
பரதேசியான கிறிஸ்தவ வாழ்க்கை
27-11-2025
வெஸ்ட்மின்ஸ்டர் இறையியலாளர்கள் என்பவர்கள் யார்?
04-12-2025ஆதியாகமம் 6 ல் சொல்லப்பட்ட “தேவகுமாரர்” யார்?
இருபதாம் நூற்றாண்டில், ஜெர்மன் வேதாகம அறிஞர் ருடால்ஃப் புல்ட்மேன் என்பவர், வேதாகமத்தைப் பற்றி ஒரு பெரிய விமர்சனத்தை முன்வைத்தார், வேதம் அநேக புராணக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது, அது நம் காலத்திற்கு குறிப்பிடத்தக்க பயன்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அவற்றை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். புல்ட்மேனின் முக்கிய கவலை புதிய ஏற்பாட்டு பகுதிகளில் இருந்தது, குறிப்பாக அற்புதங்களின் பதிவுகளை உள்ளடக்கியவை, அவை சாத்தியமற்றது என்று அவர் கருதினார். இருப்பினும், மற்ற அறிஞர்களும், பழைய ஏற்பாட்டிலும் புராணக் கதைகள் இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த வாதத்திற்கான காரணம் என்னவென்றால் பொதுவாக ஒரு கட்டுக்கதையாகும், இது கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் எப்போதாவது மனிதர்களுடன் இணைவது பற்றிய பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கட்டுக்கதைகளுக்கு இணையாக இருப்பதாக சிலர் நம்புகிறார்கள்.
ஆதியாகமம் 6 ல், இவ்வாறு நாம் வாசிக்கிறோம்:
“மனுஷர் பூமியில் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது, தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.” ஆதியாகமம் 6:1-4.
இந்த வரலாற்றுப் பகுதி தேவன் நோவாவின் குடும்பத்தை தவிர பூமியிலிருந்து அனைத்து மக்களையும் ஜலத்தின் மூலமாக அழிப்பதற்கு முன்பாக நடைபெற்ற காரியமாகும். நிச்சயமாக பெரும்பாலும் வெள்ளத்தைப் பற்றிய நிகழ்வுகள் புராணக் கதைகளாகவே பார்க்கப்படுகிறது, ஆனால் இங்குள்ள துவக்கப்பகுதியில், “தேவகுமாரர்” மற்றும் “மனுஷகுமாரத்திகள்” இடைய நடைபெற்ற கலப்பு திருமணத்தை பற்றி நாம் வாசிக்கையில் இந்நிகழ்வு மாபெரும் புராணக்கதையாகவே பார்க்கப்படுகிறது.
ஆதியாகமம் 6 ல் உள்ள இப்பகுதி பற்றிதான ஒரு ஊகம் என்னவென்றால், “தேவகுமாரர்” என்பது தூதர்களை பற்றியது என்கிறார்கள் சிலர். ஏன் சில வேத அறிஞர்கள் இதை முன்வைக்கிறார்கள்? இதற்கான எளிமையான பதில், மற்ற வேதப்பகுதிகளிலும் சில நேரங்களில் தூதர்களைப் பற்றி பேசுவதால், இங்கேயும் அதேபோன்று தூதர்களை பற்றியே பேசுகிறது என எண்ணுகின்றனர். நிச்சயமாக இந்த ஊகம் முன்வைக்கப்படவேண்டிய ஒன்றுதான், ஆனால் இது அவசியமான கண்ணோட்டம்தானா? இல்லையென்று தான் நான் கூறுவேன்; இந்த பகுதி தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் இணைய நிகழ்ந்த பாலிய உறவைப் பற்றித்தான் பேசுகிறது என்பதை நிச்சயமாக நான் நம்பமாட்டேன்.
நாம் இரண்டு வரிசைகளை பார்க்கிறோம், ஒன்று தேவனுக்கு கீழ்படிபவர்கள் மற்றொன்று வேண்டுமென்றே அவருக்கு கீழ்படியாதவர்கள்.
