக் கொள்ளாமல் போனதையும், மேலோட்டமாக மட்டுமே பார்க்காமல்

அது தன்னுடைய முழுமையான ஆள்த்துவத்திலிருந்து  காணப்பட்டதாகவும் இங்கே தெரிவிக்கிறார்.

மறுபடியுமாக தாவீது 7 வசனத்தில் பரிசுத்தத்திற்காக கதறுவதை, “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும் அப்பொழுது நான் சுத்தமாவேன், நீர் என்னை கழுவியருளும் அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” என்று கூறுகிறார். இதில் தாவீது தன்னுடைய முழுமையான உதவியற்ற நிலைமையை உணர்ந்து கதறுகிறார். தாவீது இங்கே, ஆண்டவரே சற்று பொறுமையாயிரும் நான் இந்த ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்பாக என் கைகளை கழுவி என்னை சுத்தப்படுத்திவிட்டு வருகிறேன் என்று கூறவில்லை. தாவீது தன்னால் தன்னுடைய பாவக் கரைகளில் இருந்தும் குற்ற உணர்ச்சியில் இருந்தும் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட்ட முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தான். அதை மறைப்பதற்கு  அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. தாவீதோடு கூட நாமும் இங்கே இணைந்து, நம்முடைய பாவத்தை சுத்திகரிப்பதற்கு  நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர வேண்டும்.

தாவீதுக்கு பின்பு ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக இதே காரியத்தை தேவன்  வாக்குதத்தம் பண்ணுவதை பார்க்கலாம்.

“வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையை போல் வெண்மையாகும் அவைகள் இரத்தாம்பர சிவப்பாய் இருந்தாலும் பஞ்சைப்போல் ஆகும்” ஏசாயா 1:18. ஆழமான பாவ உளையில் இருக்கும் நம்மை தேவன் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்தவே விரும்புகிறார்.

பிறகு தாவீது  8 வது வசனத்தில் “நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும்  கேட்கும்படி செய்யும்” என்று உரைக்கிறான். மனந்திரும்புதல் வேதனையுள்ள ஒன்று. யார் தன்னுடைய பாவங்களை அறிக்கையிடுவதிலும் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்வதிலும் சந்தோஷப்பட கூடும்?. பாவகுற்ற உணர்ச்சியே நமது சந்தோஷத்தை அழிக்கக்கூடிய வல்லமையான ஒன்று. இந்த சூழ்நிலையில் தாவீது  சந்தோசமாக இல்லை, ஆதலால் தன்னுடைய ஆத்துமாவை தேவனிடத்தில் திருப்பி தனக்கு உண்மையான மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் படியாக தேவனிடத்தில் கெஞ்சுகிறான். அடுத்ததாக வரும் வரிகளில் இது மெய்ப்படும்படி, “நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்”. என்று கூறுகிறார்.  இது நம்மை வியப்பில் ஆழ்த்தவில்லையா? தேவனே நீரே என் எலும்புகளை நொறுக்கினீர் என்றும், சாத்தானோ அல்லது நாத்தான் தீர்க்கதரிசியோ அல்ல நீரே என் பாவங்களை எனக்கு நினைப்பூட்டி என் எலும்புகளை நொறுக்கினீர் என்றும் ஜெபிக்கிறான். இதோ பரிசுத்த தேவனே உமக்கு முன்பாக உடைந்துபோன மனிதனாக நான் நிற்கிறேன், நீர் மட்டுமே என்னை சுத்தமாக்கி, எனக்குள்ளாக உண்மையான மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் தந்தால் மாத்திரமே  நான் சமாதானத்தோடு போக முடியும் என்கிறான்.

தொடர்ச்சியாக தாவீது 9,10 ஆம் வசனங்களில் “என் பாவங்களை பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து என் அக்கிரமங்களைஎ ல்லாம் நீக்கியருளும், தேவனே சுத்த இருதயத்தை எண்ணிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” என்று ஜெபிக்கிறான். சுத்த இருதயத்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு வழி தெய்வீக மறுரூபப்படுத்துதல் மட்டுமே. என்னை நானே மறுரூபப்படுத்த இயலாது. தேவன் ஒருவரால் மட்டுமே சுத்த இருதயத்தை தர முடியும். பாவத்தை ஆழமாய் நம்மிலிருந்து அகற்றுவதின்  மூலமாக மாத்திரமே தேவன் சுத்த இருதயத்தை நம்மில் சிருஷ்டிக்கிறார்.

அடுத்ததாக தாவீது 11 ம் வசனத்தில்  “உமதுசமூகத்தை விட்டு என்னை தள்ளாமலும்  பரிசுத்த ஆவியை என்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும்”என்கிறான். ஒரு பாவியுடைய வாழ்க்கையிலேயே மிகவும் மோசமானது இதுவே என்று தாவீது அறிந்திருந்தான். தாவீதுக்கு நன்றாக தெரியும் தன்னுடைய குற்றத்தை தான் உணராவிட்டால் தேவன் தம்முடைய சமூகத்தை விட்டு தன்னை முற்றிலும் புறம்பாக்கிவிடுவார் என்று. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், நீங்கள் குமாரனை விட்டுவிட்டால் தேவனும் உங்களை என்றென்றும் கைவிட்டு விடுவார் என்று எச்சரிக்கிறார். ஆகையால் மனந்திரும்புதலுக்கான ஜெபமே ஒரு விசுவாசியின் உண்மையான அடைக்கலமமாயிருக்கிறது.  தான் பாவத்தில் இருக்கிறேன் என்று உணருகிற உணர்வு ஒரு தெய்வீக மறுமொழி. இந்தவிதமான மறுமொழி மனந்திரும்பிய ஒவ்வொருவரிடத்திலும்  நிச்சயமாக இருக்க அடையளாமாகும்.

