Are There Degrees of Sin?
பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?
06-11-2024
ஆதியிலே…
12-11-2024
Are There Degrees of Sin?
பாவத்திற்கு அளவுகோல்கள் உள்ளதா?
06-11-2024
ஆதியிலே…
12-11-2024

வேதம் போதிக்கும் உக்கிராணத்துவம் என்றால் என்ன?

What Is Biblical Stewardship?

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியக்காரனாக எப்படி பணியாற்றுவது என்று புதிய ஏற்பாட்டின் விளக்கத்தின் அடிப்படையில் உருவான வார்த்தையே உக்கிராணத்துவம் என்ற வார்த்தையாகும். பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, மனித உணர்வுகள் ஆகிய தலைப்புகளின் கீழே இன்றைக்கு சமூக வலைதளங்களில் அதிகமான உரையாடல்களும் மற்றும் செய்தித்தாள்களில் முதல் பக்க தலைப்பாகவும் இருக்கிறது. முக்கியமாக தேர்தல் காலங்களில், பொருளாதாரத்தை சார்ந்த தர்க்கங்களே அதிகமாக பேசும் பொருளாக உள்ளது. ஆனால் இங்கே மற்ற பல பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை. உதாரணமாக கருக்கலைப்பு மற்றும் கல்வி சார்ந்த பிரச்சனைகள் ஆகிய இது போன்ற பிரச்சனைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதாலே ஏற்படுகிறது. இதைப் பற்றி அவர்கள் பெரிதாக பேசுவதில்லை. பரவலாக நாம் சிந்திக்கும்போது, பொருளாதாரம் என்பது பணம், வரிசெலுத்துதல் மற்றும் தொழில் ஆகியவற்றோடு மட்டும் சம்பந்தப்படாமல், பொருளாதாரத்தின் அடிப்படை மூலாதாரத்தை அல்லது அதின் வளங்களை எப்படி நாம் பாதுகாத்து, நிர்வகிக்கிறோம் என்பதிலும் அடங்கி இருக்கிறது. மேலும் அது நமக்கு கொடுக்கப்பட்ட எல்லா வளங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. கருவிலிருந்து இன்னும் பிறக்காத குழந்தைகள், கல்விசார்ந்த உபகரணங்கள், வரைமுறைகள் என்று எல்லா வளங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

இன்னொரு வகையில் இதை தெளிவாக கூற வேண்டுமானால், நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வளங்களை நாம் எப்படி பாதுகாத்து, பயன்படுத்துகிறோமோ அதை பொறுத்தே நமது பொருளாதார நிலை அமைகிறது. வேதாகமம் கூறும் கிறிஸ்தவ உக்கிராணத்துவமும் இதைப் போலவே இருக்கிறது. உக்கிராணத்துவம் மற்றும் பொருளாதாரம் என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை பற்றி நாம் சற்று சிந்திக்கலாம். Economy (பொருளாதாரம்) மற்றும் Economics (பொருளியல்) என்ற ஆங்கில வார்த்தையானது ‘oikonomia’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்ட ஒன்றாகும், அது இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. ஒன்று ‘oikos’ என்ற வார்த்தைக்கு வீடு (house) அல்லது வீட்டு உறவுகள் (household) என்று பொருளாகும். ‘nomos’ என்ற வார்த்தைக்கு சட்டம் (law) என்று அர்த்தம் ஆகும். இந்த இரண்டையும் இணைத்து ‘வீட்டு சட்ட விதிகள் ‘house law’ என்று அழைக்கப்படுகிறது.

‘oikonomia’ என்ற கிரேக்க மொழியின் வார்த்தையை ஆங்கில மொழியில் ‘economy’ என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ‘oikonomia’ என்கிற இந்த வார்த்தையை மூல மொழி புரிதலோடு நாம் மொழிபெயர்ப்பு செய்யும்போது அது ஆங்கிலத்தில் Stewardship (உக்கிராணத்துவம்) என்ற வார்த்தையாக வருகிறது. ஆகவே பொருளாதாரம் மற்றும் உக்கிராணத்துவம் என்ற இரண்டு வார்த்தைகளும் நெருங்கிய தொடர்புடையதாயிருக்கிறது. உண்மையில் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்கு இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

