The People of God

தேவனுடைய மக்கள்

17-11-2026
The People of God

தேவனுடைய மக்கள்

17-11-2026

ராஜாவும் அவருடைய ராஜ்யமும்

The King and the Kingdom

பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் அனைவரும் தேவனுடைய பிரதிநிதிகளாக, தேவ ஜனங்களின் சமுதாயத்தை குறித்து விமர்சிப்பவர்களாகவும்  தொலைநோக்குப் பார்வையுடனும்  செயல்பட்டனர். இஸ்ரவேல் சமுதாயத்தின் பாவமான நிலையை குறித்து வரப்போகும் கடுமையான நியாயத்தீர்ப்புகளை  மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஒரு மேன்மையான தேவ ராஜ்ஜியத்தை பற்றிய  வல்லமையான தரிசனங்களையும் முன்னறிவித்தனர். எச்சரிக்கைகள் மற்றும் பரிந்து பேசுதல் மூலமாக, ஜனங்களுடைய வாழ்க்கைக்கான தேவனுடைய திட்டத்தை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க தீர்க்கதரிசிகள் விரும்பினார்கள்.

உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்திரப்படுத்தும் ஒரு தனித்துவமான அரசனான மேசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பே அவர்களுடைய செய்திகளின் மையமாக இருந்தது. தீர்க்கதரிசிகள் இந்த எதிர்பார்ப்பை தாங்களாக புதிதாக உருவாக்கவில்லை; ஆதி காலத்து இஸ்ரவேலர்களின் நீண்டகாலப் பாரம்பரியமாக இவ்வகையான எதிர்பார்ப்பே காணப்பட்டது. வரப்போகும் ராஜாவைப் பற்றிய தெய்வீக வாக்குத்தத்தமானது வேதாகமத்தின் வரலாற்றில் ஆதியாகமம் புத்தகத்திலிருந்து தொடங்கி, இஸ்ரவேலின் இரண்டாவது ராஜாவாக தாவீது நியமிக்கப்பட்டது வரை  தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. சங்கீதம் 72 வெளிப்படுத்துவது போல, தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு தனித்துவமான ராஜா தோன்றி, பூமியெங்கும் நீதியோடு ஆளுகை செய்வார்.

பூமியில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் அமைக்கப்பட்டிருந்த எருசலேமுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு குறிப்பிடத்தக்க ராஜ வம்சத்தின் ஆரம்பம் தாவீதின் அரசாட்சியிலிருந்து தொடங்குகிறது. தாவீதின் வம்சம் தேர்ந்தெடுக்கப்பட்டது தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்; ஆனால் இந்த நிகழ்வு, இனி வரவிருக்கும் மிக முக்கியமான ஒன்றை அறிவிக்கும்படியான முன்னுதாரணமாக  மட்டுமே இருந்தது. ஆதிகாலத்து இஸ்ரவேலர்களின் வரலாற்றை நாம் பார்த்தால் இது தெளிவாக தெரியும். சாலொமோனிலிருந்து தொடங்கி, எருசலேமின் மீதான தாவீது வம்சத்தார் ஆண்ட காலம் முழுவதும் தோல்வியாகவே இருந்தது; ஆயினும், எதிர்காலத்தில் வரவிருக்கும் மேலான ஒன்றை நோக்கிய சில குறிப்புகள்  அதில் ஆங்காங்கே காணப்பட்டன.

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன புத்தகங்களைபுரிந்துகொள்வதற்கு, தாவீது வம்சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வது மிக அவசியமாகும். தீர்க்கதரிசிகள் கடந்த காலத்தில் தேவன் அளித்த வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தில் அவை நிறைவேறப்போவதையும் எடுத்துரைத்தனர்.  கி.மு. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் யூதாவின் ராஜாக்கள் மற்றும் எருசலேம் நகரத்தாரின்  பாவங்களை எடுத்துக் கூறும் ஏசாயா புத்தகத்தில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வாக்கியங்களில், எருசலேம் ஜனங்களின் மேலோட்டமான பக்திக்காகவும், தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனதற்காகவும் தேவன் அவர்களுக்கு அளிக்கப்போகும் தண்டனையை ஏசாயா புத்தகம் முன்னறிவிக்கிறது. குறிப்பாக, ஏசாயா தீர்க்கதரிசி நியாயத்தீர்ப்பை முன்னறிவித்தாலும், எருசலேமை சமாதானம், ஆசிர்வாதம் மற்றும் நீதி நிறைந்த நகரமாக தேவன் உயர்த்துவார் என்ற நம்பிக்கையின் செய்தியையும் கூறினார்.

