
மகிமையை நாடுதல்
11-11-2025
ஆவியின் கனி என்றால் என்ன?
18-11-2025சிறப்பான ஜெபவாழ்வை அடைவதற்கான மூன்று வழிகள்
அட்ரியல் சான்செஸ்
(3 Ways to Have a Better Prayer Life)
தனது ஜெபவாழ்வில் முழுமையாய் திருப்தியடைந்த ஒரு கிறிஸ்தவனை இதுவரை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்: நீங்கள் ஜெபிக்க முயற்சிக்கிறீர்கள் ஆனால் உங்களுடைய வார்த்தைகள் உங்களின் மேற்கூறையை அடைவதற்கு முன்பாகவே சிதறி போவதை போல உணர்கிறீர்கள், தேவன் எனது வார்த்தைகளை கேட்கிறாரா அல்லது நான் என்னோடு கூட பேசிக் கொண்டிருக்கிறேனா? என்று நீங்கள் யோசிக்க தொடங்குகிறீர்கள். பின்னர் ஜெபத்தின் மீதான சோர்வு அங்கு ஏற்படுகிறது. நாம் விழித்திருந்து ஜெபிக்க முயற்சிக்கிறோம் ஆனால் சீஷர்களைப் போலவே, நாம் கண்களை மூடிக்கொண்டு “அன்புள்ள ஆண்டவரே” என்று சொல்லத்துவங்குவதற்கு முன்பாகவே, தூக்க மருந்தைப் போல அந்த வார்த்தைகள் நம்மை தாக்குகின்றன. அல்லது நாளைய கவலைகளால் நாம் திசைத்திருப்பப்பட்டு, வேண்டுதலாக துவங்கும் நமது ஜெபம் சக ஊழியருடனான ஓர் கற்பனை உரையாடலாக மாறக்கூடும். ஐயோ! “நான் ஏன் ஜெபிப்பதில் மிகவும் மோசமாக இருக்கிறேன்?” என்ற மனச்சோர்வு அங்கு ஏற்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால், நமது காரியங்களை அவைகள் இருப்பதை காட்டிலும் அதிக கடினமாக மாற்றுகிறோம். ஜெபத்தை ஓர் உடற்பயிற்சியாக எண்ணிக் கொள்ளுங்கள். அநேக நேரங்களில், நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் மற்றும் சில பயிற்சிகள் மற்றவைகளை காட்டிலும் பயனுள்ளவைகளாக இருக்கிறது. உடற்பயிற்சியில் நிலைத்தன்மைதான் பயன்களைத் தரும், ஆனால் அதில் நீங்கள் சரியான முறைமை மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே ஜெபத்தின் தசைகளை வலிமைப்படுத்துவதற்கான ஒரு சில எளிமையான ஆலோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1.மனந்திரும்புங்கள்.
முதலாவதாக, மனந்திரும்புங்கள். பாவமுள்ள இருதயத்தை மூடுவதற்கு முயற்சிக்கும் மாய்மாலமான வேண்டுதலில் தேவன் பிரியமாயிரார். மலை பிரசங்கத்தில் இயேசு நம் சீஷர்களுக்கு கர்த்தருடைய ஜெபத்தை கற்றுக் கொடுப்பதற்கு முன்பாக எப்படி ஜெபிக்க கூடாது என்பதை குறித்து அவர் தொடர்ச்சியாக பேசினார் என்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. மாய்மாலத்தோடும், மூடநம்பிக்கையோடும் இருப்பதற்கு எதிராக கிறிஸ்து எச்சரித்தார் (மத் 6:5-8).
சில நேரங்களில் நாம் ஜெபத்தை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி மறைத்துக் கொள்கிறோம். நம் இருதயங்கள் தவறான இடத்தில் இருக்கும்போது சரியான வார்த்தைகளைச் சொல்கிறோம். ஜெபம் ஒருபோதும் கடவுளுக்கு முன்பாக நம்மை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழியாகவோ அல்லது மற்ற கிறிஸ்தவர்களுக்கு முன்பாகக் காட்டிக் கொள்வதற்கான ஒரு வழியாகவோ இருக்காது. போலியான ஜெபங்களை கடவுள் பார்க்கிறார். ஏசாயா புத்தகத்தில் கடவுள் தம்முடைய உடன்படிக்கை மக்களுக்குச் சொன்னார்,
நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன், நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன், உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
(ஏசாயா 1:15, நீதி 15:29).
