Adriel Sanchez - 3-Ways-to-Have-a-Better-Prayer-Life
சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்
13-11-2025
What Is Calvinism?
கால்வினிசம் என்றால் என்ன?
20-11-2025
Adriel Sanchez - 3-Ways-to-Have-a-Better-Prayer-Life
சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்
13-11-2025
What Is Calvinism?
கால்வினிசம் என்றால் என்ன?
20-11-2025

ஆவியின் கனி என்றால் என்ன? 

Jonathan Cruse - What-Is-the-Fruit-of-the-Holy-Spirit

Rev.ஜொனாத்தன் லேண்ட்ரி க்ரூஸ்

What Is the Fruit of the Spirit? – Rev. Jonathan Landry Cruse

ஆவியின் கனி என்பது அப்போஸ்தலனாகிய பவுல், கலாத்தியர் 5:22–23-ல் சொல்லிய ஒன்பது நற்குணங்களின் பட்டியலாகும். மனிதனிடத்தில் காணப்படக்கூடிய கோபம், சண்டை, பொறாமை போன்ற  மோசமான மற்றும் பயங்கரமான தோற்றத்தை வெளிப்படுத்தும்  பாவ செய்கைகளின் (“மாம்சத்தின் கிரியைகள்”) ஒரு நீண்ட பட்டியலுக்கு எதிராக பதிலளிக்கும் விதமாக  இதனை எழுதுகிறார் (கலா. 5:19–21). மாம்சத்தின் கிரியைகளுக்கு நேர்மாறாக, “ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” உள்ளதாக எழுதுகிறார்.

இந்தச் சுருக்கமான பட்டியல் கிறிஸ்தவர்களாக நாம் யார் என்பதையும், நாம் என்ன செய்கிறோம் என்பதையும் முழுமையாகத் தொடர்புபடுத்துகிறது. இதில் தேவனுடனான நமது உறவை விவரிக்கும் நற்குணங்கள் (அன்பு, சந்தோஷம், சமாதானம்), மற்றவர்களுடனான நமது உறவுகளைப் பற்றிக் கூறும் நற்குணங்கள் (நீடிய பொறுமை, தயவு, நற்குணம்), மேலும் நமது உள்ளான சுபாவத்தை விவரிக்கும் நற்குணங்கள் (விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்) போன்றவை இடம்பெற்றுள்ளன. நிச்சயமாக, இந்த வகைப்படுத்துதலில்  ஒன்றோடொன்று குறிப்பிடத்தக்கவிதத்தில்  இணைந்தே காணப்படுகிறது, என்றாலும் ஒவ்வொரு குணாதிசயங்களும் வெவ்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் கருத்தில்  கொள்ள வேண்டும். 

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஆவியின் கனி, நாம் எப்படி சிந்திக்க வேண்டும், உணர வேண்டும், பேச வேண்டும், மற்றும் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகளை உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரித்துக் காட்டுகிறது. எனினும், இப்படிப்பட்ட குணாதிசயங்கள் எது என்பதைப் பற்றிக் கேட்பதை விட, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்று கேட்பது  மிக முக்கியத்துவமானது. அதற்குப் பதிலளிக்க, இந்த கிருபைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய வார்த்தைகளான: ஆவி (Spirit) மற்றும் கனி (fruit) ஆகியவற்றை நாம் கூர்ந்து ஆராய்வது அவசியம்.

முதலாவதாகவும், மிக முக்கியமாகவும், அப்போஸ்தலனாகிய பவுல் இந்தக் குணாதிசயங்களை ஆவியின் கனி என்று அழைக்கிறார் என்பதை நாம் பாராட்ட வேண்டும். உண்மையில் பரிசுத்த ஆவியானவரே இவைகளை நம்மில்  நடப்பிக்கிறார். இவை நம்முடைய சொந்த முயற்சியினால், நம்முடைய பலத்தை கொண்டு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவைகள் அல்ல. ஆவியின் கனி என்பது கிறிஸ்தவன் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியல் அல்ல.இது விசுவாசிகள் மீது தேவன்  வைக்கும் கோரிக்கை என்பதை விட, ஒரு விசுவாசியாக கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருக்கும்போது  உண்மையாக  நம்முடைய குணாதிசயங்கள் இவ்விதமாகவே இருக்கும் என்று தேவன் சாட்சியிடுகிறார். 

ஆவியின் கனியைத் தொடர்ந்து வரும் வசனங்களில், பவுல் ” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா. 5:24) என்று எழுதும்போது, இந்த விளக்கம் இன்னும் தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆவியின் கனி என்பது கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பெற்ற வெற்றியை அனுபவிப்பதற்கான ஒரு அழைப்பாகும். அங்கே அவர் மாம்சத்தின் கிரியைகளை அழித்து, அவருடைய சொந்த பரிசுத்தத்தில் நாமும் பங்குள்ளவர்களாகும்படி செய்தார். கிறிஸ்துவுக்குள்ளாக மட்டுமே காணப்படும் பரிசுத்தத்தை விசுவாசிகள் தங்களுடைய இருதயத்திலும் அனுபவிக்கும்படியாகவே  ஆவியானவர் வழி நடத்துகிறார். ஆவியின் கனியை வேறு எந்த வகையிலாவது நாம் விளக்கப்படுத்த முற்படுவோமானால் அது மனித கிரியைகளின் அடிப்படையில் தேவனோடு சேரும்படியான மோசமான காரியத்திற்கு வழி நடத்துவதாகிவிடும். இவை ஆவியானவர் கொடுக்கும்படியான கனியே அல்லாமல் ஒரு கிறிஸ்தவனின் சொந்த கிரியைகள் அல்ல.

