
அனுதின வாழ்வில் நம்மை மறுரூபமாக்கும் தேவனின் பரிசுத்தத்தின் வல்லமை
22-09-2026
தேவனுடைய வார்த்தையை கேட்பவர்களின் 6 வகைகள்
29-09-2026இயேசுவே புதிய தேவாலயம்
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தேவாலயம் என்கிற வார்த்தையை நீங்கள் நினைக்கும்போது உங்கள் கற்பனையில் என்ன தோன்றுகிறது? வனாந்தரத்தில் உண்டாக்கப்பட்ட, தங்கத்தூண்களால் வடிவமைக்கப்பட்ட அழகான தொங்குதிரைகளால் பிணைக்கப்பட்ட ஓர் அலங்காரமான ஆசரிப்புகூடாரத்தை குறித்து நீங்கள் ஒருவேளை நினைக்கக் கூடும். அல்லது, பரிசுத்தமாக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தின் நுழைவாயிலைக் காவல் காக்கும் கேரூபீன்களோடும், தங்கப் பூச்சு பூசப்பட்ட சுவர்களில் பொறிக்கப்பட்ட மாதுள மரங்களோடும் கூடிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை நீங்கள் கற்பனை செய்யலாம். பண்டைய காலத்தில் காணப்பட்ட எரோதின் அதிசயங்களில் ஒன்றான, எருசலேமுக்கு மேலே கம்பீரமாக உயர்ந்து நின்ற, செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான கற்களைக்கூட நீங்கள் நினைக்கலாம். இத்தகைய பார்வைகள் அனைத்துமே வேதாகமத்தில் பல காலகட்டங்களில் இருந்த தேவாலயங்களைப் பற்றிய துல்லியமாக சித்தரிக்கப்பட்ட உதாரணங்களாகும். இருப்பினும், உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், நாம் தேவாலயத்தைப் பற்றி யோசிக்கும்போது, இயேசுவைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று வேதம் நமக்குச் சொல்கிறது. மற்ற அனைத்துமே அவரைச் சுட்டிக்காட்டும் நிழல்களாகவே இருக்கின்றன.
வேதாகமத்தில் தோன்றும் முதல் தேவாலயம் ஏதேன் தோட்டமாகும். பின்னாளில் அமைக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரம் மற்றும் தேவாலயத்தைப் போலவே, தேவன் தம்முடைய ஜனங்களோடு வாசம் செய்யும் தம்முடைய பரிசுத்த இடமாக ஏதேனை உருவாக்கினார். மனிதனின் வீழ்ச்சிக்கு முன்பாக, ஏதேன் அந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமாக காணப்பட வேண்டியிருந்தது. இந்த காரணத்திற்காகவே, தேவன் பின்னாளில் ஆசரிப்புக் கூடாரத்தில் உலாவினது போலவே ஏதேனிலும் உலாவி வந்தார் (ஆதி. 3:8; லேவி. 26:12; உபா. 23:14; 2 சாமு. 7:6–7 பார்க்கவும்). ஏதேனுக்கும் ஆசரிப்பு கூடாரத்துக்கும் கிழக்கு நோக்கிய நுழைவாயிலே காணப்பட்டதுl (ஆதி. 3:24; யாத். 26:18–22), ஏதேனும் சாலமோனின் தேவாலயமும் கேரூபீன்களால் காவல் காக்கப்பட்டன (ஆதி. 3:24; யாத். 26:31; 1 இராஜா. 6:23–29) மற்றும் மரங்களால் நிறைந்திருந்தன (ஆதி. 2:16; 1 இராஜா. 6:20–36). ஆதாமும் ஆசாரியர்களும் தங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் “பண்படுத்தவும் காக்கவும்” வேண்டியிருந்தது (ஆதி. 2:15; எண்ணாகமம் 3:8; 8:26; 18:5–6). ஏதேன் ஒரு தேவாலயமாக இருந்தது.
