Why the God-Man?
ஏன் தேவனும்-மனிதனும்?
03-02-2026
Why the God-Man?
ஏன் தேவனும்-மனிதனும்?
03-02-2026

கிரியைகளின் உடன்படிக்கை

The Covenant of Works

உடன்படிக்கை இறையியல் (Covenant theology) என்பது நமது கிறிஸ்தவ வாழ்வில் பல்வேறு நோக்கங்களுக்காக மிகவும் இன்றியமையாததாகும். உடன்படிக்கை இறையியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அது சீர்திருத்தக் காலத்தில்தான் மிகவும் செம்மையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தைப் பெற்றது. இருப்பினும், நம்முடைய காலகட்டத்திலும்   அதன் முக்கியத்துவத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.  ஏனென்றால் அது புதுமையானதும், இறையியலோடு அதற்கு நெருங்கிய தொடர்பும் கொண்டிருப்பதினாலேயே அப்படி காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், “டிஸ்பென்சேஷனலிசம்” (Dispensationalism – காலப்பிரிவு இறையியல்) எனப்படும் இறையியல் வேதாகமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையாக உருவானது. பழைய ஸ்கோஃபீல்ட் ரெஃபரன்ஸ் வேதாகமம் (Scofield Reference Bible) காலப்பிரிவு இறையியலை, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஏழு தனித்தனி ஒழுங்கான வரையறைகள் அல்லது நேரக் காலங்கள் மூலம் வரையறுத்தது. ஒவ்வொரு காலப்பிரிவும் “தேவனுடைய சித்தத்தின் சில குறிப்பிட்ட வெளிப்பாடுகளுக்கு மனிதன் கீழ்ப்படிவதைப் பொறுத்து  சோதிக்கப்படும் ஒரு காலகட்டம்” என்று வரையறுக்கப்பட்டது. ஸ்கோஃபீல்ட் ஏழு காலப்பிரிவுகளை வேறுபடுத்தி காண்பித்தார். இதில் குற்றமற்ற நிலை, மனசாட்சி, சமுதாயம் சார்ந்த அரசாங்கம், வாக்குத்தத்தம், நியாயப்பிரமாணம், கிருபை மற்றும் அரசாட்சி ஆகிய காலநிலைகள் அடங்கும்.

மீட்பின் வரலாற்றில் இந்த பன்மைத்தன்மைகொண்ட பார்வைக்கு எதிராக, உடன்படிக்கை இறையியல் நமக்கு மீட்பின் ஒருங்கமைப்பை குறித்த தெளிவான சத்தியத்தைக் கொடுக்க முயல்கிறது. இந்த ஒருங்கமைப்பானது, வரலாறு முழுவதும் தேவன் கொடுத்த உடன்படிக்கைகளின் தொடர்ச்சி மற்றும் அவை கிறிஸ்து என்னும் தனிநபரிலும் அவர் செய்து முடித்த கிரியையிலும் எவ்வாறு நிறைவேறியவை என்பதிலும் உள்ளடங்கும்.

வேதாகமம் வெளிப்படுத்தும் அடிப்படைக் கட்டமைப்பைப் பொறுத்து பாரம்பரிய காலப்பிரிவுவாதிகளுக்கும் சீர்திருத்த இறையியலுக்கும் இடையேயான விவாதத்திற்கு அப்பால், நம்முடைய காலத்தில் மீட்பைப் பற்றிய நம்முடைய புரிதலில் ஒரு பெரிய நெருக்கடி எழுந்துள்ளது. இந்த நெருக்கடி, நீதிமானாக்கப்படுதல் என்னும் கோட்பாட்டில் நம்மீது வைக்கப்படும் கிறிஸ்துவின் நீதி  (imputation) என்பதை  புரிந்து கொள்வதை பற்றிய சிக்கலாகும்.

