
வேதத்தின் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு வாசிப்பது?
05-06-2025
பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?
12-06-2025முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்துவுக்குள்ளான இரண்டு சகோதரர்களை சந்தித்த போது நடந்த நிகழ்வுகளை நான் நினைவு கூற விரும்புகிறேன். வேலையிலிருந்து ஓய்வு பெறும் ஆண்களுக்கான கூட்டத்தில் பேசுவதற்காக ஒரு நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். மற்றும் அதில் ஒருவர், “நடைமுறை சத்தியங்கள் எங்களுக்கு தேவைப்படுவதால் அதை முதலாவதும், இறையியலை கடைசியாகவும் சொல்லுங்கள்”என்று சொன்னார். இன்றைக்கும் கூட இறையியல் பயனுள்ளதாக இல்லை என்கிற எண்ணமே பெரும்பாலும் அநேகருக்குள்ளாக காணப்படுகிறது. ஆனால் அந்தக் கூட்டம் முடிவடைந்ததும் , அங்கே அழைக்கப்பட்ட அந்த பிரசங்கியார் இறையியல் ரீதியாக பேசினதினால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர் தேவனுடைய வார்த்தையின் கொள்கைகளை மிகத் தெளிவாகவும், நம்பிக்கையுடனும், அதற்கு கீழ்படிந்து வாழும்படியான அழைப்பையும் கொடுத்தார்.
பயனுள்ள இறையியல் என்றால் என்ன?
இறையியல் என்பது கிறிஸ்தவ கொள்கைகளை பற்றிய தீவிர சிந்தனையாகும். கிறிஸ்தவ விசுவாசத்தின் கோட்பாடுகள், பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளை சுருக்கமாகவும், விளக்கப்படுத்தியும் கூறுகின்றன. வேதாகமம் “நல்ல உபதேசங்களை” (தீத்து 2:1) ஊக்குவிக்கிறது, அதாவது ஆரோக்கியமான போதனைகளை முதன்மைபடுத்துகிறது.
முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்பது, வேதாகமம் எடுத்துரைக்கிற ஒரு குறிப்பிட்ட கொள்கையை மற்ற கொள்கைகளுடன் தொடர்பு படுத்தி, அதைப்பற்றி முழு வேதாகமமும் என்ன போதிக்கிறது என்பதை ஆராய்வதாகும். உதாரணமாக, ஒரு பாவி எப்படி நீதிமானாக்கப்படுகிறான் அல்லது தேவனுக்கு முன்பாக அவன் எப்படி நீதிமானாக எண்ணப்படுகிறான்? என்ற கேள்வி எழும்பும்போது அதோடு கூட நீதிமானாக்கப்படுதல் தேவனைப் பற்றியும், கிறிஸ்துவை பற்றியும், நம்மை பற்றியும் எதை வெளிக்காட்டுகிறது என்பதையும் தொடர்புபடுத்தி சிந்திக்கும்படியாய் நம்மை தூண்டுகிறது.
முறைப்படுத்தப்பட்ட இறையியலின் நோக்கமானது, மற்ற அனைத்து கிறிஸ்தவ போதனைகளைப்போல வாதிடுவதற்கு அல்ல. ஆனால் விசுவாசத்தையும் தேவபக்தியையும் வலுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது (1 தீமோத்தேயு 1:4–5).
சீர்திருத்த இறையியலாளர்கள் கூறியது போல், “இறையியல் என்பது கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்கு பிரியமாய் வாழ அழைக்கும் கோட்பாடுகளை உள்ளடக்கியதாகும்”
கிறிஸ்துவால் கடவுளுக்காக வாழும் கோட்பாடு.”அதனால் கண்மூடித்தனமாக மற்ற எல்லா இறையியலும் பயனுள்ளதாக இருக்கும் என்று அர்த்தமல்ல. நான் முதன்முதலில் படித்த முறைப்படுத்தப்பட்ட இறையியலைத் திறந்தபோது, ”இது அருமை! ஆசிரியர் விசுவாசத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கிறார்” என்று நினைத்தேன். ஆனால் அந்த புத்தகத்தில், கிறிஸ்துவின் சரீரம் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைப் பற்றி பேசுவது அபத்தமானது என்று ஆசிரியர் கூறும்போதுதான் அதனுடைய ஆசிரியர் ஒரு அவிசுவாசி என்று அறிந்து கொண்டேன். அந்தப் புத்தகத்தை கீழே போட்டு விட்டேன் என்று நான் சொல்லத் தேவையில்லை.
