
இவ்வளவாய் தேவன் உலகத்தில் அன்புக்கூர்ந்தார்
23-06-2026அன்பின் குணாதிசயங்கள்
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அயர்லாந்தின் பேராயர் அஷர் (Archbishop Ussher), ஒரு பிரஸ்பைடீரியன் போதகரின் தனிப்பட்ட தேவபக்தியைப்பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் உண்மையா என்று அறிய அவரது வீட்டிற்குச் செல்ல விரும்பினார். அஷர் ஒரு ஏழை பாமரர்போல வேடமிட்டு அந்தப் போதகரின் வீட்டிற்குச் சென்றார். அவர் வீட்டிற்குள் வரவேற்கப்பட்டார், அங்கு அந்தப் போதகரின் மனைவி தனது வீட்டிலிருந்தவர்களுக்கு வேதவினாவிடை கற்பித்துக் கொண்டிருந்தார். தேவனின் கட்டளைகள் எத்தனை என்று அவள் அந்த எதிர்பாராத பாமர விருந்தினரிடம் கேட்டாள். அதற்கு அவர், “பதினொன்று” என்று பதிலளித்தபோது, அவர் மிகவும் அறியாமையுள்ள மனிதர் என்று அவள் நினைத்துக்கொண்டு, அவரிடம் வேறு எதையும் கேட்கவில்லை, ஆதலால் அவருக்கு உணவளித்து உறங்கச் செய்தாள்.
அன்று இரவு, அந்தப் போதகர் அஷரின் தந்திரத்தைக் கண்டறிந்து, மறுநாள் காலை பிரசங்கிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார். எனவே, அஷர் இப்போது தன் வேஷங்களை கலைந்து சுத்தமாகி, அந்த மனைவி அவரை அடையாளம் காண முடியாதபடி உடை அணிந்து, பிரசங்க மேடைக்குச் சென்றார். அவர் “பதினொன்றாவது கட்டளை” என்று தலைப்பில் பிரசங்கித்தார், அதாவது யோவான் 13:34: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்ற வசனத்திலிருந்து பிரசங்கம் செய்தார். அந்தப் போதகரின் மனைவி, அந்த ஏழைப்பாமரர் ஒரு போதகராக மாறியதையும், தான் அவரைப் பற்றி எவ்வளவு மோசமாகத் தவறாகக் கணித்து, அவரிடம் அதிக அன்பைக் காட்டவில்லை என்பதையும் கண்டு துக்கமடைந்தார்.
அன்பு என்றால் என்ன? கிறிஸ்து காட்டிய அன்பின் கட்டளையை, உங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா என்பதை எப்படி அறிவீர்கள்? அன்புள்ள ஒருவர் மற்றவர்களை எப்படி நடத்துவார்? பிரபலமான ஊடகங்கள் பெரும்பாலும் அன்பை ஒரு ஈர்ப்பு மற்றும் இன்பத்தின் உணர்வுகளாக முன்வைக்கின்றன, ஆனால் அத்தகைய உணர்வுகள் ஒரு வெப்பமானியில் உள்ள பாதரசம் போல ஏறி இறங்கக்கூடியவை. நமக்குத் தேவைப்படுவது வெப்பமானி போன்ற அன்பு அல்ல, மாறாக ஒரு தெர்மோஸ்டாட் (thermostat), போன்ற எப்பொழுதும் மாறாத அன்பு; அது நமது எதிர்வினைகளைக் கட்டுப்படுத்தப்படாமல், அவற்றை நாமே கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
மற்றவர்கள் அன்பை, உளவியல் ரீதியான “நிபந்தனையற்ற நேர்மறை ஏற்பு” (unconditional positive regard) என்ற கருத்திலிருந்து பெறப்பட்ட, குற்றத்தீர்ப்பளிக்காத, நிபந்தனையற்ற ஏற்பு என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த மிக எளிமையான அணுகுமுறை குழப்பத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தீமைக்கு முன்பாக நம்மை வலுவிழக்கச் செய்கிறது. ஒரு பயங்கரவாதியையோ அல்லது தொடர் கொலையாளியையோ நீங்கள் எப்படி நிபந்தனையின்றியும், தீர்ப்பளிக்காமலும் ஏற்றுக்கொள்ள முடியும்?.
