
அடங்காத பிள்ளையை நான் எப்படி கையாள்வது?
14-10-2025
ஆத்தும இளைப்பாறுதல்
21-10-2025கிறிஸ்தவ வாழ்வு
லிகோனியர் இதழ்
(The Christian Life)
தேவனே வாழ்வின் ஆதாரமாயிருக்கிறார். வேதாகமத்தின் ஆரம்ப பக்கங்கள் ஜீவனைக் கொடுக்கும் தேவனின் வல்லமைக்கு சாட்சியளிக்கின்றன, குறிப்பாக ஆதாமின் நாசியில் அவர் ஜீவ சுவாசத்தை ஊதுவதை நாம் காண்கிறோம் (ஆதி 2:7). ஆதாமும் ஏவாளும் தேவனோடு உள்ள தங்களது ஐக்கியத்தின் மூலமாகவும் அவரது தயவுள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதின் மூலமாக பூரண வாழ்வை அனுபவிப்பதற்கு தேவன் அவர்களை படைத்தார். ஆனால் மனிதனுடைய வீழ்ச்சியில் காணப்பட்ட ஆதாம் ஏவாள் மீதான சாத்தானின் சோதனை, தேவன் படைத்து நல்லது என்று கண்ட படைப்புகளுக்கு பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தது (ரோமர் 5:12).
அவர்களுடைய வீழ்ச்சிக்கு பிறகு அவர்களின் நிர்வாணத்தை மூடுவதற்கு தேவன் மிருகத்தின் தோலை வழங்கிய இந்த நிகழ்ச்சியானது வேதம் முழுவதும் வெளிப்படும் ஓர் உண்மையை காண்பிக்கிறது: வீழ்ச்சியில் இழந்து போனதை மீண்டும் புதுப்பிப்பிதற்கு ஓர் பலி அவசியம். பழைய ஏற்பாட்டின் விசுவாசிகள் தேவன் கட்டளையிட்ட பலிகளை செலுத்தவதின் மூலமாக ஓர் மேன்மையான மீட்பரை அனுப்புகின்ற தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்பினர், அவைகள் தேவனின் சொந்த குமாரனின் இறுதி பலியை முன்னறவித்த பலிகளாகும்.
இஸ்ரவேலர் தேவனுடைய உடன்படிக்கைக்கு உண்மையாக இல்லாவிட்டாலும் தேவன் தமது உடன்படிக்கையில் உண்மையுள்ளவராகவே இருந்தார். தேவன் தீர்மானித்த நேரத்தில் திரித்துவத்தின் இரண்டாவது நபராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் கன்னியின் வயிற்றில் பிறந்து, அவர் படைத்த பூமியின் மீது சுற்றித்திரிந்தார். இப்பூமியில் அவரது ஊழியத்தின் மூலமாக அவர் தாம் யார் என்பதை காண்பித்தார்: அவர் ஜீவன், தனது மக்களுக்காக ஜீவனைக் கொடுக்க வந்தார் (யோவான் 14:6, 10:11). வெறுமனே இயேசு கிறிஸ்து, வாழ்வதற்கென்று உள்ள பல வழிகளில் ஏதோ ஒறு வழி அல்ல. ஜீவனுக்கு செல்லவேண்டிய ஒரே வழி அவர் மாத்திரமே. மற்ற அனைத்தும் மரணத்துக்கு ஏதுவாக கொண்டுச் செல்கிறது. கடவுளுடைய நீதியான கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு அவர் மட்டுமே சரியான மற்றும் இறுதிபலி என விசுவாசிப்பதின் மூலம் மட்டுமே நாம் ஜீவனை அடையுமுடியும் (யோவான் 20:31).
கிறிஸ்தவ வாழ்வு என்பது நமது சொந்த முயற்சிகளாலும் நமது சொந்த பலத்தினாலும் ஒழுக்கமான வாழ்வை வாழ நாடுவது அல்ல.
எப்பொழுது நாம் நமது நம்பிக்கையை கிறிஸ்து மட்டுமே இரட்சகர் என்பதில் வைக்கிறோமோ அப்பொழுது நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்கு போகிறோம் (யோவான் 5:24). இப்போது நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளோம். நாம் இயேசுவுக்குள் காணப்படுகிறோம். இவ்வாறுதான் கிறிஸ்தவ வாழ்வு ஆரம்பமாகிறது.
கிறிஸ்தவ வாழ்வு என்பது நமது சொந்த முயற்சிகளாலும் நமது சொந்த பலத்தினாலும் ஒழுக்கமான வாழ்வை வாழ நாடுவது அல்ல. கிறிஸ்த வாழ்வு என்பது சபைக்கு தவறாமல் செல்வதினாலோ நல்ல நபராக இருப்பதினாலோ அல்லது வேதாகம அறிவை பெறுவதாலே உருவாக்கப்படுவதில்லை. மாறாக, கிறிஸ்தவ வாழ்வு என்பது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவன் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு நம்மில் செயல்பட்டு, கிறிஸ்துவின் மேன்மையையும் மகிமையையும் கண்டும் ஆராதிக்கவும் செய்கிறது மற்றும் திரியேக தேவன் மீதும் மற்றவர்கள் மீதும் கொண்டுள்ள அன்பில் வளருகையில் அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க நமக்கு பெலனை அளிக்கிறது.
இதுவே கிறிஸ்தவ வாழ்வு – இதில் கடவுள் இறையாண்மையுடன் தம் மக்களை மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கிறார், அவர்களுக்குப் புதிய இதயங்களைக் கொடுத்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவை பாவிகளுக்கான ஒரே நம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளவும், அவருடன் ஐக்கியமாகி, அவருக்கு நெருக்கமாகவும் இணக்கமாகவும் வளரவும் செய்கிறார். அனைத்தும் அவருடைய கிருபையின் மகிமையான புகழ்ச்சிக்காக நடப்பிக்கிறார் ( எபே. 1:6 ).
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


