
யோனா புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
08-04-2025
1 பேதுரு நிருபத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
15-04-2025எஸ்றா புத்தகத்திலிருந்து அறிய வேண்டிய 3 பிரதான காரியங்கள்

எஸ்றா புத்தகமும், நெகேமியா புத்தகமும் சேர்ந்து, இஸ்ரவேலின் நூறு ஆண்டுகால வரலாற்றை நமக்கு விவரிக்கிறது. இதில் கி.மு. 538 இல், யூதர்கள் தங்கள் சுய தேசமான எருசலேம் மற்றும் யூதேயாவுக்குத் திரும்பும்படி கோரேஸ் ராஜாவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முதல், கி.மு. 433–432 இல் நெகேமியா எருசலேமுக்கு திரும்பிய காலம் வரைக்கும் நடந்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. கி.மு. 538–515 (எஸ்றா1–6) மற்றும் கி.மு. 458–433 (எஸ்றா 7–நெகே. 13) ஆகிய இரண்டு முக்கிய காலகட்டத்தை மையமாகக் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளது. முந்தைய கால கட்டமானது தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதை பற்றி விவரிக்கிறது. பிந்தைய கால கட்டமானது, எஸ்றாவின் தலைமையின் கீழ் நியாயப்பிரமாணத்தின் மூலமாக மக்களை சீர்திருத்துவதையும் மற்றும் நெகேமியாவின் தலைமையின் கீழ் எருசலேமின் மதில் சுவரை மீண்டும் கட்டி எழுப்புவதையும் மையமாகக் கொண்டுள்ளது. இந்தக் கால கட்டத்தினுடைய நிகழ்வுகள் தேவனின் உடன்படிக்கையை திரும்பவும் நமக்கு நினைவுப்படுத்தி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவினுடைய வருகைக்கு உலகை தயார்படுத்துவதாயிருக்கிறது.
எஸ்றா புத்தகத்தைப் பற்றி சிந்திக்கும்போது, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான விஷயங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
1. தேவனுடைய ஜனங்களுக்கு விடுதலையின் வருஷத்தை அறிவித்த கோரேசை விட மிகப்பெரிய மற்றும் கிருபையுள்ள ராஜா ஒருவர் இருக்கிறார்.
எஸ்றா புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களில், தேவனுடைய ஜனங்கள், தங்கள் பாவத்தின் காரணமாக அந்நிய தேசத்தில் எழுபது ஆண்டுகளாக எவ்விதம் காணப்பட்டார்கள் என்கிற கால பின்னணியை பார்க்கிறோம். ஆனால் தேவன், ஒரு புறஜாதி ராஜாவால் அழிக்கப்பட்ட தன்னுடைய ஆலயத்தை கட்டும்படியாய் தம்முடைய ஜனங்களை உற்சாகப்படுத்தும்படி, ஒரு பாரசீக ராஜாவின் இருதயத்தில் செயல்படுகிறதை பார்க்கிறோம். இது ஒரு அற்புதமான வரலாற்று சரித்திரம். ஏனென்றால், யூத வரலாறு பேரழிவு மற்றும் உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களால் நிரம்பி வழிகிறது. உதாரணமாக, பேரழிவு மற்றும் மகிழ்ச்சி; பயம் மற்றும் விசுவாசம்; கடினமான சூழ்நிலைகள் மற்றும் நம்பிக்கை; தடைகள் மற்றும் மீட்பு; துன்பம் மற்றும் இரட்சிப்பு; நடுக்கம் மற்றும் நம்பிக்கை; கவலை மற்றும் ஆச்சரியமான ஆறுதல் போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.