பண்டைய காலங்களில், உக்கிராணத்துவம் என்பது வீட்டினுடைய எல்லா காரியங்களையும் சரியாக நிர்வகிக்கும்படியான பொறுப்பையும், அதிகாரத்தையும் ஒரு மனிதனுக்கு கொடுப்பதாக இருக்கிறது. உதாரணமாக நம்முடைய முற்பிதாக்களில், யோசேப்பு போத்திபாரினுடைய வீட்டுக்கு உக்கிராணக்காராணாக நியமிக்கப்பட்டிருப்பதை வாசிக்கலாம். அந்த வீட்டினுடைய எல்லா காரியங்களையும் பராமரிக்கத்தக்கதாக, அந்த வீட்டின் மீதான அதிகாரம் முழுவதும் யோசேப்புக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவன் அந்த வீட்டினுடைய காரியங்களை சரியான முறையில் நிர்வகிக்கத்தக்கதான கடமையுள்ளவனாக காணப்பட்டான். அந்த வீட்டினுடைய எல்லா வளங்களையும் அவன் வீணாக்காமல், ஞானமான விதத்தில் அதை பயன்படுத்த வேண்டியவனாக இருந்தான்.

உக்கிராணாத்துவத்தை குறித்ததான அடிப்படைக் காரியங்கள் கிரேக்க சட்டதிட்டங்களிலிருந்து பெறப்பட்ட ஒன்றாகவோ, அல்லது யோசேப்பு எகிப்தில் இருந்தபோது தோன்றிய ஒன்றாகவோ நாம் கருதவேண்டிய அவசியம் இல்லை. ஒரு உக்கிராணக்காரனுடைய உக்கிரானதுவத்தின் அடிப்படையான காரியங்கள், மனிதனை ஆதியிலே தேவன் படைத்தபோதே தோன்றிய ஒன்றாகும்.

உக்கிராணத்துவத்துக்கான அடிப்படை சத்தியங்களை ஆதியாகமத்தினுடைய ஆரம்ப அதிகாரங்களிலிருந்து நாம் கீழ்க்கண்ட வசனங்களின் மூலமாக பார்க்கலாம்.

“பின்பு தேவன் நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்து பறவைகளையும் மிருக ஜீவன்களையும் பூமி அனைத்தையும் பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்பி அதை கீழ்ப்படுத்தி சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்து பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (ஆதி 1:26-28),

வேதத்தினுடைய முதல் பக்கத்திலேயே, முழு மனக்குலத்தினுடைய ப்டைப்புநிலையை பார்க்கிறோம். அதாவது மனிதனை தேவன் தன்னுடைய சாயலாக படைத்து, தானே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர் என்பதை அவனுக்கு வெளிப்படுத்தி, தன்னுடைய சாயலை பெற்ற அவர்கள் எப்படி அவரை பிரதிபலிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறதையும் பார்க்கலாம். மனிதர்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பும்படியாக தேவன் கட்டளை கொடுக்கிறார். இது அவர்கள் தங்களுக்கு கொடுக்கபட்ட எல்லா படைப்பின் வளங்களையும் பயன்படுத்தி, தங்களுடைய உக்கிராணத்துவத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான கட்டளையாகவும் அமைந்துள்ளது. உக்கிராணத்துவத்தை குறித்ததான சத்தியமானது படைப்பினுடைய ஆணி வேரிலிருந்து உருவான ஒன்றாகும்.

அடிப்படையாக, உக்கிராணத்துவம் என்பது, தேவன் நமக்கு கொடுத்த அவருடைய படைப்பின் மீதான அதிகாரத்தை, அவர் எப்படி அதை அக்கறையோடு, கடமை உணர்வோடு பராமரித்து, பாதுகாத்து, அலங்கரித்தாரோ அதேபோல அவருடைய சாயலை பெற்ற நாமும் அவரைப்போல பிரதிபலித்து, செயல்படுத்தி வாழ்வதே ஆகும்.

நாமும் கூட சில சமயங்களில், புதிய ஏற்பாடானது, மனிதனுடைய உழைப்பு, நிர்வாகம், வளங்களை செழிப்பாக்குதல் போன்ற காரியங்கள் எல்லாவற்றையும் குறித்து அக்கறை கொள்வதில்லை என்பதை போல் எண்ணிக்கொண்டு, ஒருவரை ஒருவர் அன்புகூர்ந்து, கிரியைகளின் அடிப்படையில் அல்லாமல் கிருபையைக் கொண்டு வாழ வேண்டும் என்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருகிறோம். ஆனால் இயேசுவினுடைய உபதேசங்களையும் அவருடைய உவமைகளையும் நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் அவர் பலுகிப் பெருகுவதை குறித்து அதிகமாக பேசியிருப்பதை பார்க்கலாம். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களை வெறுமனே உலக காரியங்களில் மட்டும் பலகிப் பெருகும்படியாக சொல்லாமல், அவருடைய ராஜ்ஜியத்தின் காரியங்களிலும் அதிகமதிகமாய் பலகிப்பெருகும்படியாக எதிர்பார்க்கிறார். படைப்பினுடைய தொடர்ச்சியோடு நாம் நின்று விடாமல் தொடர்ந்து கனிகொடுக்கும் ஆற்றலோடு அவருடைய ஜனங்கள் அவருடைய ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.