ஆதாம் பாவத்தில் விழுந்ததால், அவன் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். எகிப்திலிருந்து தம்முடைய ஜனங்களை தேவன் மீட்டபோது, மனந்திரும்புதலிலும், திரும்பத் திரும்பச் செலுத்தப்படும் பலிகளின் மூலமாகவும் பாவிகள் தம்மை அணுகக்கூடிய ஒரு பரிசுத்த ஸ்தலத்தை அவர் கிருபையாக மீண்டும் ஏற்படுத்தினார் (எபி. 10:1). தம்முடைய ஜனங்களோடு வாசம் செய்வதற்காக தேவன் இந்த “ஆசரிப்புக் கூடாரத்தை” ஏற்படுத்தினார் (யாத். 29:45–46). ஆனால் ஆசரிப்புக் கூடாரம் கட்டி முடிக்கப்பட்டதும், தேவனுடைய பிரசன்னமாகிய பரிசுத்த மேகமானது, அவரிடத்தில் கிட்டிச்சேரும் அனைவரும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். எனவே, மோசே உட்பட எவராலும் உள்ளே நுழைய முடியவில்லை (யாத். 40:35). ஆசரிப்புக் கூடாரத்தின் மிக பிரம்மாண்டமான ஒரு மாதிரி வடிவம் சாலமோன் ராஜாவால் கட்டப்பட்டது, அதே மேகம் இந்த தேவாலயத்தையும் மூடியது, பரிசுத்தமானவரின் பிரசன்னத்திற்குள் ஆசாரியர்களும் நுழைய முடியாது என்பதை அது உணர்த்தியது (1 இராஜா. 8:10–11).
நேபுகாத்நேச்சார் சாலமோனின் தேவாலயத்தை அழித்து, இஸ்ரவேலர்களைச் சிறைபிடித்துச் சென்ற பிறகு, பிந்தைய பெர்சிய ராஜாவான கோரேஸ், இஸ்ரவேலர்கள் தங்கள் சொந்தநாட்டிற்குத் திரும்பிச் சென்று ஒரு புதிய தேவாலயத்தை கட்ட அனுமதித்தார் (எஸ்றா 1; 2 நாளா. 36:22–23). ஆயினும், சாலமோனின் தேவாலயத்தை முன்பு பார்த்திருந்த முதிர் வயதுள்ள பெரியோர்கள் இந்த புதிய தேவாலயத்திற்கு அஸ்திபாரம் போடப்படுவதை கண்டபோது, துயரத்துடன் அழுதார்கள்; ஏனெனில், தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த மகிமையை இந்த இரண்டாவது தேவாலயம் ஒருபோதும் நிறைவேற்றாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள் (எஸ்றா 3:12). யூதர்கள் மற்றும் புறஜாதிகளாகிய பல தேசத்தார் எருசலேமுக்கு வந்து தேவாலயத்தில் தொழுதுகொள்வார்கள் என்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் எதிர்பார்த்தார்கள் (ஏசா. 2:1–5 பார்க்கவும்). ஆனால், இந்த தேவாலயம் சாலமோனின் தேவாலயத்தை விட மிகவும் மகத்தானதாக இருக்கும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்; இந்த புதிய தேவாலயம் வானத்தையும் பூமியையும் அசைப்பதாகவும், அனைத்து மக்களுக்குமான மகிமையாகவும் இரட்சிப்பாகவும் மாறும் என்றும் (ஆகா. 2:5–9), “நான் உங்களோடு இருப்பேன்” என்று தேவன் சொல்லியபடி மேலானதாக இருக்கும் என்றும் அறிந்திருந்தார்கள் (ஆகா. 2:4).
