Contemporary Challenges to Christian Soteriology

இரட்சிப்பியலுக்கான இன்றைய சவால்கள்

26-05-2026
Contemporary Challenges to Christian Soteriology

இரட்சிப்பியலுக்கான இன்றைய சவால்கள்

26-05-2026

ரோமன் கத்தோலிக்க குருத்துவ இரட்சிப்பியல் கோட்பாட்டின் வளர்ச்சி

The Development of Roman Catholic Sacerdotal Soteriology

ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் நடந்த பல இறையியல் ஆலோசனைக் கூட்டங்கள் மூலமாக, பெலஜியன் சர்ச்சை அதிகாரப்பூர்வமாக அகஸ்டினுக்கு ஆதரவாக தீர்த்து வைக்கப்பட்டது. அதாவது ஆதாமின் பாவம் அவனுடைய சந்ததியினர் அனைவரையும் பாதித்தது என்பதும், இரட்சிப்பு என்பது கடவுளின் கிருபையினால் மட்டுமே சாத்தியம் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது. பெலஜியனிசம் (Pelagianism) மற்றும் அரை-பெலஜியனிசம் (semi-Pelagianism) ஆகிய இரண்டுமே கண்டனம் செய்யப்பட்டன. துரதிஷ்டவசமாக, திருச்சபையின் அதிகாரப்பூர்வ பிரகடனங்கள் இருந்தபோதிலும், அதன் கோட்பாடுகளை மீண்டும் ஒரு அரை-பெலஜியன் திசையை நோக்கி தள்ளிய சில சிந்தனை ஓட்டங்கள் திருச்சபைக்குள் எப்போதும் இருந்தன.

உதாரணமாக, புதிய பிளேட்டோனியம் (Neoplatonism), என்ற கொள்கை  மனிதனின் இரட்சிப்பை பல்வேறு துறவற நடைமுறைகளின் மூலம் ஆன்மா கடவுளை நோக்கி மேலேறுவதாகக் கருதியது. இத்தகைய கருத்துக்கள் கிறிஸ்தவ துறவற மடங்களில் ஆழமாக வேரூன்றின; கிறிஸ்தவ கோட்பாடுகளின் வளர்ச்சியில் இவற்றின் இறையியல் தாக்கம் மிகவும் ஆழமானதாக இருந்தது. இக்கருத்துக்கள் அகஸ்டின் மற்றும் சூடோ-டியோனிசியஸ் (Pseudo-Dionysius) போன்ற மிகப்பெரிய செல்வாக்கு மிக்க இறையியலாளர்களின் எழுத்துக்களிலும் காணப்படுகின்றன.

சீர்திருத்தக் காலத்தின்போது, பெலஜியனிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பெற்ற நன்மைகள் பல இழக்கப்பட்டுவிட்டன. கடவுளின் கிருபையை விட தனிமனித தகுதியை அதிகம் சார்ந்திருந்த, இரட்சிப்பிற்கான ஒட்டுமொத்த திருச்சபை-குருத்துவ கட்டமைப்பு (ecclesio-sacerdotal system) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

இதில் ரோமன் கத்தோலிக்க இரட்சிப்பியல் கோட்பாட்டை (soteriology) புரிந்துகொள்வது அவசியமானது. சீர்திருத்தக் திருச்சபையின் இரட்சிப்புக் கோட்பாடு எத்தகைய ஒரு இறையியல் அமைப்பிலிருந்து உருவானது மற்றும் அது எதற்குப் பதிலளித்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல், சீர்திருத்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

ரோமன் கத்தோலிக்க இரட்சிப்புக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள, நாம் ஆதாமின் காலத்திற்கு பின்னோக்கிச் செல்வது அவசியமாகிறது. ரோமன் கத்தோலிக்க இறையியலின்படி, ஆதாம் நல்லவனாகவே படைக்கப்பட்டான், மேலும் அவனால் தனது இயல்பான இலக்குகளை அடைய முடிந்தது. ஆனால் ஆதாமால் தனது இயல்பான தன்மையால், தனது இறுதி இலக்கான—அதாவது, கடவுளை நேருக்கு நேர் காணும் பாக்கியத்தை (beatific vision) அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடைய, ஆதாம் இயல்பான வாழ்வின் நிலையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வின் நிலைக்கு உயர்த்தப்பட வேண்டியிருந்தது. பாவமான ஆசைகளைக் கட்டுப்படுத்த அவனது பகுத்தறிவைப் பயன்படுத்தும் சிறப்புத்திறன் அவனுக்கு வழங்கப்பட வேண்டியிருந்தது. இது, மனித இயல்புக்கும் அப்பாற்பட்ட தூய்மையாக்கும் கிருபையை (sanctifying grace) கடவுள் ஆதாமுக்குக் கொடையாக அளித்ததன் மூலம் சாத்தியமானது. எனவே, இது ஒரு “கூடுதலாக அளிக்கப்பட்ட” கொடை ஆகும். இது ஆதாமின் மனித இயல்பை உயர்த்தியது மற்றும் அவனைக் கடவுளோடு இணைத்தது. இது அவனது இறுதி இலக்கிற்கான தகுதியைப் பெறும் திறனை அவனுக்கு அளித்தது.