இன்று பல கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டில் அன்பைக் குறிக்கும் கிரேக்க வார்த்தைகளான அகாபே (agapē) மற்றும் அதன் வினைச்சொல்லான அகாபாவோ (agapaō) ஆகியவை உணர்வைக் குறிக்காமல், நமது சொந்த இழப்பில் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தின் செயலைக் குறிக்கின்றன என்று நம்புகிறார்கள். ஆனால் இந்த யோசனை கிரேக்க மொழியில் உள்ள அன்பிற்கான வெவ்வேறு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் அகாபே என்ற சொல்லாக்கத் தொகுதி பல்வேறு சூழல்களில் பல அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். மேலும், உணர்ச்சியற்ற அன்பின் கருத்து நமது உணர்வுகளுடன் என்ன செய்வது என்ற நிச்சயமற்ற தன்மையில் நம்மை விட்டுவிடுகிறது. இது நமது தேர்வுகளைத் தூண்டும் ஆழமான, பெரும்பாலும் மறைந்திருக்கும் உந்துதல்களை எதிர்கொள்ளத் தவறிவிடுகிறது.
அப்படியானால், அன்பின் உண்மையான விளக்கத்தை நாம் எங்கே காணலாம்? அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 13:4–7-ல் அன்பிற்கு ஒரு சிறந்த விளக்கத்தை அளித்துள்ளார். பவுல் அன்பை (KJV: “charity,” லத்தீன் சொல்லான caritas-லிருந்து வந்தது) “மிகவும் சிறந்த வழி” என்று புகழ்கிறார் (1 கொரி. 12:31)—இது ஆவிக்குரிய வரங்களை விட உயர்ந்தது (அதிகாரம் 12) மற்றும் தேவனுடைய தராசில் மதிப்புமிக்க வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானது (1 கொரி. 13:1–3). வசனங்கள் 4–7 அன்பின் பண்புகளையும் செயல்பாடுகளையும் காட்டுகின்றன. இவை அன்பின் சாராம்சத்தை வரையறுப்பதை விட, அதன் பலன்களை விவரிக்கின்றன; அவை அன்பு எவ்வாறு சில செயல்களை அல்லது நடத்தைகளைத் தூண்டுகிறது மற்றும் பிறவற்றிற்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றன.
இந்த அன்பின் விளக்கம் பொறுமையுடன் தொடங்கி சகிப்புத்தன்மையுடன் முடிகிறது (வசனங்கள் 4, 7). சோதனைகள், துன்பங்கள் மற்றும் தீமைகளுக்கு அன்பு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் தான் அதன் உண்மையான தன்மை வெளிப்படுகிறது. அன்பின் மிகச்சிறந்த வெளிப்பாடு கிறிஸ்துவின் சிலுவை மரணம் ஆகும். பவுல் ரோமர் 5:8-ல் எழுதியுள்ளார்: “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மிடத்தில் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” “இயேசு கிறிஸ்துவையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும்” தவிர வேறொன்றையும் அறியாதவராக இருந்த பவுல், கிறிஸ்துவின் அன்பைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார் (1 கொரி. 2:2). யோவான், நமக்காக இறக்கும் கிறிஸ்துவின் மனமுவந்த விருப்பத்தின் வேரில் இருந்த அன்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).
அன்பு பல்வேறு வழிகளில் அதன் மேன்மையை வெளிப்படுத்துகிறது. ஜொனாதன் எட்வர்ட்ஸ் எழுதினார், “அன்பு என்பது ஒரு செயல்படும் கொள்கை” (Works 8:301). நேர்மறையாக, அன்பு பொறுமையைப் பயிற்றுவிக்கிறது மற்றும் தயவைக் காட்டுகிறது (1 கொரி. 13:4). அன்பு தொடர்ந்து நன்மை செய்கிறது. மற்றவர்களின் தேவைகளைச் சந்திக்கவும் தேவனை மகிமைப்படுத்தவும், ஒரு அன்புள்ள நபர் கசப்பான அல்லது கடினமான சூழ்நிலைகளிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவார். அன்பு தீமைக்கு பதிலாக நன்மையைத் திருப்பிச் செய்ய விரும்புகிறது. கிறிஸ்தவ அன்பு, “இரக்கமும், நீடிய பொறுமையும், மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள” தேவனின் சாயலைப் பிரதிபலிக்கிறது (யாத்திராகமம் 34:6).
எதிர்மறையாக, அன்பு பொறாமைப்படாது (1 கொரி. 13:4). அன்பு சுயநலமான பொறாமையைத் தடுக்கிறது, ஏனென்றால் அது தன்னை மறுக்கவும், மற்றவர்கள் செழிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடையவும் கற்றுக்கொண்டிருக்கிறது. அன்பு தற்பெருமை கொள்ளாது, இறுமாப்பு அடையாது (வசனம் 4). இந்த பண்புகள் அன்பு ஒரு தாழ்மையான அறப்பண்பு என்பதைக் காட்டுகின்றன. அன்பு தேவனைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கும் ஊக்கத்தை அளிக்கிறது, மேலும் நம்மைப் பற்றியே சிந்திக்கும் போக்கைக் குறைக்கிறது. ஜொனாத்தன் எட்வர்ட்ஸ் எழுதினார், “தேவனை நேசிக்கும் அனைவரும் அவரை தேவனாகவே நேசிக்கிறார்கள்… நாம் தேவனை நம்மை விட எல்லையற்ற மேலானவராக நேசித்தால், அன்பு நம்மிடம் எல்லையற்ற தாழ்ந்தவர்களாக வெளிப்படுகிறது, எனவே அது ஒரு தாழ்மையான அன்பு” (Works 8:245).