ஆதாம் ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது பிரதான கட்டளை என்னவென்றால் அவர்கள் பூமியை ஆண்டு கொள்வது தான். ஆதாமும் ஏவாளும் தேவனுடைய துணை பிரதிநிதிகளாக செயல்பட்டு முழு படைப்பையும் ஆள வேண்டும் என்றே அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். முழு படைப்பையும் சுயாதீனமான அதிகாரத்தோடு ஆளும்படியாக தேவன் அவர்களை இங்கே நியமிக்கவில்லை. இன்னமும் முழு உலகமும் அவருக்கு சொந்தமானதாய்தான் இருக்கிறது. ஆனால் தேவன் ஆதாமையும் ஏவாளையும் பூமி,வானம், சமுத்திரம், ஆறு, மரங்கள், மிருகங்கள், சுற்றுச்சூழல் ஆளும்படியான அதிகாரத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். அதாவது துணிகரமாக, கொடுங்கோல் ஆட்சி செய்து தான் விரும்பியபடி எதை வேண்டுமானாலும் செய்யும்படியாக தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இங்கே அதிகாரத்தை கொடுக்கவில்லை. ஆதாமையும் ஏவாளையும் இந்த பூமிக்கு உரிமையாளர்களாக தேவன் வைக்கவில்லை. பூமியை பராமரிக்கும் உக்கிராணக்காரர்களாக, அவர்கள் தம்முடைய நாமத்துக்காக மற்றும் தம்முடைய மகிமைக்காக செயல்படும்படியாகவே அவர்களை படைத்தார்.

தேவன் இந்த கட்டளைகளை கொடுத்த உடனே அழகான சிறப்பு மிக்க ஒரு தோட்டத்தையும் உருவாக்கி ஆதாமையும் ஏவாளையும் அதிலே வைத்து அதைக்காத்து, பண்படுத்தும் படியான கட்டளையையும் அவர்களுக்கு கொடுத்தார் (ஆதி2:15). ஏதேன் தோட்டத்தை காத்து, அதை பண்படுத்த வேண்டுமென்று மனிதனுக்கு கொடுத்த கட்டளையே தேவன் மனுக்குலத்திற்கு கொடுக்கப்பட்ட உக்கிராணத்துவத்தை புரிந்து கொள்ள உதவும் திறவுகோலாய் இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதனை ஏன் தன்னுடைய சாயலாக படைத்தார் என்றும், அவர் அவனுக்கு பூமியின் மீது கொடுத்த அதிகாரத்தினுடைய சிறப்புரிமை எப்படிப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