பாவத்தில் வாழ்வது போல ஜெப ஓட்டத்தை வற்றச் செய்வது வேறு எதுவும் இல்லை. ஜெபத்தில் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு முன், உங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கையிட நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் அனுபவித்து வரும் ஜெபத் தடை உங்கள் கைகளில் இருப்பதை நீங்கள் காணமுடியும்.
2. தேவன் யார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இரண்டாவது, கடவுள் யார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் . கர்த்தருடைய ஜெபம் “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே ” என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. கிரேக்க புதிய ஏற்பாட்டில், “பிதா” என்ற வார்த்தை முதலில் வருகிறது. கடவுளை “பிதா” என்று அழைக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் சொந்தமானது அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவின் பணியின் மூலம் கடவுளின் குடும்பத்தில் பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது சொந்தமானது. பவுல், “அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.” ரோமர் 8:15 என்று கூறினார்.
பிதாவை அடையும் ஆசீர்வாதம் குமாரனாகிய இயேசுவின் மூலமாகவே உங்களுக்குக் கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாவிகள் பரிசுத்தரை நம்பிக்கையுடன் கூப்பிட இயேசு எவ்வளவு அற்புதமான பாதையை வகுத்துள்ளார் ( எபி. 4:16 ஐப் பார்க்கவும் ). கடவுள் செய்ததை நினைவில் கொள்வது, அவருடைய அன்பான பிள்ளைகள் என்ற நமது அடையாளத்தில் நாம் இளைப்பாற உதவுகிறது, மேலும் அவர் நமது ஜெபங்களை பொறுத்துக்கொள்வது மட்டுமல்லாமல், ஒரு நல்ல தந்தை தனது குழந்தைகளின் அழுகையைக் கவனிப்பது போல அவற்றைக் கேட்க விரும்புகிறார் என்ற உறுதியையும் நமக்கு அளிக்கிறது ( மத். 7:11 ).
3. மீண்டும் மீண்டும் ஜெபியுங்கள்.
இறுதியாக, தொடர்ச்சியாக ஜெபியுங்கள் . நீங்கள் கட்டாயப்படுத்தப்படும்போது அல்லது நீங்கள் விரும்பும் போது மட்டுமே ஜெபித்தால், நீங்கள் ஒருபோதும் நிலையான ஜெப வாழ்க்கையை உருவாக்க மாட்டீர்கள். ஜெபப் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது என்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவேளையில் குறிப்பிட்ட நேரங்களில் ஜெபிக்க கடவுளிடம் வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வீணான வார்த்தைகள் இயேசுவால் தடைசெய்யப்பட்டாலும், மறுபடியும் மறுபடியும் அதே வார்த்தைகளை பேசுவது இயேசு வால் கண்டிக்கப்படவில்லை. இயேசு விடாப்பிடியான விதவையை, அவளுடைய “தொடர்ச்சியான வருகையால்” ( லூக்கா 18:5 ) எவ்வாறு பாராட்டினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரலோகத்தின் வாசல்களை மேற்கொள்வதைப்போல உங்கள் ஜெபங்களால் பரலோகத்தின் வாயில்களைத் தட்டுங்கள். நீங்கள் சோர்வடையும் போது, யோவான் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்: “அவருடைய சித்தத்தின்படி நாம் எதையாவது கேட்டால், அவர் நமக்குச் செவிக்கொடுப்பார் என்பது அவர் மீது நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை” ( 1 யோவான் 5:14 ).
தேவனுடைய சித்தமான நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவதையும், மேலும் மேலும் கிறிஸ்துவின் சாயலாக செதுக்கப்படுவதையும் வாஞ்சித்து, உங்களது வாழ்வில் இவைகள் ஏற்படவேண்டுமென்ற விருப்பத்தோடு நீங்கள் ஜெபிக்கிறீர்களா? திடன்கொள்ளுங்கள் – உங்களது தட்டுதல் பதிலற்றுப் போகாது, உங்களது விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படாது. இயேசு தனது சீஷர்களிடம், “அன்றன்ற ஆகாரத்துக்காக “ ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தார் என்பதற்கான அர்த்தம், இன்று ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து இந்த விண்ணப்பங்களை கேட்க அவர் விரும்புகிறார் என்பதாகும் (மத் 6:11).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


