
சுய ஒழுக்கம் என்றால் என்ன?
06-08-2026புதிய தாவீதாகிய இயேசு
நீங்கள் எப்போதாவது ஒரு வேதாகமப் வகுப்பில் அமர்ந்து, குழுத் தலைவரின் வேதாகமப் பார்வைகளைக் கண்டு வியந்திருக்கிறீர்களா? எம்மாவு செல்லும் வழியில் உயிர்த்தெழுந்த இயேசுவைச் சந்தித்தபோது, மனமுடைந்திருந்த அந்த இரண்டு சீஷர்களும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். லூக்கா இவ்வாறு எழுதுகிறார், “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.” (லூக்கா 24:27). அவர்கள் மிகுந்த ஆச்சரியத்தோடுதான் கவனித்திருப்பார்கள் என்பதை மட்டும்தான் என்னால் யோசிக்க முடியும். பின்பு அதேநாளில், இயேசு தமது மற்ற சீஷர்களுக்கு வெளிப்பட்டு வேதாவாக்கியங்களை புரிந்துக் கொள்ளும்படி அவர்கள் கண்களை திறந்தார் (லூக்கா 24:45). முழு வேதாகமமும் தன்னைப் பற்றியதுதான் என்பதை முதன்முறையாகப் புரிந்துகொள்ள, உயிர்த்தெழுந்த தங்கள் ஆண்டவர் அவர்களுக்கு உணர்வை அளித்தபோது, அந்த மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நான் பலமுறை வியந்துள்ளேன். மோசேயும், தீர்க்கதரிசிகளும், சங்கீதங்களும் அவரைக் குறித்துக் கொடுக்கின்ற சாட்சிகளை அவர் விளக்கிக் காட்டுகையில் (லூக்கா 24:44), ஒருவேளை நிச்சயமாக அவர்கள் வாயடைத்துப் போனவர்களாக தரையிலே அமர்ந்து அமைதிக்காத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக, கிறிஸ்துவைப் பற்றி தெளிவாகவும், அழகாகவும் காண்பிக்கிற வேதப்பகுதிகள் பழைய ஏற்பாட்டில் உள்ளன (ஏசாயா 53). ஆனால் “எல்லா வேத வாக்கியங்கள்” என்று இயேசு கூறினபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
வேதத்தில் உள்ள மாதிரியியல்
மாதிரியில் (Typology) என்ற வார்த்தையை எப்போதாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அப்போஸ்தலனாகிய பவுல், தேவன் படைத்த முதல் மனிதனாகிய ஆதாமோடு இயேசுவை ஒப்பிடுவதற்கு இந்த முறையை பயன்படுத்துகிறார். “அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.” (ரோமர் 5:14). “மாதிரி” என்பது ஒன்றிற்கான ஓர் உதாரணம். ஆதாம் தேவனால் உண்டாக்கப்பட்ட தாசனும், குமாரனுமாவான் (லூக்கா 3:38). ஆனால் இயேசுவோ தேவனால் சிருஷ்டிக்கப்படாத, கீழ்ப்படிந்த தாசனும் குமாரனுமாவார். ஆதாம் பரிதாபமாக தோற்றுப் போனான். ஆனால் கிறிஸ்தவோ மகிமையாக வெற்றிச் சிறந்தார்.
ஆதாமைப் போல, தாவீது ராஜா “வரவிருந்தவருக்கு ஓர் முன்னடையாளம்” என்று எங்கும் விவரிக்கப்படவில்லை. இருப்பினும், வேதத்தை அது உள்ளபடியே, அதாவது தேவனுடைய மீட்பின் சரித்திரத்தை வாசிக்கும்போது, புதிய ஏற்பாடு இயேசுவை, வந்து சகல நீதியையும் நிறைவேற்றிய ராஜாவான “புதிய தாவீது” என முன்னடையாளமாகச் சித்தரிப்பதை நாம் காணலாம். இதை நான் சுருக்கமாக விளக்குகிறேன்.
2 சாமுவேல் 23:1 ல், தாவீது தன்னை “யாக்கோபின் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவன்” என்று கூறுகிறார். பழைய ஏற்பாட்டில், மூன்று வகையான முக்கியமான நபர்கள் தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் சேவை செய்வதற்காக அவரால் அபிஷேகம் செய்யப்பட்டனர்: தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்கள். தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையைப் பேசுவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டனர். ஆசாரியர்கள் மக்களுக்காக தேவனுக்குப் பலிகளைச் செலுத்தவும் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் அபிஷேகம் செய்யப்பட்டனர். ராஜாக்கள் தேவனுடைய வார்த்தையின்படி அவருடைய மக்களை வழிநடத்தவும் ஆளவும் அபிஷேகம் செய்யப்பட்டனர்.
