Is-Systematic-Theology-Helpful
முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?
10-06-2025
How-to-Read-Wisdom-Literature
ஞான புத்தகங்களை வாசிப்பது எப்படி?
17-06-2025
Is-Systematic-Theology-Helpful
முறைப்படுத்தப்பட்ட இறையியல் நமக்கு பயனுள்ளதா?
10-06-2025
How-to-Read-Wisdom-Literature
ஞான புத்தகங்களை வாசிப்பது எப்படி?
17-06-2025

பழைய ஏற்பாட்டில் கவிதைநடை புத்தகங்களை எவ்வாறு படிப்பது?

Reading-Hebrew-Poetry

ஒருமுறை சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், கவிதை என்பது “சிறந்த வரிசையமைப்போடு உள்ள சிறந்த வார்த்தைகள்” என்று வரையறுத்தார். பெரும்பாலான மக்கள் கவிதைகளை கேலி செய்து புறக்கணிக்கும் வேளையில், குறிப்பாக பழைய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பங்கு கவிதை புத்தகங்கள் என்பதால் கிறிஸ்தவர்களாகிய நாம் அதன் மீதான ஆவலை மீண்டும் கொண்டுவரவேண்டும்.

ஆனால் அநேக நேரங்களில் கவிதைகளை படிப்பது சற்று கடினமாக உள்ளது. கவிதை, மொழியின் எல்லைகளை விரிவாக்கி அதன் இடைவெளிகளை நிரப்புவதற்கு வாசகர்களுக்கு பெரும் பொறுப்புகளை அளிக்கிறது. ஆனால் வேதாகமத்தின் அநேக வசனங்களை கவிதை நடையில் தருவதற்கு தேவன் நினைத்ததினால், நாம் அதை நேர்த்தியாக வாசிப்பது மிகவும் அவசியமாயிருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கவிதை நடைகளை எவ்வாறு வாசிப்பது என்பதற்கான நான்கு குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1.இணைச்சொற்றொடர்களின் (Parallelism) நுணுக்கங்களை ஏற்றுக்கொள்ளுதல்.

பொதுவாக ஆங்கில கவிதைகள் ஒத்திசைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி வரிகளின் முடிவில் ஒரே மாதிரியான ஒலி தரும் வார்த்தைகளை சீரமைக்கிறது. எபிரேய கவிதைகள், இணையான வாக்கியங்களை பயன்படுத்தி வரிகளை ஒன்றாக இணைக்கின்றன. இதில் பொதுவாக இரு வகையான இணைச்சொற்றொடர்கள் காணப்படுகின்றன. இதில் முதாலாவது, ஒத்த அர்த்தமுடைய இணைச்சொற்றொடர் (synonyms parallelism). இதில் இருவரிகளின் அர்த்தமும் ஒன்றும் போலவே இருக்கும். இரண்டாவது, எதிரெதிர் இணைச்சொற்றொடர் (contrastive parallelism). இதிலுள்ள வரிகள் எதிரெதிர் கண்ணோட்டங்களை இணைக்கின்றன (உதா. சங் 16:1, நீதி 10:1 மற்றும் அநேக நீதிமொழிகள்). ஆனால்  ஒத்த அர்த்தமுடைய இணைச்சொற்றொடரில் (synonyms parallelism) உள்ள தவறான புரிதல் என்னவென்றால், இரு வரிகளும் ஒத்த கருத்தை மட்டுமே கூறுகின்றன என்பதே. ஆனால் அப்படியல்ல. இவை ஒத்த கருத்தைக் கூறினாலும், இதில் இரண்டாவது வரியானது புதிதான ஒன்றை கூறும். உதாரணமாக,

“இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.” 

சங்கீதம் 2:10

இதிலுள்ள இரண்டாவது வரியில், ராஜாக்களுக்கும் அப்பால் குறைந்த அதிகாரமுள்ள நியாயதிபதிகளும் அடங்கிய அனைத்து அதிகாரிகளையும் பற்றி இதன் ஆசிரியர் இவ்வரிகளை விரிவுப்படுத்துகிறார். உணர்வடைதல் என்றால் என்ன என்பதையும் விளக்கப்படுத்துகிறார்: தேவன் தனது குமாரனை ராஜாவாக ஏற்படுத்தினதால், எச்சரிப்படைவது (சங் 2:5-9).

எல்லா வகையான இணைச்சொற்றொடர்களுக்கும் ஆயத்தமாயிருங்கள். இவற்றில் சில, ஒப்பீடுதலைக் கூறும் (சங் 103:11), சில இருவரிகளில் அதன் கதையைச் சொல்லும் (சங் 3:4), மேலும் சில முதல் வரியில் சொல்லப்பட்டதை அடுத்த வரியில் நிறைவுச்செய்யும் (சங் 111:6). எப்பொழுதும் நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், முதலாம் வரியை எவ்வாறு இரண்டாவது வரி நிறைவு செய்கிறது அல்லது மேம்படுத்துகிறது? என்பதுதான்.

2. உருவகங்களில் (metaphors) மகிழுங்கள்.

உருவகங்களே கவிதையின் உயிர் நாடி. உருவகங்களை நன்றாக கவனியுங்கள். எதார்த்தமான காரியங்களை எளிமையாக பார்ப்பதற்கான வலிமையான வழிகளாக உருவகங்கள் உள்ளன. எரேமியா 2:13 ஐ கவனியுங்கள்.

என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள், ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள், தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள். 

