One Lord
ஒரே தேவன்
20-01-2026
All Truth Is God's Truth
எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே
27-01-2026
One Lord
ஒரே தேவன்
20-01-2026
All Truth Is God's Truth
எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே
27-01-2026

புனிதவெள்ளி ஏன் “புனிதமான” என்று அழைக்கப்படுகிறது?

Why Is Good Friday Called Good?

இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் நினைவுகூரும் புனித வெள்ளி (Good Friday), கிறிஸ்தவ திருச்சபையில் நீண்ட காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேதாகமத்தில் இந்த வார்த்தை குறிப்பிடப்படாததால், திருச்சபை எப்படி இந்த நாளை “புனித வெள்ளி” என்றழைக்க ஆரம்பித்தனர் என்பதில் வரலாற்று சான்றுகள் எதுவும் தெளிவாக இல்லை. சிலர் இதை முதலில் “தேவனின் வெள்ளி” (God’s Friday) என்று அழைத்ததாகவும், பின்னர் அதைத் தழுவி “புனித  வெள்ளி” (Good Friday) என்று பெயரிடப்பட்டதாகவும் வாதிடுகின்றனர். ஆனால் பெரும்பாலான மொழியியலாளர்கள் அந்தக் கோட்பாடு நம்ப முடியாதது என்றே எண்ணுகிறார்கள். “புனித” என்பதன் பழமையான அர்த்தமான “பரிசுத்தமான” (Holy) என்ற பொருளிலிருந்து வந்திருக்கலாம் – அதாவது, “பரிசுத்த வெள்ளி” (Holy Friday) என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

வரலாற்றில் இந்த வார்த்தை எப்படி உண்டாயிருந்திருந்தாலும், கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை நாம் இன்று பார்க்கிற வண்ணமாக அதை  நல்லதாகவே கருதுகிறார்கள். இது சிலருக்குக் குழப்பமாக இருக்கலாம். தங்கள் தலையாகிய கிறிஸ்து  பொல்லாத மதத் தலைவர்களின் கைகளில் பயங்கரமான அநீதியை அனுபவித்து, ரோமர்களால் அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதன்  மூலம் கொலை செய்யப்பட்ட அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஏன் “புனிதமானது” என்று அழைக்க வேண்டும்?

முதலாவதாக பார்க்கும்போது, அந்த நாளில் நன்மையானது எதுவுமே நடைபெற்றதாக தெரியவில்லை. இயேசுவின் சீஷர்கள் அதே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை போன்ற நாட்களில் அவருடைய மரணத்தினிமித்தம்  துக்கமடைந்தபோது, நிச்சயமாக அதை நல்லதாகக் கருதவில்லை. ரோமர்களின் ஆட்சியைத் தூக்கியெறியும் மேசியாவின் ஆட்சிக்காலத்தின் போது  தாங்கள் அதில் முக்கியப் பங்கு வகிப்போம் என்று நம்பித் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுக்கொடுத்த சீஷர்களின் நம்பிக்கைகளும் கனவுகளும் அந்த நாளில் தகர்ந்து போயின. உண்மையில், அந்த இருண்ட நாட்களில் இயேசுவின் மரணம் அவர்கள் வாழ்க்கையின் முடிவாக இருந்திருந்தால், உலகம் கிறிஸ்தவர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக பார்ப்பது சரியானதே  (1 கொரி. 15:17–19).

அப்படியானால், கிறிஸ்தவர்கள் ஏன் புனித வெள்ளியைக் “புனிதமானது” என்று அழைக்கிறார்கள்? இதற்கான விடை என்னவென்றால், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய ஞாயிறு, புனித வெள்ளிக்கு  புதிதான விளக்கத்தை  கொடுத்து, அதை உருமாற்றுகிறது. வேதாகமம் முழுவதும், “நல்லதல்ல” என்று தோன்றிய ஒரு காரியத்தை, தேவன் தம்முடைய சர்வ ஏதாதிபத்தியத்தை பயன்படுத்தி நன்மையானதை  கொண்டுவரப் பண்ணுகிற ஒரு வழிமுறைமையை நாம் பார்க்கலாம்.