அன்பு அயோக்கியமானதைச் செய்யாது (1 கொரி. 13:5). “அயோக்கியமானதைச் செய்தல்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல், தரநிலைகளுக்கு எதிராகச் செயல்பட்டு அவமானத்தை விளைவிப்பதைக் குறிக்கிறது. அன்பு, தேவனுக்கு முன்பாகவும் மனிதர்களுக்கு முன்பாகவும் கண்ணியமானதைச் செய்ய ஒரு நபரைத் தூண்டுகிறது (ரோமர் 12:17; 2 கொரி. 8:21). இந்த அறிக்கை அன்பைப் பற்றிய எந்தவொரு சட்டவிரோத பார்வையையும் நிராகரிக்கிறது; அன்பு தேவனுடைய சட்டத்திற்கு நீட்டிக்கப்படுகிறது (சங்கீதம் 119:97) மற்றும் அதை நிறைவேற்ற பாடுபடுகிறது (ரோமர் 13:8–10).
அன்பு சுயநலத்தை நாடாது (1 கொரி. 13:5), ஆனால் அது தேவனுடைய மகிமையையும் நம் அண்டை வீட்டாரின் நன்மையையும் தேட நம்மைத் தூண்டுகிறது. அன்பு நம்மை ஊழியக்காரர்களாக மாற்றுகிறது (பிலிப்பியர் 2). அது எரிச்சலடையாது மற்றும் தீங்கு நினைப்பதில்லை (வசனம் 5). எரிச்சலடைவது என்பது எளிதில் கோபப்படுவதைக் குறிக்கும் (அப்போஸ்தலர் 17:16), ஆனால் அன்பு கோபத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன்னிப்பது என்பது தீங்குகளைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை—அன்பு மக்களின் பாவங்களை அவர்களுக்கு விரோதமாக எண்ணாமல் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறது (ரோமர் 4; 2 கொரி. 5:19).
அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுகிறது (1 கொரி. 13:6). அன்பு நீதியையும் உண்மையையும் சந்திக்கும்போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறது. இருப்பினும், ஒருவர் பாவத்தில் விழுந்து அதற்காகக் கடுமையான விலையைக் கொடுத்தார் என்ற செய்தியைக் கேட்கும்போது அன்பு துக்கமடைகிறது; எனவே, அத்தகைய செய்திகளை வதந்திக்கான சுவையான உணவாக அன்பு கருதுவதில்லை. அத்தகைய அன்பு எதிரிகளுக்கும்கூட நன்மை செய்கிறது.
வசனம் 6, நம் கலாச்சாரத்தில் அன்பாகக் கருதப்படும் ஒப்புமை சகிப்புத்தன்மை (relativistic tolerance) என்ற நிலையைக் கண்டிக்கிறது; உண்மையான அன்பில் தீமையின் மீதான வெறுப்பும் அடங்கும் (ரோமர் 12:9). தேவனுடைய அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடு அவருடைய நீதியின் மிகப்பெரிய நிரூபணமாகவும் இருந்தது, ஏனெனில் அவருடைய குமாரன் நமது பாவங்களுக்கான தண்டனையைச் சுமப்பதன் மூலம் தேவனுடைய நீதியை நிறைவேற்றினார் (ரோமர் 3:25–26). எனவே, 1 கொரிந்தியர் 13:6, அன்பிற்கும் உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிரபலமான கிறிஸ்தவக் கருத்தைத் திருத்துகிறது. பாவம் மற்றும் நீதியின் மீது அன்பு வலுவான உணர்வுகளைக் கொண்டுள்ளது.
