
தேவனுடைய வார்த்தையை கேட்பவர்களின் 6 வகைகள்
29-09-2026
சவாலான நேரங்களில் ஓர் தகப்பனின் வழிகள்
06-10-2026குழந்தைகளுக்கான உடன்படிக்கைக் இறையியல்: தொடக்கநிலை வழிகாட்டி
நாம் நமது குழந்தைகளை ஓய்வுநாள் பள்ளிக்கு (Sunday school) அல்லது வேதாகம கோடைக்காலப் பள்ளிக்கு (VBS) அனுப்பும்போது, அவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்படாததாகத் தோன்றும் நபர்களின் குணங்களோடு, தேவனுடைய பெரிய திட்டத்தின் நோக்கங்களை ஒன்றாக இணைக்க நாம் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்த மிகவும் அவசியமான சத்தியங்கள் என்ன?
லிகோனியர் ஊழியங்களின் குழந்தைகளுக்கான புதிய பாடத்திட்டமான தேவனின் வார்த்தையில் வளருதல் (‘Growing in God’s Word’) என்னும் பாடத் திட்டத்தின் மூலம் வேதாகமத்தில் உள்ள அடிப்படை சத்தியங்களை ஒரு வருட காலப்படிப்பாகத் தொகுத்து வழங்குகிறோம். இது வேதாகமத்தின் உடன்படிக்கையோடு தொடர்புடைய சத்தியங்களை தனித்துவமாக பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தேவன் எவ்வாறு மனிதகுலத்துடன் இடைபடுகிறார் மற்றும் இரட்சிப்பை அளிக்கிறார் போன்ற மிகப்பெரிய சத்தியங்களை தெளிவாக அறியலாம். வேதாகமத்தின் அடிப்படை சத்தியங்களை பகிர்ந்து கொள்வதற்கோ அல்லது குழந்தைகளுக்கு இறையியலை அறிமுகப்படுத்துவதற்கோ அவர்கள் பெரியவர்களாகும் வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பாடத்திட்டங்கள், உடன்படிக்கை இறையியலின் முக்கிய அம்சங்களை, அவர்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றார் போல் நடைமுறை செயல்பாடுகள் மற்றும் கேள்விகள் மூலம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
“சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மத்தேயு 19:14) என்ற இயேசுவின் கட்டளையைப் பின்பற்றும்படி திருச்சபைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தீவிரமாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நமது பிள்ளைகளின் ஆரம்பகாலக் கற்றலிலேயே அவர்களுக்குத் தொடர்ச்சியாகவும் உண்மையாகவும் வேதாகமத்தை எளிதில் புரியவைக்க நாம் ஆரம்பிக்க சில முக்கிய கருப்பொருள்கள் இதோ:
- படைத்தவர்
குழந்தைகளுக்கு உடன்படிக்கைக் இறையியலை அறிமுகப்படுத்தும்போது, நாம் தொடக்கத்திலிருந்தே எளிமையாக ஆரம்பிக்கலாம். தேவனே படைத்தவர். தேவன் ஒன்றுமில்லாமையிலிருந்து முழு படைப்புகளையும் தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கினார். அவருடைய படைப்புகளின் வாயிலாக அவர் வெளிப்படுகிறார்; ஆனாலும் அவருடைய வார்த்தையின் மூலமாகவே ஜீவன், மரணம், பாவம் மற்றும் கிறிஸ்துவின் ஆளத்துவம் பற்றிய முக்கியமான சத்தியங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மார்ட்டின் லூத்தர் இவ்வாறாக கூறுகிறார்: “தேவனின் கிரியைகளையும் வல்லமையையும் நான் அறியாவிட்டால், நான் தேவனையே தெரியவில்லை; நான் தேவனை அறியாவிட்டால், என்னால் அவரைத் தொழுதுகொள்ளவோ, துதிக்கவோ, நன்றி செலுத்தவோ அல்லது சேவிக்கவோ முடியாது.”