ஆதாம் பாவம் செய்தபோது, அவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்த தெய்வீக நிலையிலிருந்து வீழ்ந்தான். அந்த வீழ்ச்சி, கூடுதலாக அளிக்கப்பட்ட கிருபையின் கொடையை இழக்கச் செய்தது; ஆனால் அது அவனது மனித இயல்பை முழுமையாக அழித்துவிடவில்லை. திருச்சபை வரலாற்று இடைக்காலத்தில், ஆதாமின் மனித இயல்புக்கு, குறிப்பாக அவனது பகுத்தறிவு மற்றும் விருப்ப ஆற்றல்களுக்கு (reason and will) ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தன. சிலர், அவனது மனித இயல்பு சிறிதும் சேதமடையவில்லை என்றும், கிருபையின் கொடை வழங்கப்படுவதற்கு முன்பு ஆதாம் எந்த நிலையில் படைக்கப்பட்டானோ, அதே நிலைக்கு அவன் திரும்பினான் என்றும் கூறினர். மற்றவர்கள் அவனது இயல்பு காயம்பட்டதாக வாதிட்டனர். எப்படி இருந்தாலும், ஆதாமின் சந்ததியினர் இந்த வீழ்ச்சியடைந்த நிலையிலேயே பிறக்கிறார்கள்.

இறையியலில், ஒருவர் எதைப் பிரச்சனையாகப் பார்க்கிறாரோ, அதுவே தீர்வின் தன்மையையும் தீர்மானிக்கும். எனவே, ஒருவருடைய இரட்சிப்புக் கோட்பாடு என்பது பெரும்பாலும் அவருடைய நம்பிக்கைகளான படைப்பு, பாவம் மற்றும் வீழ்ச்சியின் விளைவுகள் பற்றிய கோட்பாட்டைப் பொறுத்தே அமைகிறது. இடைக்கால ரோமன் கத்தோலிக்கர்கள் மனிதனின் பிரச்சனையைத் தூய்மையாக்கும் கிருபையின் கொடையை இழந்ததாகப் பார்த்ததால், அவர்கள் இரட்சிப்பை அந்தக் கொடையை மீண்டும் பெறுவதாக இயல்பாகவே கருதினர். எனவே, ரோமன் கத்தோலிக்க அமைப்பில் இரட்சிப்பு என்பது, வீழ்ச்சியடைந்த மனிதர்கள் மீண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு உயர்த்தப்படுவதை உள்ளடக்கியது. இது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது? ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருவருட்சாதனங்கள் (sacraments) மூலமாக. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் திருவருட்சாதனங்கள் பற்றிய அதின் கோட்பாடே, ரோமன் கத்தோலிக்க இரட்சிப்புக் கோட்பாடாகும். இதனால்தான் நான் இதை ரோமன் கத்தோலிக்க திருச்சபை-குருத்துவ இரட்சிப்பு கட்டமைப்பு (“ecclesio” என்பது திருச்சபையையும், “sacerdotal” என்பது திருவருட்சாதனங்களையும் குறிக்கிறது) என்று குறிப்பிட்டுள்ளேன்.

ரோமன் கத்தோலிக்க அமைப்பில், திருமுழுக்கு (baptism – ஞானஸ்நானம்) என்பது ஆதாமின் சந்ததியை, அவன் வீழ்ந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு உயர்த்தும் திருவருட்சாதனம் ஆகும். இது அந்த நபரை கடவுளோடு இணைத்து, அவருடைய எல்லா பாவங்களிலிருந்தும் அவரைத் தூய்மைப்படுத்துகிறது. திருமுழுக்கின் மூலம், தூய்மையாக்கும் கிருபையின் கொடை ஆன்மாவில் பதிக்கப்படுகிறது, மேலும் திருமுழுக்கு பெற்ற நபர் நீதிமானாக்கப்படுகிறார். இந்த தூய்மையாக்கும் கிருபையானது நீதிமானாக்கும் கிருபை (justifying grace) என்றும் அழைக்கப்படுகிறது. இதனால்தான் ரோமன் கத்தோலிக்க இரட்சிப்பு அமைப்பில் திருமுழுக்கு என்பது நீதிமானாக்கப்படுவதற்கான ஒரு கருவியாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

