லேவியராகமம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-12-2024
லேவியராகமம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய மூன்று காரியங்கள்
11-12-2024

உபாகமம் புத்தகத்தை குறித்து அறிந்துக் கொள்ளவேண்டிய மூன்று காரியங்கள்

3 Things about Deuteronomy

(3 Things You Should Know about Deuteronomy)

Allan Harman

உபாகமம் புத்தகம் தன்னில் தானே சிறப்புவாய்ந்ததாக இருப்பினும், புதிய ஏற்பாட்டில் அநேக முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதால் இது சிறப்புமிக்க ஒன்றாகும். இதிலிருந்து இயேசுவும் அவருடைய சீஷர்களும் நேரடியாக பிரசங்கித்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து தனது சோதனை காலத்திலும் (மத்தேயு 4:4,7,10) மற்றும் தேவன் மீது அன்பு காட்டுவதின் முக்கியத்துவத்தை குறித்தும் (மத்தேயு 22:37-38) இந்த புத்தகத்திலிருந்து வசனங்களை குறிப்பிட்டு இருக்கிறார். அப்போஸ்தலர்களுடைய பிரசங்கமும் மிக முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசியின் பணியை குறித்தும் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது (உபாகமம் 18:15, அப் 3:22). புதிய ஏற்பாட்டில் கிட்டத்தட்ட ஏழு நிருபங்களில் உபாகமத்தின் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மிக முக்கியமாக கலாத்தியர் 3:10-14 ல் உபாகமத்தின் சிறப்பம்சம் எழுதப்பட்டிருக்கிறது. இங்கு அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்து நமக்காக சாபமாகி (கலா 3:13, உபா 21:23) சாபத்திலிருந்து நம்மை மீட்டுக் கொண்டார் என்பதை எழுதுகிறார்.

இப்புத்தகத்தின் ஆங்கிலப் பெயர் “Deuteronomy” என்பதின் லத்தின் மற்றும் கிரேக்க அர்த்தம் “இரண்டாவது நியாயப்பிரமாணம் “ என்பதாகும். இதைப்பற்றிதான் உபா 17: 20 ல் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதி கூறுவது என்னவென்றால் ஒரு ராஜா தனக்கென்று நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் இரண்டாவது நியாயப்பிரமாணம் என்பது அல்ல, ஆனால் ஓரேப் என அழைக்கப்படும் சீனாய் மலையில் தேவனால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையை மீண்டும் நினைவு கூறுதலுக்காக மக்களிடம் கூறுவதாகும் (உபா 33;2). இந்த உடன்படிக்கையானது, தேவன் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு இவர்களுடன் ஏற்படுத்திய கிருபை உள்ள வாக்குத்தத்தங்களோடு வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது (உபா 6:10-11, 7:7-9). இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்கு முன், சந்ததியை குறித்து செய்யப்பட்ட வாக்குத்தத்தத்துடனும் அதன் பாதி நிறேவறுதலுடன் ‘’pentateuch’ எனப்படும் ஐந்து ஆகமங்களின் முழுமையையும் உபாகமம் நமக்கு வெளிப்படுத்துகிறது.

உபாகமத்தையும் அதன் செய்தியையும் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய சிறப்பான மூன்று காரியங்கள் உள்ளது.

1.உபாகமம் ஓர் உடன்படிக்கையின் ஆவணம்

ஓர் உடன்படிக்கையின் ஆவணமாக, இப்புத்தகம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் இடையே உள்ள உறவை காட்டுகிறது. தேவன் தனது கிருபையின் இரக்கத்தினால் தம் மக்களோடு உள்ள சிறப்பான உறவின் மூலம் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அவர் தனது மக்களை நேசித்து தமது வல்லமையுள்ள கரத்தினால் அவர்களை மீட்டார் (உபா 7:7-9, 9:5-6, 14:2). சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தின் மூலம் ஒரு முறையான உறவை தம் மக்களோடு ஏற்படுத்தினார். தம் மக்களை நெருங்கி, “நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” என்ற வாக்குத்தத்தை ஏற்படுத்தினார். இந்த உடன்படிக்கை தேவன் தனது கிருபையின் மூலம் இறையாண்மை உள்ளவராக தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பிணைப்பை உண்டாக்கி, இதன் மூலம் தேவனும் மனிதனும் தான் செய்யவேண்டியதை முறையான விதத்தில் வெளிப்படுத்தினார்கள். அவரது உடன்படிக்கையின் மக்கள் தங்களது மீட்பராகிய தேவன் தங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளுக்காகவும், கீழ்படிதலை வெளிப்படுத்த கட்டளையிடப்பட்டார்கள். அவர்களது வாழ்க்கையின் எந்த பகுதியும் தேவனது நெறிமுறை கட்டளைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. உபாகமத்தின் அமைப்பும் உள்ளடக்கமும் கிமு 2000 ல் அந்த சூழலமைப்பில் இருந்த அறியப்பட்ட உடன்படிக்கைகள் போலவே ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

2.உபாகமம் பத்து கட்டளைகளின் வியாக்கினமாகும்.