படைப்பிலேயே, தேவன் மனிதனுக்கு கொடுத்த இவ்வித பிரதானமான கட்டளையானது, அவருடைய முழு படைப்பின் மீதும், அவரை பிரதிபலித்து, அவருடைய உக்கிராணத்துவத்தை நாம் படைப்புகளில் வெளிப்படுத்துவதேயாகும். உக்கிராணத்துவத்தை பற்றினதான இந்த காரியங்கள், வெறுமனே மத செயல்பாடுகள் மற்றும் திருச்சபை காரியங்களை தாண்டி வேறுபல காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது. இந்த உக்கிராணத்துவம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகளுக்கும், தொழில் துறை முன்னேற்றத்துக்கும், ஒருவரை ஒருவர் எப்படி அனுசரிக்க வேண்டும், விலங்கினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை எப்படி அணுக வேண்டும் போன்ற மேற்கூறிய எல்லாவற்றிலும் நம்முடைய ஈடுபாடு, பாதுகாப்பு போன்றவை எப்படி இருக்கிறது என்பதும் இதில் உள்ளடங்கும். படைப்பின் மீது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரமானது, அந்த படைப்பை சுய ஆதாயத்திற்காக சுரண்டி, கொள்ளையடித்து, அதை ஊதாரித்தனமாக பயன்படுத்தி, சுய நலத்திற்காக உலகத்தை அழிப்பதற்கான அனுமதியல்ல. நம்முடைய வீட்டில் நாம் வேலை செய்து, அதை பராமரித்து, பாதுகாப்பதின் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட உக்கிராணத்துவத்தை நாம் கடமை பொறுப்போடு செயல்படுத்த வேண்டும். வீட்டில் வேலை செய்து மற்றும் அதை பராமரித்து என்று சொல்லும் போது அதன் அர்த்தம் என்னவென்றால், அந்த வீடானது அழிந்து போகாதபடிக்கு பாதுகாத்து, அதை ஒழுங்கும் கிரமமாக நிர்வகித்து, அதை சரியான முறையில் பாதுகாத்து, பராமரித்து, அதை தகுந்த முறையில் அழகாக்க வேண்டுமென்று அர்த்தமாகும். அறிவியல் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பானது நாம் மேற்சொல்லிய உக்கிராண காரியத்தை மையமாக வைத்தே கட்டப்படுகிறது. தேவன் ஆதாம் ஏவாளிடத்தில் இனிமேல் உங்களுக்கான எல்லா ஆகாரமும் பரலோகத்திலிருந்து இலவசமாக உங்களுக்கு கொடுக்கப்படும் என்று சொல்லவில்லை. மாறாக நீங்கள் என்னோடு கூட இணைந்து பூமியின் வளங்கள் அதினுடைய பலன்களை தரும்படி நீங்கள் உழைக்க வேண்டும் என்றுரைக்கிறார். அவர்கள் பூமியை சுத்தபடுத்துவதிலும், பண்படுத்துவதிலும் பயிரிடுவதிலும், அதின் பலன்களை முறையாக சேர்த்து வைப்பதிலும் இதுபோன்ற மற்றும் பல காரியங்களிலும் மிகவும் பொறுப்புள்ளவர்களாக செயல்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

ஏதேன் தோட்டத்திலுள்ள ஆதாம் ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட உக்கிராணத்துவத்தின் அடுத்த கட்டளையானது, எல்லா விலங்கினங்களுக்கும் பெயர் வைப்பதாகும் (ஆதி 2:19). இந்த நிகழ்வின் அடிப்படையிலேயே, அறிவியலின் பிறப்பை நாம் பார்க்கலாம். இதை ஆழமாக நாம் உற்று நோக்கும்போது, அந்தந்த விலங்குகளின் இனத்தின்படி, வகையின்படி, சுபாவத்தின்படி, உருவத்தின்படி வேறுபடுத்தி பகுத்தாராயும் காரியங்களை ஆதாம் செய்திருப்பதை நாம் காணலாம். இதுவும் கூட நம்முடைய உக்கிராணத்துவத்தின் ஒரு முக்கிய பங்காகும். நாம் வசிக்கும் இடம் எப்படிப்பட்டது? அதை நாம் எப்படி ஒழுங்குபடுத்தி பராமரிப்பது? என்பதை அறிந்து வைத்திருப்பதும் உக்கிராணதுவத்துக்குள் அடங்கும். இந்த படைப்பின் ஒழுங்குமுறை கட்டளையானது நம்முடைய சொந்த வீட்டிற்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் இதை நாம் செய்ய, பாதுகாக்க, அறிந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கர்களின் வியப்பூட்டும் சாதனைகளில் ஒன்று முதன்முதலாக விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு அனுப்பப்பட்டதுதான். அதில் மிக முக்கியமான் நினைவுகளில் ஒன்று, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக நிலாவில் கால் வைத்த அந்த அனுபவத்தை, முழு மனக்குலத்தின் சார்பாக மிகப்பெரிய அடியை தாம் எடுத்து வைத்ததாக கூறியதுதான். இந்த மிகப்பெரிய சாதனையை சிலர் மனிகுலத்தின் பெருமை என்றும் சொல்லலாம் – அல்லது முழு படைப்பின்மீதும் தேவன் நமக்கு கொடுத்த அதிகாரத்தினுடைய நிறைவேறுதலாகவும் பார்க்கலாம்.

முடிவாக, அடிப்படையில் உக்கிராணாத்துவம் என்பது, தேவன் படைப்பின்மீது நமக்கு கொடுத்த அதிகாரத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி, நம்மை படைத்த தேவனுடைய சாயலை பிரதிபலித்து, அவரைப்போல எல்லா படைப்புகளின்மீதும் அக்கறை காட்டுதல், பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல், பராமரித்தல், கடமை பொறுப்போடு உழைத்தல், மற்றும் முழு படைப்பையும் சரியானவிதத்தில் கனப்படுத்துதலாகும்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.