
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
13-10-2026நீங்கள் மரிக்கும்போது உங்களுடைய ஆத்துமாவிற்கு என்ன நடக்கிறது?
நாமெல்லாரும் இதைப் பற்றி சிந்தித்திருப்போம். நாம் நமது கடைசி மூச்சை இழுக்கும் நொடி, இதயம் துடிப்பதை நிறுத்தும் கணம், மற்றும் மரித்துப்போன நமது உடலைவிட்டு நம்முடைய ஆத்துமா பிரியும் அந்த நேரத்தில் என்ன நிகழ்கிறது? உண்மை என்னவென்றால், நம்மில் பெரும்பாலோர், மரண பயம் இல்லாவிட்டாலும் கூட மரிப்பதற்குப் பயப்படுகிறோம். இறப்பது பெரும்பாலும் வலி நிறைந்த ஒரு போராட்டமாகும். இறப்பு என்பது பெரும்பாலும் கிருமிகளின்றி சுத்தம் செய்யப்பட்ட, மருத்துவ சூழலில் நிகழ்கிறது மற்றும் கோரமான தோற்றத்தையே வெளிப்படுத்துகிறது. எப்படி இருந்தாலும் மரணமானது நம்மை தேவனுடைய சமூகத்தில் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க செய்கிறது என்ற வாக்குத்தத்தத்தின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும், மரித்தோரை எழுப்பும் கிறிஸ்துவின் வல்லமையின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும், மரணத்தின் செயல்பாடுகளை குறித்து நமக்கு நடுக்கம் இருந்தாலும் கூட, கிறிஸ்தவர்கள் மரணத்தின் முடிவைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
மரணத்தைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் கதைகளும் புனைக்கதைகளும் ஏராளமாக உள்ளன. இதற்கான காரணம் என்னவென்றால், வேதத்தில் மரணத்தின் செயல்முறை எங்கும் விவரிக்கப்படவில்லை, இருப்பினும் மரணத்துக்கு பின்னர் இயேசுவால் உயிர்த்தெழுப்பப்பட்ட பல நபர்களைப் பற்றி அவை பேசுகின்றன. லாசரு (யோவான் 11) மற்றும் பலர் (எ.கா., லூக்கா 7:11-17 இல் உள்ள நயீன் ஊர் விதவையின் குமாரன்) நம்முடைய நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள் மரித்தபோது என்ன அனுபவித்தார்கள் என்பது பற்றிய எந்தவொரு நேரடியான விவரமும் (லாசரு உட்பட) சொல்லப்படவில்லை. லாசரு இரண்டாவது முறையாக மரித்தபின்பு, நித்திய ஜீவனில் பிரவேசிக்கும்போது என்ன நினைத்திருப்பான் என்று நம்மால் ஆச்சரியப்பட மட்டுமே முடியும். கிறிஸ்து திரும்பி வரும்போது நம்மை அழிவில்லாதவர்களாக எழுப்பும்போது நடக்கும் முழுமையான மாற்றத்தைக் குறித்து சிறந்த விளக்கத்தை பவுல் நமக்கு வெளிப்படுத்தியதால், நம்முடைய உயிர்த்தெழுதலின் சரீரம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும் (1 கொரி. 15:35-49). ஆனால் சரீர உயிர்த்தெழுதல் நடக்கும்வரையிலும், மரணம் (சாபம்) முழுமையாக விழுங்கப்பட்டு இறுதியான முடிவு வரும்வரை உள்ள இடைபட்ட காலத்தில் மரித்துப்போன விசுவாசிகளுடைய ஆத்துமா எங்கே இருக்கும் என்பதைபற்றிய வேதாகம விளக்கங்கள் அதிகம் கொடுக்கப்படவில்லை.