அன்பிற்குக் கூறப்பட்ட கடைசி நான்கு செயல்கள் அல்லது பழக்கங்களில் (வசனம் 7), மீண்டும் மீண்டும் வரும் “எல்லாம்” என்ற வார்த்தையை ஒரு முழுமையான அல்லது நிபந்தனையற்ற உலகளாவிய அர்த்தத்தில் வாசிக்கக்கூடாது. இந்த வசனங்கள் புதிய ஏற்பாட்டின் சூழலில் வாசிக்கப்பட வேண்டும். பவுல் “எல்லாம்” என்று பயன்படுத்தும்போது, அன்பு நாம் சிலுவைகளாகச் சுமக்க வேண்டிய அனைத்து பாரங்களையும் சுமக்கிறது, கிறிஸ்தவர்களாக நாம் நம்ப வேண்டிய அனைத்தையும் நம்புகிறது, தேவனுடைய வாக்குறுதியின்படி நாம் எதிர்பார்க்க வேண்டிய அனைத்தையும் எதிர்பார்க்கிறது, மேலும் கிறிஸ்துவிற்காக நாம் அனுபவிக்க வேண்டிய அனைத்து சோதனைகளையும் சகித்துக்கொள்கிறது என்று அர்த்தம். எனவே, அன்பு இந்த நான்கு செயல்களையும் நிலையான முறையில் தூண்டுகிறது.
அன்பு சிரமங்களுக்கு மத்தியிலும் விடாமுயற்சியுடன் இருக்கும் வலிமையைக் கொண்டுள்ளது; எந்தவொரு சூழ்நிலையிலும், அன்பு தொடர்ந்து நம்புகிறது மற்றும் எதிர்பார்க்கிறது. விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகிய மூன்றின் தொகுப்பு வேதத்தில் பலமுறை வருகிறது. கிறிஸ்தவர்கள் தேவனை நேசிக்கும்போது, அவர்களுக்காக அவர் வைத்திருக்கும் உண்மையான அன்பில் அவர்களின் இதயங்கள் மகிழ்ச்சியடைகின்றன, இது அவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. எட்வர்ட்ஸ் கூறுகையில், அன்பு என்பது “நடைமுறை விசுவாசத்தின் உயிர் மற்றும் ஆன்மா”, இது விசுவாசத்திற்கு அதன் உயிர்ச்சக்தியையும் உற்பத்தித்திறனையும் அளிக்கிறது (Works 8:139, 330–31). அன்பு என்பது “விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் உள்ள மிக அவசியமான உட்பொருள்” ஆகும் (8:327).
பாவம் மற்றும் துன்பம் நிறைந்த உலகில் அன்பின் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பற்றிய பவுலின் விவரிப்பை இங்கே நாம் காண்கிறோம். அன்பு என்பது ஒரு வினைச்சொல். இருப்பினும், அன்பு வெளிப்புறச் செயல்களை விட மேலானதாக இருக்க வேண்டும்; அதன் சாராம்சம் இதயத்தின் உந்துதல்களில் உள்ளது. அதைத் தூண்டுவது எது? அது சுயநல லட்சியமாக இருக்க முடியாது, ஏனென்றால் அன்பு தற்பெருமை கொள்ளாது மற்றும் சுயநலத்தை நாடாது.
அன்பிற்குரியவரிடமிருந்து கிடைக்கும் உடனடி இன்பத்தால் அன்பிற்கு ஆற்றல் கிடைக்காது; இல்லையென்றால், விழுந்துபோன மனிதர்களிடம் அன்பு பொறுமையாகவும் தயவாகவும் இருக்காது.
அப்படியானால், அன்பைத் தூண்டுவது எது? இந்த உரை நமக்கு இரண்டு குறிப்புகளை வழங்குகிறது. அதன் மகிழ்ச்சி சத்தியத்தில் உள்ளது, அதாவது தேவனுடைய நீதி மற்றும் உண்மையின் மீது. எனவே, கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய அன்பில் அன்பு மகிழ்ச்சியடைகிறது. “அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால், நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” (1 யோவான் 4:19). அதன் விடாமுயற்சி விசுவாசம் மற்றும் நம்பிக்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளது, அதாவது கிறிஸ்துவை நோக்குவதிலும் தேவனுடைய வார்த்தையை நம்புவதிலும். எட்வர்ட்ஸ் கூறுகையில், அன்பு “தேவனுடைய மேன்மையை” காண்பதிலிருந்து அல்லது உணர்வதிலிருந்து எழுகிறது (Works 8:333). எனவே, அன்பு தேவனால் உருவானது, தேவன் மீது மையப்படுத்தப்படுகிறது மற்றும் தேவனால் தூண்டப்படுகிறது என்று நாம் முடிக்கிறோம். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவான் 4:8).
நாம் உண்மையான அன்பில் நடக்கும்போதுதான் தேவனுடன் ஆழ்ந்த ஐக்கியத்தில் இருக்கிறோம். வேதத்தில் வெளிப்படுத்தபட்டுள்ள அன்பின் பண்புகளும் செயல்பாடுகளும் எவ்வளவு அழகானவையாக இருக்கிறது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்டீரிஸ்ன் வலைப்பதிவில் (Ligonier Ministries Blog) வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


