What Is Procession?

பரிசுத்த ஆவியானவரின் புறப்படுதல் என்றால் என்ன?

20-10-2026
What Does a Pastor Do?

ஒரு போதகர் என்ன செய்கிறார்?

27-10-2026
What Is Procession?

பரிசுத்த ஆவியானவரின் புறப்படுதல் என்றால் என்ன?

20-10-2026
What Does a Pastor Do?

ஒரு போதகர் என்ன செய்கிறார்?

27-10-2026

அவர் நம்மை விசாரிக்கிறவர்

He Cares for Us

கடந்த சில வாரங்களாக,தேவனின் பராமரிப்பு அல்லது கவனிப்பு தேவைப்பட்ட நபர்களுடனான சில சூழ்நிலைகளில் நான் ஈடுபட்டிருந்தேன். எல்லாருடைய  வாழ்க்கையிலும் பிறருடைய பராமரிப்பு தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட கட்டம் வருகிறது, இது எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான கவலையையும் மனக்கலக்கத்தையும் உருவாக்கக்கூடும். நீங்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கும்போதும், நிச்சயமற்ற நிலை நிலவும்போதும் கவலையடைவது எளிது; ஏனெனில் சூழ்நிலை இனி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மறுபுறம், நீங்கள் ஒருவரைப் பராமரிப்பவராக இருப்பதில் ஒரு மாபெரும் பாக்கியம் உள்ளது, இது நமது கலாச்சாரத்தில் பெரும்பாலும் பேசப்படுவதில்லை, மேலும் அவை  மதிக்கப்பட வேண்டிய அளவிற்கு நிச்சயம் மதிக்கப்படுவதும் இல்லை. இந்த இரண்டு சூழ்நிலைகளிலுமே, பராமரிக்கப்படுபவர்களுக்கும் பராமரிப்பை வழங்குபவர்களுக்கும் வேதம் வல்லமையாகவும் மிகுந்த ஆறுதலுடனும் நம்மிடம் பேசுகிறது.

சமீபத்தில் 1 பேதுரு 5-ஆம் அதிகாரத்திலிருந்து தாழ்மையைப் பற்றி நான் பிரசங்கித்தபோது, தாழ்மையுள்ள ஒரு மனிதன் தன் கவலைகளையெல்லாம் தேவன்மேல் வைப்பான், ஏனெனில் அவர் நம்மை விசாரிக்கிறவராதலால் (பராமரிக்கிறவராதலால்) என்னும் உண்மை என்னை மிகவும் கவர்ந்தது (1 பேதுரு 5:6–7). தேவனே மாபெரும் பராமரிப்பாளர் ஆவார். பேதுரு பயன்படுத்தும் ‘விசாரிப்பு அல்லது  பராமரிப்பு’ (care) என்ற வார்த்தை நிகழ்கால வினையில்  உள்ள ஒரு வார்த்தையாகும் — அதாவது தேவன் தொடர்ச்சியாகப் பராமரிக்கிறார். அவர் பராமரிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. அவருக்கு விடுமுறை நாட்களோ, அல்லது அவர் பராமரிக்காமல் இருக்கும் நாட்களோ கிடையாது. இது தேவனின் கவனம் செலுத்துதல், இறங்கிச் செயல்படுதல், அக்கறை காண்பித்தல் மற்றும் சிரத்தை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. தேவனுடைய ஜனங்கள் மீது தேவன் அப்படித்தான் அக்கறையாக இருக்கிறார். 

சங்கீதம் 8 இதை வல்லமையாக வெளிப்படுத்துகிறது:

“மனுஷனை நீர் நினைக்கிறதற்கும்,

மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?” (சங்கீதம் 8:4)

நான் வளர்ந்து வந்த காலத்தில், ஞாயிறு சிறுவர் பள்ளியில்  நாங்கள் பாடிய ஒரு பாடல் உண்டு, “பூமியை உண்டாக்கின தேவன்” (“God Who Made the Earth”):

“பூமி, ஆகாயம், வானம், சமுத்திரத்தை உண்டாக்கின தேவன்,

வெளிச்சத்திற்கு ஜென்மத்தைக் கொடுத்தவர்:

அவர் என்னை விசாரிக்கிறார்.” என்பதாகும்.