 பதினாறாம் நூற்றாண்டில் நீதிமானாக்கப்படுதல்  கோட்பாட்டை குறித்து நடந்த  விவாதத்தில் சீர்திருத்தவாதிகளுக்கும் ரோமன் கத்தோலிக்கர்களின் புரிதலுக்கும் இடையில் கிறிஸ்துவின் நீதி நம் மீது வைக்கப்படுதல் (imputation) என்கிற கோட்பாடு எவ்வாறு ஒரு மையப் பிரச்சினையாக இருந்ததோ, அதேபோல, கிறிஸ்துவின் நீதி நம்மேல் வைக்கப்படுதல் என்னும் சத்தியத்தை குறித்ததான சீர்திருத்தலின்  புரிதலை மறுக்கும் கிறிஸ்தவ பிரிவினர்கள் மீண்டும் நம் மத்தியில் எழுந்துள்ளனர். நீதிமானாக்கப்படுதல் மற்றும் கிறிஸ்துவின் நீதி நம்மீது வைக்கப்படுதல் ( imputation) என்னும் சத்தியங்களின் மத்தியில் கிரியையின் உடன்படிக்கையை நிராகரித்தல் என்கிற சிந்தனையும் அடங்கியுள்ளது. வரலாற்று உடன்படிக்கை இறையியல் கிரியைகளின் உடன்படிக்கைக்கும் கிருபையின் உடன்படிக்கைக்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாட்டைக் எடுத்துக்காட்டுகிறது. கிரியைகளின் உடன்படிக்கை என்பது, பாவம் செய்வதற்கு முன் ஆதாம், ஏவாள் ஆகியோரின் பரிசுத்தமான நிலையில், தேவன் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைக் குறிக்கிறது. இதில் தேவனுடைய கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தால் அவர்களுக்கு ஆசீர்வாதத்தை தேவன் தருவதாக  வாக்குறுதி அளித்தார். வீழ்ச்சிக்குப் பிறகு, கிரியைகளின் உடன்படிக்கையை மீறிய சிருஷ்டிகளுக்குத் தேவன் தொடர்ந்து மீட்பை வாக்குறுதி அளித்தாரே, அந்த மீட்பின் தொடர்ச்சியான வாக்குறுதி கிருபையின் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.

தொழில்நுட்ப ரீதியாக, ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தேவன் தம்முடைய சிருஷ்டிகளுடன் செய்யும் எல்லா உடன்படிக்கைகளும் கிருபையானவைதான். ஏனென்றால், அவர் தம்முடைய சிருஷ்டிகளுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கக் கடமைப்பட்டவர் அல்ல. ஆனால் கிரியையின் உடன்படிக்கைக்கும் கிருபையின் உடன்படிக்கைக்கும் இடையிலான வேறுபாடு, சுவிசேஷத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. கிருபையின் உடன்படிக்கை என்பது, சிருஷ்டிப்பின் போது விதிக்கப்பட்ட கடமைகளை நாம் நிறைவேற்றத் தவறினாலும், தேவன் நம்மைக் காப்பாற்றுவதற்கான வாக்குறுதியை அளித்ததைக் குறிக்கிறது. இது புதிய ஆதாமாகிய இயேசுவின் கிரியையில் மிக முக்கியமான ஒன்றாகும். முந்தின ஆதாமுடைய கீழ்ப்படியாமையினால் மனிதகுலத்தின் மீது வந்த தோல்வி மற்றும் பேரழிவுகளுக்கும், புதிய ஆதாமாகிய இயேசுவின் கீழ்படிதலுக்குரிய கிரியையின் மூலம் உண்டாகும் நன்மைகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் முரண்பாட்டையும் புதிய ஏற்பாடு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

புதிய ஆதாமுக்கும் பழைய ஆதாமுக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாடு இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்ச்சியான சாரம் என்னவென்றால், இருவருமே பூரணமான கீழ்படிதலை தேவனுக்கு சமர்ப்பிக்கும்படியாகவே  அழைக்கப்பட்டனர்.