உபாகமத்தை போல வேறெந்த புத்தகமும் பத்து கட்டளைகளின் விளக்கத்தை கூறுவதில்லை. அதிகாரம் 5 ல் சொல்லப்பட்ட கட்டளைகளுக்கும் 6-26 ல் சொல்லப்பட்ட காரியங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு தேவனின் கட்டளைகளுக்கும் மனித கட்டளைகளுக்கும் இடையே அல்ல, மாறாக உடன்படிக்கையின் அடிப்படை மையத்திற்கும் மற்றும் அதன் நடைமுறை எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்ற விளக்கத்திற்கும் இடைப்பட்டதாகும். கேட்கும் மக்களின் மனசாட்சியில் தேவன் எதிர்பார்க்கும் கீழ்படிதலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தை இப்புத்தகம் கொண்டுள்ளது. மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும், வைத்து “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக, அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான். (உபாகமம் 30:19-20)

இந்த நியாயப்பிரமாணத்தின் விளக்கத்தை குறித்து கூற வேண்டிய ஒன்று உள்ளது. யாத்திராகமம் 21-23 ல் சொல்லப்பட்ட கட்டளைகளில், யாத் 20 ல் உள்ள கட்டளைகளின் வரிசை போலல்லாமல் சில கட்டளைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உபாகமத்தில்,  அதிகாரம் 5 ல் சொல்லப்பட்ட வரிசைப்படியே கட்டளைகள் அமைந்திருக்கின்றன. உபாகமம் 5 ல் கட்டளைகளின் தொகுப்பும், 6-26 ல் அந்த கட்டளைகளின் விளக்கமும் உள்ளது. இந்த வியாக்கினம் கட்டளைகளின் அத்தியாவசிய உந்துதலை விரிவுப்படுத்தி அவைகளின் ஒவ்வொன்றின் பாதைகளையும் நமக்கு காண்பிக்கிறது. அதாவது, பல கட்டளைகள் முதலில் சொல்லப்பட்டதை விட அதிக பரந்த விளக்கங்களை இதில் கொண்டுள்ளது. உதாரணமாக, ஐந்தாவது கட்டளை வெறுமனே பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவை மாத்திரம் குறிப்பிடாமல், இஸ்ரவேலுக்குள் உள்ள அனைத்து அதிகார அமைப்புகளுக்கும் ஏற்றதாயிருக்கிறது.

3.உபாகமம் கானான் தேசத்தின் அம்சங்களை பேசுகிறது.

ஐந்து ஆகமங்களில் முதல் மூன்று புத்தகங்கள் (ஆதி, யாத், லேவி) தேவனுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவில் அக்கறை செலுத்துகிறது. அடுத்த இரண்டு புத்தகங்கள் (எண், உபாகமம்) வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை பற்றி விரிவாக பேசுகிறது. சந்ததிகளின் பெருக்கத்தை பற்றிய வாக்குத்தத்தங்களை உபாகமம் பேசினாலும், (1:10, 10:22, 28:62) தேசத்தை குறித்த காரியங்களே இங்கு அதிகம் நிரம்பியிருக்கிறது. இந்த தேசம் தேவனின் பரிசு, ஜனங்கள் இத்தேசத்தை சுதந்தரிப்பதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தேவனால் வாக்குத்தத்தம்பண்ணபட்டது. இந்த தேசத்தில் அவரது மக்கள் இளைப்பாறி தேவன் அளிக்கும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க கட்டளையிடப்பட்டனர் (3:20, 12:9-10, 25:19). இந்த இளைப்பாறுதல் சங்கீதம் 95 லிருந்து எபிரெயர் 3:7-4:13 ல் விரிவாக விளக்கப்படுத்தப்படுள்ளது. யோர்தானை கடந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தில், மரணம் மற்றும் தேவனின் பரலோக இளைப்பாறுதலுக்கு பிரவேசிப்பதை குறிக்கும் கருப்பொருள்களை கிறிஸ்தவ பாடல்கள் எடுத்துக்கொண்டதில் ஆச்சரியமொன்றுமில்லை. 

உபாகமம், ஐந்து ஆகமங்களை நிறைவு செய்கிறது. இதன் மூலம் முற்பிதாக்களுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது. கானானுக்குள் நுழைகையில் தேசத்தை குறித்த வாக்குத்தத்தம் நிறைவேறினும், பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை முழுமையாய் அடைந்த பிறகு ராஜத்துவம் மற்றும் தீர்க்கதரிசனங்களை குறித்த வாக்குத்தத்தங்களும் நிறைவேறியது. (உபாகமம் 31:20).

இந்த சிறிய தொகுப்பு Every book of the bible: 3 things to know என்ற புத்தகத்தின் ஓர் பகுதியாகும். 

ஆசிரியரை பற்றி

Dr.  Allen M. Harman ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பிடேரியன் இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டின் ஆசிரியராக உள்ளார். முன்பு இவர் அக்கல்லூரியில் தாளாளாரக பணியாற்றினார். இவன் preparing for ministry போன்ற அநேக நூல்களின் ஆசிரியராவார்.


இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆலன் ஹர்மன்
ஆலன் ஹர்மன்
ஆலன் ஹர்மன் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பிடேரியன் இறையியல் கல்லூரியில் பழைய ஏற்பாட்டின் ஆசிரியராக உள்ளார். முன்பு இவர் அக்கல்லூரியில் தாளாளாரக பணியாற்றினார். இவன் preparing for ministry போன்ற அநேக நூல்களின் ஆசிரியராவார்.