
ஜெபக் கூடுகைகளின் வல்லமை
28-07-2026
ஒரே கடவுள் கொள்கை என்றால் என்ன?
04-08-2026சட்டரீதியான மனப்பான்மை (Legalism) கொள்ளாமல் பரிசுத்தத்தை அடைவது எப்படி?
‘கிறிஸ்துவின் முழுமை’ (The Whole Christ) என்ற புத்தகத்தில், டாக்டர் பெர்குசன் சட்டரீதியான மனப்பான்மைக்கு ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்: “சட்டரீதியான மனப்பான்மை என்பது தேவனுடைய நியாயப்பிரமாணத்தை அவருடைய ஆள் தன்மையிலிருந்து பிரிப்பதற்கு ஒப்புமைப்படுத்துகிறார். அவருடைய நியாயப்பிரமாணத்தையும் மற்றும் அதனுடைய அவசியத்தையும், அன்பான தாராள குணமுள்ள அவரிடமிருந்தே பிரிப்பதை குறிக்கிறது.” தேவனுடைய நியாயப்பிரமாணத்தையும் அதன் அவசியத்தையும், அந்த கற்பனைகள் யாருடையதோ அந்த அன்புள்ள மற்றும் தாராளமான தேவனிடமிருந்தே நாம் பிரித்தால், நம்முடைய பரிசுத்தத்திற்கான ஓட்டம் தேவையற்ற, சட்டரீதியான வழியில் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, தேவன் யார் என்பதையும், அவர் ஏன் நம்மைப் பரிசுத்தமாக வாழ அழைக்கிறார் என்பதையும் எப்போதும் நினைவு கூறுவதன் மூலமே நாம் பரிசுத்தத்தைத் குறித்ததான தெளிவான பார்வையை கொண்டிருக்க முடியும்.
2 கொரிந்தியர் 1:3-4-ல், பவுல் தேவனைத் துதித்து, அவர் யார் என்பதை ஒரு அற்புதமான விளக்கத்துடன் எடுத்துரைக்கிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்; எங்களுக்கு வரும் சகல உபத்திரங்களிலும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்.” இரக்கமுள்ள பிதா, பாவிகளை இரட்சிக்கத் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினதின் மூலம் நம்முடைய உபத்திரவங்களில் நமக்கு ஆறுதல் அளிக்கிறார். தமது மகா பெரிய அன்பினால், நாம் நம்முடைய பாவத்தினால் இழந்த பரிசுத்தமற்ற நிலைமையிலிருந்து நம்மை மீட்கும்படி பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகியஇயேசு கிறிஸ்துவை அனுப்பினார். தமக்கு முன்பாக நாம் நீதிமான்களாக்கப்படும்படி, தேவனே நமக்கு ஒரு இரட்சகரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். கிருபையினால் மட்டுமே, விசுவாசத்தினால் மட்டுமே, கிறிஸ்துவின் இரட்சிப்பின் கிரியைகளின் மூலமாக மட்டுமே, தேவனுடன் நாம் சமாதானம் பெற்றுள்ளோம் (ரோமர் 5:1-2).
ஆனால், நம்முடைய இரக்கமுள்ள பிதா நம்மை நீதிமான்களாக்கி, அவரோடுகூட சமாதானமாக நிற்கும்படி செய்வதோடு மட்டும் திருப்தியடையவில்லை. அவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நாமும் பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க விரும்புகிறார் (1 பேதுரு 1:15-16). எனவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலில் நாம் மறுரூபமாகும்படி தேவன் விரும்புகிறார். சுவிசேஷத்தின் நற்செய்தி இதுதான்:
கிறிஸ்து, தம்முடைய இரத்தத்தினால் நம்மை மீட்டெடுத்து, தம்முடைய ஆவியானவரால் நம்மை அவருடைய சாயலுக்கொப்பாய் மறுரூபப்படுத்துகிறார். (ஹைடெல்பெர்க் விசுவாச அறிக்கை 86)
எனவே, பரிசுத்தம் என்பது நம்முடைய பிதாவின் நோக்கம் என்றும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் இந்த நோக்கத்தை நிறைவேற்ற கிறிஸ்து நமக்குள் செயல்படுகிறார் என்கிற ஆறுதலோடு கூடிய உறுதியுடனும் நாம் பரிசுத்தத்தைத் தேட அழைக்கப்படுகிறோம். இந்த செயலில் நாமும் தேவனோடு இணைந்து ஓடும்படியாய் அழைக்கப்படுகிறோம்; இருப்பினும், தேவனுடைய மறுரூபமாக்குதலின் வெற்றி நம்மைச் சார்ந்ததல்ல, அது அந்தப் பணியைச் செய்யும் திரியேக தேவனைச் சார்ந்தது. பரிசுத்த ஆவியானவர் இந்த உண்மையை 1 தெசலோனிக்கேயர் 5:23-24-ல் நமக்கு உறுதிப்படுத்துகிறார்: “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.” தேவன் நாம் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறார், எனவே தம்முடைய விருப்பம் நம்மில் நிறைவேற அவர் செயல்படுவார் என்ற வாக்குறுதியையும் அளித்திருக்கிறார்.
