Historical-Narrative
வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?
26-06-2025
How-to-Read-the-Gospels
சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?
03-07-2025
Historical-Narrative
வரலாற்று கதைநடைகளை எவ்வாறு படிப்பது?
26-06-2025
How-to-Read-the-Gospels
சுவிசேஷங்களை எவ்வாறு படிப்பது?
03-07-2025

வேத வியாக்கியானம் என்றால் என்ன?

What-Is-Exegesis

 – கெவின் D. கார்ட்னர்

What is Exegesis?  – Kevin D. Gardner

இன்றைய காலகட்டத்தில், ஒருவருடைய கருத்தை விட மற்றவருடைய கருத்து எந்த விதத்திலும் மேலானதாக இல்லை என்று நினைக்ககூடிய நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. மெய்யான சத்தியம் என்று உண்டு  என்பதின்மீது முழுமையான பிடிப்பு இல்லாததினால்,  ஓவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துகளை சார்ந்தே எல்லாம் இருப்பதாக இறுதியில் எண்ணப்படுகிறது. இவ்விதமான கண்ணோட்டம் வேதாகமத்திற்கும் பொருந்தும் என்று அநேகர் நினைக்கிறார்கள். அது எந்த அளவிற்கென்றால் வேதாகமத்தின் மெய்யான அர்த்தத்தை பற்றிக் கொள்ளாமல், அது முற்றுப்பெற்றது என்பதை மறந்து அதை ஒவ்வொருவருடைய புரிதலுக்கு ஏற்ற வண்ணமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதைப் போல எண்ணுகிறார்கள். சீர்திருத்த திருச்சபைகள் இந்தக் கருத்தை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளன. அதற்கான எளிய காரணம் என்னவென்றால், வேதாகமம் தேவனுடைய வார்த்தையாகவும் மேலும் தேவன் தம்முடைய வார்த்தையை எப்படி வாசிக்க  வேண்டுமென்று அவரே தீர்மானித்து எழுதிக் கொடுத்துள்ளார் என்பதினால்தான். இறுதியாக, வேதாகமம் தேவன் வழிநடத்தும் விதமாகவே வாசிக்கப்பட வேண்டுவது அவசியமாகும்.

வேதாகம புத்தகங்களை விளக்கப்படுத்துவதும், சரியாக புரிந்துகொள்வதுமே வேத வியாக்கியானத்தின் (exegesis) மைய நோக்கமாகும். வேத வியாக்கியானம் என்பது வேதாகம பொருள் விளக்க படிப்புடன் (hermeneutics)  நெருங்கிய தொடர்புடையது. இது வேதாகமத்தை சரியான விதத்தில் அணுகி, அதை விளக்கப்படுத்தும் கொள்கைகளை உள்ளடக்கியது. எனவே, ஒரு குறிப்பிட்ட வசனத்திற்கு பொருள்விளக்க படிப்பை (hermaneutics) பயன்படுத்துவதே வேத வியாக்கியானமாகும். சீர்திருத்த திருச்சபைகளின் பாரம்பரியத்தின்படி வேதாகமத்தை விளக்குவதற்கான சில கொள்கைகளை நாம் இங்கே சிந்திக்கலாம்.

நாம் வேதாகமத்தை தாழ்மையுடன் விளக்கபடுத்த வேண்டும்.

வேதாகமம் சாதாரண புத்தகம் அல்ல. அது ஒரு தனித்துவமான புத்தகம். தேவனுடைய வார்த்தையே, விசுவாசத்திற்கும் நடைமுறை வாழ்க்கைக்கான ஒரே மாறாத விதியாகும். எனவே நாம் அதை வாசிக்கும்போது, ஜீவனுள்ள தேவன் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை  புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மற்ற எல்லா அதிகாரங்களும் மற்றும் வேதாகமத்தை எப்படி விளக்கப்படுத்துவது என்று சொல்ல முயலும் அதிகாரங்கள் கூட  வேதாகமத்திற்கு அடிபணிந்தே காணப்பட வேண்டும். இவ்வாறு, மனிதர்கள் எதை நோக்கமாகக் கொண்டு எழுதினார்களோ அதினுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்கும்போது, இறுதியாக தெய்வீக ஆசானாகிய தேவன் எதை நோக்கமாகக் கொண்டு அதை எழுதினார் என்பதினுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவே நாம் முயல வேண்டும்.

