
மரணத்தில் கிறிஸ்தவனின் ஆறுதல் எது?
01-09-2026ஊழியத்தில் குணநலன் ஏன் முக்கியமானது?
தேவன் வல்லமையுள்ளவரும், அன்புள்ளவரும், தமது மகத்துவமுள்ள நாமத்தின் மகிமையை குறித்து வைராக்கியமுள்ளவருமாயிருக்கிறார். ஏசாயா 44:23–24-இல், கர்த்தர் தம்மை தாமே “மீட்பர்” என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், தம்முடைய ஜனங்களை தாமே மீட்டு, “இஸ்ரவேலிலே மகிமைப்படுவேன்” என்றும் அறிவிக்கிறார். மெய்யாகவே, பாவிகள் இரட்சிக்கப்படுவதன் மூலமாகவே தேவன் சிறப்பான விதத்தில் மகிமைப்படுகிறார்.
அப்படியானால், ஏன் அநேக பாவிகள் இரட்சிக்கப்படுவதில்லை? தேசமெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் சபைகள் ஏன் மக்களால் நிரம்பி வழிவதில்லை? நீதியின்மேல் தாகமும் பசியுமாய் இருக்கும் புருஷர்களாலும், ஸ்திரீகளாலும், பிள்ளைகளாலும் ஏன் சபைகள் நிரம்பவில்லை? சுருக்கமாகச் சொன்னால், அனேக கிறிஸ்தவர்கள் வாஞ்சிக்கிற ஆத்தும எழுப்புதல் எங்கே?
கிறிஸ்தவர்களிடையே எழுப்புதல் இல்லாதிருப்பதும், கிறிஸ்தவ தலைவர்களிடத்தில் பரிசுத்தம் இல்லாதிருப்பதும் பெரும்பாலும் ஒன்றோடொன்று இணைந்தே செயல்படுகின்றன.
நிச்சயமாக, இதற்கு அநேக காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. சுவிசேஷத்தின் மகத்துவத்தைக் குறைத்துப்போடும் சபைகளில் மெய்யான மனந்திரும்புதல்களைக் கொண்ட நபர்களை பார்ப்பது கடினமே. பொழுதுபோக்குகளை விரும்புகிற போதகர்கள், சபை மக்களை பாவத்திற்கான கண்ணீர் விட வைக்க முடியாது. மனந்திரும்புதலை அலட்சியம் செய்யும் கிறிஸ்தவத் தலைவர்கள், சில உண்மையான விசுவாசிகளை மட்டுமே காணமுடியும்.
இருப்பினும், அதே நேரத்தில், தங்கள் சொந்த வாழ்க்கையின் குணநலன்களை குறித்து அலட்சிய போக்கோடு செயல்படும் பிரசங்கிகள் தங்கள் சபைகளில் எழுப்புதலைக் காண வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தேவன், தமது சர்வ இறையாண்மையுள்ள ஞானத்தின் அடிப்படையில், சபை தலைவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையை மையமாக வைத்தே தம்முடைய சபையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறார் என்பதை பார்க்க முடியும்.
“இரட்சிப்பு கர்த்தருடையதே!”
யோனாவைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர் முரண்டுபிடித்துக் கதறியபடியே நினிவேக்கு இழுத்துச் செல்லப்பட்டார்; இருந்த போதிலும் ஒரு முழு நகரமும் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தது. எரேமியாவைக் குறித்து என்ன பார்க்கிறோம்? இந்த தேவமனிதன் தன் முழு இருதயத்தோடும் பிரசங்கித்தான்; ஆனால், சத்தியத்தை நன்கு அறிந்திருந்த ஒரு முழு தேசத்தால் அவன் புறக்கணிக்கப்பட வேண்டியிருந்தது. பேதுருவைக் குறித்ததான காரியம் என்ன? அந்தப் பலவீனமான அப்போஸ்தலன் எருசலேமில் பெந்தெகொஸ்தே நாளில் வல்லமையான ஒரு பிரசங்கத்தைப் பண்ணினான், ஆயிரக்கணக்கானோர் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார்கள். இறுதியாக, பாவமில்லாத நம்முடைய இரட்சகரின் காரியம் என்ன? அவர் ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ்ந்தார்; எனினும் தம் சொந்த மக்கள் மத்தியில் எழுப்புதலுக்குப் பதிலாக புறக்கணிப்பையே அனுபவித்தார்.
இதுபோன்ற உதாரணங்கள், யோனாவின் கூற்றே உண்மை என்பதை நிரூபிக்கின்றன: “இரட்சிப்பு கர்த்தருடையது!” (யோனா 2:9). நாம் சுயமாக எழுப்புதலை உருவாக்கிவிட முடியாது என்பதே உண்மை. எவ்வளவுதான் சுத்தமான உபதேசம், விசுவாசமுள்ள பிரசங்கம் மற்றும் மிகச்சிறந்த குணநலன்கள் காணப்பட்டாலும், அது ஒரே ஒரு ஆத்துமாவின் இரட்சிப்பிற்குக்கூட உத்தரவாதம் அளிக்க முடியாது. இரட்சிப்பின் மேல் தேவனே இறையாண்மையுள்ளவர், அதுவே இதன் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறது. நாளை இரட்சிக்கப்படப் போகிற எல்லாருடைய பெயர்களும் இன்றே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவர் நிர்ணயித்த நேரத்தில் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வருவார்கள்.
ஆயினும் . . .