தேவன் எல்லாவற்றையும் படைத்தார், மேலும் உடன்படிக்கையின் மூலம் தம்முடைய படைப்பை இறையாண்மையோடு பராமரிக்கிறார் (ரோமர் 5; 1 கொரிந்தியர் 15 காண்க). உடன்படிக்கை என்பது ஆசீர்வாதங்களும் கடமைகளும் அடங்கிய ஒரு வாக்குறுதியாகும். தேவனின் உடன்படிக்கைகள் தன்னிச்சையானதோ அல்லது வியாபாரப் பரிவர்த்தனைக்காணதோ அல்ல; மாறாக, அவை அவருடைய பரிசுத்தத்தின் சுய-வெளிப்பாட்டையும், அவருடைய படைப்பில் அவர் செய்யும் கிரியைகளையும் வெளிப்படுத்துகின்றன. அவர் தமது சுயநல விருப்பங்கள், சௌகரியம் அல்லது நடைமுறைச் சாத்தியக்கூறுகளிலிருந்து மாறுபட்டுச் செயல்படாமல், தமது திரித்துவ இயல்புக்கு ஏதுவாகவே எப்போதும் செயல்படுகிறார். வேதாகமம் மூன்று அடிப்படை உடன்படிக்கைகளை வெளிப்படுத்துகிறது: மீட்பின் உடன்படிக்கை (covenant of redemption), கிரியைகளின் உடன்படிக்கை (covenant of works), மற்றும் கிருபையின் உடன்படிக்கை (covenant of grace).
- கிறிஸ்து
வேதாகமம் முழுவதும் கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகிறது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை, பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது; அவை அனைத்தும் சேர்ந்து இதுவரை சொல்லப்பட்ட கதைகள் மிக சிறப்பான ஒரு கதையை அதாவது—கிறிஸ்துவின் கிரியையில் ஆழமாக வெளிப்படுத்துகிற, தேவனுடைய படைப்பின் மீதான அவருடைய கிருபையை ஒன்றாக பிணைக்கின்றன. உடன்படிக்கை இறையியல், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை ஒன்றாக இணைத்து, பரிசுத்த தேவனை அவருடைய நியாயப்பிரமாணத்திலும், ஒரே முறை செய்யப்பட்ட கிறிஸ்துவின் கிரியையிலும் வெளிப்படுத்துகிறது (கலாத்தியர் 3:24–29). கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை மறந்துவிடாமல், தமது பூரணமான வாழ்க்கை, தியாக பலி மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் கிரியைகளின் உடன்படிக்கையை நிறைவேற்றி, தம்மைப் பின்பற்றும் அனைவரையும் கிருபையின் உடன்படிக்கைக்குள் நடத்துகிறார் (மத்தேயு 5:17).
முழுமையான மனிதனாகவும் முழுமையான தேவனாகவும் இருக்கும் இயேசு கிறிஸ்து மட்டுமே, பூரணமான தேவனுக்கும் வீழ்ந்துபோன மனுகுலத்திற்கும் இடையிலான ஒரே மத்தியஸ்தராவார். பிதா தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினதினாலும்; குமாரனின் பாவநிவாரண வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினாலும்; பரிசுத்த ஆவியானவரின் மறுரூபப்படுத்தும் வல்லமையினாலும் மட்டுமே நாம் கிருபையின் உடன்படிக்கையின் அனைத்து நன்மைகளையும் பெறுகிறோம். விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், இப்போது தேவனை “பிதாவே” என்று அழைக்க முடியும், மேலும் இந்த உறவின் அடிப்படையில் தேவனிடத்தில் காணப்படும் சமாதானத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும், பூரணமான இளைப்பாறுதலையும் கண்டடைய முடியும்.
- திருச்சபை
கிருபையின் உடன்படிக்கையானது ஒவ்வொரு கோத்திரத்திலும், இனத்தாரிலும், பாஷைக்காரரிலுமிருந்தும், ஜனத்திலுமிருந்தும் வரும் விசுவாசிகளின் ஐக்கியமாகும். இதில் தனித்து வாழ்பவர்கள் யாருமில்லை, யாருக்கும் தனிப்பட்ட சலுகைகளும் கிடையாது. திருச்சபையைப் புரிந்துகொள்ள, நாம் உடன்படிக்கை இறையியலையும், பொதுவான ஆராதனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். நற்செய்தியானது உடன்படிக்கையின் ஜனங்களை ஒரே தளத்தின் கீழ் இணைக்கிறது: ஒரே வழி இயேசுவே (யோவான் 14:6). முதல் ஆதாமினால் தான் மனிதகுலம் பாவத்தில் மரித்தது; கடைசி ஆதாமால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறோம் (1 கொரிந்தியர் 15:45). இந்த விசுவாசம் நம்மை அந்தகாரத்தின் ஆளுகையிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டுவருகிறது; அங்கே கிறிஸ்துவை நோக்கி கூப்பிடும் எவரும் ஒருபோதும் பிரிக்கப்படுவதுமில்லை அல்லது கைவிடப்படுவதுமில்லை.