தேவனின் பராமரித்தல் மற்றும் அக்கறை கொள்ளுதல் எனும் இந்த மையக்கருத்து வேதாகமம் முழுவதிலும் ஓடுகிறது. தேவனுடைய கட்டளைகள் தொடர்பாக “எச்சரிக்கையாயிருங்கள்” என்றும் “கவனமாயிருங்கள்” என்றும் தேவனுடைய ஜனங்களுக்குத் தொடர்ச்சியாகக் கூறப்படும் அறிவுறுத்தல்கள் உள்ளது. தேவனுடைய வார்த்தையை நாம் எவ்வாறு கேட்கிறோம் என்பதில் கவனமாக இருக்கும்படி இயேசு நமக்குச் சொல்கிறார். இந்த உலகத்தின் கவலைகள் தேவனுடைய வார்த்தையை நெருக்கிப்போடக்கூடும் என்று அவர் எச்சரிக்கிறார் (மாற்கு 4:19). விசுவாசிகளாகிய நாம் ஒருவரையொருவர் விசாரிக்க வேண்டும் (1 கொரிந்தியர் 12:25). கிறிஸ்துவின் திருச்சபையிலுள்ள மூப்பர்கள் கிறிஸ்துவின் ஆடுகளைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார்கள் (அப்போஸ்தலர் 20:28).

இந்தக் கட்டளைகள் அனைத்துமே தம்முடைய பிள்ளைகளைப் பராமரிக்கும் ஒரு தேவனுடைய பின்னணியிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. அவர் மாபெரும் பராமரிப்பாளர் என்னும் உண்மையே நமக்கு மாபெரும் ஆறுதலின் ஊற்றாக இருக்கிறது. உபாகமம் 11:12-ல், இஸ்ரவேல் புத்திரருக்கு அவர்களுடைய சுதந்தரத்தைக் குறித்துக் கூறப்படுகிறது: “அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கும் தேசம்; வருஷத்தின் தொடக்கம்முதல் வருஷத்தின் முடிவுமட்டும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் எப்போதும் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.” உபாகமப் புத்தகத்தின் முடிவில் யோசுவாவிடம் மோசே ஆற்றும் பொறுப்பளிப்புப் பிரசங்கத்தில், அவர் தேவனுடைய ஜனங்களிடம் கூறுகிறார்:

“கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம்.  பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்.” (உபாகமம் 32:9–10)

பராமரிப்பாளர்கள் பொறுப்பின் சுமையை உணர்வதும், ஒருவரைப் பராமரிப்பதன் ஓய்வில்லாத இயல்பினால் மனச்சோர்வடைவதும் எளிது. அதைத் தேவன் புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது மாபெரும் ஆறுதலாகும்.

 சங்கீதக்காரன் நமக்குச் சொல்கிறான்:

“என் உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.” (சங்கீதம் 94:19)

பராமரிக்கப்படுபவர்களிடத்தில் ஒரு பொதுவான உணர்வு வெளிப்படுகிறது: “நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை.” ஜான் ஸ்டாட் (John Stott) தனது ‘தி ரேடிகல் டிசைபிள்’ (The Radical Disciple) என்ற புத்தகத்தில் இதைப் பயனுள்ள வகையில் கூறுகிறார்:

“முதியவர்கள், நன்றாக வேதத்தை அறிந்திருக்கிற கிறிஸ்தவர்கள் உட்பட, ‘நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை. என்னைப் பராமரித்துக்கொள்ள என்னால் முடிகிறவரை நான் நானாக வாழ்வதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நான் மற்றவர்களுக்கு ஒரு சுமையாக மாறவேண்டியிருந்தால்  நான் மரிப்பதே மேல்!’ என்று சொல்வதை நான் சில சமயங்களில் கேட்கிறேன். ஆனால் இது தவறானது. நாம் அனைவரும் மற்றவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கும்படியே தேவனால் வடிவமைக்கப்பட்டுள்ளோம். நீங்கள் எனக்குச் சுமையாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறீர்கள், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறேன். மேலும் குடும்ப வாழ்க்கை, உள்ளூர் திருச்சபை குடும்பத்தின் உறவுமுறை வாழ்க்கை உட்பட, ‘பரஸ்பர சுமைதாங்கும் தன்மையுடையதாகவே நாம் இருக்க வேண்டும்.”