இதனுடைய அர்த்தம் என்னவென்றால், வேதாகமத்திற்கு மேலாக நம்மை வைக்காமல் அதற்கு அதற்கு கீழாக நம்மை உள்ளடக்குவதாகும். உதாரணமாக, வேதாகமத்தில் உள்ள ஒரு பகுதியில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமானது நமக்கு விருப்பமற்றதாக காணப்படும்போது, அந்த வசனத்திற்கு வெளியே விளக்கப்படுத்துவதோ அல்லது அதை  புறக்கணிப்பதோ கூடாது. உதாரணமாக, யோவான் 6 இல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய தெரிந்தெடுக்கும் கிருபையின் மூலமாகவே ஒருவன் தன் மீது விசுவாசம் வைக்க முடியும் என்பதினுடைய முக்கியத்துவத்தை விளக்கப்படுத்துகிறார். பலர் இந்த போதனையைக் கடினமாகக் கருதி பின்வாங்கி போகிறதை நாம் பார்க்கலாம் (யோவான் 6:66). இன்றும் பலர் தேவனுடைய தெரிந்து கொள்ளுதலை பற்றிய வேதாகமத்தின் சத்தியத்திற்கு வேதத்திற்கு வெளியே விளக்கப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆயினும், வேதாகமத்தின் சத்தியமானது எப்படி வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறதோ, அப்படியே அதை புரிந்துகொள்ளவும், அதற்குக் கீழ்ப்படியவும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அது நமக்கு ஏற்றபடி, நாம் விரும்புவதைப்போல ஒருபோதும் காணப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

நாம் வேதாகமத்தை உண்மை தன்மையுடன் விளக்கப்படுத்த வேண்டும்.

வேதாகமத்தை உண்மையுடன் விளக்குவது என்பது, ஒரு குறிப்பிட்ட வசனத்தை அது வாசிக்கபட வேண்டிய விதத்தில் வாசிப்பதாகும். இவ்விதமாக வாசிக்கும் போது அதனுடைய இலக்கிய நடை(genre) மற்றும் உருவகங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட வசனத்தினுடைய வரலாற்று மற்றும் இலக்கிய சூழலைக் கருத்தில்கொள்ள வேண்டும். அப்பகுதி எழுதப்பட்ட சூழ்நிலையின் அடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை புரிந்து கொள்ள முற்பட வேண்டும். இந்த முறை பெரும்பாலும் வரலாற்று-இலக்கண வியாக்கியானம் (historical-grammatical exegesis) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதன் ஆசிரியர் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் எந்த சூழலில் எவ்விதமான அர்த்தத்தோடு சொல்லுகிறார் என்று உற்று நோக்குவதின் மூலம் அவர் எதை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதைக் கண்டறிய வேண்டும்.

வேதாகமத்தை உண்மையுடன் வாசிப்பதற்கு  அந்த பகுதியிலிருந்து  சில முக்கிய கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும் : இதன் ஆசிரியர்

யார்? அவர் எந்த சூழ்நிலையில் இதை எழுதினார்?  அவர் இதை எழுதுவதற்கான நோக்கம் என்ன? இந்த பகுதியின் இலக்கிய நடை என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் பெரும்பாலும்  அந்தப் பகுதியோடு இணைந்தே காணப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் விளக்கவுரைகள் (commentaries) மற்றும் வேதாகம  அகராதிகள் (Bible dictionaries) போன்ற வெளிப்புற வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக, சில சமயங்களில் ஒரு வார்த்தைக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் அல்லது குறிப்புகள் இருக்கும். மேலும்   ஒரு வார்த்தைக்கு சாத்தியமான பலவிதமான அர்த்தங்களிலிருந்து, (அதன் செமண்டிக் வீச்சு – semantic range) எந்த ஒரு  குறிப்பிட்ட அர்த்தம் அதற்கு பொருத்தமாக உள்ளது என்பதைத் தீர்மானிக்க அது எழுதபட்ட சூழலே  உதவி செய்கிறது (உதாரணமாக, புதிய ஏற்பாட்டில் “உலகம்”என்ற வார்த்தையானது பல்வேறு நோக்கத்தோடு கூட பயன்படுத்தப்படுகிறதை நாம் பார்க்கலாம் : மத். 4:8; 13:22; 25:34; மாற்கு 4:19; லூக். 2:1; யோவான் 1:29; 3:16; அப். 17:6; ரோம. 3:6; கலா. 6:14; எபே. 2:2). மேலும், “ஆகையால்,” “மாறாக,” “ஆனால்,” ” மற்றும் “ஆகவே” போன்ற முக்கிய வார்த்தைகள் அதின் ஆசிரியருடைய சிந்தனையை வெளிப்படுத்துகிறது. மேலும் ஒரு வசனத்தின் இலக்கண நடை அதனுடைய முக்கியத்துவத்தைக் காட்டுகிறதாயிருக்கிறது (எ.கா. லூக். 12:5).