தேவன் நம்முடைய பரிசுத்தமாக்குதலையும் மறுரூபமாக்கப்படுவதையும் குறித்து மிகுந்த அக்கறை உள்ளவராயிருக்கிறார், ஏனென்றால் அவருடைய ராஜ்யத்தில் அவருடன் வாழ்வதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவனுடைய ராஜ்யம் என்பது “நீதியும் சமாதானமும் சந்தோஷமும்” சார்ந்தது என்று நமக்குத் தெரியும் (ரோமர் 14:17). நீதிமானாக்கப்படாமல் அவருடைய ஜனங்கள் அவருடைய ராஜ்யத்தின் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியாது என்பதைத் தேவன் நன்றாக அறிவார். மனிதனுடைய வீழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள்: நீதியிலிருந்து அநீதிக்குத் திரும்பினோம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் தேவனுடன் அனுபவித்த சமாதானத்தை இழந்து, அவருக்கு விரோதமான பகையை உருவாக்கினோம். அவரை விட்டு பிரிவதினால் வரும் துயரத்திற்காக அவருடனான ஐக்கியத்தின் சந்தோஷத்தை இழப்பதற்கு தயாரானோம். ஆனால் அவர் ஜீவனை காக்கும் தேவன், அவர் நீதியிலும், சமாதானத்திலும், மகிழ்ச்சியிலும் அவருடன் வாழ நம்மைப் படைத்தார். எனவே, நம்மோடுள்ள அந்த உறவை மீட்டெடுக்க அவர் தீர்மானித்தார் (ஆதியாகமம் 3:15).
நம்முடைய இரக்கமுள்ள பரலோக பிதாவானவர், சங்கீதம் 1-ல் உள்ள மனிதனைப் போல நாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவன் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, அதை இரவும் பகலும் தியானிக்கிறான். ஏன்? ஏனென்றால் அந்த மனிதன்,
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு,
தன் காலத்தில் தன் கனியைத் தந்து,
இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்;
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். (சங்கீதம் 1:3)
நமக்கு ஜீவனை தரும் தேவனுடைய நியாயப்பிரமாணம் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் மெய்யாகவே களிகூருவோம். நாம் பரிசுத்தத்தைத் வாஞ்சிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஏனென்றால் நாம் நாட்டப்பட்டு, கனி தந்து, நிலைத்திருந்து, இப்பொழுதும் என்றென்றைக்கும் பரிசுத்தத்தில் செழிப்பாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நமக்கான பிதாவின் சித்தம் இதுவே:
கிறிஸ்துவின் மூலமாக முழு இருதயத்துடனே தேவனில் மகிழ்ச்சியுற்று,
மற்றும் தேவனுடைய சித்தத்தின்படி வாழ்வதில் பிரியம் மற்றும் மகிழ்ச்சி கொண்டு, எல்லாவிதமான பரிசுத்த நற்கிரியைகளைச் செய்வதே. (ஹைடெல்பெர்க் விசுவாச அறிக்கை 90)
பரிசுத்தத்தைத் தேடும் நமது பயணத்தில், கிறிஸ்துவின் மீதான விசுவாச நன்றியுணர்ச்சியே சட்டரீதியான மனப்பான்மைக்கு எதிரான சிறந்த மருந்தாகும். தேவனுடைய சமூகத்தில் நாம் அங்கீகரிக்கப்படும் படியாக நாம் பரிசுத்தத்தைத் தேடுவதில்லை. கிறிஸ்துவின் இரத்தத்தால் நமக்குக் கிடைத்த மீட்பிற்காகவும், கிறிஸ்துவின் ஆவியானவரால் நம்மில் நிறைவேற்றப்படும் புதுப்பித்தலுக்காகவும் நன்றியுணர்வுடன் நாம் பரிசுத்தத்தைத் தேட வேண்டும். நாம் பரிசுத்தத்தைத் தேடும்போது மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் அதற்காகவே நாம் படைக்கப்பட்டோம், அதைச் செய்வதற்காகவே நாம் படைக்கப்பட்டோம்:
“நீங்கள் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; நாம் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” (எபேசியர் 2:8-10).
நாம் பரிசுத்தத்தைத் தேடும்போது, சட்டரீதியான மனப்பான்மையிலிருந்து தேவன் நம்மைப் பாதுகாத்து, அவருடைய கிருபையினாலும் ஆவியானவராலும் நம்மை வழிநடத்துவாராக.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