இந்த கடினமான பகுதியை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலாவது “தேவகுமாரர்” என்ற வாக்கியத்திற்கான பரந்த பயன்பாட்டை நாம் பார்க்க வேண்டும். மிகப் பிரதானமாக இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவை காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது. அவர்தான் தேவகுமாரன். அதே வேளையில் முன்பு பார்த்தது போல இந்த வார்த்தை சில நேரங்களில் தூதர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது (யோபு 1:6; 21:1; சங் 29:1). அதேபோல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களை குறிப்பதற்கும் சில நேரங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது (மத் 5:9; ரோமர் 8:14; கலா 3:26). எனவே வேதாகமத்தில் “தேவகுமாரர்” என்ற பதம் எப்போதும் உயிரினங்களின் உறவை குறிப்பதில்லை. மாறாக, மிக பிரதானமாக கீழ்படிதலின் உறவை குறிக்கிறது. அதாவது ஆதியாகமம் 6, தேவனுக்கு கீழ்படியும் வாழ்வை வெளிப்படுத்தியவர்களுக்கும், இவர்களின் பார்வையில் தேவனுக்கு கீழ்படியாத அந்நியர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலப்பு திருமணத்தைப் பற்றி பேசுகிறது. மிக எளிமையாக, இந்த பகுதி விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையில் நடைபெற்ற திருமணங்களைத்தான் பேசுகிறது.
ஆதியாகமம் 6 ன் உடனடி பின்னணி இந்த முடிவுக்கு ஆதரவளிக்கிறது. ஆதியாகமம் 3 ல் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பின்பு வேதம் காயீன் மற்றும் சேத் ஆகிய இரு குடும்பத்தாரின் இரு வரிசைகளை காண்பிக்கிறது. ஆதியாகமம் 4 ல் காயீனின் வம்ச வரிசை பெருகிவரும் துன்மார்க்கத்தை காட்டுகிறது, இதில் லாமேக்கு முதல் முதலாக பலதார மணம் செய்தவனாகவும் (ஆதி 4:19) மற்றும் கொலைகார பழிவாங்கும் வாளை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறான். இதற்கு நேர்மாறாக ஆதி 5 ல் சொல்லப்பட்டுள்ள சேத்தின் வம்ச வரிசை நீதியை காண்பிக்கிறது. இந்த வம்ச வரிசையில் ஏனோக்கு இருக்கிறார், “தேவனோடு சஞ்சரித்தவன்… தேவன் அவனை எடுத்துக்கொண்டார்” (ஆதி 5:24). சேத்தின் மூலமாக நோவா பிறந்தார், அவர், “ஒரு நீதிமான், தனது தலைமுறையில் நீக்கியுள்ளவர்” (ஆதி 6:9; 5:28). இவ்வாறு, நாம் இரண்டு வம்சாவளிகளைக் காண்கிறோம், ஒன்று கடவுளுக்குக் கீழ்ப்படிதல், மற்றொன்று வேண்டுமென்றே அவருக்குக் கீழ்ப்படியாதது.
ஆகையால், ஆதியாகமம் 6, தேவதூதர்கள் மற்றும் மனிதப் பெண்களின் கலப்புத் திருமணத்தை அல்ல, மாறாக காயீன் மற்றும் சேத்தின் சந்ததியினரின் கலப்புத் திருமணத்தை விவரிக்கிறது என்று பல எபிரேய அறிஞர்கள் நம்புகிறார்கள். இரண்டு வரிசைகள், ஒன்று தெய்வீகமானது மற்றும் ஒன்று துன்மார்க்கமானது, ஒன்றாக வந்து, திடீரென்று அனைவரும் தீமையைத் தேடுவதில் சிக்கிக் கொள்கிறார்கள், இதனால் “[மனிதனின்] இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாகவே இருந்தது. ” ( ஆதி. 6:5 ). எனவே, இந்த பகுதியை புரிந்துகொள்ள தேவதூதர்கள் பூமியின் மீது படையெடுப்பார்கள் என்று நாம் ஊகிக்கத் தேவையில்லை.
ஆதியாகமம் 6-ன் விளக்கச் சிக்கல்களைத் தீர்ப்பது, வேதத்திலிருந்து நியாயப்படுத்தப்படாத ஊகங்களை கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. “தேவனுடைய குமாரர்” மற்றும் “மனுஷகுமாரத்திகள்” என்ற விளக்கமான சொற்கள், பரலோக மனிதர்களுக்கும் பூமிக்குரிய மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஊகத்தை உருவாக்க நமக்கு உரிமம் வழங்குவதில்லை. இது போன்ற ஒரு கடினமான பகுதியைப் பார்க்கும்போது, வேதாகமத்தின் பரந்த சூழலின் பிண்ணனியில் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேதம் வேதத்தால் விளக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான கொள்கையாகும்.
இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.