ஆயினும், நம்முடைய மகத்துவமான தேவன் இரட்சிப்பின் முடிவுகளையும், அதற்குரிய வழிகளையும் முன்னமே குறித்திருக்கிறார். புதிய ஏற்பாட்டின் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில், சபையின் பொருட்டு மூப்பர்கள் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையான ஊழியத்திற்கு போதகர்கள் முன்மாதிரிகளாக இல்லையென்றால், கனியுள்ள ஊழியத்தை எதிர்பார்க்க முடியாது.
1 பேதுரு 5:2–3-இல் மூப்பர்களுக்கு பேதுரு கொடுக்கும் அறிவுரையைக் கவனியுங்கள்:
“உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாகமாயும், சுதந்தரத்தை இருமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.”
இந்த மேய்ப்பர்கள் ஏன் மந்தைக்கு மாதிரிகளாக இருக்க வேண்டும்? ஒரு பிரசங்கி உண்மையான மற்றும் சரியான காரியங்களை போதித்தால் போதாதா? போதாது. அவர் தனது வீட்டின் அந்தரங்கத்தில் என்ன செய்கிறார் என்பது உண்மையிலேயே முக்கியமா? ஆம், அது உண்மையிலேயே முக்கியமானதுதான்.
அதினால்தான், அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவிடம், அவனுடைய வாழ்க்கை மற்றும் உபதேசத்தை சார்ந்தே அதை கேட்பவர்களுடைய இரட்சிப்பு அமைந்திருக்கிறது என்று கூறியதில் எந்த ஆச்சரியமுமில்லை: “உன்னைக்குறித்தும் உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” (1 தீமோ. 4:16). நிச்சயமாக, இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை பவுல் அறிந்திருந்தார். இருப்பினும், தேவனுடைய இரகசியமான பராமரிப்பில், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும்.
“பரிசுத்தமுள்ள ஊழியக்காரன் ஒரு பயங்கரமான ஆயுதம்.”
ஸ்காட்லாந்து போதகரான ராபர்ட் முர்ரே மெக்சின் (Robert Murray M’Cheyne), தனது மூத்த சகோதரனின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து விசுவாசத்திற்குள் வந்தார். 1835-இல் இறையியல் பள்ளியிலிருந்து பட்டம் பெற்றபோது, தேவன் தனக்குக் கொடுக்கும் காலங்கள் வரை கர்த்தருக்குப் பின்னால் தீவிரமாக ஓட வேண்டும் என்ற உணர்வோடு அங்கிருந்து வெளியேறினார். டண்டி என்ற இடத்தில் உள்ள புனித பீட்டர்ஸ் சபையின் ஊழியக்காரராவதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு, “வாழ்க்கை வேகமாய் மறைந்து கொண்டிருக்கிறது, நித்தியத்திற்காக விரைந்து செயல்படுங்கள்” என்று எழுதினார். அவர் எதிர்பார்த்ததை விடவும் நித்தியம் சீக்கிரமாக அவரிடம் வந்தது. அவர் இருபத்தொன்பது வயதிலேயே மரித்துப்போனார், ஆனால் அதற்கு முன்பாகவே தனிப்பட்ட பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொண்டார்.
மெச்சின் தனது சக போதகர்களைத் தங்கள் மந்தைகளுக்கு முன்மாதிரிகளாக இருக்கும்படி வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உபதேசத்தையும் கவனமாகக் காத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்:
“எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் சொந்த ஆத்துமாவைப் பண்படுத்துங்கள். உங்களது சொந்த ஆத்துமாவே உங்களின் முதன்மையானதும் மிகப்பெரிதுமான கவனத்திற்குரியதாகும். தனிப்பட்ட பரிசுத்தத்தில் வளரும்படி நாடுங்கள். தேவன் ஆசீர்வதிப்பது பெரிய தாலந்துகளை அல்ல, இயேசுவைப்போல இருக்கும் சாயலையே. பரிசுத்தமுள்ள ஒரு ஊழியக்காரன் தேவனுடைய கையில் இருக்கும் ஒரு பயங்கரமான ஆயுதம். உங்கள் மனச்சாட்சி சுத்தமாகவும், உங்கள் இருதயம் தேவனுடைய ஆவியினால் நிறைந்தும் இருக்கும்போது உங்களால் சொல்லப்படும் ஒரு வார்த்தை, அவிசுவாசத்திலும் பாவத்திலும் சொல்லப்படும் பத்தாயிரம் வார்த்தைகளை விட மேலானது.”
நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் பற்றி மட்டுமல்ல; நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றியும் தேவன் கவலைப்படுகிறார். ஒரு கிறிஸ்தவத் தலைவனின் மனச்சாட்சி இருளடைந்தும், அவனுடைய இருதயம் பாவத்தின் வழிகளில் புத்தியீனமாய் மூழ்கியிருக்கும் போது, தேவன் தனது ஆசீர்வாதத்தின் கரத்தை ஊழியத்திலிருந்தும் விலக்குவாரானால் அதைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை.
நாம் ஆரோக்கியமான உபதேசத்தினாலும் பரிசுத்த வாழ்க்கையினாலும் மட்டும் எழுப்புதலை சுயமாக உருவாக்கிவிட முடியாது என்பது உண்மைதான், ஆனால் அவை இல்லாமல் நாம் எழுப்புதலை எதிர்பார்க்கவும் கூடாது.
இந்தக் கட்டுரை முதலில் லிகோனியர் மினிஸ்ட்ரீஸ் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