முறைப்படுத்தப்பட்ட இறையியல், தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாகவும், குறிப்பாக சுவிசேஷ செய்தியாகிய கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்திக்கு (1 கொரிந்தியர் 15:3–4) உண்மையாகவும் இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எனவே, நாம் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். நடைமுறையில் இருக்கிற எவரிடமிருந்தாவது, கிட்டத்தட்ட அவிசுவாசிகளிடமிருந்தும் கூட நாம் கற்றுக்கொள்வதற்கு பல காரியங்கள் இருக்கலாம். ஆனால் நாம் கொள்கைகள் மற்றும் இறையியலைப் படிக்கும்போது, நம்முடைய ஆசிரியர்களை ஞானமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இறையியல் ஏன் பயனுள்ளதாக இருக்கிறது?
முறைப்படுத்தப்பட்ட இறையியல் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் கிருபையில் வளர்வதற்கான ஒரே திறவுகோல் வேத ஞானமுள்ள அறிவு மட்டுமே (2 பேதுரு 1:2; 2 பேதுரு 3:18). நித்திய ஜீவனின் சாராம்சமே தேவனை அறிவதில்தான் அடங்கியிருக்கிறது (யோவான் 17:3). அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவை அறிகிற அறிவை மற்ற எல்லாவற்றிற்கும் மேலான பொக்கிஷமாக கருதினார் (பிலிப்பியர் 3:8). “கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐஸ்வரியத்தை” பிரசங்கிக்க தான் ஊழியக்காரனானேன் என்று பவுல் மெச்சி கொள்ளுகிறதை நாம் பார்க்கலாம் (எபேசியர் 3:8).
பெரும்பாலும் நாம் அனைவரும், என்ன செய்கிறேன் ஏன் செய்கிறேன், என்று யோசிக்காமலேயே வாழ்க்கையை கடந்து செல்கிறோம். முறைப்படுத்தப்பட்ட இறையியல் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்திலிருந்து விடை காண நமக்கு உதவுகிறது. தேவன் யார்? முழு உலகத்தின் மீது அவருடைய நோக்கம் என்ன? நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? தீமை ஏன் இருக்கிறது? அதை நான் எப்படி வெல்வது? எனக்கு உதவி செய்யக்கூடியவர்கள் யார்? வரலாறு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடை காண நமக்கு உதவுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ இறையியல், பிதாவுடைய நித்திய அன்பு, குமாரனுடைய இரட்சிக்கும் கிருபை மற்றும் பரிசுத்த ஆவியானவர் தேவனுடனும் மற்றும் ஒருவருக்கொருவருடனும் தரும் இனிமையான ஐக்கியம் (2 கொரிந்தியர் 13:14) போன்ற திரியேக தேவனை அறிவதற்கான வழியாகவும் இருக்கிறது. தேவனை அறிகிற அறிவு எல்லா மனித ஞானம், வல்லமை மற்றும் செல்வத்தை விட மிக உயர்ந்தது (எரேமியா 9:23–24). தேவன் தம்முடைய வார்த்தையை பயன்படுத்தி,நமக்கு விடுதலையை கொடுத்து, அவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நம்மையும் பரிசுத்தப்படுத்துகிறார் (யோவான் 8:31–32; யோவான் 17:17).
இறையியலை எப்படி பயனுள்ள முறையில் படிப்பது?