இது மெய்யாக இருந்தாலும், கிறிஸ்து திரும்பி வரும்வரை அல்லது நம்மை நித்தியத்திற்குள் அழைக்கும்வரை நாம் இன்னும் ஒரு வீழ்ச்சியுற்ற உலகத்திலேயே வாழ்கிறோம். ஞாயிறு ஆராதனை என்பது விருப்பத்திற்கேற்றபடி வாரத்தின் கடைசியில் செயல்படுத்தப்படும் காரியம் மட்டுமல்ல; நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதைக் காட்டும் ஒரு பெரிய பிம்பத்தை குறிக்கிறது: அதாவது, நம்மைப் படைத்த தேவனைப் பற்றிய அறிவில் வளர்ந்து, கிறிஸ்துவுக்குள் அவர் நமக்களித்த திரித்துவ இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான அழைப்பாகும்.
- அழைப்பு
உடன்படிக்கையின் பிள்ளைகளுக்கு—நற்செய்தி அறிவிக்கப்படுவதைக் கேட்கும் எல்லாரையும் போல—கர்த்தருடைய வழியில் தொடர்ந்து நடப்பதற்கான ஒரு தனித்துவமான பாக்கியமும் ஆசீர்வாதமும், மீண்டும் மீண்டும் கொடுக்கப்படும் அழைப்பும் அடங்கும். நமது குழந்தைகளுக்கு உடன்படிக்கை இறையியலை கற்பிக்கும்போது, நித்தியமான சத்தியத்தின் மீது கட்டப்பட்ட வாழ்க்கைகான ஒரு கட்டமைப்பை நாம் வழங்குகிறோம். ஆனால் நமது போதனை வெறும் மனப்பாடம் செய்வதோடு அல்லது வெளிப்புற செயல்களை மாற்றுவதோடு நின்றுவிட்டால், திராட்சைக் கொடியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்க நாம் அவர்களை அழைக்கத் தவறிவிட்டோம் என்று அர்த்தம். நமது பிள்ளைகள் விசுவாசத்தோடு இயேசுவுக்குப் பின்செல்லவும், கிருபையின் சாதனங்கள் மூலம் கொடியில் நிலைத்திருக்கவும் நாம் அவர்களை அழைக்க வேண்டும். உள்ளூர் திருச்சபையோடு தொடர்புடைய இந்த அழைப்பையே வேதாகமத்தின் பல்வேறு கதைகள் வெளிப்படுத்துகின்றன: அதுவே தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பதற்கான விசுவாசத்தின் அழைப்பு.
நமது குழந்தைகளுக்குப் பொறுமையுடன் பயிற்சியளித்து, கர்த்தரைக் கண்டடையக்கூடிய சமயத்தில் அவரைத் தேட புத்திமதி சொல்லும் அதே வேளையில் (ஏசாயா 55:6), நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய ஓர் அவசரச் செய்தியும் இதில் உள்ளது. நமது குழந்தைகளுக்கு உடன்படிக்கைக் இறையியலைக் கற்பிக்கும்போது, இந்த வாழ்க்கையையும் இனிவரும் வாழ்க்கையையும் அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும், அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்தப்படவும் வேண்டிய சரியான பயணத்தை நோக்கி அவர்களை நாம் வழிநடத்த வேண்டும்.
- மார்ட்டின் லூத்தர், (Bondage of the Will – சித்தத்தின் அடிமைத்தனம்).
- பெரியவர்களுக்கான உடன்படிக்கை இறையியல் பற்றிய முழுமையான பார்வைக்கு, ஜே.வி. ஃபெஸ்கோ (J.V. Fesko) என்பவரின் புதிய புத்தகமான Signed, Sealed, Delivered: An Introduction to Covenant Theology மற்றும் அதன் போதனைத் தொடரைப் பார்க்கவும்.
இந்தக் கட்டுரை முதன்முதலில் ‘லிகோனியர் மிினிஸ்ட்ரீஸ் பிளாக்’ (Ligonier Ministries Blog) பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