ஏசாயாவின் தீர்க்கதரிசன வாக்கியங்களின் அர்த்தத்தை துல்லியமாகப் புரிந்துகொள்ள, சீர்கெட்டுப்போய் தேவனால் புறக்கணிக்கப்பட்ட எருசலேம் மீண்டும் கட்டப்பட அவர் முன்னுரைத்த இரண்டு முக்கியமான செய்திகளை நாம் நன்கு   உணர வேண்டும். முதலாவதாக, கோரேஸ் (Cyrus) என்ற பெர்சிய ராஜாவின் வழிகாட்டுதலின்படி அந்த நகரம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதை ஏசாயா முன்னறிவிக்கிறார். கி.மு. 586-ல் பாபிலோனியர்களால் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நகரத்தை மறுபடியும் கட்டுவதற்கான  பணிகளை அவர் ஆரம்பிப்பார். குறிப்பிடத்தக்க வகையில், ஏசாயா கோரேஸை ‘கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்’ (45:1) என்று கூறுவதால், யூத கோத்திரத்தில் இருந்து வரும் மேசியாவிற்கு முன்னுதாரணமாக புறஜாதி தேசத்திலிருந்து  தோன்றுகிறார். ‘மேசியா’ என்ற சொல் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள்படும் எபிரேயப் பெயர்ச்சொல்லிலிருந்து வந்தது.

இரண்டாவதாக, கோரேஸின் மூலம் எருசலேம் திரும்பவும் கட்டப்படுவதையும்  தாண்டி , புதிய பூமியை சிருஷ்டிப்பதன் மூலமாக அந்நகரத்தில் ஏற்படும் மிகப்பெரிய மீட்பை  பற்றியும் ஏசாயா முன்னறிவிக்கிறார் (65:17–25). நித்திய மகிழ்ச்சியும், பரிபூரண வாழ்வும் நிறைந்த இடமாக இந்தப் புதிய எருசலேமை ஏசாயா சித்தரிக்கிறார் (35:5–10). முக்கியமாக, புதிய எருசலேமில் வாழ்வதற்கான குடியுரிமை எதிர்கால சந்ததியினருக்கு மட்டுமே உரியதல்ல, மாறாக இவ்வுலக வாழ்வை கடந்து வரவிருக்கும் உலகத்திற்குள் பிரவேசிக்கும் தேவனுடைய மக்களுக்கும் அது உரித்தானது என்று கூறுகிறார். ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் புதிய எருசலேமை நித்திய ஜீவனுடனும், மரணம் விழுங்கப்படுவதோடும்  தொடர்புபடுத்துகின்றன (25:6–9). இத்தகைய தீர்க்கதரிசன நம்பிக்கைகளுடன், வெளிப்படுத்தின விசேஷத்தின் முடிவில் அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட புதிய எருசலேம்  பற்றிய தரிசனத்திற்கு ஏசாயா புத்தகத்தின் ஒட்டுமொத்தச் செய்தியும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றன.

சிறப்பான விதத்தில், பூமிக்குரிய எருசலேமை திரும்பவும் கட்ட  கோரேஸ் எவ்வாறு வழிவகுத்தாரோ, அதேபோல் தாவீதின் வம்சத்தில் வரும் ஒரு தனித்துவமான ராஜா புதிய எருசலேமை உருவாக்குவார். ஏசாயா 9 மற்றும் 11-ஆம் அதிகாரங்களில் இந்த ராஜாவைக் குறித்து, அவர் “அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்தியப் பிதா, சமாதானப்பிரபு” (9:6) என்று அழைக்கப்படுவார் என்றுரைக்கிறார். ஏசாயாவின் கூற்றுப்படி, அவர் “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் திடப்படுத்தி, அதை இதுமுதல் என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு” (வசனம் 7) ஆளுகை செய்வார்.

முக்கியமாக, இந்த மகத்தான ராஜா ஏசாயா 52:13–53:12-ல் மற்றவர்களுக்காகப் பதிலாளாகப் பாடுபடும் தேவனுடைய “தாசனாக” சித்தரிக்கப்படுகிறார். மற்ற மனிதர்களின் அக்கிரமங்களுக்காகவும் மீறுதல்களுக்காகவும் இந்த ‘தாசன்-ராஜா’ தண்டிக்கப்பட்டு, அவர்கள் தேவனோடு ஒப்புரவாகும்படி  செய்வார். அந்தத் தாசன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்ட போதிலும், தேவன் இறுதியில் அவரை நீதிமானாக்கி, மேன்மையான இடத்திற்கு அவரை உயர்த்துவார்.