ஆகவே நாம் இறக்கும் போது நம்முடைய ஆத்மா எங்கே செல்கிறது என்கிற அந்தக் கேள்வியின் தன்மையே நம்மை அனேக யூகங்களுக்கு வழி வகுக்குறது என்பதும் உண்மையாகும். இறக்கும் தருவாயில் இருக்கும் சபை விசுவாசிகளுடன் படுக்கை அருகில் விழித்திருந்ததை குறித்து விவரித்த எனது மதிப்பிற்குரிய பாட்டி (ஒரு போதகரின் மகள்) என்னுடைய நினைவிற்கு வருகிறார். இறக்கும் விளிம்பில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு, பெரும்பாலும் தன்னுடைய கண்களைத் திறந்து, பரலோகத்தை நோக்கிப் பார்த்து, ஒரு விதமான மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி, பின்னர் தவிர்க்க முடியாத மரணத்திற்குள் பிரவேசிக்கிறார்கள் என்று அவர் விவரித்தார். இது பரிசுத்தவான்களுக்கு என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய பார்வை என்று என்னுடைய பாட்டி நம்பினார். அது உண்மையாக இருக்கலாம், ஏனெனில் செயல் இழந்து கொண்டிருக்கும் ஒரு உடலின் மூளைக்குள் நிகழும் உயிர்வேதியியல் எதிர்வினைகள் அனைத்து வகையான உணர்வுகளை உருவாக்குவது போலவே அதுவும் நிகழ வாய்ப்புள்ளது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் துல்லியமாக இருந்தாலும், அவை தனிப்பட்ட அனுபவக் குறிப்புகளாகவே உள்ளன மற்றும் வேதாகம கொள்கைகளை உருவாக்குவதற்கான அடிப்படை காரியங்களை அவை வழங்காது.
இறந்துவிட்டு பின்னர் மேலோகத்திலிருந்து திரும்பியதாகக் கூறுபவர்களைப் பற்றிய கதைகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அத்தகைய கதைகள் கவர்ச்சிகரமானவை, அதனால்தான் தற்காலத்திற்குப் பிந்தைய அனுபவங்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் தொழில்கள் வளர்வதற்கு அவை காரணங்களாய் அமைகின்றன -அது அவற்றை எழுதின ஆக்கியோனின் தனிப்பட்ட பரலோக அனுபவங்களை பற்றிய கதைகளை மேலும் கற்பனைகளுக்குள்ளாக்கி, தங்கள் அனுபவத்தைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுத வழிவகுக்குறது. இந்த புத்தகங்கள் பொதுவாக பிரிந்துபோன அன்புக்குரியவர்களுடனான சந்திப்பை வெளிப்படுத்துகின்றன, அவை பெரும்பாலும் பரலோகத்தின் வர்ணனைகளையும் (வழக்கமாக நடக்கும் பூமிக்குரிய காட்சிகளின் மிகைப்படுத்தப்பட்டவை), இயேசுவைச் சந்திப்பது, தேவனிடம் பேசுவது மற்றும் பரலோகம் சார்ந்த காரியங்களின் வர்ணனைகளையும் உள்ளடக்கியது.
ஆனால் இவை அனைத்தும் தேவனுடைய சமுகத்தில் பிரவேசிப்பதை பற்றி வேதாகமம் கூறும் கருத்துகளுக்கு முரணாக இருக்கிறது. ஏசாயா 6:1-7 நமக்கு நினைவில் வருகிறது. ஆண்டவரின் தரிசனம் கொடுக்கப்படும் போது ஏசாயா தனது தகுதியின்மையால் நிலைகுலைந்து போகிறான். தேவனை சந்திக்கும் போது நடக்கும் வேதாகமக் கோட்பாடுகள் – மோசே ஆண்டவரின் மகிமையைக் கண்டது (யாத்திராகமம் 33:18-23) அல்லது எம்மாவு ஊருக்கு வழியில் செல்லும்போது இயேசு தனது இரு சீடர்களுக்குத் தரிசனமானது (லூக்கா 24:37) போன்றவை உள்ளடங்கும்- பரிசுத்த தேவனுடைய சமுகத்தில் இருப்பது பயத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் வேதாகமத்தில் “நான் பரலோகத்தைக் கண்டேன்” அல்லது “நான் இயேசுவுடன் நடந்தேன்” போன்ற இலக்கிய நடைகளின் சாதாரண, அற்பமான செயல்பாடுகளுடன் ஒத்துப்போவதில்லை. வேதாகமம் மரித்தவர்களின் செயல்முறையையோ அல்லது மரிக்கப்போகிறவர்களின் உணர்வுகளையோ விவரிக்காததால், பலர் புனையப்பட்ட கதைகளால் அந்த இடைவெளியை நிரப்ப முயல்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, அவை வெற்றிகரமாகவும் இருந்ததுண்டு. பலர் இந்த புணைகதைகளை உண்மையாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
நன்றியுடன், வேதாகமம் மரணத்திற்குத் தயாராகும்படி நமக்கு உதவுவதற்காக இந்த இடைப்பட்ட நிலை தொடர்பாக இரண்டு குறிப்புகளை நமக்குத் தருகிறது. முதலாவதாக, பல நன்கு அறியப்பட்ட வேதப் பகுதிகளில், விசுவாசிகள் மரிக்கும் காலத்திற்கும் கிறிஸ்து விரும்பி வருவதற்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பவுல் குறிப்பாகப் பேசுகிறார். 2 கொரிந்தியர் 5:8-ன் படி, ஒரு விசுவாசி இறக்கும் போது, நாம் உடனடியாக ஆண்டவரின் சமுகத்திற்குள் பிரவேசிக்கிறோம் என்று பவுல் கற்பிக்கிறார். அப்போஸ்தலர் இவ்விதமாக எழுதுகிறார், சரீரத்தை விட்டு ஆண்டவருடன் இருக்க விரும்புகிறோம்.” பவுல் மேலும் கூறுகையில், “தேகத்தை விட்டு பிரிந்து கிறிஸ்து உடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாய் இருக்கும்” (பிலிப்பியர் 1:23) என்று தான் விரும்புவதைப் பற்றிப் பேசினார். நாம் இறக்கும் போது, உடனடியாக “கிறிஸ்துவோடு” இருக்கிறோம் மற்றும் தேவனுடைய சமுகத்தில் பிரவேசிக்கிறோம். நாம் “பரலோகம்” என்று பேசும்போது வழக்கமாக இதையே வெளிப்படுத்துகிறோம்.