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தேவாலயம், மனுஷ உருவெடுத்த தேவனுடைய குமாரனுடைய சாயலில் வந்தது. நசரேயனாகிய இயேசுவே நம்மோடு வாசம்பண்ண, அல்லது “கூடாரமாக” நம்மிடையே வந்திருக்கிறார் (யோவான் 1:14). அவரே தேவனுடைய மெய்யான பிரசன்னம், அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக வாசமாயிருக்கிறது (கொலோ. 2:9–10). “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று யூதர்களிடம் இயேசு கூறியபோது அவரே இதை வெளிப்படையாக தெரிவித்தார் (யோவான் 2:19). யூதர்கள் அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நேரடியாக புரிந்துகொண்டபோதிலும், இயேசு தம்மைப் பற்றியும், தேவனுடைய மெய்யான தேவாலயத்தைப் பற்றியுமே ஆவிக்குரிய ரீதியில் பேசிக்கொண்டிருந்தார் (யோவான் 2:20–21). உண்மையில், ஒரு ஆசாரியராக, தம்முடைய பூரண ஜீவியத்தின் மூலமாகவும், பரிகாரபலியாகிய மரணத்தின் மூலமாகவும் தம்மைத்தானே ஒப்புக்கொடுத்தார்; இதனால் பாவிகள் அவருடைய பலியின் மூலமாக பரிசுத்த தேவனுடைய தேவாலயப் பிரசன்னத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் (எபி. 9:11–14; 10:19–20). இயேசு ஒரே நேரத்தில் ஆசாரியராகவும், பலியாகவும், தேவாலயமாகவும் இருக்கிறார்.
ஆனால் புதிய ஏற்பாடு தேவாலயத்தை மற்றொரு விதமாகவும் விவரிக்கிறது. 1 கொரிந்தியர் 3:16–17-இல் பவுல் இவ்வாறு கூறுகிறார்:
நீங்கள் தேவனுடைய தேவாலயமாயிருக்கிறீர்கென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய தேவாலயம் பரிசுத்தமாயிருக்கிறது, நீங்களே அந்த ஆலயம்.
“நீங்கள் தேவனுடைய ஆலயம்” என்று பவுல் எழுதும்போது, “நீங்கள்” என்பது ஒருமையைக் குறிக்காமல் பன்மையைக் குறிக்கிறது; அதாவது பவுல் தேவனுடைய மக்களை ஒட்டுமொத்தமாக திருச்சபையாக பாவித்துப் பேசுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு கிறிஸ்துவின் திருச்சபையும் தேவாலயமாகவே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசிகள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாய் மாற்றப்பட்டு வருகிறார்கள் (ரோமர் 8:29), ஏனெனில் அவருடைய ஆவி நமக்குள் வாசமாயிருக்கிறது. தேவனுடைய பிரசன்னமும் வல்லமையும் அவருடைய திருச்சபையில் உள்ளது, சுவிசேஷத்தின் மூலம் தேசங்களை ஆசீர்வதிக்கும் பணிக்காக அவர் திருச்சபையை ஆவியானவரால் அபிஷேகம் செய்கிறார் (மத். 28:18–20; 2 கொரி. 4:1–6). கிறிஸ்துவின் சரீரமாகிய நாம், அவருக்குள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம், ஏனெனில் அவர் நம்மைத் தம்மைப் போலவே மாற்றுகிறார். இவ்விதமாக, இந்த உலகில் நாம் கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், திருச்சபையானது தேவனுடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தும் இடமாக காணப்படும். கிறிஸ்துவுக்குள், நாம் மலையின்மேல் இருக்கும் பட்டணமாகவும் (மத். 5:14) தேசங்களுக்கு வெளிச்சமாகவும் இருக்கிறோம் (ஏசா. 49:6 உடன் அப்போ. 13:47), அதனால் நம் மூலமாக உலகமானது மெய்யான தேவனுடைய ஆலயத்தைக் காணக்கூடும்.
வேதாகமம் அலங்காரமான தொங்குதிரைகள், தங்கச் சுவர்கள் மற்றும் ஆச்சரியமான கட்டிடங்களைக் கொண்ட தேவாலயங்களை விவரித்தாலும், இவையனைத்தும் வரப்போகிற நன்மைகளுக்கு நிழலாகவே இருந்தன (எபி. 9–10). நாம் வேறொரு தேவாலயத்தைத் தேடவேண்டுவதில்லை. நாம் மெய்யான நித்திய தேவாலயமாகிய கிறிஸ்துவையே பெற்றிருக்கிறோம்.
இந்தக் கட்டுரை முதன்முதலில் ‘லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் பிளாக்’ (Ligonier Ministries Blog) தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