உதாரணமாக, ஆதியாகமத்தில் உள்ள யோசேப்பின் சரித்திரத்தைக் கவனியுங்கள். இங்கே யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, ஒரு புறஜாதி நாட்டில் அடிமையாக விற்கப்பட்டு, அதன் முடிவில்  காரியங்கள்  ஒரு வழியாக சாதகமாக நடைபெற ஆரம்பிக்கிறது என்று தோன்றும்போதே, தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுதலையாக்கப்பட்ட ஒரு சக கைதியால் மறக்கப்படுகிறான். இவற்றில் உள்ளார்ந்த நல்ல காரியம் என்று எதுவுமில்லை. யோசேப்பின் சரித்திரத்தின் இந்தப் பகுதிகளை “நல்லதல்ல” என்று முத்திரை குத்துவது நமது இயல்பே. ஆயினும், தேவனுடைய இரகசியமான, ஆனால் அற்புதமான பராமரிப்பில், அவர் இந்த “நல்லதல்ல” என்ற மூலப்பொருட்களிலிருந்து நன்மையானதை உருவாக்குகிறார். யோசேப்பையும், எகிப்தில் அவன் பெற்ற அதிகாரப் பதவியையும் பயன்படுத்தி, யோசேப்பின் குடும்பத்தை மட்டுமல்ல, முழு கோத்திரத்தையுமே பஞ்சத்திலிருந்து  அவர் காப்பாற்றுகிறார். இதை திருப்பிப் பார்க்கும்போது, யோசேப்பு தன்னுடைய சகோதரர்களின் தீமையான துரோகத்தைப் பற்றிக் இவ்வாறு கூறுகிறார் : “நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்” (ஆதி. 50:20, ).

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது நடந்த கொடூரமான சம்பவங்கள் மற்றும் மரணம் போன்றவற்றிற்கும் இந்த சத்தியம் பொருந்தும். அப்போஸ்தலனாகிய பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் செய்த பிரசங்கத்தில் தெளிவாகக் கூறுவதுபோல, இயேசு உண்மையில் “அக்கிரமக்காரருடைய கைகளினால் சிலுவையில் அறையப்பட்டு, கொலை செய்யப்பட்டார்” (அப். 2:23); அவர்கள் “ஜீவாதிபதியைக் கொலை செய்தார்கள்” (அப். 3:15). மானுட கோலத்தை எடுத்த தேவகுமாரானாகிய ஒரு குற்றமற்றவரை தெரிந்தே மரண தண்டனைக்குட்படுத்தியது அந்த ஜனங்களுக்கு பாவமாயிற்று. ஆனால் இந்தச் சம்பவங்கள் அனைத்திலும், தேவன் தம்முடைய சர்வ வல்ல ஏகாதிபத்தியத்துடன் செயல்பட்டு, ஆண்டாண்டு காலங்களாக தீர்க்கதரிசிகள் மூலமாய் உரைக்கப்படும்படியான திட்டத்தையும் வகுத்து, மிகப்பெரிய தீமையிலிருந்து மிகப்பெரிய நன்மையைக் கொண்டுவரத்தக்கதாய்,  இவையெல்லாவற்றையும் நடப்பித்தார். இப்படிப்பட்ட புனித வெள்ளியின் நாளன்று இயேசுவின் மரணத்தின் மூலமாக  தேவன் செய்த நன்மைகள் என்ன?

மனிதகுலம் ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறது  என்பதை வேதாகமம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. நாமெல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையை இழந்துபோனோம் (ரோமர் 3:23). தீமையும் அருவருப்பான இந்த பாவம், மகிமையுள்ள, பூரணமான, பரிசுத்தமான தேவனிடத்திலிருந்து நம்மைப் பிரிக்கிறது; அவர் தம்முடைய நீதி மற்றும் நியாயத்தினால் இந்த பாவத்தை நியாயந்தீர்க்க வேண்டும் (ரோமர் 2:5–6; 5:9–10; 1 தெச. 1:10). தேவனுடைய அன்பிலிருந்து நித்தியமாக பிரிக்கப்பட்ட நிலையில்,  நம்முடைய பாவத்திற்கு எதிரான அவருடைய நீதியான கோபத்தை எதிர்கொள்ளும் நமக்கு, எதிர்காலத்தை பற்றி  என்ன நம்பிக்கை இருக்கிறது? தேவனுடைய பிரசன்னத்தில் நிற்கத் தேவையான நீதியானது நம்மிடம் இல்லை, மேலும் நம்முடைய பாவத்திற்காக நாம் செலுத்த வேண்டிய கடனை நம்மால் ஒருபோதும் செலுத்த முடியாது.

