
சவாலான நேரங்களில் ஓர் தகப்பனின் வழிகள்
06-10-2026
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
13-10-2026மனந்திரும்புதல் என்றால் என்ன?
மாற்கு 1:14-15 இல் இயேசுவின் வெளிப்படையான பிரசங்க ஊழியத்தில் அவர் கூறிய முதல் வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது: “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.” இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கான முதல் அறிவிப்பிலேயே பாவத்திலிருந்து மனந்திரும்புவதைக் குறித்த அழைப்பு காணப்படுமானால், மனந்திரும்புதல் கிறிஸ்தவ சீஷத்துவத்தின் ஒரு அத்தியாவசியமான அம்சம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இயேசுவை உண்மையோடு பின்பற்றுவோமானால், நாம் இந்தக் கேள்விக்கு சரியான பதிலளிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்: அதாவது மனந்திரும்புதல் என்றால் என்ன? என்பதே.
ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதல்
வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Confession of Faith) மற்றும் வினாவிடைப் போதனைகள், வேதாகமத்தின் பல போதனைகளை பிரயோஜனமான வகையில் சுருக்கமாகத் தருகின்றன. அதில் “ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதலும்” ஒன்றாகும், மற்ற இறையியலாளர்கள் இதை “சுவிசேஷத்திற்கான மனந்திரும்புதல்” என்றும் அழைக்கிறார்கள். இந்த இரண்டு சொற்களும், உண்மையான, இரட்சிப்புக்கேற்ற மனந்திரும்புதலை, போலியான லௌகீக துக்கத்திற்கேதுவான மனந்திரும்புதலிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பவுல், மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்பை உண்டாக்குகிற தேவனுக்கேற்ற துக்கத்தைப் பற்றிப் பேசுகிறார், மேலும் மரணத்தை உண்டாக்குகிற லௌகீக துக்கத்தைக் குறித்தும் நம்மை எச்சரிக்கிறார் (2 கொரி. 7:10-11). அடிப்படையில், நம்முடைய பாவம் தேவனை எப்படித் துக்கப்படுத்துகிறது மற்றும் பிறரைக் காயப்படுத்துகிறது என்பதற்கான துக்கத்தையும், பாவத்தின் விளைவுகளுக்காக நாம் அடையும் துக்கத்தையும் அவர் வேறுபடுத்திக் காட்டுகிறார். இரட்சிப்பிற்கேதுவல்லாத மனந்திரும்புதல் என்பது, நம்முடைய பாவங்கள் நம்மை எவ்வாறு காயப்படுத்தியுள்ளன என்பதற்கான வெறும் உணர்வுப்பூர்வமான துக்கமே தவிர, அல்லது தவறான காரியத்தைச் செய்யும்போது காயம்பட்டதற்காக அடையும் வருத்தம் மட்டுமே ஆகும். ஒரு சிறுவன் பிஸ்கட் ஜாடியில் கையை வைத்துவிட்டு மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் வருத்தத்தைப் போன்றதே இது; மாறாக, தன் பெற்றோரின் விதிகளை மீறியதை அவனே முன்வந்து ஒப்புக்கொள்ளும்போது ஏற்படும் வருத்தமல்ல அது. ஏசா தன் சேஷ்டபுத்திரபாகத்தையும் ஆசீர்வாதத்தையும் இழந்தபோது வெளிப்படுத்திய வருத்தமும் இதுவே—ஒரு கிண்ணக் கூழுக்காக தேவனால் வரும் நன்மையை விட்டுவிலகியதினால் வந்த துக்கம் அல்ல, மாறாக தனக்குரிய சிறந்த சுதந்தரத்தை இழந்துவிட்டேனே என்ற துக்கமே அவனிடம் காணப்பட்டது (ஆதி. 25:29-34; 27:1-41; எபி. 12:16).
