All Truth Is God's Truth
எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே
27-01-2026
Why the God-Man?
ஏன் தேவனும்-மனிதனும்?
03-02-2026
All Truth Is God's Truth
எல்லா உண்மையும் தேவனுடைய உண்மையே
27-01-2026
Why the God-Man?
ஏன் தேவனும்-மனிதனும்?
03-02-2026

பிரிக்கமுடியாத தேவனுடைய  அன்பு

தேவனுடைய அன்பான தயவின் உண்மையும் அதின் நிலைத்தன்மையும் நமது வாழ்வில் உள்ள அனைத்து வகையான தடைகள் மற்றும் சோதனைகள் வழியாகவும் நிலைத்து நிற்கும் அதன் திறனில் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த உத்தம அன்பின் உச்ச வெளிப்பாடு பவுலின் ரோமர் 8-ஆம் அதிகாரத்தின் போதனையில் காணப்படுகிறது:

“இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,  கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” – 8 : 31- 39.

இந்த வசனப்பகுதியில் அப்போஸ்தலன், பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகளைக் கவர்ந்த ஒரு கொள்கையை முன்வைக்கிறார்: “தேவனுடைய சுவிசேஷ சத்தியங்களின் வெளிப்பாடு” (Deus pro nobis), அதாவது, இதன் பொருள் சுருக்கமாக  “தேவன் நமக்காக இருக்கிறார்” என்பதாகும். கிறிஸ்தவ ஆறுதலின் ஆதாரம் நாம் தேவனுக்காக இருக்கிறோம் என்பதோ அல்லது நாம் அவருடைய பக்கத்தில் இருக்கிறோம் என்பதோ அல்ல. மாறாக, தேவன் நமக்காக இருக்கிறார் மற்றும் நம்முடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதேயாகும்.

தேவன் நமக்காக இருக்கிறார் என்பதை அறிவது, யாரும், எதுவுமே நமக்கு எதிராக வெற்றிபெற முடியாது என்பதை நாம் அறிவதாகும். பவுலின் கேள்வி தெளிவாக பதிலில்லா வினாவாகும்: “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” பதில் வெளிப்படையானது: யாருமில்லை.

நிச்சயமாக, இதற்கு அர்த்தம் கிறிஸ்தவனுக்குச் சத்துருக்களே இருக்க மாட்டார்கள் என்பதல்ல. மாறாக, நாம் சத்துருக்களால் சூழப்பட்டிருப்போம். திரளானவர்கள் நமக்கு எதிராகத் தங்களை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் தேவன் நம்மைத் தம்மோடு இணைத்துக் கொண்டால், இந்தத் திரளான சத்துருக்களுக்கு நம்மை அழிக்க வாய்ப்பே இல்லை. நாம் தோத்தானில் இருந்த எலிசாவைப் போல இருக்கிறோம்; நம்மைச் சுற்றிலும் வான சேனையாக நமக்காகப் போராடும் கண்ணுக்குத் தெரியாத அநேக தூதர்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்தவ ஆறுதலின் ஆதாரம் தேவன் நமக்காக இருக்கிறார், மற்றும் நம்முடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதே.

நம்முடைய சத்துருக்கள் ஒருபோதும் செய்ய முடியாதது என்னவென்றால், குறிப்பாக, கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பதுதான் அவர்களால் முடியாது. ஒரு “பிரிவினை” என்பது ஒருவிதமான பிளவைக் குறிக்கிறது. விவாகரத்துக்கான பாதையில் உள்ள திருமணங்களில் ஒரு சோதனை நடவடிக்கையாக இதை நாம் அடிக்கடி காண்கிறோம். பிரிவினை விவாகரத்துக்கு முந்தையது, மேலும் அது பெரும்பாலும் விவாகரத்தின் அறிவிப்பாளராக இருக்கும். ஆனால் கிறிஸ்துவுக்கும் அவருடைய மணவாட்டிக்கும் இடையிலான திருமணத்தில், விவாகரத்துமில்லை, பிரிவினையுமில்லை. பவுல் பேசும் “கிறிஸ்துவின் அன்பு” என்பது அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு அல்ல, மாறாக அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பாகும்.

பவுல், உயிர்த்தெழுந்து, உன்னதத்தில் ஏறி, தேவனுடைய வலது கரத்தில் வீற்றிருந்து, நம்முடைய பரிந்துபேசுகிறவராக செயல்படும் நம்முடைய மகா பிரதான ஆசாரியரைச் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய அன்பிலிருந்தும் அவருடைய பராமரிப்பிலிருந்தும் நாம் பிரிக்கப்பட முடியாது. இந்த அன்பில் நம்முடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குறிப்பிட்ட விஷயங்களை பவுல் பட்டியலிடுகிறார். அவர் உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம் மற்றும் பட்டயம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார்.

இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல, ஆனால் கிறிஸ்துவின் அன்பை நாம் சந்தேகிக்கவோ அல்லது சோர்ந்துபோகவோ காரணமாக இருக்கும் பல விஷயங்களுக்கு இது நம் கவனத்தை ஈர்த்து ஆறுதல் அளிக்கிறது. நாம் துன்புறுத்தப்படும்போதும் அல்லது பஞ்சத்தின் விளைவுகளைச் சந்திக்கும்போதும், கிறிஸ்து நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று நாம் பயப்பட நேரிடலாம். ஆனால் பவுல் இந்த ஆபத்தான விஷயங்களைக் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் வரும் உபத்திரவங்களாகவே பார்க்கிறார். அவர் சங்கீதம் 44-ஐ மேற்கோள் காட்டுகிறார்: “உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” (சங். 44:22).