இறையியலை பயனுள்ளதாக்கும் பொறுப்பு ஆக்கியோனுக்கு மட்டும் உரித்தாயிராமல் வாசிப்பவர்களும் செய்ய வேண்டிய காரியங்களும் உண்டு.
முறைப்படுத்தப்பட்ட இறையியலை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான சில குறிப்புகளை கீழே பார்க்கலாம்.
1.உங்கள் பெருமையை அல்ல, உங்கள் அன்பை வளர்த்துக்கொள்ள இறையியலைப் படியுங்கள்.
அறிவு நம்மை பெரிதளவில் இறுமாப்படையச் செய்கிறது, ஆனால் அன்பு நமது நோக்கமாய் இருக்குமானால் அது மற்றவர்களுடைய பக்தி விருத்திக்கு வழிவகுக்கும் (1 கொரிந்தியர் 8:1).
2. வேதாகமத்தை திறந்து வைத்து இறையியலைப் படியுங்கள்.
வேதாகமத்தில் அதோடு தொடர்புடைய பகுதிகளை குறிப்பெடுத்து வைத்து அதனுடைய பின்னணியோடு கூட அதை படிக்க முயலுங்கள். தாங்கள் கேட்டதை சரிபார்க்க “வேதவசனங்களை தினமும் ஆராய்ந்த” பெரேயா பட்டணத்தாரைப் போல இருங்கள் (அப்போஸ்தலர் 17:11).
3.ஜெபத்துடன் இறையியலைப் படியுங்கள்.
தேவனைப் பற்றி மட்டும் படிக்காதீர்கள்; தேவனுடைய பிரசன்னத்தில் படியுங்கள். நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே தேவனை தேடுங்கள். அவருடைய மகிமை மற்றும் கிருபையால் உங்கள் ஆத்துமாவை நிரப்புங்கள் (சங்கீதம் 63:5–8). “உங்கள் முழு மனதுடன்” தேவனில் அன்பு கூறுங்கள் (மாற்கு 12:30).
4. கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசத்துடன் இறையியலைப் படியுங்கள். கிறிஸ்துவே வார்த்தை, பரிசுத்த தேவனை நமக்கு வெளிப்படுத்துகிறவர் (யோவான் 1:1, 18).
தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள, உங்கள் மனதைத் திறக்கும்படியாய் அவரை அதிகமாய் சார்ந்திருங்கள் (லூக்கா 24:45).
5.கவனத்துடனும், தியானத்துடனும் இறையியலைப் படியுங்கள்
(2 தீமோத்தேயு 2:7).
நாம் சில புத்தகங்களை மேலோட்டமான ஒரு வெளிச்சத்தை பெற்றுக் கொள்ளும்படியாக துரிதமாக படிப்பதுண்டு. ஆனால் ஒரு நல்ல முறைப்படுத்தப்பட்ட இறையியலை படிக்க அதிகமான கவனத்தை செலுத்துவது தகுதியாய் இருக்கும்.
6.உங்கள் எல்லையை நன்றாக அறிந்து இறையியலைப் படியுங்கள்.
நீங்கள் தேவன் அல்ல. எனவே, தேவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம் (சங்கீதம் 145:3). ஆனால் நீங்கள் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்ட ஒரு மனிதன் (ஆதியாகமம் 1:27). ஆகையால், கிறிஸ்துவின் கிருபையின் மூலமாக மட்டுமே நீங்கள் தேவனை அறிந்து கொள்ள முடியும்
(1 யோவான் 5:20).
7. தேவனை துதிப்பதற்காக இறையியலைப் படியுங்கள்.
தேவன் தன்னைப்பற்றி வெளிப்படுத்தும் விஷயங்களுக்காக அடிக்கடி அவருக்கு துதிகளையும் நன்றிகளையும் ஏறெடுங்கள் (சங்கீதம் 119:164). அது நமது இறையியலுக்கு ஒரு பரலோக சுவையை ஊட்டுகிறது.
இந்தக் கட்டுரை வேதவிளக்க பாடக்கலைகளின் (Hermeneutics) தொகுப்பில் ஒரு பகுதி.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.