எரேமியா 2:13

உருவகங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதன் காட்சிகளை படமாக நாம் கற்பனையில் கொண்டு வர வேண்டும். நீரோடை என்பது இயற்கையாகவே நிலத்திலிருந்து தண்ணீரை சுரந்து பொங்கி வழியும் ஓர் ஊற்றாகும். இது தெளிந்த, புதிதான மற்றும் இலவசமானதாகும். இதேபோலதான் தேவனின் நன்மையும் பொங்கி வழிகிறது. இதற்கு நேர் மாறாக ஓர் தொட்டி என்பது ஒரு சிறிய திறப்பைக் கொண்ட ஒரு குழி, அதை பாறையிலிருந்து வெட்டியப் பின்னர் நீர் வெளியேறுவதை தவிர்க்க கடின உழைப்போடு அதைப் பூச வேண்டும். அந்த தொட்டியில் தண்ணீர் தேங்கியிருந்தாலும் தண்ணீர் அழுக்காகிவிடும். இதேபோலதான் விக்கிரகங்களும் இந்த தொட்டியைப் போன்றது: அவை தண்ணீரை கூட தக்கவைக்காது; அதில் மீதியிருப்பது  சேறு மட்டுமே. பாவத்தின் கொடுமை என்னவென்றால் நாம் வெடிப்புள்ள தொட்டிகளுக்காக ஜீவத்தண்ணீராகிய ஊற்றை விட்டு விடுகிறோம். ஒரு நல்ல வேத விளக்க உரை பண்டைய கிழக்கு நாடுகளின் உருவங்களை நன்கு புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

தேவன் தமது வேதாகமத்தில் நமக்கு கவிதையை கொடுத்திருக்கிறார் அதனால் நாம் அவருடைய வார்த்தையில் பூரணமாக மகிழ்ச்சி அடைவோம்.

உருவகங்களில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு காரியம் இவைகள் பெரும்பாலும் மக்களைப் பற்றியேப் பேசுகிறது.

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 

சங்கீதம் 1:3

இந்த உருவகத்தில் மரம் என்பது தெய்வீக இஸ்ரவேலராகும். ஆனால் மற்றொரு உருவகம் இங்கு உள்ளது இந்த மரத்தை நீர்க்கால்கள் ஓரமாய் நடுவது தேவன், மற்றும் இந்த மரத்தின் கனிகள் பரிசுத்தவான்களின் நற்கிரியைகள். தேவன் நம்மை பராமரிக்கிறார் என்று நினைக்கும் போது, எந்த அளவுக்கு அது நமக்கு ஊக்கம் அளிக்கிறதாயிருக்கிறது! நீங்கள் எப்பொழுது ஒரு உருவகத்தை சந்திக்கிறீர்களோ அப்பொழுது இந்த காரியத்தை அங்கு நினைவில் கொள்ளுங்கள். இங்கு கேட்கவேண்டிய கேள்வி, முக்கியமான உருவகம் மற்ற உருவகங்கள் பற்றி என்ன குறிப்பிடுகிறது?.

3. யார் பேசுவது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்?

சில நேரங்களில் பழைய ஏற்பாட்டின் கவிதை நடைகள் மூலமாய் நாம் குழம்பி விடுகிறோம். ஏனெனில் “யார் இங்கு பேசுகிறது?” என்ற கேள்வியை நாம் புறந்தள்ளிவிடுகிறோம். பழைய ஏற்பாட்டில் அநேக இடங்களில் தேவனுக்கும் மக்களுக்கும் இடையே உரையாடல் இருப்பதுபோல் இருக்கும், சில நேரங்களில் எவ்வித அறிவிப்புமின்றி பேசும் நபர் மாற்றப்படுவார். ஓர் குறிப்பிடுத்தக்க உதாரணம், எரேமியா 8:18-20, இங்கு பேச்சாளர் மூன்று முறை மாறுகிறார்.

(எரேமியா) நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப் பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது. 

(மக்கள்) இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, (கர்த்தர்) என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது, ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார். 

(மக்கள்) அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை. 

எரேமியா 8:20

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் சூழல் மற்றும் வார்த்தைகளின் குறிப்புகளின் அடிப்படையில் பேச்சாளரை நாம் வேறுபடுத்தி கண்டுக்கொள்ளலாம். யார் பேசுகிறார்கள் என்று கேட்க கற்றுக் கொள்வது குழப்பமான பகுதிகளை திறப்பதற்கு உதவி செய்கிறது.

4. தேவனின் செதுக்கப்பட்ட வார்த்தைகளில் மகிழ்ந்திருங்கள்.

நாம் வேண்டுமென்றே குழப்பம் அடைவதற்காக, தேவன் அநேக கவிதை நடைகளை வேதாகமத்தில் கொடுக்கவில்லை. மாறாக அவருடைய வார்த்தையில் நாம் முழுமையாக மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே அவர் நமக்கு கவிதை நடை புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். கவிதைச் சார்ந்த வசனங்களை நீங்கள் புரிந்துக்கொள்வதற்கு உங்களுக்கு உதவிடும் அநேக கிறிஸ்தவர்களோடு உள்ள ஐக்கியத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் உள்ள நல்ல கவிதைகளை வாசியுங்கள். விரைவில் நீங்கள் வேதாகமத்தின் கவிதைகளை அதிகதிகமாக ரசிப்பீர்கள்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

மேத்யூ எச். பாட்டன்
மேத்யூ எச். பாட்டன்
ஆசிரியர் மேத்யூ எச். பாட்டன் இவர் ஓஹியோவின் வந்தலியாவில் உள்ள கவனண்ட் பிரஸ்பிடீரியன் சபையின் போதகராக உள்ளார். Basics of Hebrew Discourse: A Guide to working with Hebrew Prose and poetry என்ற புத்தகத்தின் இணை ஆசிரியராகவும், உபாகமம்: 12- week study என்ற புத்தகத்தின் ஆசிரியராகவும் உள்ளார்.