The King and the Kingdom

ராஜாவும் அவருடைய ராஜ்யமும்

19-11-2026
The King and the Kingdom

ராஜாவும் அவருடைய ராஜ்யமும்

19-11-2026

நமது சரீரங்களால் தேவனை மகிமைப்படுத்துதல்

Honoring God With Our Bodies

பாலுணர்வு என்பது நாம் யார் என்பதைப் பற்றிய ஒரு தற்செயலான அம்சம் அல்ல; அது நம் ஆள்தன்மையோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆயினும், கிறிஸ்தவர்கள் பாலுணர்வைப் பற்றி தெளிவாகவும், வேதாகமத்தின் அடிப்படையிலும், துணிவுடனும் பேசுவதில் பெரும்பாலும் தடுமாறியிருக்கிறார்கள். பலர் இந்தத் தலைப்பை தங்கள் பிள்ளைகளுடன் பேசவோ, சபையில் இதைக் குறித்து கருத்து தெரிவிக்கவோ தயங்குகிறார்கள். ஆனால் பாலுணர்வின் வேதாகம இறையியலை நாம் கற்றுக்கொடுக்காவிட்டால், உலகம் அந்த வெற்றிடத்தை மகிழ்ச்சியுடன் நிரப்பிவிடும். பாலுறவு ஒரு முக்கியமற்ற பிரச்சினை என்பது போல் நாம் நடந்துகொள்ள முடியாது. மனிதனாய் இருப்பதன் அர்த்தத்தில் அது ஒரு முக்கிய பகுதியாகும்.

இதை எல்லாரையும்விட கிறிஸ்தவர்கள்தான் உணர வேண்டும். ஏனெனில், கடவுள் மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்; அவர்களை “மிகவும் நல்லது” என்று அறிவித்தார் (ஆதியாகமம் 1:31). அவர் மனித உடலை நோக்கத்துடன் வடிவமைத்தார்; ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் வெட்கமின்றி ஒருவர் முன் ஒருவர் நின்றனர். வேதாகமம் உடலைப் பற்றி அதுவும் அதன் மிகவும் தனிப்பட்ட உடல் பாகங்களைப் பற்றியும்கூட நாம் பெரும்பாலும் பேசுவதைவிட மிக வெளிப்படையாகவேப் பேசுகிறது. கடவுளின் உடன்படிக்கை மக்களைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான மிக நீடித்த அடையாளங்களில் ஒன்றான விருத்தசேதனத்தைச் சிந்தியுங்கள். இந்தச் சொல் மிகவும் பரிச்சயமானதால், பலர் அதன் பொருளைப் பற்றி சிந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்: அது ஆண் அந்தரங்க உறுப்பின் ஒரு பகுதியை நீக்குவதாகும். இப்படிப்பட்ட ஓர் அடையாளத்தை எந்த வகையான கடவுள் கட்டளையிடுவார்? உடலைக் குறித்து வெட்கப்படாத, அதே நேரத்தில் பாலுறவையே தம்முடைய உடன்படிக்கை நோக்கங்களுக்கான ஒரு கருவியாக வடிவமைத்தவர் கடவுள். ஆபிரகாம் சாராளுடன் கொண்ட உறவின் வழியாக, கடவுள் வாக்களிக்கப்பட்ட சந்ததியை உருவாக்கினார்; ஆபிரகாமின் உடலிலிருந்த அந்த அடையாளம், மனித பாலுணர்வும்கூட அவருக்கே உரியது என்பதை அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டும் அடையாளமாக இருந்தது.

இன்று, பாலுறவைப் பற்றிய உலகின் செய்திகளால் நாம் சூழப்பட்டிருக்கிறோம். அதன் பொருள், அதன் இன்பங்கள், அதன் கூறப்படும் சுதந்திரங்கள், இதில், ஆரம்பகால கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல; அவர்களும் பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும்படி தங்கள் கலாச்சாரத்தால் அடிக்கடி சோதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, கிறிஸ்தவம் மத்தியதரைக் கடல் உலகம் முழுவதும் முதன்முதலில் பரவியபோது, அதன் மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்று அதன் பாலியல் நெறிமுறையாக இருந்தது. கி.பி. 112-ல் எழுதிய ரோமானிய ஆளுநர் பிலினி, கிறிஸ்தவர்கள் அதிகாலையில் ஒன்றுகூடி கிறிஸ்துவைப் போற்றி பாடல்கள் பாடுவதாகவும், “குற்றம் செய்யாமல், திருட்டு, கொள்ளை, விபச்சாரம், நம்பிக்கை மீறல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க” ஒருவருக்கொருவர் சத்தியம் செய்துகொள்வதாகவும் பேரரசர் டிராஜனுக்குத் தெரிவித்தார். திருச்சபையின் ஆரம்ப நாட்களிலிருந்தே விசுவாசிகள் தங்கள் ஒழுக்க நேர்மையால் அடையாளம் காணப்பட்டு வந்துள்ளனர்; பாலியல் தூய்மையைத் தொடர்வது அவர்களின் விசுவாசத்தின் ஒரு தனித்துவமான பண்பாக இருந்து வந்துள்ளது.

சில விஷயங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. மிகவும் வேறுபட்ட கலாச்சார சூழலிலும்கூட, இன்றைய கிறிஸ்தவர்கள் அதே நெறிமுறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நம் உடல்களால் கடவுளை மகிமைப்படுத்தவும் (1 கொரிந்தியர் 6:19), அவற்றை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவும் (ரோமர் 12:1), எல்லாவற்றிலும் நம் பாலுணர்விலும்கூட கிறிஸ்துவைப் பின்பற்றவும் (லூக்கா 9:23) நமக்குக் கட்டளையிடப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரை முதலில் டேபிள்டாக் (Tabletalk) இதழில் வெளியிடப்பட்டது.

தாமஸ் புரூவர்

தாமஸ் புரூவர்

தாமஸ் புரூவர் ரெவரெண்ட் தாமஸ் பிரூவர், லிகோனியர் மினிஸ்ட்ரீஸின் தலையங்கத் துணைத் தலைவராகவும், டேபிள்டாக் பத்திரிகையின் ஆசிரியராகவும், அமெரிக்காவின் பிரஸ்பைடேரியன் திருச்சபையில் போதக மூப்பராகவும் இருக்கிறார்.