தொடர்ச்சியாக தாவீது, 12,13 ஆம் வசனத்தில் “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்து உற்சாகமான ஆவி என்னை தாங்கும்படி செய்யும். அப்பொழுது நான் பாதகருக்கு உமது வழியை உபதேசிப்பேன் பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்”. என்று கூறுகிறார்.   இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே பொதுவான மக்களுக்கு ஒரு நடுக்கம் ஏற்படுகிறது, ஏனென்றால் அவர்கள் தங்களை தாங்களே மெச்சிக்கொண்டு, சுயநிதீயை தரித்துக்கொண்டு, மற்றவர்களை விட நல்லவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக காட்டிக்கொள்வதால்தான். ஆனால் உண்மையியல் நாம் அப்படி இருக்ககூடாது. நாம் நம்மை மெச்சிக்கொள்வதற்கு நம்மிடம் ஒன்றுமேயில்லை. நாம் மற்றவர்களின் அநீதிகளை சுட்டிகாட்ட முயல்கிற யோக்கியர்கள் அல்ல. “சுவிசேஷப்பணி என்பது ஒரு பிச்சைக்காரன் மற்றொரு  பிச்சைக்காரனை பார்த்து உணவு எங்கே கிடைக்கும் என்று கூறுவதைப்போலத்தான்” என்று ஒரு போதகர் கூறுகிறார். ஒரு விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசமே மன்னிப்பு தான். ஒரு மனிதனை கிறிஸ்துவின் ஊழியக்காரனாக தகுதிபடுத்துவதே அவன் தேவனிடத்திலிருந்து மன்னிப்பை அனுபவித்து அந்த மன்னிப்பை மற்றவர்களுக்கு அறிவிக்க விரும்புவதுதான்.

தாவீது, 15-17 வசனங்களில்  “ஆண்டவரே என் உதடுகளை திறந்தருளும் அப்பொழுது என் வாய் உமது புகழை அறிவிக்கும் பலியை நீர் விரும்புவதில்லை விரும்பினால் செலுத்துவேன்: தகனபலியும் உமக்கு பிரியமானது அல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான். நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணிீயீர்.” என்கிறார்.  தாவீது இறுதியாக, இங்கே மெய்யாக மனந்திரும்பிய இருதயத்தின் எதிர்கால செயல்பாடுகளை பற்றிக் கூறுகிறார். மெய்யாக மனந்திரும்பிய மனிதனின் தன்மையை இங்கு “நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணிீயீர்.” என்கிறார்.  தாவீது தன்னுடைய பாவத்திற்கான பரிகாரத்தை தன்னால் செய்யக்கூடுமானால் அதை செய்திருப்பார். ஆனால் அது முடியாத காரியமாகையால், தாவீது தேவன் கிருபையாய் இரங்கி  தன்னை அங்கீகரிக்காவிட்டால் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை தெளிவாக அறிக்கையிடுகிறான்.

தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று வேதாகமம் வெளிப்படையாக சொல்லுகிறது. இந்தக் கூற்று உண்மை என்று தாவீது அறிந்திருந்தார். தாவீது எவ்வளவாய் இருதயத்தில் நொறுக்கப்பட்டிருந்தாலும் மனந்திரும்புகிற ஒரு பாவியினடத்தில் தேவன் எவ்விதம் இடைபடுகிறார் என்பதை அறிந்திருந்தான்.

தேவன் ஒருபோதும் நொறுங்கொண்ட நறுங்குண்ட இருதயத்தை புறக்கணிப்பவர் அல்ல என்பதையும் அறிந்திருந்தான். இவ்விதமான நொறுங்கொண்ட இருதயத்தைதான் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். இதையேதான்ஆண்டவராகிய  இயேசுகிறிஸ்து தமது மலைப்பிரசங்கத்தில்  “துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” மத்.5:4 என்று கூறினார். இந்தப் பகுதி, நமக்கு பிரியமானவர்களை நாம்  இழப்பதால் வரும் துக்கத்தை மட்டுமல்ல, பாவத்திலிருந்து மனந்திரும்பும்போது வரும் துயரத்தையும் எடுத்துரைக்கிறது. நம்முடைய பாவத்தினிமித்தம் நாம் மெய்யாக துயரப்படுவோமானால் நிச்சயமாகவே தேவன் தமது பரிசுத்த ஆவியைக்கொண்டு நம்மை தேற்றுகிறவராய் இருக்கிறார்.

51 ஆம் சங்கீதத்தை கட்டாயம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் மனனம் செய்து வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மெய்யான தேவனுக்கேற்ற மனந்திரும்புதலுக்கு இந்த பகுதி ஒரு சிறந்த உதாரணம். அநேக முறை நானும் என்னுடைய வாழ்கையில், “தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், என் மீறுதல்களை நீக்கியருளும், ஈசோப்பினால் என்னை சுத்திகரியும், என்னை கழுவும், என்னை பரிசுத்தப்படுத்தும் என்கிற ஜெபங்களை ஏறெடுக்கிறேன். அது மட்டுமல்லாது  “இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தாரும், தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன்” என்று கதறுகிறேன். நாம் பாவக்குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்பட்டு, பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி தேவனுடைய சமூகத்தை கிட்டி சேர முடியாமல் தவிக்கும் பொழுது, வேதத்தில் உள்ள இவ்விதமான பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் நம்முடைய இருதயத்திலும் உதடுகளிலும்  இருப்பது பெருத்த ஆசீர்வாதமாய் இருக்கும்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.
ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.