How-to-Read-the-Pastoral-Epistles
போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?
03-06-2025
Is-Systematic-Theology-Helpful
முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?
10-06-2025
How-to-Read-the-Pastoral-Epistles
போதக நிருபங்களை வாசிப்பது எப்படி?
03-06-2025
Is-Systematic-Theology-Helpful
முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?
10-06-2025

வேதத்தின் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு வாசிப்பது?

How-to-Read-Biblical-Law

ரிச்சர்ட் பெல்ச்சர் Jr.

ஆகமங்கள் என்றும் அழைக்கப்படும் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) தேவனின் கட்டளையானது புரிந்துக் கொள்வதற்கு எப்போதும் எளிமையானதல்ல. நியாயப்பிரமாணத்தில் சில கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்டதினால், அவற்றை நாம் கைக்கொள்ளாமல் இருப்பினும் கூட, பழைய ஏற்பாட்டில் உள்ள அனைத்து நியாயப்பிரமாணங்களிலிருந்தும் நாம் சில பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பதை நியாயப்பிரமாணத்தின் மீதான சரியான அணுகுமுறை நமக்கு வலியுறுத்துகிறது. வேதத்தில் உள்ள இவ்வித வகைகளை புரிந்துக் கொள்ள உதவும் சில காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1.நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடத்தக்க மூன்று பிரிவுகள் உள்ளன.

நியாயப்பிரமாணத்தின் மூன்று வகை சட்டங்களானது ஒழுக்க சட்டம், சடங்கு சட்டம், மற்றும் நாட்டு சட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஒழுக்க சட்டம் என்பது பத்துக் கட்டளைகளாகும். குறிப்பிட்ட தண்டனைகள் ஏதும் இவைகளோடு இணைக்கப்படாத சிறப்பான மற்றும் உலகளாவிய சட்டங்களாகும். ஒழுக்கச் சட்டங்கள் தேவனின் விரலினால் எழுதப்பட்டது (யாத் 31:18). இவைகள் பழைய ஏற்பாட்டில் உள்ள மற்ற கட்டளைகளுக்கு அஸ்திபாரமானதாகவும் அப்போஸ்தலர்களால் மேற்கோள்காட்டப்பட்டு இன்றும் கிறிஸ்தவர்களின் கடமையாக கொடுக்கப்பட்டுள்ளன. 

சடங்கு சட்டமானது இஸ்ரவேல் மக்களின் ஆராதனை, சுத்தம் மற்றும் அசுத்தம் பற்றியது, காரணம் ஒருவேளை ஆணோ அல்லது பெண்ணோ அசுத்தமுள்ளவர்களாக இருப்பார்களென்றால் ஆசரிப்புக் கூடாரத்தில் ஆராதனைச் செய்ய அவர்கள் தகுதியற்றவர்கள். இச்சட்டங்கள், பலிகள் (லேவி 1-7), உணவு (லேவி 11) மற்றும் அசுத்தத்தோடு தொடர்புடைய பல்வேறு காரியங்களை பற்றி கூறுகிறது (லேவி 12-15).

நாட்டுச் சட்டமானது, இஸ்ரவேலை ஆட்சி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. மற்றும் நியாயந்தீர்க்கும் நியாயதிபதிகள் பற்றியும் (உபா 17:8-13), அடிமைத்தனம் மற்றும் விலைப்பட்டுப்போன சகோதர அடிமைகளின் முறையைப் பற்றியும் (யாத் 21:1-11, லேவி 25:39-55), மற்றும் மனித நடத்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டிய பிற சூழ்நிலைகளைப் பற்றியும் ( யாத் 21:12-26, லேவி 24:17-23, உபா 19:1-22:8) நாட்டுச் சட்டம் பேசுகிறது. 

ஒழுக்கச் சட்டங்கள், சடங்குச் சட்டங்கள் மற்றும் நாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் துல்லியமானதாக இல்லையென்றாலும், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் பழைய ஏற்பாட்டை எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பதை பார்க்கும்போது இவைகள் மிகவும் நமக்கு கற்றலின் சாதனங்களாக உள்ளன.

