Exceptional Mediocrity

விதிவிலக்கான மந்தநிலை  

18-06-2026
Exceptional Mediocrity

விதிவிலக்கான மந்தநிலை  

18-06-2026

இவ்வளவாய் தேவன் உலகத்தில் அன்புக்கூர்ந்தார்

For God So Loved the World

அனைத்து விசுவாசிகளும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கான கிறிஸ்துவின் மரணம் என்ற உபதேசத்தை விசுவாசிக்கிறார்கள். இந்த கூற்று, கால்வினிஸ்டுகள் தான் இந்த பயங்கரமான உபதேசமாகிய கிருபையின் உபதேசங்களில் ஒன்றை (‘L’-TULIP) விசுவாசிக்கிறவர்கள் என்று நம்பும் எனது ஆர்மினிய நண்பர்களுக்கு ஒருவேளை நகைப்புக்குரியதாக தோன்றலாம். ஆனால், இயேசு கிறிஸ்துவின் மரணம் ஒரு உண்மையான பாவநிவாரணமாக (வெறும் சாத்தியமான ஒன்றாக அல்லாமல்) அங்கீகரிக்கப்பட்டால், நீங்கள் (Universalism) எனப்படும் எல்லா மனிதருக்குமான இயேசுவின் மரணம் என்ற கோட்பாட்டின் பொய்யை நம்பாத வரையில், இந்த வரையறை குறித்த கேள்வியிலிருந்து தப்பிக்க முடியாது.

கிறிஸ்துவின் மரணம் உண்மையில் பாவங்களுக்கான பரிகாரத்தை செய்தது என்ற அங்கீகாரமே, அவருடைய இரட்சிப்பின் பணியின் பரந்த தன்மையை பற்றி பேசும் அற்புதமான வசனங்களின் விளக்கத்தை வழி நடத்துகிறது. உதாரணமாக, யோவான் எழுதுகிறார், “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:2). இங்கு விவாதமானது கால்வினிசம் மற்றும் ஆர்மினிசம் இடையே அல்ல மாறாக கால்வினிசம் மற்றும் யுனிவர்சலிசம் இடையே தான். அதாவது உலகம் என்ற வார்த்தை இந்த பூமியில் இதுவரை வாழ்ந்த இனி வாழப் போகிற ஒவ்வொரு மனிதனையும் குறிக்குமென்றால், ஒவ்வொரு மனிதனும் அந்த பரிகார பலியின் வல்லமையின் மூலமாய் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த பாவமும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்திருக்காது, அவிசுவாசம் என்கிற பாவமும் உட்பட. 

நரகம் மற்றும் நியாயத்தீர்ப்பை பற்றிய வேதத்தின் போதனைகளை மிக தீவிரமாக எடுத்துக் கொள்கிற எவரும், இயேசு எல்லா தனிப்பட்ட மனிதனுக்காகவும் மரித்தார் என்ற கோட்பாட்டை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். யோவான் இங்கு உலகம் என்ற வார்த்தையை இனி வாழப்போகும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் குறிக்காமல், அதை கடந்து வேறு ஒன்றைக் குறிக்க பயன்படுத்துகிறார். (அவர் அடிக்கடி அவ்வாறு செய்கிறார்; யோவான் 14:19, 16:8, 18:20; 1 யோவான் 2:15). இயேசுவே இந்த உலகத்திற்கு இருக்கும் ஒரே இரட்சகர் என்பதை வலியுறுத்துவதே யோவானின் நோக்கமாகும். அவருடைய மரணம் யூதர்கள், அமெரிக்கர்கள் அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குழுவிலிருந்து மட்டுமல்ல, முழு உலகத்திலிருந்தும் மக்களை மீட்கிறது.

கால்வினிசம் ஒருபுறம் உலகளாவியவாதம் எனும் தவறான கொள்கையிலிருந்தும், மறுபுறம் பாவநிவாரணத்தின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடும் ஆபத்திலிருந்தும் பாதுகாக்கிறது. இயேசுவின் மரணம், அது யாருக்காக திட்டமிடப்பட்டதோ அந்த அனைவரையும் இரட்சிக்கிறது என்பதை கால்வினிஸ்ட் ஏற்றுக்கொள்கிறார்கள். வேறுவிதமாகக் கூறினால், பாவநிவாரணம் அதன் எல்லை மற்றும் நோக்கத்தில் வரையறுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்.

