
சட்டரீதியான மனப்பான்மை (Legalism) கொள்ளாமல் பரிசுத்தத்தை அடைவது எப்படி?
30-07-2026
சுய ஒழுக்கம் என்றால் என்ன?
06-08-2026ஒரே கடவுள் கொள்கை என்றால் என்ன?
‘மனிதர்கள் எப்போதும் மதங்களின் மீது பற்றுக் கொண்டவர்கள். இந்த உலகில், மக்கள் பிரபலமான மதங்களில் ஒன்றையோ அல்லது இவைகளில் இருந்து பிரிந்து சென்ற எண்ணற்ற பிரிவுகளையோ அல்லது இன்னும் ஆவணப்படுத்தப்படாத மத அமைப்புகளையும் பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு மதமும், நாம் “இறுதி யதார்த்தம்” என்று அழைக்கக்கூடிய, அதாவது இருக்கும் அனைத்திற்கும் மூலக்காரணமான ஏதோ ஒன்றுடன் ஒருவகையான ஒற்றுமையை நாடுகிறது. இது பல நாடுகளில் உள்ள மதங்களை போல உருவம் இல்லாமையிலோ அல்லது ஒரு தனிப்பட்ட கடவுளை, கடவுள்களை வணங்கும் மதங்களில் உள்ளதுபோல உருவம் கொண்டத்கவோ உள்ளது.
தங்களின் சொந்த விருப்பத்தின்படி அவர்களுக்கு உண்மையென்று தோன்றுகின்ற கடவுளை வழிபடும் மதங்களை நாம் இவ்வாறு வகைப்படுத்த முடியும்: ஒரே கடவுள் என்ற கொள்கை (monotheism), அநேக கடவுள்களின் இருத்தலை மறுதலிக்காத ஆனால் அவற்றில் ஒரு கடவுளின் வழிபாட்டின் கொள்கை (henotheism) மற்றும் அநேக கடவுள்களை வழிபடும் கொள்கை (polytheism).
இறைக் கொள்கைகளின் வகைகள்
ஒரே கடவுள் என்ற கொள்கையை (monotheism) நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால், அதன் விளக்கத்தையும் அதோடு கூட கடவுளைப் பற்றிய மற்ற நம்பிக்கைகள் என்ன கூறுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இந்த வார்த்தையானது (monotheism) monos என்றால் “ஒன்று” மற்றும் theos என்றால் “கடவுள்” என்று பொருள்படுகிறது. அதாவது, ஒரு ஒரு தேவன் மட்டுமே இருக்கிறார் அவர் ஒருவரே ஆராதிக்கப்படக்கூடியவர் என்று அர்த்தம். ஒரு கடவுள் கொள்கையைக் கொண்ட மதங்களில் மிகவும் அறியப்பட்டவை, ஆபிரகாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் ஆகியவையே ஆகும்.
பாலிதீய்சம், இந்த வார்த்தையின் கிரேக்க அர்த்தம், “பாலிஸ்” அநேக மற்றும் “தியோஸ்” கடவுள். அதாவது இந்த மதமானது ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபடக்கூடியது. பண்டைய கிரேக்கம் மற்றும் ரோமின் பலதெய்வ மதங்கள், அவற்றின் ஜீயஸ், அதீனா மற்றும் மார்ஸ் உள்ளிட்ட பல கடவுள்கள் பலருக்கும் பரிச்சயமானவை. இன்று இந்து மதத்தின் சில வகைகளிலும், மோர்மோனிசம் என்றும் அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் புனிதர்களின் திருச்சபையிலும் பலதெய்வ வழிபாட்டைக் காண்கிறோம். பலதெய்வ நம்பிக்கைகள் நடைமுறையில் பெரும்பாலும் அநேக கடவுள்களை நம்பினாலும் ஒருதெய்வ வழிபாடு செய்கின்ற ஹேனோதீய்சமாக மாறுகின்றன.