மாற்கு 4-ஆம் அதிகாரத்தில், சீடர்கள் திடீரென ஒரு கொடூரமான புயலில் தங்களை விவரிக்கிறார்கள். இயேசு தூங்கிக்கொண்டிருக்கிறார், சீடர்களால் அது எவ்வாறு சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அவரை எழுப்பி, “நாங்கள் அழிகிறது உமக்குக் கவலையில்லையா?” என்று கேட்கிறார்கள் (மாற்கு 4:38). இது வேதம் முழுவதிலும் உள்ள மிக ஆச்சரியமான கேள்விகளில் ஒன்றாகும். இயேசு சிருஷ்டிப்பிற்குள் நுழைந்ததற்கான காரணமே, அவர் அந்தப் படகில் இருந்ததற்கான காரணமே, அவர் அக்கறையுள்ளவராக (பராமரிப்பவராக) இருந்தார் என்பதனால்தான். கிறிஸ்து பரலோகத்தின் மகிமையை — தேவதூதர்களால் ஆராதிக்கப்பட்டு நித்திய பாக்கியத்தை அனுபவித்த இடத்தை — விட்டுவிட்டு, பாடுகளின் மனுஷனாகவும், துக்கத்தை அறிந்தவராகவும் மாறி, கல்வாரி சிலுவையில் நம்முடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் சுமக்கும் அளவிற்கு அவர் நம்மில் அக்கறை கொண்டிருந்தார். அவரிடம் “உமக்குக் கவலையில்லையா?” என்று கேட்பது, அவர் யார் என்பதையும் அவர் என்ன செய்ய வந்தார் என்பதையும் முற்றிலும் புரிந்துகொள்ளாததையே நமக்கு காட்டுகிறது.

லூக்கா 10-ல் மார்த்தாளும் இதே கேள்வியைக் கேட்கிறாள். மார்த்தாள் சமையலறையில் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, அவளது சகோதரி மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால், மார்த்தாள் தன் சகோதரி மீது எரிச்சலடைந்து, “ஆண்டவரே, நான் தனியே பணிவிடை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்று கேட்கிறாள் (லூக்கா 10:40). அவளது கேள்வி, இயேசு என்ன செய்ய வந்துள்ளார் என்பதையும் அவருடைய முன்னுரிமைகளையும் அவள் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் நம்மில் அக்கறை கொள்வதை விட அதிகமாக வேறு யாராலும் அக்கறை கொள்ள முடியாது.

தேவனுடைய பராமரிப்பைப் பற்றிய உண்மையை நம்முடைய சொந்த வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் தேவனுக்கு ஒரு சுமை அல்ல; அவர் உங்களைப் பராமரிக்கிறார். இந்த சத்தியம் நமது இருப்பின் ஆழத்திற்குள் ஊடுருவ அனுமதிப்பது நம்மை மாற்றும். ஏதேன் தோட்டத்திற்குப் பிறகான நமது இயல்பான சாய்வு, தேவன் நம்மீது அக்கறையற்றவர் என்று நினைப்பதே ஆகும்.

இந்த உலகத்தின் கவலைகள் தேவனுடைய வார்த்தையை நெருக்கிப்போடுகின்றன என்று இயேசு நமக்கு எச்சரிக்கிறார் (மாற்கு 4:19). அவர் நம்மைப் பரிபூரணமாகப் புரிந்துகொண்டு, இந்த உலகத்தின் கவலைகள் நம் இருதய பாரமாக்கக்கூடும் என்று ஊடுருவிச் சொல்கிறார் (லூக்கா 21:34). மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்று வேதம் பல இடங்களில் எச்சரிக்கிறது. எனவே, அதற்கான நமது பிரதியுத்தர பதில் அவருடைய வார்த்தையைக் கேட்டு அதை விசுவாசிப்பதே ஆகும்.

நமக்கு விலையேறப்பெற்றதாக இருக்கும் காரியங்களையும் மனிதர்களையும் நாம் கவனமாக பராமரிக்கிறோம்; நாம் தேவனுடைய  குமாரனில் அவருக்கு விலையேறப்பெற்றவர்களாக இருப்பதால் தேவன் நம்மை அக்கறையோடு பராமரிக்கிறார். எனவே உங்கள் கவலைகளையும் பாரங்களையும் அவர்மேல் வைத்துவிடுங்கள், ஏனெனில் அவர் உங்களை அக்கறையோடு விசாரிக்கிறவர்.

 சாரா பெட்ஸ் ரோட்ஸ் (Sarah Betts Rhodes) எழுதிய “பூமியை உண்டாக்கின தேவன்” என்ற பாடல் நமக்கு நினைவூட்டுகிறது:

“கல்வாரியில் மரிக்கத் தம்முடைய குமாரனை அனுப்பின தேவன்,

நான் அவர்மேல் சாய்ந்துகொண்டால், அவர் என்னை நித்திய காலமாய்  பராமரிப்பார்.”

இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

பால் லேவி

பால் லேவி

ரெவரெண்ட் பால் லெவி, மேற்கு லண்டனில் உள்ள ஈலிங் சர்வதேச பிரஸ்பிடேரியன் தேவாலயத்தின் போதகர் ஆவார்.