இருப்பினும் ஆர்மீனியசம் இந்த தவறான கொள்கையிலிருந்து தங்களை ஒருபோதும் தற்காத்துக் கொள்ள முடியாது. ஆர்மீனியசம், கிறிஸ்துவின் மரணம் ஒருவேளை அனைவரும் இரட்சிக்கவில்லை என்றாலும், உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இரட்சிப்பதற்காகவே அவரது மரணம் வடிவமைக்கப்பட்டது என்கிறார்கள். இந்தக் கூற்றுப்படி பார்த்தால், கிறிஸ்துவின் பாவ நிவாரண பலியானது, அவர் யாரையெல்லாம் இரட்சிப்பதற்கென்று மரித்தாரோ அவர்களையெல்லாம் இரட்சிக்கவில்லை என்றே பொருள்படுகிறது. அதாவது ஆர்மீனிய கோட்பாட்டின்படி கிறிஸ்துவின் மரணம் பரந்த அளவில் எல்லையில்லாத ஒன்று, ஆனால் அது செயல்படும் விதத்திலும் வல்லமையிலும் எல்லைக்குட்பட்ட ஒன்று. கிறிஸ்துவின் மரணம் உலகளாவிய நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டது என்றே அர்த்தம். 

இந்த இரண்டு பார்வைகளுக்கும் உள்ள வேறுபாடு, ஒரு பள்ளத்தாக்கின் குறுக்கே முழுவதுமாக நீண்டு செல்லும் குறுகிய பாலத்திற்கும், பாதி தூரம் மட்டுமே செல்லும் அகலமான பாலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது. அது உங்களை மறு கரைக்குக் கொண்டு சேர்க்கவில்லை என்றால், அதன் அகலம் யாருக்கு முக்கியம்?

இந்த வேறுபாடுதான், கால்வினிசத்தை விட அர்மினியனிசமே கிறிஸ்துவின் பாவநிவாரணத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது என்று சார்லஸ் ஸ்பர்ஜன் வாதிடக் காரணமாக அமைந்தது. ஒரு அர்மினியர் கூறுகிறார்:

“எந்த மனிதனும் இரட்சிக்கப்படலாம் என்பதற்காக கிறிஸ்து மரித்திருக்கிறார்” பின்னர் இரட்சிப்பின் சில நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. இப்போது, கிறிஸ்துவின் மரணத்தை வரம்புக்குட்படுத்துவது யார்? ஏன், நீங்கள்தான். யாருடைய இரட்சிப்பையும் தவறாமல் உறுதி செய்வதற்காக கிறிஸ்து மரிக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் கிறிஸ்துவின் மரணத்தை வரம்புக்குட்படுத்துகிறோம் என்று நீங்கள் கூறும்போது; நாங்கள் சொல்கிறோம், “இல்லை, என் அன்புள்ள நண்பரே, அதைச் செய்வது நீங்கள்தான்.” கிறிஸ்து அவ்வாறு மரித்தது, எந்த மனிதனாலும் எண்ண முடியாத ஒரு பெரும் கூட்டத்தின் இரட்சிப்பைத் தவறாமல் உறுதி செய்வதற்காகவே என்று நாங்கள் கூறுகிறோம்; கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் அவர்கள் இரட்சிக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள், இரட்சிக்கப்பட வேண்டும், மேலும் எந்த வகையிலும் இரட்சிக்கப்படுவதைத் தவிர வேறு எந்த ஆபத்தையும் சந்திக்க முடியாது. பாவநிவாரண பலியை பற்றிய உங்கள் பார்வையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்; நீங்கள் அதைக் காத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் அதற்காக எங்களுடையதை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். (ஸ்பர்ஜனின் பிரசங்கங்கள் , தொகுதி 4, பக்கம் 228).

ஸ்பர்ஜன் வைராக்கியத்தோடு வாதாடிய இந்த கிறிஸ்துவின் பரிகார பலியை பற்றிய நமது பார்வை என்ன? குறிப்பாக, இயேசு யாரை மீட்க வேண்டும் என்று சிலுவையில் அவர் ரத்தத்தை சிந்தினாரோ, நிச்சயமாக அவர்களை கிறிஸ்து மீட்டார் என்பதே அந்த புரிதல். பழைய உடன்படிக்கையில் ஒரு பிரதான ஆசாரியன் எவ்வாறு இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களை தன் மார்பில் பொரித்தவராக பலிகளின் நிகழ்ச்சிகளை நடப்பிப்பாரோ, அதேபோல நமது மகத்துவமான பிரதான ஆசாரியரும் புதிய உடன்படிக்கையின் கீழ் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்களின் பெயர்களை தன் இருதயத்தில் பொரித்தவராக, அவர்களுடைய பாவங்களுக்காக தம்மை தாமே பலி செலுத்தினார்.