2. நியாயப்பிரமாணத்தின் குறிப்பிடத்தக்க மூன்று பயன்பாடுகள் உள்ளன.

தேவனுடைய மக்களின் வாழ்க்கையுடன் நியாயப்பிரமாணம் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்கும் ஒரு பொதுவான வழி “நியாயப்பிரமாணத்தின் மூன்று வகையான பயன்பாடு (The threefold divisions of the Law)” என்று விவரிக்கப்படுகிறது. நியாயப்பிரமாணத்தில் சாபங்களும் இணைக்கப்பட்டுள்ளன, தேவனுடைய மக்கள் அவரை விசுவாசியாதபோதும் தொடர்ந்து கீழ்ப்படியாமையில் வாழும்போதும் இது அவர்களுக்கு வாய்க்கும். இதுவே நியாயப்பிரமாணத்தின் முதல் பயன்பாடு ஆகும், இது ஓர் கண்ணாடி போன்று செயல்பட்டு நமது பாவத்தை காண்பித்து, மீட்பிற்கான அவசியத்தையும் நமக்கு காண்பிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் இரண்டாவது பயன்பாடு, நியாயப்பிரமாணத்தின் கட்டுப்படுத்தும் செயல்பாட்டை குறிக்கிறது, இது கட்டளையை மீறும்போது ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களை எச்சரிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் மூன்றாவது பயன்பாடு, தேவனின் நியாயப்பிரமாணத்தின் ஆசீர்வாதங்களை வலியுறுத்துகிறது. தேவனுடைய மக்கள் அவருக்குப் பிரியமான முறையில் எப்படி வாழ்வது என்பதை மீட்பின் பின்னணியில் அறிவதற்கு  நியாயப்பிரமாணம் அவருடைய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (யாத். 20:2). எனவே நியாயப்பிரமாணம் நமது பரிசுத்தமாகுதலில் செயல்பட்டு தேவனோடு உள்ள உறவில் வளருவதற்கு நமக்கு உதவிச் செய்கிறது. 

புதிய ஏற்பாட்டில், நியாயப்பிரமாணத்தின் மூன்று  வகை பயன்பட்டிற்கான அங்கீகாரத்திற்கு உதாரணமாக, “கொலை செய்யாதிருப்பாயாக” என்ற ஆறாவது கட்டளையை மூன்று பயன்பாடுகளிலும் அது எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் காண்கிறோம். யாக்கோபு 2:9–11 இல் முதல் பயன்பாடு, 1 தீமோத்தேயு 1:9–10 இல் இரண்டாவது பயன்பாடு மற்றும் ரோமர் 13:9–10 இல் மூன்றாவது பயன்பாடு. நாம் அதை மீறியதால் அதினால் நியாயந்தீரக்கப்பட்டுள்ளோம், ஆனால் நற்செய்தி என்னவென்றால் நமக்கு பதிலாக கிறிஸ்து இயேசு நியாயப்பிரமாணத்தை முற்றிலுமாக கைக்கொண்டதின் மூலம் அதை நிறைவேற்றியிருக்கிறார். நாம் நமது நியாயாதிபதியாகிய தேவனுக்கு முன்பாக நிற்கையில், கிறிஸ்துவின் நீதியில் உள்ள விசுவாசத்தினால், நம்மை நீதிமான்களென்று அறிவிப்பதின்மூலம் தேவன் நம்மை நீதிமான்களாக்குகிறார். பரிசுத்தமாகுதலில் பிதாவாகிய தேவனின் பிள்ளைகள் என்ற சுதந்திரத்தோடு அவரோடு உள்ள உறவை பெலப்படுத்துவதற்கு நியாயப்பிரமாணம் ஓர் ஆசீர்வாதமான ஒன்றாகும்.

3. பழைய ஏற்பாட்டின் ஓர் நியாயப்பிரமாணமானது, அது கிறிஸ்துவின் வருகையோடு உள்ள தொடர்பில் புரிந்துக்கொள்ளப்படவேண்டும். 

