What Is Monotheism?

ஒரே கடவுள் கொள்கை என்றால் என்ன?

04-08-2026
Jesus Is the New David

புதிய தாவீதாகிய இயேசு

11-08-2026
What Is Monotheism?

ஒரே கடவுள் கொள்கை என்றால் என்ன?

04-08-2026
Jesus Is the New David

புதிய தாவீதாகிய இயேசு

11-08-2026

சுய ஒழுக்கம் என்றால் என்ன?

What Is Self-Discipline

சுய ஒழுக்கத்தில் நீங்கள் எந்தளவுக்குச் சிறந்தவர்கள்? இந்தக்கட்டுரையை நீங்கள் ஒரு கைபேசியில் வாசிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம், மேலும் நமது உலகில் உள்ள மற்ற எல்லாவற்றையும் விட கைப்பேசி மற்றும் அதைப்போலொத்த சாதனங்களே சுயக்கட்டுப்பாட்டை அதிக அளவில் மட்டுப்படுத்துகின்றன.  இடைவிடாமல் அதை தடவிக் கொண்டிருப்பதால் (scrolling) நாம் டோபமைன் என்னும் போதை மருந்துக்கு அடிமையாக்கப்படுவதைப் போல  அடிமையாகி, சோம்பல் மற்றும் வேலைகளை சரியான நேரத்தில் செய்யாமல்  தள்ளிப்போடும் பலவாறான பழக்கங்களுக்கு  தீனி போடுவதற்கும் அது வழி வகுக்கிறது என்று நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

ஆனால், மற்றொரு சிந்தனை  என்னவென்றால், நமது சுயக்கட்டுப்பாட்டின்மைக்கு நமது தொலைபேசிகளையோ—அல்லது உலகில் உள்ள வேறு எந்த உயிரற்ற பொருட்களையோ—நாம் குறை கூற முடியாது. பழி முற்றிலும் நம்மீதே விழவேண்டியது; சுயக்கட்டுப்பாடு  என்ற வார்த்தையிலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது  அல்லவா?

சுய ஒழுக்கம் (self-discipline) என்ற சொல் வேதாகமத்தின் நவீன ஆங்கில மொழிபெயர்ப்புகளில் காணப்படவில்லை. ஆனால் அதற்கு  மிக நெருங்கிய தொடர்புடைய ‘சுயக்கட்டுப்பாடு’ (self-control) என்ற சொல் நிச்சயமாக இடம் பெற்றுள்ளது. சுயக்கட்டுப்பாடு, அதாவது தன்னைத்தானே ஆளுவது, இது ஒரு தெய்வீகப் பண்பாகும்; சொல்லப்போனால், அது தேவனுக்குரிய ஒரு குணாதிசயமாகும். தேவன் வானத்தையும் பூமியையும் படைக்கத் தொடங்கியபோது, அவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின்படியும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள்ளும் செய்து முடித்தார் (ஆதி. 1). அவர் ஒரு நாள் தொடங்கி அடுத்த நாளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல், ஏதோ போகிற போக்கில் காரியங்களைச் செய்துகொண்டு, திட்டமிடாதவாறு தற்செயலாக தனது வேலைகளை செய்யவில்லை. இப்பொழுதும்கூட, அவர் அதே வழியில்தான் தொடர்ந்து கிரியை செய்து வருகிறார் (யோவான் 5:17).

தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார் (1 கொரி. 14:33). நமது கலாச்சாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படுவது  பெரும்பாலும் உயர்வாக மதிக்கப்படுகிறது, அதற்கான மதிப்பு நிச்சயம் உண்டு, ஆனால் அது விரைவாக பலனளிப்பது போல தோன்றினாலும் எளிதில் சீர்குலைந்துவிடும் என்பதில் மாற்றமில்லை, ஆகவே இது சுயக்கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, நீங்களோ அல்லது நானோ சுயக்கட்டுப்பாட்டைப் நடைமுறையில் கொண்டு வரும்போது, நாம் நம்மை படைத்தவரையே பிரதிபலிக்கிறோம்.  இது முரண்பாடாக தோன்றினாலும், உண்மையில் தேவனால் மிகவும் கட்டுப்படுத்தப்படும் நபரே அதிக சுயக்கட்டுப்பாடு கொண்ட நபராக காணப்படுவார்.