கோரேசையும், திரும்பி வந்த தன்னுடைய ஜனங்களையும் சரியான நேரத்தில் சந்தித்த அதே கர்த்தர், “நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அனுகிரக வருஷத்தை பிரசித்தப்படுத்தவும் “(லூக்கா 4:18-19) சரியான நேரத்தில் தனது குமாரனையும் அனுப்பினார். உங்களுடைய இன்றைய ஒவ்வொரு சூழலிலும் தேவன் உங்களை கண்காணிக்கிறவராக இருக்கிறார். அவர் உங்களை சரியான நேரத்தில், சரியான இடத்தில் வைத்திருக்கிறார். இப்போதும் கூட அவர் உங்களுடைய ஒவ்வொரு பாடுகளையும் பயன்படுத்தி, தன்னுடைய அன்பின் கரங்களால் உங்களை இழுத்து, தம்முடைய மகத்தான நாமத்துக்கு மகிமையை வர பண்ணுகிறவராய் இருக்கிறார் என்பது உங்களை நம்பிக்கையோடு முன்னோக்கி நடக்க வழி நடத்தட்டும். கிறிஸ்துவில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை நம்முடைய இருதயத்தில் உணர்ந்து, மனப்பூர்வமாக சேவை செய்யவும், நம்மை இழந்து கொடுக்கவும் அர்ப்பணம் செய்வோம். அவர் ஒருவரையே ஆராதித்து அவருடைய மகிமைக்காக உழைப்பதன் மூலமாக தேவன் மீதான நம்முடைய அன்பை நாம் வெளிப்படுத்துவோமாக.
2. மீண்டும் கட்டப்பட்ட தேவாலயமானது, வரவிருக்கும் உண்மையான ஆலயமான இயேசுகிறிஸ்துவின் நிழல் மட்டுமே. தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தேவனுடைய ஜனங்கள் சந்தித்த எதிர்ப்புகள் என்பது கிறிஸ்து எவ்வாறு தனது வாழ்க்கையிலும், ஊழியத்திலும் எதிர்ப்புகளை சந்திக்கப் போகிறார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது.
எஸ்றா புத்தகம், தேவன் தம்முடைய வாக்குத்தத்தை குறித்து எப்படி உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவதன் மூலம் அவருடைய ஜனங்களுக்கான ஆறுதலை அளிக்கிறதாயிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகள், தங்களுடைய கடினமான காலங்களில் எவ்விதமாக தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்கான அறைகூவலாகவும் இருக்கிறது. கண்ணீர் மற்றும் மனச்சோர்வுகளின் மத்தியில், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தனக்காக பாடுபட்ட தன்னுடைய இரட்சகரை நோக்கி பார்த்து, அவர் தமது சர்வமகிமையோடும் வருவதை எதிர்பார்க்கும்படியாய் நம்மை அழைக்கிறது. துன்பத்தின் பள்ளத்தாக்கானது, ஒரு நாள் மகிழ்ச்சிகரமான நித்திய கன்மலையாக மாறும் என்ற நம்பிக்கையோடு, வரவிருக்கும் மகிமையின் தேசத்தில் நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவை அங்கே தரிசிப்போம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. விசுவாசிகள், தேவனுடைய மகிமைக்காக உழைக்கும்போது துன்பத்தை எதிர்பார்க்கிறவர்களாயும் மேலும் சோர்ந்துபோகும் நேரங்களில் அவரைப் பற்றிக் கொள்ளுகிறவர்களாயும் காணப்பட வேண்டும். கர்த்தருடைய பணியைச் செய்பவர்களுக்கு நாம் மகிழ்ச்சியுடன் நம்முடைய சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். கிறிஸ்துவின் நாமத்திற்காக சேவை செய்ய அவருடைய பிள்ளைகளோடு சேர்ந்து தங்களுடைய பங்களிப்பையும் அளிக்க வேண்டும். மேலும், தேவ ராஜ்ஜியத்தில் ஊழியத்தின் நிமித்தமாக கடுமையான சவால்களை சந்திக்கிற அவருடைய பிள்ளைகளுக்காக ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். மேலும் சுவிஷேச பணியில் ஈடுபடுகிறவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
3. தேவன் தன்னுடைய மகிமைக்காகவும், மீட்பின் நோக்கத்திற்காகவும் எல்லா காரியங்களையும் தமது பராமரிப்பின் செயல்கள் மூலம் திட்டம் பண்ணுகிறவராக இருக்கிறார்.