இரண்டாவதாக, வெளிப்படுத்தல் 4-6 இல் யோவானால் விவரிக்கப்பட்ட பரலோகக் காட்சி, நாம் இறக்கும் போது நாம் அனுபவிக்கப் போகிற முன்பு காணப்படாத யதார்த்தமான ஒரு காட்சியைய நமக்கு வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவை மாத்திரம் நம்பியிருக்கும் நாம், தேவனுடைய சமுகத்தில் பரலோக சிங்காசனத்திற்கு முன்பாக மீட்கப்பட்ட பரிசுத்தவான்களுடன் இணைவோம். நாம் விழிப்புடன் இருக்கிறோம், நாம் எங்கு இருக்கிறோம் என்பதையும் அறிந்திருக்கிறோம், மேலும் தேவனை மகிழ்ச்சியுடன் துதிக்கிறோம். எளிய முறையில் சொல்வதென்றால், நாம் இறக்கும்போது நம்முடைய ஆத்துமாவிற்கு என்ன நடக்கிறது என்பதற்கான தெளிவான வரைபடமே இந்த பரலோகக் காட்சியாகும். இந்த மூன்று அதிகாரங்களில், உலகத்தின் முடிவில் நமது சரீரங்கள் உயிர்த்தெழுப்பப்படும் வரை தேவன் தமது ஜனங்களுக்கு நடுவே வாசம்பண்ணும் பரலோகத்தின் புகழ்பெற்ற வரைபடத்தை யோவான் தருகிறார். பரலோகம் என்பது இதுதான் – மீட்கப்பட்டவர்கள் பரிசுத்த தேவனுடைய சமுகத்தில் வாழ்வது, நம்முடைய சிருஷ்டிகர் மற்றும் மீட்பருக்கான எல்லாப் புகழ்ச்சியையும் மகிமையையும் அவருக்கு அளிப்பதாகும்.
இந்த பார்வை அற்புதமாக இருந்தாலும், பல வழிகளில் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும், பரலோகத்தில் உள்ள பரிசுத்தவான்கள், “பரிசுத்தமும் சத்தியமும் உள்ள சர்வவல்லமையுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தை குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்?” (வெளி. 6:10) என்று கூக்குரலிடுகிறார்கள் என்பதைக் குறிப்பிடுவது மதிப்புள்ளது. ஏற்கனவே தேவனுடைய சமுகத்தில் அவரது சிங்காசனத்திற்கு முன்பு உள்ளவர்கள் – நமக்கு முன்பாக மரித்துப்போய் இப்போது இடைப்பட்ட நிலையில் காணப்படுபவர்கள், மரணம் மற்றும் ஆண்டவரின் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் இருப்பவர்கள் – இவர்கள் எல்லாருமே உயிர்த்தெழுதல் மற்றும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்பும் அந்த நாளுக்காக ஏங்குகிறார்கள்.
அப்படியானால், நாம் இறக்கும்போது விசுவாசிகளின் ஆத்துமாக்களுக்கு என்ன நடக்கிறது? நாம் உடனடியாக ஆண்டவரின் புகழ்பெற்ற சமுகத்தில் பிரவேசிக்கிறோம், அங்கு உலகத்தின் முடிவில் நமது சரீர உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கிறோம்.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


