What Does a Pastor Do?

ஒரு போதகர் என்ன செய்கிறார்?

27-10-2026
What Does a Pastor Do?

ஒரு போதகர் என்ன செய்கிறார்?

27-10-2026

இயேசு ஏன் கடைசி ஆதாம் என்று அழைக்கப்படுகிறார்?

Why Is Jesus Called the Last Adam?

ஆதாம் பாவத்தில் விழுந்தவுடன், கிரியைகளின் உடன்படிக்கையின் (covenant of works) தேவைகளை நிறைவேற்ற முடியாதபடி ஆதாம் தனக்கும் தன் சந்ததியினருக்கும் தானே தகுதியிழந்தார். தேவன் ஆதாமின் பணியை மாற்றியமைக்கவில்லை, மாறாக அதை உண்மையாய் நிறைவேற்றக்கூடிய வேறுஒருவரை அனுப்பினார் — அவரே கடைசி ஆதாமாகிய இயேசுகிறிஸ்து ஆவார். அப்போஸ்தலனாகிய பவுல் இதை பல இடங்களில் எடுத்துக்காட்டுகிறார்; ஆதாமையும் இயேசுவையும் அவர் பக்கத்து பக்கத்தில் வைத்து, அவர்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கை (அல்லது கூட்டாட்சி) தலைவர்கள் (federal heads) என்பதை நாம் காணும்படிச் செய்கிறார்: “ஏனெனில், ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒரே மனுஷனுடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” (ரோமர் 5:19). ஆதாமும் இயேசுவும் செய்த பிரதிநிதித்துவச் செயல்களே அவர்கள் யாருக்குப் பிரதிநிதிகளாக இருக்கிறார்களோ அவர்களின் இறுதி இலக்கை நிர்ணயிக்கின்றன.

உயிர்த்தெழுதலைப் பற்றிய தனது விளக்கத்தில் பவுல் இதே கருத்தை வலியுறுத்துகிறார்: “மனுஷனால் மரணம் உண்டானதுபோல, மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமில் எல்லாரும் மரித்ததுபோல, கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1 கொரிந்தியர் 15:21–22). ஆதாமுடன் உடன்படிக்கை ரீதியாக இணைக்கப்பட்ட அனைவரும் மரிக்கிறார்கள், இயேசுவோடு உடன்படிக்கை ரீதியாக இணைக்கப்பட்ட அனைவரும் நித்திய ஜீவனுடன் வாழ்கிறார்கள். பவுல் 1 கொரிந்தியர் 15-ஆம் அதிகாரத்தில் இதைக் கூடுதல் விவரங்களுடன் விளக்குகிறார்:

“அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.”

(1 கொரிந்தியர் 15:45–49, ஆசிரியரின் மொழிபெயர்ப்பு).

ஆதாம் ஜீவனின் ஊற்றாக மாறினான் என்பதைக்காட்ட பவுல் ஆதியாகமம் 2:7-ஐ மேற்கோள் காட்டுகிறார், ஆனால் அவன் இயற்கை வழியிலான சந்ததியினரை மட்டுமே உருவாக்குகிறான். அவனுடைய பாவ வீழ்ச்சியினால்அவன் பூமிக்குரிய மண்ணுக்குத் திருப்பப்பட்டதின் காரணமாக, ஆதாமால் பூமிக்குத் திரும்பும் குழந்தைகளை மட்டுமே பிறப்பிக்க முடியும். மறுபுறம், கடைசி ஆதாமாகிய இயேசு வானத்திலிருந்து வந்தவர் மற்றும் ஆவிக்குரியவர் — அதாவது ஆவியானவரால் வகைப்படுத்தப்பட்டவர் — மேலும் அவருடன் உடன்படிக்கையில் இணைக்கப்பட்டவர்கள் அவருடைய பரலோகச் சாயலைப் பகிர்ந்துகொள்வார்கள். கடைசி ஆதாமாகிய இயேசு தம்முடைய பரம பிதாவுக்குப் பூரணமான, தனிப்பட்ட மற்றும் உறுதியான கீழ்ப்படிதலைத் தந்தார், எனவே அவர் உயிர்ப்பிக்கிற ஆவியானவரானார் — அவர் கிறிஸ்துவின் மணவாட்டியாகிய திருச்சபையாகிய கடைசி ஏவாளை சேர்த்திடச் செல்லும் ஆவியானவரின் கிரியையை செயல்படுத்துகிறார்.