ஹேனோதீய்சத்தை பின்பற்றுகிறவர்கள் மற்ற சிறிய தெய்வங்களின் இருத்தலையும் மறுதலிக்காமல் அதேநேரத்தில் அவர்களுக்கான ஒரே ஒரு தெய்வத்தை மட்டுமே வழிபடுகிறவர்கள். இச்சொல் , ‘ஒன்று’ என்று பொருள்படும் ‘ஹென் ‘ மற்றும் ‘தியோஸ்’ என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவானது . பலதெய்வ வழிபாட்டு மதங்கள், தங்களின் தெய்வங்களில் ஒன்றை மற்ற தெய்வங்களை விட மேலாக வலியுறுத்துவதன் மூலம், பெரும்பாலும் ஒரு கடவுள் வழிபாட்டு மதங்களாக மாறுகின்றன. உதாரணமாக, சில இந்துக்கள் மற்ற தெய்வங்களை விட பிரம்மா, சிவன் அல்லது விஷ்ணுவுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
ஒரு கடவுள் கோட்பாட்டின் வகைகள்
இந்த கொள்கையை பின்பற்றுகிறவர்கள், உலகில் ஒரே ஒரு மெய்யான கடவுள் இருக்கிறார் என்று நம்பினாலும், இவர்கள் எல்லாரும் அந்த கடவுள் யார் என்பதையும் அவரின் இருத்தலையும் அறிவதில்லை. முக்கியமாக, இரண்டு வகையான மோனோதீய்சம் உள்ளன: திரித்துவத்தை நிராகரிக்கும் இறையியல் கொள்கை (Unitarianism), திரயேக கடவுளை விசுவாசிக்கும் இறையியல் கொள்கை (Trinitarianism).
கடவுளை கடவுளாக காண்பிக்கும் ஒரே ஒரு தெய்வீக தன்மை உள்ளது என்பதையும், அந்த தெய்வீக தன்மைக்குள் ஒரே ஒரு தெய்வீக நபர் மட்டுமே உள்ளார் என்பதையும் Unitarianism நம்புகிறது. யூதமதமும், இஸ்லாமிய மதமும் இந்த பிரிவினருக்கான உதாரணமாகும். இந்த இரண்டு மதங்களிலும், கடவுள் ஒருவரே. அவர் ஒருவரே எல்லாம் உண்டாகிறதற்கு முன்பாக இருக்கிறவர் என்பதை நம்புகிறார்கள். படைப்பிற்கு முன்பு அவர் யாருடனும் உறவில் இருக்கவில்லை, ஏனெனில் அவருடன் உறவாடுவதற்கு வேறு எதுவும் அப்போது இருக்கவில்லை. எனவே, மற்ற நபர்களுடன் அன்பு மற்றும் ஐக்கிய உறவில் இருப்பது கடவுளின் இயல்புக்கு அடிப்படையானதல்ல. இதன் விளைவாக, இஸ்லாம் போன்ற மதங்கள், மனிதர்கள் கடவுளுடன் தனிப்பட்ட உறவில் இருக்க முடியும் என்பதை போதிப்பதில்லை. அவர் மிகவும் மேலானவராகக் கருதப்படுவதால், அவர் தனது படைப்பை எந்த அர்த்தமுள்ள வகையிலும் நெருங்க மாட்டார் என்று அடிக்கடி பார்க்கப்படுகிறார்.
பரிசுத்த திரியேக தேவனே ஒரே மெய்யான தேவன் என்பதை நாம் அறிவோம்.