பாபிலோனில் அடிமைகளாயிருந்து திரும்பி வந்த யூதர்கள் சாதகமற்ற சூழ்நிலையின் காரணமாக ஆலயம் கட்டுகிறதை விட்டு விட்டனர். ஆனால் தேவனுடைய தீர்க்கதரிசிகள் அவருடைய வார்த்தையை அவர்களுக்கு நினைவுபடுத்தினர். நான்கு வருடத்திற்குள் தேவன் தமது ஆலயத்தை கட்டி முடிக்கப்பட்டு, ஆலய ஆராதனையை மீண்டும் நடைபெறுவதற்கான எல்லா நிகழ்வுகளையும் திட்டம் பண்ணியிருந்தார். இது தேவனுடைய இறையாண்மை, அவருடைய உன்னதமான கிருபை மற்றும் மகிழ்ச்சியின் ஒரு சரித்திர நிகழ்வாகும். ஆகவே, தேவன் நம்மை அழைத்த அழைப்பிற்கான நோக்கத்திற்கு தடைக்கற்கள் ஏற்பட்டு நாம் சோதிக்கப்படும் போது, நாம் தேவனுடைய வார்த்தையில் அடங்கியுள்ள சத்தியத்தை நினைவு கூர்ந்து, தேவன் தன்னுடைய தீர்மானத்தின்படி எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக, அவருடைய மகிமைக்காக நடத்துகிறார் என்ற நம்பிக்கையோடும், சந்தோஷத்தின் முழு நிச்சயத்தோடும், நாம் கிறிஸ்துவில் நிலைபெற்று அவருடைய எல்லா வழிகளிலும் நடக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நம்முடைய சந்தோஷத்தின் நிறைவானது, கிறிஸ்துவோடு நாம் நெருங்கி வாழ்வதிலும், அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதன் மூலமாகவுமே வருகிறது. இப்படிப்பட்ட சத்திய வெளிச்சத்தின் அடிப்படையில், வேத வார்த்தைகள் மற்றும் ஜெப சிந்தையுடன், தேவனுடைய ராஜ்ஜியத்திற்காக உழைக்கிறவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். தேவன் நமக்கென்று விடுத்த அழைப்பின் பாதையில், விடாமுயற்சியுடன் பணி செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும். கிறிஸ்துவில் நிலைத்திருப்பதே உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என்பதை அறிந்து அவருடைய பிள்ளைகளோடு பொது ஆராதனையில் நாம் தொடர்ந்து பங்குபெறுகிறவர்களாயும் இருக்க வேண்டும்.
எஸ்றா என்னும் வேதபாரகன் எருசலேமுக்கு திரும்பி பயணத்தை மேற்கொண்டு மக்களை சரிபடுத்தின பின்பு, கிட்டத்தட்ட சில நூறு வருடங்களுக்கு பிறகு, மற்றொரு பிரதான ஆசாரியன் எருசலேமுக்கு பயணம் செய்தார். ஆனால் இந்த ஆசாரியன் வெளிப்புற மாற்றத்தையல்ல, எஸ்றாவைக் காட்டிலும் மேலாக தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்து, தேவனுடைய ஜனங்களை மீட்கும்படியாக, பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தார். அவரது பலியே, இறுதியானதும், பரிபூரணமானதுமாக சிலுவையில் செய்து முடிக்கப்பட்டதால், தேவனுடைய கிருபாசனத்தண்டையில் நம்பிக்கையோடு செல்லவும், தேவன் நம்மை பாதுகாத்து, நம்மை பராமரித்து, அவருடைய முழுமையான நோக்கத்தை நமக்குள்ளாக நிறைவேற்றும்படியாய் தைரியத்தோடு அவரிடத்தில் நாம் கிட்டி சேரும் சிலாகியத்தையும் பெற்றிருக்கிறோம். நம்முடைய ஆசாரியரும், ராஜாவுமாகிய கிறிஸ்து, நம்மை அழைத்திருக்கும் இந்த நல்ல பணியை அவருடைய தெய்வீக பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சிறப்பான வழி நடத்துதல் மூலமாக தொடர்ந்து செய்வதற்கு எஸ்றா புத்தகம் நம்மை ஊக்குவிக்கிறது.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.