நாமே நமக்காகப் பெற முடியாத இரட்சிப்பை அடைவதற்காக, ஆதி முதல் திரியேக தேவன் வகுத்த மீட்பின் திட்டத்தைத் தவிர வேறு நம்பிக்கை நமக்கில்லை. திரித்துவத்தின் இரண்டாம் நபராகிய தேவ குமாரன், மனித சாயலை எடுத்து, நாம் அனைவரும் வாழத்தவறிய பூரண நீதியான வாழ்க்கையை வாழ்ந்தார். தேவன் வகுத்த திட்டத்தின்படி (அப். 2:23), இயேசு கிறிஸ்து சிலுவையில் யூதத் தலைவர்கள் மற்றும் ரோம போர்ச்சேவகர்களிடத்திலிருந்து அனுபவித்த வேதனையைவிட அதிகமானதை எதிர்கொண்டார். அவருக்கு சொந்தமான எல்லாருடைய பாவத்திற்காகவும் அவர் தேவனுடைய கோபத்தை எதிர்கொண்டு, அதை திருப்திசெய்தார் (ரோமர் 5:9–10; எபி. 2:17; 1 யோவான் 2:2). பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள பலிகள் அனைத்தும் இயேசுவை சுட்டிக் காட்டுகின்றன; அவரே பூரணமான பிரதான ஆசாரியராகவும் மற்றும் பூரணமான பாவபரிகார பலியாகவும் இருக்கிறார் (எபி. 9:12, 26). அவருடைய பூரண வாழ்க்கை மற்றும் பதிலாள் மரணம் ஆகியவை இரட்சிப்புக்காக கிறிஸ்து ஒருவரையே சார்ந்திருக்கும் எல்லாருடைய  பாவங்களுக்கும் எதிரான தேவனுடைய நீதியான கோபத்தையும், நியாயத்தீர்ப்பையும் திருப்திப்படுத்த போதுமானதாய் இருக்கிறது. பூரண நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்து, நம்முடைய பாவத்திற்கான தண்டனையைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார். மேலும், நம்முடைய அநீதிக்காக நித்திய  தண்டனைக்குத் தகுதியான நாம், கிறிஸ்துவின் பூரண நீதியை அவர் மூலமாய் பெற்றுக் கொள்கிறோம்.

ஆகையால், புனித வெள்ளி நன்மையான ஒன்றுதான். ஏனென்றால் தம்முடைய மரணத்தின் மூலம், கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டு அதன் மூலம் நாம் குமாரராக புத்திரசுவிகார பாக்கியத்தையும்  அடையும்படி செய்திருக்கிறார் (கலா. 3:13–14; 4:5). அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்  (1 பேதுரு 2:24). அவருடைய இரத்தத்தினாலே நாம் மீட்பையும் நம்முடைய மீறுதல்களிலிருந்து மன்னிப்பையும் பெற்றோம் (எபே. 1:7). நாம் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டோம் (1 பேதுரு 1:18–19). நாம் நீதிமான்களாக்கப்பட்டோம், தேவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்பட்டோம், மேலும் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோம் (ரோமர் 5:9–10).

மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வானது, அவர் புனித வெள்ளியன்று செய்து முடித்த அனைத்தையும் உறுதிப்படுத்துகிறது; மரணத்திற்கு அவர்மீது எவ்விதமான அதிகாரமும்  இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது (அப். 2:24). உயிர்த்தெழுதலில் அவர் மரணத்தின் மீது பெற்ற வெற்றி, நாம் நீதிமானாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான வல்லமையும் திறமையும் அவரிடத்தில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது (ரோமர் 4:25). உயிர்த்தெழுதல் என்பது  அவர் உண்மையிலேயே தேவன் என்பதை நிரூபிக்கிறது (ரோமர் 1:4). மேலும், கிறிஸ்துவின் பாவநிவாரண பலியால் தேவனுடைய கோபம் உண்மையில் திருப்தி அடைந்தது என்பதையும் நிரூபிக்கிறது. விசுவாசத்தினாலே இச்சத்தியங்களை விசுவாசிக்கும்  அனைவருடைய பாவங்களுக்காகவும் இயேசு தேவனுடைய கோபத்தைச் சுமந்ததால், கிறிஸ்தவர்கள் ஒருபோதும் தங்கள் பாவங்களுக்கு எதிரான தேவனுடைய கோபத்தை எதிர்கொள்ள மாட்டார்கள் அல்லது தேவனிடமிருந்து பிரிக்கப்படமாட்டார்கள் என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் நாம் கிறிஸ்துவின் மரணத்திலும், அவருடைய உயிர்த்தெழுந்த ஜீவனிலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறோம்.

சுருக்கமாக, புனித வெள்ளி மெய்யாகவே நமக்கு நல்ல வெள்ளி தான். ஏனென்றால் இந்த நாளில் மிகப்பெரிய பரிமாற்றம் நடந்தது: “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி. 5:21). அப்படியானால், அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து நாமும், “தேவனுடைய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 9:15) என்று ஆனந்தமாய் இயேசுகிறிஸ்துவை பிரகடனப்படுத்துவோமாக, ஆமென்!.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கரிரி ஹான்
கரிரி ஹான்
கரிரி ஹான் என்பவர் லிகோனியர் ஊழியங்கள் மற்றும் டேபிள்டாக் இதழின் துணை ஆசிரியர் ஆவார். மேலும், இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட வேதாகம ஆலோசகரும் (certified biblical counselor) ஆவார். இவர் எழுதிய புத்தகம்: "லிம்பிங் ஹெவன்வர்ட்: விரிவான மற்றும் நாள்பட்ட துன்பத்தில் விசுவாசத்தால் வாழுதல்" (Limping Heavenward: Living by Faith in Comprehensive and Chronic Suffering) என்பதாகும்.