தேவனுடைய கீழ்ப்படியாத குமாரர்களான ஆதாமுக்கும் இஸ்ரவேலுக்கும் முரணாக, இயேசுவைக் கடைசி ஆதாமாகவும் கீழ்ப்படிந்த குமாரனாகவும் வேதம் உறுதிபடுத்துகிறது. ஆதாம் தேவனுடைய குமாரனாக இருந்தும் (லூக்கா 3:38; ஒப்பிடுக: ஆதியாகமம் 5:1–4), விலக்கப்பட்ட கனியைப் பறித்துத் தின்றதின் மூலம் தேவனோடு சமமாக இருக்க முயன்றான் என்பதை நினைவுகூருங்கள். ஆனால் தேவனோடு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின காரியமாக எண்ணாத இயேசு, மனிதனாக வந்து, தன்னைத்தானே தாழ்த்தி, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவரானார் (பிலிப்பியர் 2:5–11). அதேபோல, இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய குமாரர்களாக இருந்தார்கள் (யாத்திராகமம் 4:22; ஓசியா 11:1), ஆனால் இஸ்ரவேல் மக்கள் கடினமான கழுத்துள்ளதாகவும் கீழ்ப்படியாதவர்களாகவும் இருந்தார்கள். ஆவியானவர் இஸ்ரவேலை வனாந்தரத்திற்குக் கூட்டிக்கொண்டு சென்றார், அங்கு உணவு பற்றாக்குறை இருப்பதாகக் கூறி மக்கள் கீழ்ப்படியாமல் இருந்தனர்; ஆனால் அதே ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குக் கூட்டிக்கொண்டு சென்றபோது, ​​சாத்தான் அவரை மூன்று முறை சோதித்தபோதும் அவர் கீழ்ப்படிந்தவராகவும் உண்மையுள்ளவராகவும் இருந்தார். லூக்கா சுவிசேஷத்தின் விளக்கவுரையில் மிலான் நகரின் திருச்சபை பிதாவான அம்புரோஸ் (Ambrose of Milan) ஒருமுறை எழுதியது போல: “முதல் ஆதாம் வனாந்தரத்திற்கு பரதேசியிலிருந்து வெளியேற்றப்பட்டான் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது பொருத்தமானதே, இதன் மூலம் இரண்டாம் ஆதாம் வனாந்தரத்திலிருந்து பரதேசிக்குத் திரும்பியதை உங்களால் காண முடியும்.”  அம்புரோஸ் மேலும் வலியுறுத்துகிறார்: “ஆதாம் மரத்தின் மூலம் மரணத்தைக் கொண்டுவந்தான். கிறிஸ்து மரத்தின் மூலம் ஜீவனைக் கொண்டுவந்தார்”.

ஆதாம் தொடக்கிவைத்திருக்க வேண்டிய புதிய உலகத்தை இயேசுகிறிஸ்து கொண்டுவருகிறார். கிரியைகளின் உடன்படிக்கையில் ஆதாம் தோல்வியடைந்த இடத்தில், தன்னை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காக இயேசுகிறிஸ்து கிருபையின் உடன்படிக்கையின் மூலம் வெற்றி பெறுகிறார். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் ஜான் டன் (John Donne) அவர்களின் வார்த்தைகளில்:

“பரதேசும் கல்வாரியும், கிறிஸ்துவின் சிலுவையும், ஆதாமின் மரமும் ஒரே இடத்தில் நின்றன என்று நாம் நினைக்கிறோம்;

கர்த்தாவே, இரண்டு ஆதாம்களும் என்னில் சந்திப்பதைக் கண்டுகொள்ளும்;

முதல் ஆதாமின் வியர்வை என் முகத்தைச் சூழ்வது போல,

கடைசி ஆதாமின் இரத்தம் என் ஆத்துமாவை அரவணைக்கட்டும்.”

நாம் முதலில் கிரியைகளின் உடன்படிக்கையைப் புரிந்துகொண்டாலொழிய கிருபையின் உடன்படிக்கையைப் புரிந்துகொள்ள முடியாது. அதைப் போலவே, முதல் ஆதாமின் பணியைப் புரிந்துகொண்டாலொழிய கடைசி ஆதாமின் பணியையும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது.

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

டாக்டர். ஜே. வி. ஃபெஸ்கோ

டாக்டர். ஜே. வி. ஃபெஸ்கோ

ஆசிரியர்: Dr. J.V. Fesko - டாக்டர். ஜே. வி. ஃபெஸ்கோ என்பவர் ஜாக்சனில் உள்ள மறுசீரமைக்கப்பட்ட இறையியல் கல்லூரியில் முறையான மற்றும் வரலாற்று இறையியலின் ஹேரியட் பார்பர் பேராசிரியரும், மரபுவழிப் பிரஸ்பிட்டேரியன் திருச்சபையின் போதகரும் ஆவார். அவர் 'Word, Water, and Spirit', 'The Need for Creeds Today', மற்றும் 'Justification' உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியர் ஆவார்.