‘தாசன்-ராஜா’ என்ற பதத்தை ஏசாயாவின் முன்னறிவிப்புகள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிறைவேறுகின்றன. நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் கூடியிருந்தவர்களுக்கு முன்பாக ஏசாயா 61:1–2-ஐ வாசித்த பிறகு இயேசு கிறிஸ்து, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையதினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்று பிரகடனப்படுத்தினார்.

ஏசாயாவைப் போலவே, எரேமியா மற்றும் எசேக்கியேல் போன்ற தீர்க்கதரிசனப் புத்தகங்களும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றி,  தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு வல்லமையான ராஜாவின் வருகையை முன்னறிவிக்கிறார்கள். எரேமியா புத்தகத்தில், தாவீதின் வம்சத்திலிருந்து ஞானத்தோடும் நீதியோடும் ஆளுகை செய்யப்போகும் ஒரு ராஜாவை போல மேசியாவை பற்றித் தீர்க்கதரிசி பேசுகிறார். எரேமியா 23:5–6 இவ்வாறு அறிவிக்கிறது:

“இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். அவருடைய நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் ‘நமது நீதியாய் இருக்கிற கர்த்தர்’ என்பதே.”

பாபிலோனியர்களால் அழிக்கப்பட போகும்  எருசலேமுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்த  எரேமியா, இஸ்ரவேல் மக்களுக்கு இரட்சிப்பையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் தாவீதின் நீதியுள்ள சந்ததியிலிருந்து தோன்றும் ராஜாவை குறித்த எதிர்பார்ப்பை முன்னிலைப்படுத்துகிறார்.

இதற்கு இணையாக, தேவனுடைய மக்களை வழிநடத்திப் பராமரிக்கும் ஒரு மேய்ப்பனாகிய ராஜாவை’ எசேக்கியேல் தரிசிக்கிறார். எசேக்கியேல் 34:23–24-ல் தேவன் இவ்வாறு வாக்கு பண்ணுகிறார்:  “அவர்களை மேய்க்கும்படி நான் என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை அவர்கள்மேல் விசாரிப்பாய் இருக்க  ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்; என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவிலே அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.” இந்த மேற்கோள் விளக்குவது போல, தாவீதின் வம்சத்திலிருந்து வரப்போகும் ராஜாவோ , மந்தையை வழிநடத்திப் பாதுகாத்து, அவர்களின் நலனை உறுதி செய்யும் ஒரு நல்ல மேய்ப்பனாக இருப்பார் என்பதை எசேக்கியேல் முன்னுரைக்கிறார் (யோவான் 10:14–18 காண்க).

உலகத்திற்கான தேவனுடைய மீட்பின் திட்டத்தில் முக்கியப் பங்குவகிக்கும், தாவீதின் வம்சத்திலிருந்து வரும் மேசியாவை பற்றிய ஒட்டுமொத்த மையக்கருத்திற்கும் ஏசாயா, எரேமியா மற்றும் எசேக்கியேல் ஆகிய புத்தகங்கள் வெவ்வேறு வழிகளில் பங்களிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் மற்றும் இரண்டாம் வருகை ஆகியவற்றை அறிவிப்பதின் மூலம் பங்காற்றுகின்றன. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தபடி, தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு வந்தாலும், புதிதாக்கப்பட்ட பூமியில் புதிய எருசலேம் கட்டப்படும்போது மட்டுமே இது முழுமைபெறும்; அதுவே தேவனுடைய மீட்பின் திட்டத்தின் மிக உயர்ந்த செயலாகும்.

இக்கட்டுரை முதலில் டேபிள்டாக் (Tabletalk) இதழில் வெளியிடப்பட்டது.

டி. டெஸ்மண்ட் அலெக்சாண்டர்

டி. டெஸ்மண்ட் அலெக்சாண்டர்

Dr. T. டேஷ்மண்ட் அலெக்சாண்டர் வடக்கு அயர்லாந்தில் உள்ள Union theological College ல் வேத இறையியலின் பேராசிரியராகவும் மற்றும் முதுகலை படிப்பின் இயக்குனராகவும் உள்ளார். The New Dictionary of biblical Theology ன் இணை ஆசிரியராகவும், From Paradise to the promise land, From Eden to the new Jerusalem உள்ளிட்ட அநேக புத்தகங்களின் ஆசியராகவும் உள்ளார்.