ஒரு வசனத்தினுடைய இலக்கண நடையை கவனிப்பதன் மூலம் அதனுடைய ஆக்கியோன் எதை நோக்கமாகக் கொண்டு எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். வேதாகமத்தில் கவிதை பாடல்கள், தீர்க்கதரிசனம், வெளிப்படுத்தப்பட்ட இலக்கியம், அறிவுரை போன்ற பல பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு பகுதியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சொந்த விளக்கங்களை கொண்டுள்ளன. உதாரணமாக,  கவிதை பாடல்களிலிருந்து ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டால், அது உருவகங்களையும் காட்சிப்படங்களையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது, அவை ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைத் தாண்டி மிகப்பெரிய பொருளுடையதாய் காணப்படக்கூடும். வெளிப்படுத்தல் இலக்கியத்திற்கும் இந்தமுறை  பொருந்தும். அது ஒரு வரலாற்றுக்கதை என்றால், அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வுகளை மட்டுமே வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அந்த நிகழ்வுகள் பிற்கால நிகழ்வுகளை முன்னறிவிக்கலாம் அதாவது  கிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தை விளக்கப்படுத்துவதாக  அமையலாம்.

ஒவ்வொரு வேத பகுதியில் உள்ள இவ்விதமான அம்சங்களை ஆராய்ந்து பார்ப்பதன்  மூலம், அது எழுதப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட அர்த்தம் என்ன என்பதை  நாம் அறிந்து கொள்ளலாம். அதன் மூலமாக அந்தப் பகுதியிலிருந்து இன்றைக்கு  நமக்கு என்ன வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் ஆராய வேண்டும். இதோடு கூட, கிறிஸ்துவினுடைய வருகையின் வெளிச்சத்தின் அடிப்படையில் இந்த பகுதியினுடைய அர்த்தம் என்ன என்பதையும் அறிந்து கொள்ள முற்பட வேண்டும். மேலும், கிறிஸ்துவின் வருகைக்கு பிறகு இந்த கட்டளையை நாம் எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் எவ்வாறு அணுகுவது?. புதிய ஏற்பாட்டு திருச்சபையின் அங்கமாகிய  நாம், விசுவாசிப்பதற்கு ஒரு வாக்குத்தத்தமோ, கீழ்ப்படியும்படியான ஒரு கட்டளையோ, ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு எச்சரிப்பின் செய்தியோ, அறிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியத்தையோ, அல்லது நடைமுறைப்படுத்த ஒரு ஆறுதலான காரியத்தையோ காண அதில் வேண்டும்.

நாம் வேதாகமத்தை பொறுப்புடன் விளக்கப்படுத்த வேண்டும்.

தேவனே வேதாகமத்தின் முடிவான ஆசிரியர்  என்பதால், அவர் வேதத்தின் திட்டவட்டமான, தெளிவான விளக்கத்தை கொடுத்துமிருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் , வேதாகமமே வேதாகமத்தை விளக்குகிறது என்பதாகும். வெஸ்ட்மினிஸ்டர் விசுவாச அறிக்கை (Westminster Confession of Faith) இவ்விதமாக கூறுகிறது, “வேதாகமத்தின் தவறில்லாத கட்டளைக்கான விளக்கத்தை வேதாகமத்தால் மட்டுமே கொடுக்க முடியும். ஆகையால்,  வேதாகமத்தில் ஏதாவது ஒரு பகுதியின் உண்மையான மற்றும் முழுமையான அர்த்தத்தை குறித்து ஒரு கேள்வி எழும்போது (அது பல மடங்கு அல்ல, ஆனால் ஒன்று), அதைப்பற்றி  மிகவும் தெளிவாகப் பேசும் மற்ற பகுதிகளை தேடி ஆராய்வதினால் நாம் அறிந்து கொள்ளலாம் ” (1.9). சிக்கலான வசனங்களை புரிந்து கொள்வதற்கான வெளிச்சத்தை பெற்றுக்கொள்ள மற்ற எல்லா வேதபகுதிகளையும் ஆராய வேண்டும். வேதாகமத்தின் திட்டவட்டமான, தெளிவான விளக்கம் வேதாகமத்திற்குள்ளேயே காணப்படுகிறது. வேதாகமத்தின் விளக்கம் திருச்சபை பாரம்பரியம், சபை தலைவர்கள் அல்லது  பலவிதமான மனித கருத்துக்கள் போன்ற மற்ற எந்த அதிகாரத்திற்கும் அவை உட்பட்டதல்ல. 