எப்பொழுது நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து முழுமையாக நிறைவேற்றினாரோ, அப்பொழுது ஒரு சில மாற்றங்கள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இது இன்றைய கிறிஸ்தவர்களின் வாழ்வோடு நியாயப்பிரமாணம் எவ்வித தொடர்புடையது என்பதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒழுக்கச் சட்டம் அவசியமான ஒன்றாக இருந்தாலும் கூட இதனோடும் கூட கிறிஸ்துவின் வருகையோடு சம்பந்தமுடைய ஒரு சில சடங்குகள் இணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, நான்காவது கட்டளையான ஏழாவது நாளின் ஓய்வுநாளும் ஆராதனையும் படைப்பையும் மீட்பையும் நினைவுகூறும் வண்ணமாக ஏற்படுத்தப்பட்டது (யாத் 20:8-11, உபா 5:12-15). ஆனால் புதிய உடன்படிக்கையில், வாரத்தின் முதலாவது நாளில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் புதிய சிருஷ்டியை துவங்கியதால் விசுவாசிகளாகிய நாம் வாரத்தின் முதலாவது நாளில் தேவனை ஆராதிக்கிறோம். பாவத்தின் மீதும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியில் நாம் களிகூர்ந்து, அவர் மீண்டும் வரும்போது அளிக்கும் நித்திய இளைப்பாறுதலை நோக்கி காத்திருக்கிறோம் (வெளி 1:10; எபி 4:1-11). 

பழைய ஏற்பாட்டின் நாட்டுச் சட்டங்கள் இஸ்ரவேல் நாட்டோடு தொடர்புடையது. நாட்டுச் சட்டங்கள் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட முறைமையின்படி துல்லியமாக இன்று கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், இவைகளின் நீதியின் ஆலோசனைகள் நமது நீதியுள்ள ராஜாவினால், இன்று ஆட்சி புரியும் ஆட்சியாளர்களுக்கும் நமது கிறிஸ்தவ வாழ்விற்கும் ஓர் வழிமுறையாக கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க. வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 19:4 நாட்டுச் சட்டம்). அப்போஸ்தலர்கள் நாட்டுச் சட்டங்களின் மரண தண்டனை முறைமையை, திருச்சபை ஒழுங்கு நடவடிக்கையில் சபை அங்கத்துவத்தை விட்டு நீக்குவதற்கான காரியங்களோடு தொடர்புப்படுத்துகின்றனர். இது விசுவாசிகளை பரிசுத்தத்தோடு வைத்திருப்பதின் அதே விளைவுகளைக் கொண்டுள்ளது (1 கொரி 5:13, உபா 17:7).

சடங்குச் சட்டங்கள் எவ்வாறு பலி செலுத்தப்படவேண்டும் என்பதையும் சுத்தம் மற்றும் அசுத்தங்கள் பற்றியும் தேவாலயத்தின் முறைமைகள் பற்றியும் கூறுகிறது. இந்த சட்டங்கள் கிறிஸ்துவின் பணியினால் நிறைவேற்றப்பட்டு, இப்பொழுது ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நமது ஆராதனையில் தேவனுக்கு பலிகளை கொண்டுவராதபடிக்கு அவரே தேவனுக்கு செலுத்தப்பட்ட பலியாக இருக்கிறார் (எபி 10:11-14). நாம் ஒரே இடத்தில் தேவனை ஆராதிக்காமல், பல நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிற விசுவாசிகள் எங்கும் தேவனை “ஆவியோடும் உண்மையோடும்” தொழுதுக்கொள்ளவும், தேவனின் பிரசன்னத்தை நம்மிடம் கொண்டுவருகின்ற தேவாலயமாக கிறிஸ்துவே இருக்கிறார் (யோவான் 2:19, 4:24). உணவு மற்றும் இரத்தம் சம்பந்தமான சில கட்டளைகள் இனி தேவனுடைய மக்களை அசுத்தமாக்குவதில்லை, இதனால் யூத விசுவாசிகள் தேவனின் பெரிய கட்டளையின் (The great commission) நிறைவேற்றுதலாக சுவிசேஷத்தை புறஜாதியாரிடத்தில் எடுத்துச் செல்ல முடியும் (மத் 28:19-29, அப் 10:9-14). கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு நியாயப்பிரமாணம் நல்லதுதான்:

“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.”

 (சங்கீதம் 119:97)

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.