
எஸ்றா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான காரியங்கள்
10-04-2025
மல்கியா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான சத்தியங்கள்
17-04-20251 பேதுரு நிருபத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்

டெரெக் தாமஸ்
கிறிஸ்தவர்களுக்கு பேதுருவின் முதலாம் நிருபத்தை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான காரியமாகும். இந்நிருபத்தை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1.இதன் ஆசிரியராகிய பேதுரு இயேசுவினால் பிரித்தெடுக்கப்பட்டு, “கல் அல்லது பாறை” என்று அழைக்கப்பட்டவன் (மத் 16:28), இந்நிருபத்தில் அதற்கான உருவகங்களை பயன்படுத்துகிறார்.
உண்மைதான், இந்த வசனத்தைப்பற்றியும், இதன் மூலம் அவர் எதை விவரிக்கிறார் என்பதைப் பற்றியும் சில விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால் இயேசு பேதுருவைப் பார்த்துதான் பேசுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பேதுரு, இயேசுவை “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கை செய்தார் (மத் 16:16). பாறைகள் மற்றும் கற்கலால் பேதுரு ஈர்க்கப்பட்டார் என் ஒருவர் நினைக்கலாம், அப்படியிருக்குமானால் பேதுரு தனது முதல் நிருபத்தில் பாறைகள் அல்லது கற்களைக் குறிப்பிட்டு அதைப்பற்றி எழுதுவது மிகவும் சுவாரசியமான ஒன்று (1 பேதுரு 2:4-8). பாறைகள் அல்லது கற்களைப் பற்றி, ஏசாயாவிலிருந்தும், ஹலால் சங்கீதங்களிலிருந்தும் (113-118) உள்ள மிக முக்கிய மூன்று பகுதிகளை பேதுரு குறிப்பிடுகிறார்.
இயேசுவை பற்றி முன்னறிவிக்கும், “இதோ மூலைக்கல்லை சீயோனிலே வைக்கிறேன்.” என்றும் மற்றும் , “வீடு கட்டுகிறார்கள் ஆகாதென்று தள்ளின மூலைக்கல்” (ஏசாயா 28:16, சங் 118:22) என்றும் மற்றும் “இடறுதற்கேதுவான கல்” (ஏசாயா 8:14-15) என்றும் பேதுரு மேற்கோள்களைக் காட்டுகிறார். இந்த கல் “விலையேறப்பெற்றதும், மனுஷரால் தள்ளப்பட்டதும், தேவனால் தெரிந்துக்கொள்ளப்படடதுமான” கல்லாகிய கிறிஸ்துவே (1 பேதுரு 2:4).
கிறிஸ்தவர்கள் தாங்கள் “ஜீவனுள்ள கற்கள்” என்றும் கிறிஸ்து மூலைக்கல்லாக இருந்து தான் கட்டிக் கொண்டிருக்கும் தனது சபையில், அவர்களை கவனத்தோடும், பாதுகாப்போடும் இணைத்திருக்கிறார் என்பதையும் புரிந்துக் கொள்ளவேண்டும் என்று பேதுரு விரும்புகிறார். இந்த கட்டடமாகிய சபை, “பாதாளத்தின் வாசல்கள் இதை மேற்கொள்வதில்லை” (மத் 16:18) என்ற வாக்குத்தத்தோடு நிலை நிற்கிறது.
2. மிக முக்கியமாக, கிறிஸ்தவ வாழ்வின் அமைப்பைப் பற்றி பேதுருவின் முதலாம் நிருபம் அக்கறைக் கொள்கிறது.
கிறிஸ்தவர்கள், “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினாலே, கீழ்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தந்தெளிக்கபடுதலுக்கும்” தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் (1:2) என்று பேதுரு தனது நிருபத்தை துவங்குகிறார். “பரிசுத்த குறியீடு” என அழைக்கப்படும் “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்பதை லேவியராகமத்திலிருந்து, தனது முதலாம் அதிகாரத்திலும், நிருபத்தின் பெரும்பான்மையான வசனங்களிலும் பரிசுத்தமாகுதல் என்றால் என்ன என்பதை பற்றி பேசுகிறார். (1 பேதுரு 1:16, லேவி 11:14, 45, 19:2, 20:7). மீதி பகுதிகளில் பரிசுத்தமாகுதல் எவ்வாறு வெளிப்படுகிறது என்ற நடைமுறை காரியங்களைப் பற்றி பேசுகிறார்: வேலை ஸ்தலம், சமுதாயம், குடும்பம், மற்றும் திருச்சபையில் உள்ள அதிக்ரங்களுக்கு கீழ்படிதல். (1 பேதுரு 2:13-25, 3:1-7, 5:1-11).