தேவனுடைய ஆவியானவர் மற்றும் கிருபையின் வழிகளைச் சார்ந்து வாழ்ந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய கிரியை சார்ந்த மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை செய்து முடிப்பாரென்பதை” (பிலி. 1:6) நான் நம்புகிறேன். கனியை பற்றினதான உருவகம் பரிசுத்தமாக்குதலைப் பற்றிய முக்கியமான பாடங்களையும் நமக்குக் கற்பிக்கிறது.

முதலாவதாக, பவுல் கனியை பற்றின உருவகத்தைப் பயன்படுத்தும்போது, அவர் “கனிகள்” (fruits) என்ற பன்மைத் தன்மை கொண்ட வார்த்தையை பயன்படுத்தாமல், தொகுக்கப்பட்ட பெயர்ச்சொல்லை (collective noun), ஒருமையில் பயன்படுத்தி, பல அர்த்தங்களை தரும்படியாக பயன்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கது. இங்கே சொல்லப்படும் முக்கியத்துவம் என்ன? தேவன் நம்மில் உட்புகுத்தி செயல்பட வைக்கும்  தனிப்பட்ட கிருபைகள் ஒரு பெரிய முழுமையான காரியங்களுடன் தொடர்புடையது  – அதாவது, தேவனுடைய ஒரேபேரான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நம்மை மாற்றுவதே  (ரோமர் 8:29) ஆகும்.

எனவே, எந்த ஒரு கிறிஸ்தவரும் இந்தக் குணாதிசயங்களில் சிலவற்றை மட்டும் பெற்று, மற்றவைகள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மற்றவர்களைவிட அதிக அன்பாகவோ அல்லது அதிக தயவுள்ளவர்களாகவோ இருக்கும் நபர்களை நாம் அறிந்திருந்தாலும், விசுவாசிகள் இந்தக் கிருபைகள் அனைத்தையும் ஓரளவிற்கு எல்லாவற்றையும் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் பகுதியளவு கிறிஸ்துவை அவர்கள் பெற்றிடாமல் முழுமையான கிறிஸ்துவையே கொண்டிருக்கிறார்கள்.  இந்த நற்குணங்களை ஒரு கிரீடத்தில் உள்ள தனிப்பட்ட முத்துக்களாக பார்க்காமல், ஒரு வைரத்தின் பல்வேறு பரிமாண முகங்களாக (facets) கருதுவது உதவியாக இருக்கும். ஒவ்வொரு பக்கமும்,கோணமும் அந்த ஒரே வைரத்திற்கு  பொலிவையும் அழகையும் சேர்க்கிறது. அதைப்போலவே ஆவியானவரை பெற்றிருப்பது என்பது முழுமையான கிறிஸ்துவைப் பெற்றிருப்பதாகும் (ரோமர் 8:9), இப்படி கிறிஸ்துவை பெற்றிருக்கும் போது நாம் முழுமையான அளவில் நமது எல்லா சுபாவங்களிலும், செயல்களிலும் அவரைப் போலாவோம் என்பதையே பவுல் முன்னிறுத்துகிறார்.

குறைந்த பட்சம் இந்த உருவகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  ஒரு பாடம் உள்ளது. நீங்கள் நிறைய ஆப்பிள்களை வளர்க்க விரும்பினால், உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஆப்பிள் விதைகளை நட்டுவிட்டு, மறுநாள் காலையில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் ஒரு முழு தோட்டம் இருக்கும் என்று நம்பி நீங்கள் வெளியே வர மாட்டீர்கள். அதேபோல், நமது பரிசுத்தமாக்குதலிலும் உடனடி மாற்றங்களை நாம் எதிர்பார்க்க கூடாது. மாறாக ஒரு நீண்ட காலத்திற்கு ஏற்படும் சீரான வளர்ச்சியையே நாம் எதிர்பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையின் ஈவுகள் கனியாக மாற வேண்டும்  என்ற இந்த எண்ணம் உண்மையுள்ள விசுவாசியின் மனதில் இரண்டு காரியங்களை பதிய செய்கிறது: ஒன்று கிருபை (Grace),  மற்றொன்று  நம்பிக்கை (Hope) என்பவைகளாகும்.

முதலாவதாக, தேவன் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்து, அவைகள் நம்மிடமும் மற்ற விசுவாசிகளிடத்திலும் காணப்படாமல் இருக்கும்போது, நாம் அவர்களிடத்தில் நம்மைப்போலவே  இரக்கத்துடன் காணப்பட வேண்டும்.  “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்” (2 பேதுரு 3:18) என்பதே நாம் அனைவருக்கும் வளருவதற்காக கொடுக்கப்படும் ஒரு முக்கியமான அழைப்பாகும், அதற்கு ஒவ்வொருக்கும் நேரம் எடுக்கும். இரண்டாவதாக, நம் வாழ்வில் குறைவாகக் காணப்படுவதை ஒரு நாள் தேவன் நிச்சயமாக சரிசெய்து, பூரணமாக்கி கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு  எதிர்பார்ப்புடன் செயல்பட வேண்டும். தேவனுடைய  ஆவியானவர் மற்றும் கிருபையின் வழிகளை நாம் சார்ந்து வாழ்வதினால், நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை கிறிஸ்துவின் நாள்பரியந்தம் நடத்தி முடிப்பாரென்பதை” (பிலி. 1:6) நான் நம்புகிறேன். தேவன் விதைக்கும் விதைகள் எப்போதும் பலன் தருகின்றன. அவர் பயிரிடும் கனி ஒருபோதும் கொடியில் சாவதில்லை என்ற வேத சத்தியத்தை பற்றிகொண்டு ஆவிக்குரிய கனிகளில் வளர்ந்து பெருகுவோம்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.