புதிய ஏற்பாட்டில் சுயக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் மூன்று பகுதிகள் உள்ளன.

1. 1 கொரிந்தியர் 9:24–27

முதலாவது 1 கொரிந்தியர் 9:24–27 இல் பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கும், ஒரு குத்துச்சண்டை போட்டிக்கும் ஒப்பிடுகிறார். விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஓடும்போது பயிற்சி செய்ய வேண்டிய சுயக்கட்டுப்பாட்டைப் பற்றி அவர் விவரிக்கிறார். நம்மில் பலர் விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட ஒரு சமூகத்தில் வாழ்வதால், சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கு பெறும் நாட்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் உணவு, உடற்பயிற்சி, செய்முறைப்பயிற்சி மற்றும் தூக்கம் ஆகியவற்றின் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது நமக்கு தெரியும்.

பவுல் இதை ஒரு முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒப்பிடுகிறார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி, அதைக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரி. 9:27). மாரத்தான் ஓடும் ஒரு விளையாட்டு வீரருக்கு அந்த பந்தயத்தின் மீதான  ஆர்வமும் நோக்கமும் ஒரு போதும் குறைவாக காணப்படுவதில்லை. அதேபோல் ஒரு மெய்யான கிறிஸ்தவனுக்கும் காணப்படாது.  “நான் யார்? நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? என் இலக்குகள் என்ன, அவற்றை அடைய நான் எவ்வாறு செயல்பட  வேண்டும்?” போன்ற கேள்விகளை நாம் கேட்கும்போது வாழ்நாள் முழுவதற்குமான சுயக்கட்டுப்பாடு நம்மில் ஆரம்பமாகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் சுருக்கமான வினா-விடைப் போதனையின் (Westminster Shorter Catechism) முதல் பதிலிலேயே, “மனிதன் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கம், தேவனை மகிமைப்படுத்துவதும், மற்றும் அவரில் என்றென்றும் களிகூறுவதாகும்” என்பதை நமக்கு நினைப்பூட்டுவதன் மூலம் நேரடியாக நமது முக்கிய விஷயத்திற்கு வருகிறது. என் வாழ்க்கையில் உள்ள அனைத்தும் இந்த மேன்மையான இலக்கிற்கு உட்பட்டதாகவே காணப்பட வேண்டும்.

2. கலாத்தியர் 5:22–23

இரண்டாவது பகுதியான கலாத்தியர் 5:22–23, இல்  பவுல் ஆவியின் கனிகளைப் பட்டியலிடுகிறார்: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் (சுயக்கட்டுப்பாடு).” இந்தக் கனிகளின் பட்டியல் “மாம்சத்தின் கிரியைகள்” (கலா. 5:19–21) என்ற மற்றொரு பட்டியலுக்கு பின்னர் தொடர்ந்து வருகிறது என்பதைக் கவனியுங்கள்.மேலும்  இந்த “மாம்சத்தின் கிரியைகள்” இயற்கையிலேயே காட்டுத்தனமான, கட்டுப்பாடற்ற ஆசைகளாகவும் இச்சைகளாகவும் காணப்படுகின்றன என்பதை பற்றி சிந்தியுங்கள். சாதாரண மற்றும் இயற்கையான மனித பசி உணர்வுகள் ந்மது கட்டுப்பாட்டை மீறிவிட்டன; அவை ஒரு நதி தன் கரைகளை உடைத்துக் கொண்டு பெருக்கெடுத்து ஓடி, பரவலான சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்துவதைப் போல நம்மில்  காணப்படுகின்றன.