மேலும் வெஸ்ட்மினிஸ்டர் அறிக்கை, “சாதாரண வழிமுறைகளை முறையாக பயன்படுத்தினால் ” வேதாகமத்தின் சத்தியங்களை அறிந்து கொள்ள முடியும் (1.7) என்றும் கூறுகிறது. மற்ற புத்தகங்களை போலவே வேதாகமமும் சாதாரண முறையில், இலக்கணத்தின் சரியான எளிய விதிமுறைகளை பயன்படுத்தி வாசிக்கப்பட வேண்டும். மேலும் இது வெறும் மனித யூகங்கள், உருவக விளக்கங்கள் மற்றும் பலவிதமான கற்பனைகளுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும் இருந்து விடக்கூடாது.  “சாதாரண வழிமுறைகளின் முறையான பயன்பாட்டுடன்” அதை மிகுந்த ஜாக்கிரதையாக வாசிக்க வேண்டும். ஒருவன் வேதாகமத்தை அற்பமாக எண்ணி பிற்பாடு தன்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஒருபோதும் குற்றம் சாட்டக் கூடாது.

கடைசியாக, தேவன் யார்?, கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நமக்கு என்ன  செய்திருக்கிறார்?  போன்ற கேள்விகளுக்கு  வேதம் நமக்கு என்ன சொல்கிறது என்பதை நாம் கனமாக அறிந்து கொள்ள வேண்டும். வேதத்தினுடைய எந்த ஒரு பகுதியும் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தக் கூடிய சத்தியங்களினால் நிறைந்தே காணப்படுகிறது. இருப்பினும் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவோடு நாம் இணைந்திருப்பதினாலேயே இந்த சத்தியங்களை நம்முடைய வாழ்க்கையில்  நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். வேதம் நமக்கு நிபந்தனையற்ற, செழிப்பான ஒரு வாழ்க்கையை வாக்கு பண்ணவில்லை. உதாரணமாக, எரேமியா 29:11 இல், ஆரம்பத்தில் தேவன் பாபிலோனில் அடிமைப்பட்டிருந்த  இஸ்ரவேலர்களுக்கு ஆசிர்வாதத்திற்குரிய நம்பிக்கையான செய்தியை தேவன் கொடுத்தார். ஆனாலும் அதை காட்டிலும் மேலாக கிறிஸ்து, பூரணமான கீழ்ப்படிதலுள்ள குமாரனாக, உண்மையான இஸ்ரவேலனாக, தேவனுடைய எல்லா வாக்குத்தத்தங்களையும் சுதந்தரித்து மற்றும் தேவனுடைய எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற தகுதியடைந்து, மேலும், அவரோடு நாம் ஐக்கியமாக இருப்பதன் மூலம், சொல்லி முடியாத ஆசீர்வாதங்களை நமக்கு தருகிறவராக இருக்கிறார் (எபேசி. 1:3-11) என்று ஆராய்ந்து பார்க்கிறோம். இதுவே நற்செய்தி, மேலும் இந்த சுவிசேஷ செய்தி வேதாகமத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆசிரியரை பற்றி: 

கெவின் டி. கார்ட்னர் (Kevin D. Gardner) டேபிள்டாக் (Tabletalk) இதழின் துணை ஆசிரியர், புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள சீர்திருத்த வேதாகம கல்லூரியில்  (Reformation Bible College) வருகைப் பேராசிரியராகவும், அமெரிக்காவில் உள்ள பிரஸ்பைடேரியன் திருச்சபையில்  (Presbyterian Church in America) போதகராகவும் உள்ளார்.

இந்த கட்டுரை முதலில் லிகோனியர் ஊழியங்கள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது.

கெவின் டி. கார்ட்னர்
கெவின் டி. கார்ட்னர்
Kevin D. Gardner es editor asociado de la Tabletalk Magazine y graduado del Westminster Theological Seminary en Filadelfia. Él es un anciano docente ordenado en la Iglesia Presbiteriana en América.