கிறிஸ்துவின் மீட்பின் பணி முழுவதும் தேவனால் முன் தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் படி நிறைவேறியது என்பதை இயேசு கற்பிக்கிறார்.

யோவான் பத்தாம் அதிகாரத்தில், கிறிஸ்துவின் பரிகார மரணத்தின் குறிப்பிட்ட நோக்கத்தை தெளிவாக போதிக்கிறார். அவர் தன்னை, “ஆடுகளுக்காக தன் ஜீவனை கொடுக்கும் நல்ல மேய்ப்பனாக” (யோவான் 10:11) காண்பிக்கிறார். இயேசு இதை சொல்லிய உடனே அவரது ஆடுகள் பிதாவினால் கொடுக்கப்பட்டவைகள் என்பதையும் விளக்கப்படுத்துகிறார். மேலும் அவர் வெளிப்படையாக, விசுவாசியாத இஸ்ரவேலரை பற்றி, “நீங்கள் என் ஆடுகளாய் இராதபடியினால் என்னை விசுவாசியாமல் இருக்கிறீர்கள்” (யோவான் 10:26-29) என்பதையும் அங்கு கூறுகிறார்.

முன்குறிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே கிறிஸ்து மரித்தார் என்ற இதே பார்வையை யோவான் 17 ஆம் அதிகாரத்திலும் நமது ஆண்டவரின் பிரதான ஆசாரித்துவ ஜெபத்தில் நாம் காண்கிறோம். தம் மக்களுக்காக தம்மை பலியாக ஒப்புக் கொடுத்து மரணத்தை சந்திக்க தயாராகும் வேளையில், அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காகவே சொல்லப்போனால் அவர்களுக்காக மட்டுமே குறிப்பாக வேண்டுகிறார். இவர்கள் பிதாவினால் உலகத்தில் இருந்து கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டவர்கள் (17:6). இதன் விளைவாகவே அவரது ஆசாரித்துவ மத்தியஸ்த பணி இவர்களுக்கு மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது: நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்: உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. 

(யோவான் 17:9). இயேசு யாருக்காக  பதிலால் பலியாக மரிக்கிறாரோ, அவர்கள் எல்லாருக்காகவும் கிறிஸ்து இங்கு ஜெபிக்காமல் இருப்பது, கிறிஸ்து இதில் தோற்றுவிட்டார் என்று கூறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர் யாருக்காக ஜெபித்தாரோ அவர்களுக்காக மட்டுமே அவர் மரித்தார். 

முன்குறிக்கப்பட்டவர்களுக்கான கிறிஸ்துவின் மரணம் என்ற இந்த உபதேசம், கிறிஸ்துவின் மரணத்தில் போதாத தன்மையும், குறையும் இருக்கிறது என்பதை ஒருபோதும் கூறவில்லை. காரணம் பாடுபட்டவர் எப்படிப்பட்டவர் என்ற உண்மையில் இவை இருக்கிறது, அவரது மரணம் எல்லையில்லா தகுதி வாய்ந்த ஒன்று. டார்ட் கவுன்சில் இந்த உபதேசத்தை நிலை நாட்டுவதற்கு நீண்ட விளக்கத்தை தெளிவாய் கொடுக்கிறது. “தேவகுமாரனின் மரணம் எல்லையற்ற மதிப்பும் தகுதியும் உடையது. அது ஒட்டுமொத்த உலகின் பாவங்களையுமே நிவர்த்தி செய்ய மிகவும் போதுமானது” (2:3) என்று தெளிவாக அறிவிக்கின்றன.