புதிய ஏற்பாட்டில் உள்ள கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரியையைப் நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதன் இரண்டு அம்சங்களில் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும். ஒருபுறம், நாம் கிறிஸ்துவின் பாவபரிகாரத்தைப் பார்க்கிறோம். பாவபரிகாரியாகிய இயேசு தம்முடைய ஜனங்களின் பாவங்களை சுமந்து, நம்முடைய இடத்தில் நமக்காகத் தண்டிக்கப்பட்டார்  என்று புதிய ஏற்பாட்டுப் போதனைகளிலிருந்து தெளிவாகிறது. அதாவது, பாவபரிகாரம் பிறருக்காக செய்யப்படுகிற மற்றும்  பதிலீடான (substitutionary) கிரியையாகும். இவ்விதமான பார்வையில், கிறிஸ்து, சிலுவையில் பழைய உடன்படிக்கையின் விளைவினால் உண்டான  நியாயப்பிரமாணத்தின் சாபத்தை தாமே ஏற்றுக்கொண்டார். அதாவது, அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை மட்டுமல்ல, ஏதேனில்  விதிக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை மீறியவர்களுக்குரிய தண்டனையையும் தமது சரீரத்தில் சுமந்தார். தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாத அனைவருக்கும் வரவேண்டிய சாபத்தை அவர் தாமே ஏற்றுக்கொண்டார். இதைச் சீர்திருத்த இறையியல் “இயேசுவினால் செய்யப்பட்ட மறைமுகமான கீழ்ப்படிதல்” (the passive obedience of Jesus) என்று விவரிக்கிறது. அதாவது நமக்கு பதிலாக தேவனுடைய சாபத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்ததை  சுட்டிக்காட்டுகிறது.

கிரியைகளின் உடன் படிக்கையினால் உண்டான  சாபத்திற்கு அப்பால், அதற்குக் கீழ்படியாதவர்களுடைய தண்டனையை ஏற்றுக்கொண்டதோடு, இயேசு நம்முடைய மீட்புக்கு இன்றியமையாத நேர்மறையான ஆசீர்வாதங்களையும் அளிக்கிறார். இயேசுவில் விசுவாசம் வைக்கும் ஆதாமுடைய சந்ததியினர் அனைவருக்கும் கிரியைகளின் உடன்படிக்கையினால் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை அவர் சுதந்தரித்தார். எந்த இடத்தில் ஆதாம் உடன்படிக்கையை முறித்தாரோ, அதே இடத்தில் இயேசு உடன்படிக்கையைக் காப்பாற்றினார். ஆதாம் ஜீவ விருட்சத்தின் ஆசீர்வாதத்தைப் பெறத் தவறிய இடத்தில், கிறிஸ்து தமது கீழ்ப்படிதலால் அந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொண்டார். அந்த ஆசீர்வாதத்தை அவர் தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு கொடுக்கிறார். நமக்கு பதிலாக நமக்கான உடன்படிக்கையை நிறைவேற்றின அவருடைய  இந்தக் கிரியையை, “தன் ஈடுபாடுடைய கிறிஸ்துவின்  கீழ்ப்படிதல்” (active obedience) என்று இறையியல் அழைக்கிறது. அதாவது, நம்மை மீட்பதற்கான கிறிஸ்துவின்  கிரியை அவருடைய மரணத்தை மட்டுமல்ல, அவருடைய ஜீவ வாழ்க்கையையும் உள்ளடக்கியது. அவருடைய பூரணமான கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையே, நம்மை நீதிமானாக்குவதற்கான ஒரே ஒரு வழியாகும். அவருடைய பூரணமான கீழ்ப்படிதல் மூலம் அவர் பெற்ற இந்த பூரணமான நீதியே அவர் மீது விசுவாசம் வைக்கும் அனைவர் மேலும் வைக்கப்படுகிறது.