அதே நேரத்தில், திரியேக விசுவாசம் என்பது ஒரே ஒரு தெய்வீக தன்மை உள்ளது, அந்த தன்மையில் ஒரே தேவன் ஆனால் மூன்று நித்தியமான வெவ்வேறு ஆள்தத்துவமுள்ள நபர்கள் இருக்கிறார்கள் என்பதை கூறுகிறது. இந்த கோட்பாடு, பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்களில் ஒரே கடவுள் இருக்கிறார் என்று அறிக்கையிடும் உண்மையான கிறிஸ்தவத்திற்கே உரிய தனித்துவமான ஒன்றாகும். மூவரும் ஒரே மெய்க் கடவுளாக இருப்பதால், ஒவ்வொரு நபரும் தெய்வீக சாராம்சத்தை முழுமையாகக் கொண்டுள்ளார். ஒவ்வொரு நபரும் கடவுளின் மூன்றில் ஒரு பங்காக இருந்து, மூவரையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒரே கடவுளைப் பெறலாம் என்பது போன்றதல்ல. மாறாக, ஒவ்வொரு நபரும் உண்மையாகவே முழுமையான கடவுள், மேலும் ஒவ்வொரு நபரும் தமது பண்புகளில் மற்றவர்களுடன் ஒத்திருக்கிறார். எனவே, பிதாவின் வல்லமை குமாரனின் வல்லமைக்கு ஒத்ததாகவும், குமாரனின் வல்லமை பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு ஒத்ததாகவும் இருக்கிறது. பிதாவின் அறிவு குமாரனின் அறிவுக்கு ஒத்ததாகவும், குமாரனின் அறிவு பரிசுத்த ஆவியின் அறிவுக்கு ஒத்ததாகவும் இருக்கிறது. இது அனைத்து தெய்வீகப் பண்புகளுக்கும் உண்மையாகும்.
ஒரே கடவுளின் மூன்று ஆட்களும் சாராம்சத்தில் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட பண்புகள் அல்லது தோற்ற உறவுகள் என்று அழைக்கப்படுபவற்றின் அடிப்படையில் வேறுபடுகிறார்கள்—மேலும் இதுவே அவர்கள் வேறுபடும் ஒரே வழியாகும். பிதா நித்தியமாகப் பிறவாதவர், குமாரன் நித்தியமாகப் பிதாவினால் பிறந்தவர், மற்றும் பரிசுத்த ஆவியானவர் நித்தியமாகப் பிதாவிடமிருந்தும் குமாரனிடமிருந்தும் புறப்படுகிறார். இந்தப் பண்புகள் சாராம்சத்தைப் பிரிக்காமல் ஆட்களை வேறுபடுத்துகின்றன. இதன் விளைவாக, கடவுள், நித்திய காலத்திலிருந்தே, ஒரே சாராம்சத்தில் மூன்று ஆட்களாக இருந்து வருகிறார், மேலும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் நித்தியமாக ஒருவரையொருவர் நேசித்துள்ளனர். கடவுள் மேலானவர், அதனால் நம்மிடமிருந்து மிகவும் வேறுபட்டவர், ஆனால் அவர் இயல்பிலேயே உறவு சார்ந்தவர் மற்றும் நமக்கு அருகில் வரத் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்துள்ளார். பிதா தம்முடைய ஒரேபேறான குமாரனைப் பரிசுத்த ஆவியின் வல்லமையில் ஒரு மனித இயல்பை ஏற்க அனுப்பியபோது அவர் நமக்கு மிகவும் அருகில் வந்தார். இந்தக் குமாரனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மெய்யாகவே கடவுளாகவும் மெய்யாகவே மனிதனாகவும் இருக்கும் ஒரே நபர்.
முடிவு
ஒரே ஒரு மெய்யான கடவுள் இருக்கிறார் என்று இந்த மோனோதீய்சம் கூறுகிறது, ஆனால் வெவ்வேறு ஒருதெய்வ மதங்கள் இந்த ஒரே மெய்யான கடவுளைப் பற்றி வெவ்வேறு புரிதல்களைக் கொண்டுள்ளன. ஒரே மெய்யான கடவுள் உண்மையில் பரிசுத்த திரித்துவமே என்று நாம் அறிவோம். மெய்யான கடவுள் சாராம்சத்தில் ஒருவராகவும், ஆள்வடிவில் மூவராகவும் இருக்கிறார். பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவர். கிறிஸ்தவர்கள் இந்த ஒரே கடவுளின் திரித்துவ நாமத்தில் ஞானஸ்நானம் பெறுகிறார்கள், அதனால் அவர்கள் அவரை என்றென்றும் மகிமைப்படுத்தி அனுபவிப்பார்கள் (மத்தேயு 28:18–20).கிருபையினாலும் ஆவியானவராலும் நம்மை வழிநடத்துவாராக.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