கிறிஸ்துவின் பாவ நிவாரணத்தில் உள்ள இந்த வரம்பானது, இயேசுவை சிலுவைக்கு அனுப்பியதில் உள்ள தேவனுடைய திட்டத்திலிருந்தும் தீர்மானத்தில் இருந்தும் உருவாகிறது. கிறிஸ்துவின் மீட்பின் பணி பிதா தமக்கு கொடுத்த தம்முடைய சொந்த மக்களுக்காக ஒரு குறிப்பிட்ட பாவ நிவாரணமாக வடிவமைக்கப்பட்டது. அவருடைய மரணம் தெரிந்து கொள்ள பட்டவர்களை மட்டுமே இரட்சிக்கும் நோக்கத்துடன் இருந்தது.

தம்முடைய மீட்பின் முழு பணியும், தேவனால் முன்னரே திட்டமிடப்பட்ட தீர்மானத்தின் நிறைவேற்றமாகவே இருந்தது என்று இயேசு போதிக்கிறார். யோவான் 6:38-39:

“என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். 
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது”

யோவான் 6:38-39.

இறையியலாளர்கள் இந்த உடன்படிக்கையை மீட்பின் உடன்படிக்கை என்று குறிப்பிடுகின்றனர். இதில், வரலாறு தொடங்குவதற்கு முன்பே, பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் வீழ்ந்த மக்களின் இரட்சிப்பைக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தனர். மிகுந்த இரக்கத்தினாலும் கிருபையினாலும், பிதா இரட்சிக்கப்பட வேண்டிய தனிநபர்களைத் தேர்ந்தெடுத்தார் ( ரோமர் 9:11–13 ; எபேசியர் 1:4 ; 2 தெசலோனிக்கேயர் 2:13 ). இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அவர் தம் குமாரனிடம் ஒப்படைத்தார் (யோவான் 6:37, 39; 17:6, 9, 24). அவர், தம்முடைய மாம்சத்தில் வெளிப்பட்ட மீட்பின் ஊழியத்தின் மூலம் அவர்களின் இரட்சிப்பை நிறைவேற்றத் தம்மை அர்ப்பணித்தார் ( மாற்கு 10:45 ; யோவான் 10:11 ). இந்த தெய்வீகத் திட்டத்திற்கு இணங்க, பிதா குமாரனுக்குக் கொடுத்தவர்களுக்கும், குமாரன் யாருக்காக மரித்தாரோ அவர்களுக்கும் கிறிஸ்துவின் கிரியையைப் பிரயோகிப்பதற்காக, பரிசுத்த ஆவியானவர் பிதாவினாலும் குமாரனாலும் உலகிற்கு அனுப்பப்படுகிறார் ( யோவான் 15:26; 16:5–15 ).

கிறிஸ்துவின் பாவ நிவாரணத்தை பற்றிய இந்த கண்ணோட்டம், சுவிசேஷ பணியின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. சுவிசேஷத்தின் பிரசங்கத்தின் மூலம் தவறாமல் இரட்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டம் தேவனுக்கு உண்டு. பிதா அவர்களை தெரிந்து கொண்டார், கிறிஸ்து அவர்களுக்காக மரித்தார், பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பின் செய்தியின் மூலம் அவர்களை மறுபிறப்பு அடைய செய்கிறார். கொரிந்துவில் ஏற்பட்ட சோர்வின் மத்தியிலும் இந்த சத்தியம் பவுலை தொடர்ந்து திடப்படுத்தியது (அப் 18:9-10), மேலும் இது இன்று நமது சுவிசேஷப் பணிகளில் உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவிலும் ( வெளி. 5:9 ) நம்மைத் தொடர்ந்து முன்னேற வைக்கும்.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டாம் அஸ்கோல்

டாம் அஸ்கோல்

டாக்டர் டாம் அஸ்கோல், புளோரிடாவின் கேப் கோரலில் உள்ள கிரேஸ் பாப்டிஸ்ட் திருச்சபையின் மூத்த போதகராகவும், ஃபவுண்டர்ஸ் மினிஸ்ட்ரீஸ் மற்றும் தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் தியாலஜி ஆகியவற்றின் தலைவராகவும் இருக்கிறார். அவர் ' தி ஸ்வார்ட் & தி டிரோவல்' என்ற வாராந்திர பாட்காஸ்டை தொகுத்து வழங்குகிறார் மற்றும் 'டியர் திமோதி: லெட்டர்ஸ் ஆன் பாஸ்டரல் மினிஸ்ட்ரி' என்ற நூலின் பதிப்பாசிரியராகவும் உள்ளார் .