நாம் வேதாகமத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கண்ணோட்டத்தின் வழியாகவே வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை அனைத்தும் கிறிஸ்துவை பற்றிய பேசுகின்றன.
இந்த மூன்று பதவிகளும் தாவீது ராஜாவுக்குள் காணப்பட்டன. தாவீது “கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்” ஆக இருந்தார், ஆனால் வருந்தத்தக்க சோகம் என்னவென்றால், கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற முறையில் தாவீது தோல்வியடைந்தார். எல்லா தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் மற்றும் ராஜாக்களைப் போலவே அவரும் பாவம் செய்தார். சர்ப்பத்தின் தலையை நசுக்கி, தேவனுடைய பாவ உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவருவார் என்று தேவன் வாக்குக்கொடுத்தவர் இந்த தாவீது அல்ல ( ஆதி. 3:15 ).
தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் இருக்கும் இயேசு
இயேசுவை “புதிய மற்றும் சிறந்த தாவீது” என்று காண நமக்கு உதவும் பின்னணி இதுவே. இயேசு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்க்கதரிசி ஆவார்; அவர் தேவனுடைய வார்த்தையை உண்மையுடன் பேசியது மட்டுமல்லாமல், அவரே தேவனுடைய மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தையாகவும் இருந்தார் (யோவான் 1:1–18 ; எபிரேயர் 1:1–4 ). இயேசு பரிபூரண அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரியரும் ஆவார்; அவர் பலிகளைச் செலுத்த வரவில்லை, மாறாக, நம்மை தேவனிடமிருந்து பிரிக்கும் பாவத்தை முழுமையாகவும், இறுதியாகவும், என்றென்றும் தீர்க்கும் பலியாகத் தம்மைத்தாமே பலி செலுத்த வந்தார். (எபிரேயருக்கு எழுதிய நிரூபத்தைப் பார்க்கவும்). இயேசு அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவும் ஆவார்; அவர் தம் மக்களைப் பரிபூரண ஞானம், கிருபை மற்றும் வல்லமையுடன் ஆண்டு வழிநடத்தி, நம்முடைய எல்லா எதிரிகளிடமிருந்தும் நம்மைக் காக்கிறார்.
எனவே இயேசு கிறிஸ்து, மேசியா, அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று அழைக்கப்படுகிறார். தாவீது ராஜா எப்படி ஆழமான குறைகள் நிறைந்த ஒரு முன்மாதிரியாக இருந்தாரோ, இயேசுவோ பரிபூரணமானவராக இருந்தார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், புதிய ஏற்பாடு இயேசுவை தாவீதை விடச் சிறந்த தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் முன்வைக்கிறது; அதுபோலவே அவர் ஆதாமை விடச் சிறந்த ஊழியக்கார குமாரனாகவும் இருந்தார்.
தாவீதுக்கும் மேலாக இயேசுவை நோக்குதல்
ஆதிக்காலத் திருச்சபைப் பிதாக்களில் சிலர் சில சமயங்களில் மாதிரியியலைக் கற்பனையாகப் பயன்படுத்தினர், ஆனால் அது, நம்மை இயேசுவிடம் வழிநடத்தும் நோக்கம் கொண்ட தேவனுடைய வார்த்தையில் உள்ள வடிவங்களைப் புறக்கணிக்க ஒரு காரணமல்ல. தேவன், “இவர் என் நேசக் குமாரன்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொன்ன ஒரே நபர் இயேசு மட்டுமே (மாற்கு 9:7 ; மத்தேயு 3:17; 17:5 ; லூக்கா 9:35).
புதிய ஏற்பாட்டில் உள்ள பதினேழு வசனங்கள் இயேசுவை “தாவீதின் குமாரன்” என்று விவரிக்கின்றன. அந்த வார்த்தைகள், அவர் தாவீதின் வம்சத்தில் இருந்து வந்தவர் என்பதை முதன்மையாக முன்னிலைப்படுத்தவில்லை (அது உண்மையாக இருந்தாலும்); மாறாக, அவை ஒரு மேசியாவிற்குரிய பட்டமாகும். பரிசேயர்களுடனான தனது விவாதத்தில், இயேசு அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்: தாவீதே அவரைக் ஆண்டவர் என்று அழைக்கும்போது, மேசியா எப்படி தாவீதின் குமாரனாக இருக்க முடியும்? ( மாற்கு 12:35–37 ; சங்கீதம் 110:1 ). தாவீது தன்னையும் தாண்டி இயேசுவாகிய தன்னையே சுட்டிக்காட்டுகிறார் என்பதை இயேசு புரிந்துகொண்டார். இதனால்தான் நாம் வேதவாக்கியங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கண்ணோட்டத்தில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை அனைத்தும் அவரைப் பற்றியவையே.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