ஆவியின் கனி “அன்பு” மற்றும் “இச்சையடக்கம் (சுயக்கட்டுப்பாடு)” ஆகியவற்றுக்கு இடையே அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். புதிய ஏற்பாட்டில் அன்பு என்பது மிகச்சிறந்த நற்பண்பாகக் கருதப்படுகிறது ஏனெனில்”அன்பே பெரியது” (1 கொரி. 13:13) என்பதை நாம் அறிவோம்—ஆனால் உண்மையில் அன்பும் கூட சீரமைக்கப்பட்டு வழிநடத்தப்பட  வேண்டும். சுயக்கட்டுப்பாடு அல்லது சுய ஒழுக்கம் என்பது புசிப்பு, குடிப்பு , ஓய்வு, பாலியல், இன்பம், பொழுதுபோக்கு மற்றும் மற்றெல்லாவற்றிற்குமான மனித பசி மற்றும் பல உணர்வுகள் அங்கேயும் காணப்படுகின்றன, ஆனால் அவை தங்கள் கரைகளை உடைத்து கட்டுப்பாடற்ற உணர்ச்சிகளாகவும் இச்சைகளாகவும் மாறாதபடி அவற்றைச் சோதித்துத் தடுத்துவைக்க கவனமான வழிகளை கையாள்கிறது. தீத்துவுக்குப் பவுல் எழுதும்போது—கட்டுப்பாடற்ற தன்மைக்கு பெயர் பெற்ற கிரேத்தா தீவில் ஊழியஞ் செய்யும்போது—அந்தச் சமூகத்தின் பல்வேறு குழுக்களான “முதிர்ந்த வயதுள்ள ஆண்கள்,” “வாலிப பெண்கள்,” “வாலிப ஆண்கள்,” மற்றும் “எல்லா மனிதர்களையும்” பற்றிப் பேசும்போது “சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக” இருக்க வேண்டியதன் அவசியத்தை பலமுறை குறிப்பிடுவது தற்செயலான ஒன்றல்ல (தீத்து 2:1–12).

3. 2 தீமோத்தேயு 1:7

இறுதியாக, 2 தீமோத்தேயு 1:7 ஐக் கவனியுங்கள்: “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள (சுயக்கட்டுப்பாடுள்ள) ஆவியையே கொடுத்திருக்கிறார்.” இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வாழும் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு ஏற்ற வசனம் என்று நான் நினைக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள கலாச்சாரம் அதிகளவில் விரோதம், கோபம் மற்றும் சகிப்புத்தன்மையற்றதாக மாறியுள்ளது, இதனால் விசுவாசிகள் அனேக எதிர்ப்புகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதை நினைத்து பயமடையலாம். புதிய ஏற்பாட்டில் பார்க்கும்போது, தீமோத்தேயு சற்றே தயக்கமும் பயமும் கொண்ட ஒரு குணத்தைக் கொண்டிருந்தார் என்பதும், ஆகவே “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்” தொடர்ந்து ஊழியஞ் செய்ய வேண்டும் என்பதை பவுல் அவருக்கு வலியுறுத்துவதையும் பார்க்கலாம் (2 தீமோ. 4:2).

இந்தப் பகுதியிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு நடைமுறை சத்தியம் சற்று ஆச்சரியமளிப்பதாக இருந்தாலும் அது மிகவும் உயர்வானது. சுயக்கட்டுப்பாடு அல்லது சுய ஒழுக்கம் என்பது நம்மை எளிதில் வாட்டக்கூடிய பயத்திற்கும் கவலைக்குமான ஒரு சிறந்த தீர்வாகும். ஏனெனில் சுயக்கட்டுப்பாட்டின் உண்மையான இரகசியம், அவருடைய ஜனங்களாகிய நம்முடன் தேவனுடைய பிரசன்னமும் வல்லமையும் இருப்பதை வெளிப்படுத்துகிறது; எனவே இதை உண்மையிலேயே  ‘தேவ-கட்டுப்பாடு’ (God-discipline) என்றழைப்பதே தகும். தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய ஆவியால், இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாகவும், கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நமக்குள்ளும் காணப்படுவதாலும் (பிலி. 2:5) நம்முடைய ஒவ்வொரு சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியான விதத்தில் வழிநடத்தப்பட்டு தேவ வல்லமையினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பால் யூலெட்

பால் யூலெட்

Rev. Paul Yeulett - : Rev. பால் யூலெட் லண்டனில் உள்ள குரோவ் சுவிசேஷ திருச்சபையில் (Grove Chapel) போதகராக இருக்கிறார்.