உண்மையான மனந்திரும்புதலின் கூறுகள்
இரட்சிப்புகேதுவல்லாத, உலகப் பிரகாரமான மனந்திரும்புதலுக்கு எதிராக, ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதலானது பாவத்தை விட்டுத் திரும்பி, கிறிஸ்து மூலமாக தேவனிடம் சேர்வதாகும். வெஸ்ட்மின்ஸ்டர் விசுவாச அறிக்கை 15.2 ல், உண்மையான, இரட்சிப்புக்கேற்ற மனந்திரும்புதலின் கூறுகளை வரையறுக்க நமக்கு உதவுகிறது. அது இவ்விதமாக கூறுகிறது: “[ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதலினால்], ஒரு பாவி, தன் பாவங்களின் ஆபத்தை மட்டுமல்ல, தேவனுடைய பரிசுத்தத்திற்கும் நீதியுள்ள நியாயப்பிரமாணத்திற்கும் விரோதமான தன் பாவங்களின் அசுத்தத்தையும், அருவருப்பையும் கண்டுணர்ந்து; மனந்திரும்புகிறவர்களுக்கு கிறிஸ்துவுக்குள் இருக்கும் தேவனுடைய இரக்கத்தைப் புரிந்துகொண்டு, தன் பாவங்களைக் குறித்து துக்கமடைந்து அதை வெறுத்து, அவையெல்லாவற்றையும் விட்டு தேவனிடத்திற்குத் திரும்பி, அவருடைய கற்பனைகளின் வழிகளிலெல்லாம் அவரோடேகூட நடப்பதற்காக தீர்மானத்துடன் முயற்சியும் செய்கிறான்.”
முதலாவதாக, ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதல் என்பது பாவம் நமக்கு ஆபத்தானது என்பதை மட்டுமல்லாமல், அது அசுசியானது அருவருப்பானது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஏனெனில் எல்லா மீறுதல்களும் தேவனுடைய நீதியான நியாயப்பிரமாணத்தின் கீழ்படியாமையையும், அவருடைய பூரண பரிசுத்தமுள்ள சுபாவத்திற்கு எதிரான அவகீர்த்தியையும் கொண்டுவருகிறது. சங்கீதம் 51:4-ல் இதை நாம் காண்கிறோம், அங்கே தாவீது, பத்சேபாள் மற்றும் உரியாவின் விஷயத்தில் தான் செய்த பாவம் தேவனுக்கு மட்டுமே விரோதமான பாவம் என்று அறிக்கையிடுறார். இது ஒரு கவிதை நடையிலான மிகைப்படுத்தலாகும். தாவீது உரியாவைக் கொலை செய்தது தேவனுக்கும் உரியாவுக்கும் விரோதமான பாவம் என்பது வெளிப்படை. தன் மீறுதல்கள் முதலாவதாகவும் முதன்மையாகவும் தேவனுக்கு விரோதமான பாவங்கள் என்றே தாவீது குறிப்பிடுகிறார். தேவனே எல்லாவற்றையும் படைத்த பரிசுத்தராகவும் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவராகவும் இருப்பதினாலும், நாம் அவருடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருப்பதினாலும், ஒவ்வொரு பாவமும் மற்ற எவருக்கும் விரோதமான பாவமாக இருப்பதற்கு முன்பாக, தேவனுக்கு விரோதமான பாவமாகவே இருக்கிறது. பிறருக்கு விரோதமான பாவங்கள் தேவனுடைய சாயலுக்கு விரோதமான பாவங்களாகும், ஆகவே இன்னும் விரிவாக சொல்வோமானால், அவை தேவனை துக்கப்படுத்தச் செய்யும் முயற்சிகளாகும். ஆர்.சி. ஸ்புரோல் (R.C. Sproul) அடிக்கடி கூறுவது போல், எல்லா பாவங்களும் “பேரண்டத்தின் துரோகம்” (cosmic treason) ஆகும். அவை தேவனையும் அவருடைய கற்பனைகளையும் அகற்றிவிட்டு, அவ்விடத்தில் நம்மையும் நம்முடைய சொந்த நீதித்தரத்தையும் வைக்க முயலுவதாகும்.
ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதல், நம்முடைய பாவங்கள் முதன்மையாக தேவனுக்கு விரோதமானவை என்பதை உணர்வது மட்டுமன்றி, மனந்திரும்புகிறவர்களுக்கு கிறிஸ்துவுக்குள் இருக்கும் தேவனுடைய இரக்கத்தைப் புரிந்துகொண்டு, தேவனை நோக்கிப் பார்த்து, பாவத்தை அறிக்கையிட்டு, மன்னிப்பை தேடும்படி ஒரு பாவியை ஏவுகிறது (WCF 15.2). சங்கீதம் 51-லும் இதை நாம் காண்கிறோம், அங்கே தாவீது தன் பாவத்தை அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தைக் கேட்கிறார். யூதாஸ் காரியோத்திற்கும் அப்போஸ்தலனாகிய பேதுருவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் சிந்தித்துப் பாருங்கள். இருவருமே கொடூரமான பாவம் செய்தார்கள்; யூதாஸ் இயேசுவை அதிகாரிகளிடம் ஒப்புக்கொடுத்தான், பேதுரு தான் இயேசுவின் சீஷன் என்பதை மறுதலித்தான் (மத். 26:14–16, 69–74). இருவருமே தங்கள் பாவத்திற்காகத் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள் (மத். 26:75; 27:3–4). ஆயினும் யூதாஸின் பாவத்திற்கான துக்கம் தற்கொலையில் முடிந்தது, ஆனால் பேதுருவின் துக்கமோ ஊழியத்தில் மறுசீரமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது (மத். 27:5–10; யோவா. 21:15–19). இந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம்? தன் பாவத்தையும் தாண்டி, பேதுரு இயேசுவினிடத்திற்குத் பின்தொடர்ந்து வந்தான், முதலில் வெறுமையான கல்லறையைப் பார்க்கவும், பின்னர் கடற்கரையில் அவரோடு போஜனம் பண்ணவும் வந்தான் (யோவா. 20:1–10; 21:1–14). இயேசு மனந்திரும்புகிறவர்களுக்கு இரக்கமுள்ளவர் என்பதை அறிந்து பேதுரு இயேசுவை நோக்கி ஓடினான்; யூதாஸோ இரட்சகரின் இரக்கத்தை விசுவாசிக்காததால், இயேசுவை விட்டு விலகி தன் சொந்தக் கைகளினாலே மரணத்திற்கு வித்திட்டான்.
இறுதியாக, ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதலில், ஒரு பாவி தன் பாவங்களைக் குறித்துத் துக்கப்பட்டு அதை வெறுப்பதால், தேவனுக்குக் கீழ்ப்படியும்படி புதிய தீர்மானத்தோடும், அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியோடு பாவங்களை விட்டுத் திரும்புகிறான் (WCF 15.2). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனந்திரும்புதல் என்பது பாவத்திற்காக மனம்வருந்துவதாகச் சொல்லிவிட்டு, தன் வாழ்க்கையைத் திருத்த எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது அல்ல. நாம் அந்தகாரத்தின் கிரியைகளைக் தள்ளிவிட்டு, கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ள வேண்டும் (ரோமர் 13:11-14); நாம் கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டிகளாக இருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, அதற்கேற்ப நாம் அந்தப் புதிய சிருஷ்டிகளாக வாழ முற்பட வேண்டும். பாவத்திலிருந்து விலகும் இந்த மனம்திரும்புதல் நமது இரட்சிப்பின் அனுபவத்தில் உறுதியாக நடக்கிறது, அதன் பின்னரும் நம்முடைய வாழ்க்கையின் எஞ்சிய ஒவ்வொரு நாட்களிலும் அனுதினமும் தொடர்கிறது. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், ஆனால் நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:8-9).
மனந்திரும்புதலின் கடமையும் அதன் சிறப்பம்சமும்
ஒரே பாவத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நாம் செய்தால், நாம் உண்மையாக மனந்திரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல. மாறாக, நம் பாவத்தை நேசித்து, அதை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால், நமது மனந்திரும்புதலின் உண்மையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பதாகும். கிறிஸ்துவை அறிந்த அனைவருக்கும், ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதல் என்பது நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவும், நம் இரட்சகருடனான தடையில்லாத ஐக்கியத்தில் நிலைத்திருக்க நம்மை அழைக்கும் சிலாக்கியமாகவும் இருக்கிறது. நாம் பாவத்தை வெறுப்போம், மன்னிப்பை கேட்போம், கிறிஸ்துவின் வழியைக் கற்றுக்கொள்ள முற்படுவோம், தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுவதற்குப் பதிலாக அதற்குக் கீழ்ப்படியப் பிரயாசப்படுவோம்.
இக்கட்டுரை முதன்முதலில் லிகோனியர் ஊழியங்களின் வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