திருமுழுக்கிற்குப் பிறகு, புதிய விசுவாசிக்கு உறுதிபூசுதல் (confirmation – திடப்படுத்துதல்) என்னும் திருவருட்சாதனம் வழங்கப்படுகிறது, இது அவரது தூய்மையாக்கும் கிருபையை அதிகரித்து பலப்படுத்துகிறது. விசுவாசி திருவிருந்து திருவருட்சாதனத்தில் பங்கேற்பதன் மூலமும் தனது தூய்மையாக்கும் கிருபையை அதிகரித்து பலப்படுத்துகிறார். விசுவாசி இந்த உயர்ந்த தூய்மைப்படுத்தல் அல்லது நீதிமானாக்கப்பட்ட நிலையில் இருக்கும் வரை, இறுதியில் இரட்சிப்பைப் பெறுவதற்குத் தேவையான நற்செயல்களை அவனால் செய்ய முடியும். மேலும் ஒருவர் இந்த கிருபையின் நிலையிலேயே இறக்கும் வரை, அவருக்கு நேரிடக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன்பு உத்தரிக்கிற ஸ்தலத்தில் (purgatory) சிறிது காலம் கழிக்க வேண்டியிருக்கும்.

இருப்பினும், ஒரு விசுவாசி சாவுக்கேதுவான பாவம் (ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படும் பாவம்) செய்தால், அந்த நபர் கிருபையின் நிலையிலிருந்து வீழ்கிறார். ஒருவர் இந்த கிருபையின் நிலைக்கு வெளியே இறந்தால், அந்த நபர் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் செல்வதில்லை. மாறாக, நேராக நரகத்திற்கே செல்கிறார். இரட்சிப்பின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், அந்த நபர் மீண்டும் உயர்ந்த கிருபையின் நிலைக்குத் திரும்ப வேண்டும். அந்த நபர் மீண்டும் திருமுழுக்கு பெற வேண்டுமா? இல்லை, ஒரு நபர் ஒரு முறை மட்டுமே திருமுழுக்கு பெற முடியும். அப்படியென்றால் அந்தப் பாவிக்கு எந்த நம்பிக்கையும் இல்லையா? இல்லை, ஏனென்றால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையிடம் இதற்காக மற்றொரு திருவருட்சாதனம் உள்ளது. கிருபையின் நிலையிலிருந்து வீழ்ந்த பாவி திருச்சபையிடம் சென்று ஒப்புரவு அருட்சாதனத்தை (sacrament of penance – பரிகாரம்) பெற வேண்டும். இந்த திருவருட்சாதனத்தின் மூலம், பாவி மீண்டும் நீதிமானாக்கப்பட்ட நிலைக்கு உயர்த்தப்படுகிறார், அங்கு அவர் இறுதி இரட்சிப்பைப் பெறுவதற்குத் தேவையான கிரியைகளைச் செய்ய முடியும்.

சீர்திருத்தக் காலத்தின் போது, இந்த திருச்சபை-குருத்துவ இரட்சிப்பு முறையே மேற்கத்திய திருச்சபையில் ஆதிக்கம் செலுத்தியது. கிறிஸ்தவர்கள் இரட்சிப்பின் நிச்சயமற்ற நிலையிலேயே வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர், தங்களால் தாங்கள் கிருபையின் நிலையில் இருக்கிறோமா என்பதை ஒருபோதும் உறுதியாக அறிய முடியவில்லை. ஒருவர் கிருபையின் நிலையில் இறந்தால் மட்டுமே பரலோகத்திற்குச் செல்ல முடியும் என்பதால், மக்களின் ஆன்மீக வாழ்வில் இதன் சுமை மிகவும் பெரியதாக இருந்தது. நமது அடுத்த கட்டுரையில், ஐரோப்பிய மக்களுக்கு மீண்டும் உண்மையான நற்செய்தியைக் கொண்டு வர உதவிய, சீர்திருத்தவாதிகள் கண்டறிந்த அந்த மாபெரும் கண்டுபிடிப்பைக் குறித்துப் பார்ப்போம்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன்

கெய்த் மேத்திசன் Dr. கெய்த் மேத்திசன் சேன் போர்ட் ல் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பேராசிரியராக உள்ளார். The Lord's Supper உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசிரியருமாவார்.