வாழ்வின் எல்லா நடைமுறை வழிகளிலும் பரிசுத்தம் வெளிப்படுகிறது. பேதுரு கூறும் சில காரியங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமாக தோன்றலாம், ஆனால் தனது வாசகர்களுக்கு “இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காக பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளை தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரயை பின்வைத்துப்போனார்.” என்பதை நினைப்பூட்டுகிறார். (1 பேதுரு 2:21). கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினால் நம்மை மீட்டுக்கொண்டார் என்ற அறிவு, அவருக்காக நாம் எதிர்கொள்ளவேண்டிய கடினமான சூழ்நிலைகளுக்குள் சிலுவையைச் சுமக்க நமக்கு உதவிச் செய்கிறது.
3. 1 பேதுரு நேர்மையுடைய நிருபம்.
பேதுரு தனது செய்திகளை உணர்ச்சிகளினால் மூடி மறைக்கவில்லை, மாறாக கிறிஸ்தவ வாழ்க்கை என்பது “போர்” நிறைந்ததாகவும், அதில் நாம் அந்நியர்களும் பரதேசிகளுமாய் இருக்கிறோம் என்பதை நினைப்பூட்டுகிறார். (1 பேதுரு 2:11). கிறிஸ்தவர்கள் சில நேரங்களில் தீமையினிமித்தம் பாடுபடலாம், ஆனால் நீதியினிமித்தமும் பாடுபட அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (1 பேதுரு 3:13-14,17). கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் அறியாதவர்களுக்கு, நன்மையான காரியங்கள் சில நேரங்களில் குற்றமாக காணப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம், கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கவேண்டும். (1 பேதுரு 3:15). நாம் கிறிஸ்துவை ஆண்டவராக ஆராதிக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது, போர்க்களத்தில் நாம் நிற்கையில் சரியான முடிவுகளை செய்யவும், சரியான வார்த்தைகளை பயன்படுத்தவும் நமக்கும் உதவும். (1 பேதுரு 4:12-19) ல் கிறிஸ்தவர்கள் சந்திக்க நேரிடும் பாடுகளை குறிப்பிட்டு, “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” இருங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார்.
(1 பேதுரு 4:12).
ரோமர் 5 ல் பவுலின் வார்த்தைகளைப் போலவே, பேதுருவின் வார்த்தைகளும், உபத்திரவங்களில் விசுவாசிகள் சந்தோஷமடைவதற்கு அழைக்கிறது (1 பேதுரு 4:13, ரோமர் 5:3). பேதுருவின் மனதில் உள்ள பாடுகளை பற்றிய காரியங்கள் நமக்கு அர்த்தமற்றதாக தோன்றும், அதாவது நாம் தீமை செய்து பாடுபடலாம், ஆனால் கிறிஸ்தவர்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து இயேசுவைப் பற்றி பயபக்தியுடனும் பிரமிப்புடனும் பேசும்போது அனுபவிக்கும் துன்பங்களை பற்றியே பேதுரு பேசுகிறார்: “ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.” (1 பேதுரு 4:16). பேதுரு பின்வரும் ஆலோசனையை அளிக்கிறார்: “ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.”
1 பேதுரு 4:19.
கிறிஸ்தவர்கள் எவ்வித துன்பமும் இல்லாத பஞ்சு மெத்தை போன்ற வாழ்க்கைக்கு அழைக்கப்படுவதில்லை, மாறாக “கீழ்படிதலின்” வாழ்க்கைக்கே அழைக்கப்படுகிறார்கள். (1 பேதுரு 1:2). அநேக நேரங்களில் கீழ்படிதல் வலிமிகுந்ததாகவும், இழப்புகள் நிறைந்ததாகவும் இருக்கலாம், ஆனால் இவ்வித பாடுகளானது ஆவிக்குரிய பரீட்சையாக உள்ளது:”அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.”
1 பேதுரு 1:7
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.