எனவே, கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கான கிரியையின் செயலே எந்த ஒரு மனிதனையும்  நீதிமானாக்குவதற்கு  முற்றிலும் அவசியமாகும். கிரியைகளின் உடன்படிக்கைக்கு அவசியமான கிறிஸ்துவின் பூரணமான கீழ்ப்படிதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவின் நீதி நம் மீது வைக்கப்படுதல் (imputation) என்ற சத்தியத்திற்கான எந்தவித முகாந்திரமும் காணப்படாது. நீதிமானாக்கப்படுதலுக்கும் எந்த அடித்தளமும் இருக்காது. நாம் கிரியைகளின் உடன்படிக்கையை நீக்கினால், இயேசுவின் செயலிலுள்ள கீழ்ப்படிதலையும் நாம் நீக்கிவிடுகிறோம். நாம் இயேசுவின் செயலிலுள்ள கீழ்ப்படிதலை நீக்கினால், அவருடைய நீதி நம் மீது வைக்கப்படுதல் என்கிற சத்தியத்தையும் நீக்கிவிடுகிறோம். கிறிஸ்துவின் நீதி நம் மீது வைக்கப்படுவதை நாம் நீக்கிவிட்டால், விசுவாசத்தினாலே மாத்திரம் நீதிமானாக்கப்படுகிறோம் என்கிற சத்தியத்தையும் அகற்றி விடுகிறோம். விசுவாசத்தினாலே மாத்திரம் நீதிமானாக்கப்படுவதை நாம் நீக்கிவிட்டால், நாம் சுவிசேஷத்தையும் மறுதலித்து மீட்கப்பட முடியாமல் நம்முடைய பாவங்களில் தொடர்ந்து வாழ்கிறவர்களாக இருப்போம். நம்முடைய சொந்த கீழ்ப்படியாமையின் காரணமாக நம் மீது உண்டான தேவனுடைய சாபத்தின் முழு அளவையும் உணரும்படியாக ஆதாமுடைய பரிதாபகரமான  பிள்ளைகளாக நாம் விட்டுவிடப்படுவோம்.

கிறிஸ்துவின் பூரண கீழ்ப்படிதலே நம்முடைய இரட்சிப்புக்கான அடித்தளமாகும். அது சிலுவையில் அவருடைய பதிலீடான  கீழ்ப்படிதலிலும், அவருடைய வாழ்க்கையில் அவருடைய செயலிலுள்ள பூரண கீழ்ப்படிதலிலும் அடங்கியிருக்கிறது.  இவை அனைத்தும் இயேசுவை புதிய ஆதாம் என்று வேதாகமம் 

வெளிப்படுத்தும் சத்தியத்திலிருந்து பிரிக்க முடியாதபடி தொடர்புடையவை ஆகும் (ரோமர் 5:12-20).  முந்தின ஆதாம் தோல்வியடைந்த இடத்தில் கிறிஸ்து

வெற்றி பெற்றார். முந்தின ஆதாம் இழந்த இடத்தை அவர் நமக்காக  சுதந்தரித்தார். இவ்விதமான காரியங்களைக் குறித்த நம்முடைய  இரட்சிப்பின் தவறான புரிதலை விட வேறு எதுவும் ஆபத்தான நிலையிலில்லை.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

ஆர். சி. ஸ்ப்ரௌல்
ஆர். சி. ஸ்ப்ரௌல்
Dr. ஆர். சி. ஸ்ப்ரௌல் (1939-2017) லிகனியர் ஊழியத்தின் ஸ்தாபகரும், அமெரிக்காவில் உள்ள சேன்போர்டு செய்ன்ட் ஆலயத்தில் முதல் போதகரும், Reformation வேதாகம கல்லூரியின் தலைவரும் ஆவார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் தேவனின் பரிசுத்த தன்மை (The Holiness of God) என்ற சிறப்பு பெற்ற புத்தகத்தின் ஆசிரியருமாவார்.