நாம் இரத்தசாட்சியாகும் சூழ்நிலைக்கு ஆளானாலும், அத்தகைய உபத்திரவம்கூட கிறிஸ்து நம்மீது வைத்துள்ள அன்பைத் துண்டித்துவிட முடியாது. இந்தச் சூழ்நிலைகள் அனைத்திலும் கிறிஸ்துவின் அன்பின் காரணமாக நமக்கு வெற்றிதான் உள்ளது.

பவுல், இந்த மேற்சொல்லிய எல்லாவற்றிலும் நாம் “முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என்று அறிவிக்கிறார். “முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என்ற சொற்றொடர் கிரேக்க மொழியில் ‘ஹைபெர்னிகோன்’ (hypernikon) என்ற ஒரே வார்த்தையாக மொழிபெயர்க்கிறது. இந்த வார்த்தையின் மூலச்சொல் வெற்றியின் (conquest) கருத்தைக் குறிக்கிறது (நமது நைக் ஏவுகணைகள் அல்லது விளையாட்டு காலணிகளில் குறிப்பிடப்படுவது போல). “ஹைபெர்” (hyper) என்ற வார்த்தை இந்த மூல மொழியின் வீரியத்தை அதிகரிக்கிறது. கிறிஸ்துவின் அன்பின் காரணமாக, நாம் எல்லா சத்துருக்களினால் வரும் துயரங்களின் மத்தியிலும் வெற்றி பெறுபவர்கள் மட்டுமல்ல, நாம் அவருக்குள் வெற்றியின் உச்சநிலையை, வெற்றியின் சிகரத்தை அடைகிறோம் என்பதே பவுலின் கருத்தாகும்.

கிரேக்க வார்த்தையான ஹைபெர்னிகோன்- இன் லத்தீன் சமமான சொல் ‘ஸூப்பர்விங்கிமஸ்’ (supervincimus) என்பதாகும். இது கிறிஸ்துவுக்குள் நாம் வெறுமனே வெற்றி பெறுபவர்கள் மட்டுமல்ல, தோற்கப்பட முடியாதபடி  எப்பொழுதும் வெற்றியின் உச்சத்தை அடைபவர்கள் என்பதைக் குறிக்கிறது.

இந்த வெற்றியின் உச்சம் “அவராலே” அடையப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். அவரில்லாமல் அல்லது அவரை விட்டுப் பிரிந்து இதை அடைய முடியாது. மேலும், இங்கே பவுல் பேசும் “அவர்” என்பவரே “நம்மில் அன்புகூருகிறவர்” என்று வரையறுக்கப்பட்டு அடையாளம் காணப்படுகிறார்.

பின்னும் பவுல், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கும் வல்லமை இல்லாத விஷயங்களின் மற்றொரு பட்டியலைத் தாம் உறுதியாக நம்புவதாகப் இங்கு மேலும் சில காரியங்களை சேர்கிறார் . இந்தப் பட்டியலில் மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயரமானாலும், ஆழமானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

மீண்டும், பவுல் கொடுக்கும் இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல, மாறாக அது ஒரு உதாரணமே ஆகும். அவர் ஒரு சத்தியத்தைத் தொடர்புபடுத்த  இலக்கணத்திலுள்ள உயர்வு நவிற்சி அணியைப்யைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய அன்பிலிருந்து நம்மைக் இழுக்கும் அதிகாரம் தேவதூதர்களுக்குக் கூட இல்லை. நம்மை அவரிடமிருந்து பிரிக்கக்கூடிய வல்லமை கொண்ட வெளிப்படையான மற்றும் உடனடி ஆபத்தோ அல்லது எதிர்கால அச்சுறுத்தலோ எதுவுமில்லை. இயற்கையின் சக்திகள், அரசாங்கத்தின் சக்திகள், பாதாளத்தின் சக்திகள் – இவை அனைத்தும் நம்மை கிறிஸ்துவிலிருந்து துண்டிக்க திறனற்றவை. கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பின் முன்னிலையில், இந்தச் சிருஷ்டிக்கப்பட்ட வல்லமைகள் சக்தி அற்றவையாகவே உள்ளன என்கிறார்.

தேவன் தெரிந்துகொண்டவர்களுக்கு மட்டுமேயான உத்தரவாதம் ரோமர் 8-ல் பவுல் பேசும் இந்த பிரித்தெடுக்க முடியாத அன்பு, குறிப்பாக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நோக்கி மட்டுமே அளிக்கப்படுகிறது என்பதைக் காண்பது முக்கியம். இந்த பிரித்தெடுக்க முடியாத அன்பின் உத்தரவாதத்தை அனுபவிப்பவர்கள் கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களேயாவர். கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய பிரிக்க முடியாத அன்பைப் பற்றிய இந்த விவாதம் தேவனின் தெரிந்துகொள்ளுதலின்  பின்னணியில் மட்டுமே நிகழ்கிறது. தேவன் நமக்காக இருக்கிறார் என்று பவுல் அறிவிக்கும்போது, அந்த “நாம்” திருச்சபையின் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகவே வரையறுக்கப்படுகிறார்கள். பவுல் பதிலளிக்க முடியாத வினாவாகக் கேட்கிறார்: “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுபவன் யார்? நீதிமானாக்குகிறவர் தேவனே” (ரோமர் 8:33) என்று வாதிட்டு இதை நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.